WFTW Body: 

1.விலகி ஓடுதல்.

சோதனையை மேற்கொள்ள மிகச்சிறந்த வழி, யோசேப்பு செய்ததுபோல, அதைத் தவிர்ப்பதும் அதை விட்டு விலகி ஓடுவதும் ஆகும் (ஆதியாகமம் 39:7-12). வலிமையாய் உங்களை சோதித்து பலவீனமாக்கும் எல்லா இடங்களையும் மனிதர்களையும் தவிர்த்துவிடுங்கள். "எங்களை சோதனைக்குட்படப் பண்ணாதேயும்" என்று ஜெபிக்கும்படியாய் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். அப்படி நீங்கள் செய்ததற்காக நித்தியத்திலே நீங்கள் நன்றியுள்ளவர்களாய் இருப்பீர்கள். நித்தியத்தில் மாத்திரமல்ல, இந்த பூமியிலேயும் கூட, சில ஆண்டுகள் கழித்து, உங்கள் திராணிக்கு மிஞ்சி உங்களால் ஜெயிக்க முடியாதபடி சோதிக்கப்படுவதற்கு காரணமாயிருந்த இடங்களையும் மனிதர்களையும் நீங்கள் தவிர்த்து விட்டதற்காக நீங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருப்பீர்கள். அப்படிப்பட்ட இடங்களையும் மனிதர்களையும் விட்டு விலகுவதே நீங்கள் உண்மையாய் ஆண்டவரை மட்டும் மகிமைப்படுத்த ஆவலாயிருக்கிறீர்கள் என்பதற்கு அத்தாட்சியாய் இருக்கிறது. (இதன் தொடர்ச்சியாக நீதிமொழிகள் 7-ஐ வாசியுங்கள். இது எல்லா வாலிபரும் அவ்வப்போது வாசிக்க வேண்டிய நல்ல ஓர் அதிகாரம்).

எதிர் பாலினத்தவருடனான மிக நெருக்கமான நட்பை விட்டு விலகி ஓடுங்கள். இச்சைகளைத் தூண்டக்கூடிய புத்தகங்களை (மற்றும் இணையதளங்களை) விட்டு விலகி ஓடுங்கள். நேரத்தை வீணடிக்கக்கூடிய பயனற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதிலிருந்து விலகி ஓடுங்கள். கிசுகிசுக்களுக்குச் செவி கொடுப்பதிலிருந்து விலகி ஓடுங்கள். தீயவற்றை கவனித்துக் கேட்பதும், தீயவற்றை வாசிப்பதும் மற்றும் தீயவற்றைக் காண்பதும், தீயவற்றைக் குறித்த அறிவுடையவராகவே உங்களை மாற்றும். அந்த அசுத்தமான தகவல்கள் உங்களுக்கு எதற்கு? அது உங்களைக் கறைப்படுத்தவும் அழிக்கவும் மட்டுமே செய்யும். இப்போதிலிருந்தே, அப்படிப்பட்ட தகவல்களுக்கு உங்கள் காதுகளையும் கண்களையும் நீங்கள் மூடிக்கொள்ள வேண்டும். பிறர் செய்யும் தீங்கைக்குறித்ததான அறிவு, ஒருக்காலும் உங்களை ஞானமுடையவராக்காது. “துர்க்குணத்திலே குழந்தைகளாய்” நாம் இருக்க வேண்டும் என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது (1கொரிந்தியர் 14:20). ஒரு குழந்தையின் மனது, எந்தத் தீங்கும் அறியாத தூய்மையானது. மேலும் சுவிசேஷத்தின் நற்செய்தி என்னவெனில், பல வருடங்களாக நம் மனதை தீய தகவல்களால் நாம் மாசுபடுத்திக் கொண்டிருந்தாலும், இப்பொழுது அதிலிருந்து விடுபட வேண்டும் என்று நாம் உண்மையிலேயே ஏங்கினால், மீண்டும் நாம் ஒரு குழந்தையின் தூய்மையான மனதைப் பெற பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவார். இது தான் தேவனுடைய கிருபை நமக்கு செய்யக்கூடிய காரியமாகும். தேவனுக்கே ஸ்தோத்திரம்! “நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று” நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 16:19). ஆகையால் இயேசு எவ்வாறு வாழ்ந்தார் என்று உங்களுக்குக் காட்டும்படி பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். அப்பொழுது “நன்மைக்கு ஞானிகளாய்” இருப்பது என்னவென்று நீங்கள் அறிவீர்கள்.

2.துக்கித்தல்.

நீங்கள் ஒருவேளை பாவத்தில் விழுந்து விட்டால் உடனடியாக அதைக்குறித்து துக்கித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் பாவத்தை நீங்கள் மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளத் துவங்குவீர்கள். பிறகு ஜெயம் பெறுவது என்பது மிகக் கடினமானதாகிவிடும். ஆகவே, குறுகிய காலத்தில் முடிக்கக் கூடிய கணக்கை (short accounts) தேவனோடு வைத்துக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எங்கேயாவது தேவனுடைய தரத்திலிருந்து குறைந்து விட்டோம் என்று உணர்ந்த மாத்திரத்தில் தேவனிடத்தில் அறிக்கை செய்து மனந்திரும்பி விட்டுவிட்டு உடனுக்குடன் தேவனிடத்தில் கணக்கை சரி செய்ய வேண்டும். நீங்கள் பாவத்தில் விழும் ஒவ்வொரு முறையும் நீங்கள் துக்கிக்கிறவர்களாயிருந்தால், அது பாவத்தின் மேல் ஜெயம் பெறும் ஒரு வாழ்க்கைக்காய் மெய்யாகவே நீங்கள் தாகமாயிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. எனவே எப்பொழுதெல்லாம் உங்கள் மனசாட்சியிலே ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து சிறிது சலனம் உண்டானாலும் அந்தக் காரியத்தை உடனடியாக சரி செய்து விடுங்கள். ஒருவேளை அந்த தோல்வி உங்கள் சிந்தையில் மட்டும் ஏற்பட்டிருந்தாலும் கூட அதே நேரத்தில் தேவனிடத்தில் அறிக்கை செய்து விடுங்கள். யாரிடமாவது மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இருந்தால் மன்னிப்பு கேளுங்கள். பின்னர், தேவன் உங்களை எந்த அளவு பெலப்படுத்துகிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

3. நிலைத்திருத்தல்.

அது தான் வெற்றியின் இரகசியம். ஒரு வீட்டுப்பாடத்திற்கான விடை கிடைக்கும் வரை விடாமல் பிரயாசப்படும் ஒரு மாணவனைப்போல் தொடர வேண்டும். சோர்ந்துபோகும்படி சோதிக்கப்படுவது எல்லோருக்கும் பொதுவானது; ஆனாலும் நீங்கள் முயற்சியை கைவிடாதிருங்கள். நீங்கள் பிறப்பதற்கு முன்னே தேவன் உங்கள் வாழ்க்கையைக் குறித்து நேர்த்தியான திட்டம் பண்ணியிருக்கிறார் (சங்கீதம் 139:16). அதை சாத்தான் கெடுத்துவிட அனுமதிக்காதீர்கள். எவ்வளவு விலைக்கிரயம் செலுத்த நேர்ந்தாலும், தேவனுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுங்கள். யோவான் 14:30 -ல் "இதோ உலகத்தின் அதிபதி என்னிடத்தில் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை" என்று இயேசு கூறினார். இயேசுவைப்போல் நடப்பதற்கு நாம் இப்பொழுது அழைக்கப்பட்டிருக்கிறோம். சாத்தான் உங்களிடத்தில் வரும்போது, அவன் ஒன்றையும் உங்களிடத்தில் காணக்கூடாது. எனவே தான், "தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்க உங்களால் முடிந்தவரை சிறப்பாக செய்யுங்கள்" (அப்போஸ்தலர் 26:14). தன்னுணர்வோடு பாவம் செய்யாமல் வாழ உங்கள் முழு இருதயத்தோடும் தேவனுடைய உதவியை நாடுங்கள். உங்கள் இச்சைகளுக்கு இடம் கொடுத்தால் அது சாத்தான் உங்களுடைய வாழ்க்கையில் காலூன்றுவதற்கு ஏதுவாக அமையும். "நாம் பாவத்தில் நிலை நிற்கலாமா?" என்று ரோமர் 6:1 கேட்கிறது. "ஒரு முறையாகிலும் பாவம் செய்யலாமா?" என்று ரோமர் 6:15 கேட்கிறது. "இல்லை, ஒருபோதும் இல்லை" என்பதுதான் இந்த இரண்டு கேள்விகளுக்கும் தொனிக்கின்ற பதில். உங்களுடைய வாழ்க்கையின் முடிவுபரியந்தம் சோதனைகளும் தவறுகளும் உங்களுடைய வாழ்க்கையில் நிலையான அங்கமாக இருக்கும். ஆனால், கொஞ்சக் காலம் கழித்து, தன்னுணர்வுள்ள பாவத்தின் மேல் ஜெயத்தை நீங்கள் அடைய முடியும் - அதன் பின்பு விழுவதானது அரிதாகிவிடும்.