எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   தலைவர் சீஷர்கள்
WFTW Body: 

புது உடன்படிக்கையின்கீழ் தேவனுடைய மெய்யான ஊழியன் யார் என்பதை வேதத்தில் மூன்று பகுதிகள் எடுத்தியம்புகின்றன. அதைப் பற்றி முன்கூட்டிய கருத்துக்கள் எதுவும் மனதிலே வைத்திராதவர்களாய், இப்பகுதிகளை நாம் வாசிக்கும்போது, இந்த நாட்களில், இந்தக் காலகட்டத்தில், நமக்கு விருப்பம் இருக்குமானால், நாம் அனைவருமே தேவனுடைய ஊழியர்களாய் இருக்க முடியும் என்பதை நம்மால் அறிந்து கொள்ள இயலும். பழைய உடன்படிக்கையின்கீழ் லேவியர்களால் மட்டுமே தேவ ஊழியர்களாக இருக்க முடிந்தது. அவர்கள் பூமிக்குரிய வேலைகள் எதையும் செய்யாதவர்களாய், இஸ்ரவேலின் பிற கோத்திரத்தாரின் தசம பாகத்தால் ஆதரிக்கப்பட வேண்டியவர்களாய் இருந்தனர். இன்றைய பாபிலோனிய கிறிஸ்தவமானது, உலக வேலைகளைத் துறந்துவிட்டு வருபவர்களால்தான் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியும் என்றும், அவர்களைப் பிற கிறிஸ்தவர்கள் தங்களது தசம பாகங்களைக் கொண்டு தாங்க வேண்டுமென்றும் போதிக்கின்றது. இது மனுஷனுடைய பாரம்பரிய போதனையே யன்றி வேத அடிப்படை அற்றது.

1. பாவத்திலிருந்து விடுதலை

“இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு ஊழியக்காரரானீர்கள்” (ரோமர் 6:22).

பாவத்திலிருந்து விடுதலை அடைய இதுவே முதலாவது தேவையாகும்.ஒருவர் பாவத்திலிருந்து விடுதலை அடைவதைப் பார்க்கிலும், உலக வேலையை விட்டுவிடுவது எளிதானது என்பது வெளிப்படை. இயேசு உலக வேலை ஒன்றைச் செய்து வந்தார். இருப்பினும் அவர் தேவனுடைய ஊழியக்காரனாயும் இருந்தார்.

ஒருவன் கோபப்படுகிறவனாகவும், நிதானத்தை இழக்கிறவனாகவும் இருந்தால், அவனால் தேவ ஊழியனாய் இருக்க முடியாது. ஒருவேளை அவனால் ஒரு பிரசங்கியாகவோ அல்லது ஒரு தலைமை பாஸ்டராகவோ இருந்திட முடியும். நிச்சயமாக தேவ ஊழியனாய் இருந்திட முடியாது. அநேக பாஸ்டர்கள், ஞாயிறு காலையில், மிகுந்த சத்தமிட்டு “அந்நிய பாஷையிலே” தேவனைத் துதிக்கிறார்கள். ஆனால் அன்று மதியமே கோபம் கொப்பளிக்கத் தங்கள் “தாய் பாஷையிலே” மனைவியைத் திட்டுகிறார்கள். நாம் அந்நிய பாஷையில் பேசும்போது மாத்திரமே பரிசுத்த ஆவியானவரால் நம்மைக் கட்டுப்படுத்த முடியும்; ஆனால் நம்முடைய தாய் மொழியில் பேசும் போது அவரால் நம்மைக் கட்டுப்படுத்த முடியாதா? அது ஒரு வஞ்சனை. நான் 22 ஆண்டுகளாக அந்நிய பாஷையில் பேசுகிறேன். அது இத்தனை ஆண்டுகளாக என்னை மன அழுத்தத்திலிருந்தும், முகவாட்டத்திலிருந்தும், சோர்விலிருந்தும் விடுதலையாக்கியுள்ளது. என் தாய் மொழியிலே என் மனைவியுடனும், சகோதரர்களுடனும், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடமும், பிச்சைக்காரர்களிடமும் பேசுகின்ற சமயங்களிலும்கூட பரிசுத்த ஆவியானவர் என்னைக் கட்டுப்படுத்தினபடியால் நான் அவரை ஸ்தோத்தரிக்கிறேன்.

ஸ்திரீகளை இச்சையுடன் பார்க்கிற மனுஷன் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவனாகவோ, தேவ ஊழியனாகவோ இருக்கவே முடியாது. இந்தப் பாவத்தைத் தவிர்க்கும்படிக்குத் தன் கண்களையும் பிடுங்கிப் போட தீவிரமான விருப்பமுள்ள ஒருவனால்தான் தேவ ஊழியனாக இருக்க முடியும். உங்களுடைய கண்களில் தவறியமைக்காக நீங்கள் உங்கள் தலையணையில் கடைசியாய்க் கண்ணீர் சிந்தியது எப்போது? நீங்கள் இந்த விஷயத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியவராய் இருந்தால், உள்ளுக்குள்ளே கொஞ்சங்கொஞ்சமாக பின்மாறிப் போய், ஒரு நாளில் வெளிப்படையாக வீழ்ச்சியடைவீர்கள்.

இன்னுங்கொஞ்சம் பணத்தையோ, கனத்தையோ சம்பாதிப்பதற்காகப் ஒருவன் பொய் சொல்லுவானானால், அவன் உண்மையில் பிசாசின் ஊழியக்காரனாய்த்தான் இருக்கிறான். ஏனென்றால், பிசாசுதான் பொய்க்குப் பிதாவாய் இருக்கிறான். அவன் ஓர் தேவனுடைய ஊழியனாய் இருக்கவே முடியாது.

தன் எல்லாச் சத்துருக்களையும் நேசிக்க இயலாதவனும், தனக்கு தீமை செய்த எல்லாருக்கும் நன்மை செய்ய இயலாதவனும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அருகதை அற்றவனாய் இருக்கிறான். யார்மீதாவது ஒரு துளி கசப்பையோ அல்லது மன்னிக்க முடியாத தன்மையையோ நீங்கள் உங்கள் இருதயத்தில் வைத்திருந்தால், நீங்கள் செய்யக் கூடிய மிகச் சிறந்த காரியம் எதுவென்றால், உங்கள் வாயைப் பொத்திக் கொண்டு, வீட்டிற்குச் சென்று, இந்தத் தீமைகளிலிருந்து மனந்திரும்பி, உங்களைச் சுத்திகரித்துக் கொள்வதுதான். நீங்கள் தேவனுடைய ஊழியக்காரனாய் இருக்கவே முடியாது.

2. உலகப் பொருளிலிருந்து விடுதலை

“எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான்” (லூக்கா 16:13).

இதுதான் இரண்டாவது தேவையாகும். உலகப் பொருளிலிருந்து (பணம் மற்றும் உலகப் பொருட்கள்) விடுதலை அடைவது. ஒருவனுக்கு உலகப் பொருளிலிருந்து விடுதலையடையவதைப் பார்க்கிலும், உலக வேலையை விட்டுவிடுவது மிகவும் எளிதான விஷயமாகும் என மறுபடியும் சொல்லலாம். நீங்கள் எதற்கு ஊழியஞ்செய்யப் போகிறீர்கள் – தேவனுக்காக, உலகப் பொருளுக்காக – என்பதைத் தெளிவாகத் தெரிந்தெடுக்க வேண்டும். அநேக “முழுநேர ஊழியர்கள்” தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய நாடுகின்றனர். அவர்கள், உலக வேலையில் ஈடுபட்டிருந்தால் சம்பாதித்திருப்பதைக் காட்டிலும், “தேவனுடைய ஊழியக்காரர்கள்” என்ற போர்வையில் திரளாகச் சம்பாதிக்கின்றனர். தேவனுக்கு ஊழியம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் ஒருவன், இப்பூமிக்குரிய சொகுசையும், பணத்தையும், பொருட்களையும் தியாகம் செய்ய முன்வராமல், தேவ ஊழியனாய் இருப்பதாகச் சொல்வதெல்லாம் வெறும் பிதற்றலே. எந்த ஒரு விசுவாசியாலும் தேவ ஊழியனாய் இருக்க முடியும். ஆனால் அவன் உலகப் பொருளை நேசிப்பதிலிருந்து விடுதலை அடைந்திருக்க வேண்டும். நீங்கள் உண்மையிலேயே மேலுள்ள வசனத்தைக் கவனித்து வாசித்தால், அதில், நாம் தேவனுடைய ஊழியக்காரராய் இருப்பதற்கு, உலகப் பொருளை வெறுத்து, அதை அசட்டை செய்ய வேண்டுமென்று இயேசு சொல்லுவதை உங்களால் பார்க்க முடியும். உலகப் பொருள்மீது உங்களுடைய மனப்பான்மை அதுவாகத்தான் உள்ளது என்றோ அல்லது அப்படிப்பட்டதான மனப்பான்மையுடன் இருக்க விருப்பம் உள்ளது என்றோ தேவனுக்கு முன்பாக உங்களால் சொல்லக் கூடுமானால், நீங்கள் தேவனுடைய ஊழியனாய் இருப்பதற்கு தகுதி பெற்றவராகி விடுவீர்கள். இல்லையென்றால் சாத்தியமில்லை. இயேசுவானவர் இங்கு நமக்குத் தந்துள்ள தரத்தின்படி எத்தனை பேர் முழுநேர ஊழியராய் இருப்பதற்குத் தகுதி உடையவர்களாய் இருக்கிறார்கள்? மிக மிக சொற்பமே.

நாம் யாருக்கு ஊழியம் செய்கின்றோம் என்பதை நாம் யாருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றோம் என்பதை – தேவனுடைய கட்டளைக்கா, உலகப் பொருளின் கட்டளைக்கா – பொறுத்து நாம் கண்டுபிடித்துவிடலாம். நம்முடைய வாழ்க்கையில் யாருடைய உரிமைகளுக்கு நாம் முன்னுரிமை தருகிறோம் – தேவனுக்குரியவைகளுக்கா அல்லது உலகப் பொருளுக்குரியவைகளுக்கா? ஒருவனாலும் இரு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. பணம் உங்களை அழைக்கும்போது, உடனடியாக நீங்கள் அதற்குப் பிரதியுத்திரம் சொல்வீர்களானால், உலகப் பொருளுக்குத்தான் நீங்கள் ஊழியக்காரன்.

ஏன் அநேகப் பிரசங்கிகள் பணக்கார விசுவாசிகள் அதிகமாக உள்ள சொகுசான இடங்களை நோக்கியே பயணிக்கிறார்கள்? எத்தனை பேருக்கு ஏழை விசுவாசிகளையேக் கிரமமாகச் சந்தித்து, அவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த வேண்டுமென்ற நாட்டம் இருக்கின்றது? அவர்கள்தான் தேவனுடைய மெய்யான ஊழியர்களாவர்.

உலகப் பொருளுக்கு ஊழியஞ்செய்கிறவன், தேவனுக்கு எவ்விதத்திலும் பயனற்றவன் என்பதை பிசாசு நன்றாக அறிந்துள்ளான். ஆகவே அவன் அப்படிப்பட்டப் பிரசங்கிமார்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றான். உலக மக்களிடமிருந்தும், விசுவாசத் துரோகத்திற்கு ஆட்பட்ட கிறிஸ்தவ வட்டாரத்தில் உள்ள் உலகப்பிரகாரமான தலைவர்களிடமிருந்தும் நீங்கள் கனத்தைப் பெற பிசாசு உங்களை அனுமதித்து இருப்பானானால், அதுதான் அவன் உங்களுக்குத் தரும் மிகப் பெரும் அவமானமாகும்.

ஒரு தேவ ஊழியன் எப்பொழுதுமே ஆத்தும ஆதாயத்தைக் குறித்தும், சபை கட்டுவதைக் குறித்துமே சிந்தித்துக் கொண்டிருப்பான். அவன் இரவில் காணும் கனவுகளும் அதைப் பற்றித்தான் இருக்கும். ஆனால் உலகப் பொருளுக்கு ஊழியம் செய்பவனின் சிந்தையும் கனவுகளும் இன்னும் எப்படி அதிகமாகப் பணம் பண்ணுவது என்று பணத்தைச் சுற்றிச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருக்கும். எப்படியாயினும் நம்மால் நம்முடைய ஆழ்மனதை (subconscious) ஏமாற்றவே முடியாது. ஏனென்றால் நம்முடைய விருப்பமானது எதைச் சார்ந்துள்ளது என்று வேறெதைக் காட்டிலும் அதற்குத்தான் நன்கு தெரியும். நாம் உலகப் பொருளை நேசிக்கிறவர்களாய் இருந்தால், அதை நாம் நேர்மையாய் தேவனிடம் சொல்லி, அதிலிருந்து நம்மை விடுவிக்கும்படி அவரிடம் கேட்க வேண்டும். நேர்மையான விசுவாசிகளுக்கு எப்பொழுதுமே நம்பிக்கையுண்டு. ஆனால் நேர்மையற்ற மாய்மாலக்காரர்களுக்கோ நம்பிக்கை கிடையாது.

நாம் இன்றைய நாட்களில் அநேக அற்புதமளிக்கும் கூட்டங்கள் பற்றிக் கேள்விப்படுகிறோம். ஆனால் ஜனங்களிடத்திலிருந்து பணத்தைச் சுரண்டாத ஒரு கூட்டத்தையாகிலும் பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன். இயேசுவோ, அவரது அப்போஸ்தலர்களோ அவர்கள் நடத்திய கூட்டங்கள் ஒன்றிலும் காணிக்கை எடுத்தது கிடையாது. இருப்பினும் குருட்டும், மதியீனமுமான விசுவாசிகள் இன்று எந்தச் சுரணையும் இல்லாமல் அவ்விதமாகப் பணம் கேட்கும் பிரசங்கிகளைப் பாராட்டுவதுடன், அவர்கள்தான் தேவனுடைய பெரிய ஊழியர்களென்று கற்பனை செய்து கொள்கின்றனர். கிறிஸ்துவின் நியாயாசனத்தின் தெளிவான வெளிச்சமானது அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்யாமல், தங்களுக்கே ஊழியம் செய்தார்கள் என்பதை அம்பலப்படுத்தும்.

சுவிசேஷ அடிப்படையான உபதேசத்தைச் சார்ந்தவர்கள் என்றும், தாராளவாதிகள் (liberal) என்றும் இருகூறாகப் பிரிக்கும் ஒரு கோட்டை விசுவாசிகள் வரைந்து வைத்துள்ளனர். காரியம் அப்படியாய் இருக்குமானால், சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் சுவிசேஷ அடிப்படையான உபதேசத்தைச் சார்ந்தவர்கள் பக்கமாகத்தான் நிற்பார்கள். ஏனென்றால், அவர்கள் உபதேசத்தில் சுவிசேஷ அடிப்படை கொண்டவர்கள் ஆவர் (யாக் 2:19)! ஆனால் தேவன் வரைகின்ற பிரிவினைக் கோடானது உலகப் பொருளை நேசிக்கிறவர்களை ஒரு பக்கமாகவும், தேவனை நேசிக்கிறவர்களை இன்னொரு பக்கமாகவும் பிரிக்கின்றது. அப்பொழுது சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் உலகப் பொருளை சிநேகிக்கிறவர்கள் பக்கமாகத்தான் நிற்பார்கள்.

நாம் தேவனுடைய ராஜ்யத்தை முதலாவது தேடினால், இப்பூமியில் வாழத் தேவையான அனைத்தையும் நாம் பின் தொடராமலேயே, அவர் நமக்குத் தந்தருளுவார். இது உண்மை என்பதை என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதுமாய் அறிந்திருக்கிறேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், அவருடைய வார்த்தை ஒழிந்து போவதில்லை. அவருடைய ராஜ்யத்தைத் தேடுகிறவர்களுக்கு தேவன் எல்லாவற்றையும் தருகிறார் என்னும் வார்த்தையை மெய்ப்பிக்கத்தக்கதாக நாமெல்லாரும் உயிருள்ள நிரூபணங்களாகத் திகழ வேண்டும். நம்மில் ஒருவராகிலும் நாங்கள் தொடர்ச்சியாக கிறிஸ்தவ வாழ்க்கை முழுவதுமாக தேவனுடைய ராஜ்யத்தை மாத்திரமே தேடினோம் என்று சொல்லத் திராணியில்லாமற் போனாலும், நாங்கள் பணத்தைத் தேடி ஓடவில்லை என்று நிச்சயமாகச் சொல்லுகிறவர்களாய் இருத்தல் வேண்டும். ஒருவேளை நாம் பிரசங்கிமார்களாய் இருந்தால், நாங்கள் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பிரசங்கித்தால், பணம் கிடைக்குமென்பதற்காக அங்கு செல்லவில்லை என்றும், பணக்காரர்களைப் பிரியப்படுத்த நாடவில்லை என்றும், ஏழைகளை அலட்சியம் பண்ணவில்லை என்றும், காணிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், எங்கள் பணத்தேவைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவில்லை என்றும், ஜனங்கள் எங்களுக்குப் பணம் தருவார்கள் என எதிர்பார்த்து நிற்கவில்லை என்றும் உரத்த சாட்சி உடையவர்களாகவும் இருந்திட வேண்டும். அத்தகைய வாழ்க்கை வாழ்ந்ததாக பவுலால் சொல்ல முடிந்தது. அவருடைய காலத்தில், அவரைப் போலவே தாங்களும் தேவனுக்கு ஊழியம் செய்கின்றோம் என்று மார்தட்டி நின்ற பணப்பிரியரான பிரசங்கிகளைத் தோலுரித்துக் காட்டவே அவர் அவ்வாறாக வாழ்ந்தார் (2 கொரி 11:10-13 TLB).

நம்முடைய நாட்களிலும் கிறிஸ்தவ உலகிலே மலிந்து நிறைந்து கிடக்கும் பணப்பிரியராயிருக்கிற பிரசங்கிகளை வெளியரங்கப்படுத்துவதற்காக நாமும் பவுலைப் போலவே உயிருள்ள சாட்சிகளாய் இருக்க வேண்டும். நம்மையும் நம்முடைய ஊழியத்தையும் பிசாசானவன் எவ்வளவாய் வெறுக்கிறான் என்பதையும், நம்முடைய கூட்டங்களுக்கு ஒரு தடவைகூட வராதவர்களையும், நாம் பேசுவதை ஒரு தடவைகூட கேட்காதவர்களையும் அவன் ஏவிவிட்டு, நம்மை வேதப்புரட்டர்கள், அந்திக் கிறிஸ்துகள், தீவிரவாதிகள், கள்ளத் தீர்க்கதரிசிகள் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கச் செய்வதையும் நாம் நன்றாய் அறிந்திருக்கிறோம். பணத்தை நேசிக்கிறவர்களாய் இருந்து கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிற முழு நேர ஊழியர்கள் அனைவரும் சாத்தானின் ஊழியக்காரர்கள் என்னும் உண்மையை நாம் வெளியரங்கப்படுத்தி, சாத்தானின் ராஜ்யத்திற்கு இடையூராக இருப்பதால், அவன் அப்படிச் செய்கின்றான் ( 2 கொரி 11:15 –ஆம் வசனத்தை 10-13- ஆம் வசனங்களுடன் தொடர்புப்படுத்திப் பார்க்கவும்).

உலகப் பொருளைப் பயன்படுத்துவதிலே நாம் உண்மையற்றவர்களாய் இருந்தால், அவருடைய ராஜ்யத்தின் மெய்யான ஐஸ்வரியங்களைத் தேவன் நமக்குத் தர மாட்டார் என இயேசு சொன்னார் (லூக் 16:11). தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டிற்குப் பயங்கரமான தட்டுப்பாடு உண்டாகி இருப்பதைக் காணும்போதும், இன்றைய பிரசங்கிகளின் சலிப்பூட்டும் பிரசங்கங்களைக் கேட்கும்போதும், அந்தப் பிரசங்கிகள் பண விஷயத்தில் உண்மையாய் இருக்கவில்லை என்பதை நம்மால் தெளிவாய்ப் புரிந்து கொள்ள முடிகின்றது.

3. மனுஷரைப் பிரியப்படுத்த நாடுவதிலிருந்து விடுதலை

“நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால், நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே” (கலா 1:10).

மனுஷரைப் பிரியப்படுத்த நாடுவதிலிருந்து விடுதலையாவதுதான் மூன்றாவது தேவையாகும். மனுஷரைப் பிரியப்படுத்த நாடுவதிலிருந்து விடுதலை பெறுவதைப் பார்க்கிலும் உலக வேலையை விட்டுவிடுவது எளிதானது என்று மறுபடியுமாகச் சொல்லலாம். நாம் மனுஷரைப் பிரியப்படுத்தும்படி பிரசங்கித்தால், நாம் தேவனுடைய ஊழியக்காரர்களாக இராமல், மனுஷருடைய ஊழியக்காரர்களாகத்தான் இருப்போம். ஒரு பிரசங்கியானவன் தான் பேசுகின்ற கௌரவமான ஒரு மாநாட்டிலே அடுத்தாண்டும் அதிக பணமும் கனமும் கிடைக்கும்படி மீண்டுமாய் அழைக்கப்பட வேண்டும் என நினைப்பானானால், அங்கிருக்கும் ஒரு மனிதனாகிலும் இடறிவிடக் கூடாது என்பதற்காக தன்னுடைய செய்தியை கவனமாய்த் திருத்தி அமைத்துக் கொள்ளும்படிச் சோதிக்கப்படுவான். இப்படியாய் அவன் மனுஷனுடைய ஊழியக்காரனாய் மாறிவிடுகிறான். நீங்கள் பொதுவிலே ஜெபிக்கும்போது, பிறரை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெபிப்பீர்களானால், நீங்கள் மனுஷரின் அபிப்ராயங்களைத் தொழுது கொள்ளுகிறவர்கள்தானே தவிர, தேவனுடைய ஊழியர்களல்ல. அத்தகைய ஜெபங்களைத் தேவன் கேட்பதில்லை. ஏனெனில் அவை யாவும் அவரிடத்தில் ஏறெடுக்கப்படாமல், மனுஷரிடம் ஏறெடுக்கப்படுபவையாகும். அதைப் போலவே, நாம் உடுத்துகிற விதம், மக்களிடம் பேசுகிறவிதம், இன்னுமாய் நாம் நடக்கிறவிதம் ஆகிய அனைத்தையுமே நம்மால் சீர்தூக்கிப் பார்க்க முடியும். நாம் நம்முடைய “பரிசுத்தம்” “தாழ்மை” இவற்றில் ஏதாகிலும் மனுஷரைக் கவருவதற்காகச் செய்யப்படுமானால், நாம் மனுஷருடைய ஊழியக்காரர்கள்தானே தவிர, தேவனுடைய ஊழியக்காரர்கள் அல்ல. ஒருவேளை நீங்கள் உங்கள் மனைவியையோ/ கணவனையோ பிரியப்படுத்த நாடினால், உங்களால் தேவனைப் பிரியப்படுத்த இயலாது.

நீங்கள் எவ்வளவுக்கதிகமாக தேவனைப் பிரியப்படுத்துகிறீர்களோ, அவ்வளவுக்கதிகமாக தேவனை அறியாத மனுஷரால் தீமையான பெயர்களிட்டு அழைக்கப்படுவீர்கள். கிறிஸ்தவ மதத் தலைவர்களாலும் உங்களுக்கு அப்படி நடக்கும். இயேசு “பிசாசுகளின் தலைவன்” என அழைக்கப்பட்டார். அப்படியானால் அவருடைய சீஷர்கள் எவ்வளவாய் அவ்வாறு அழைக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் இப்பூமியில் போப்பையோ, பேராயரையோ, தலைமை பாஸ்டரையோ அல்லது வேறெந்த மனுஷனையோ பிரியப்படுத்த நாடவில்லை.