WFTW Body: 

உபாகமம் என்றால் ‘இரண்டாவது நியாயப்பிரமாணம்’ என்று பொருள்படும். நியாயப்பிரமாணத்தின் அநேக முக்கியமான அம்சங்கள் இங்கு மீண்டும் கூறப்படுவதுதான் இதற்குக் காரணமாகும். இந்த புத்தகத்தை நாம் இரண்டு விதமாக பிரிக்கலாம். மோசே அளித்த மூன்று உரைகள் (பிரசங்கங்கள்) என்றொரு விதமாகப் பிரிக்கலாம்:

1. முதல் பிரசங்கம் (அதிகாரம் 1 முதல் 4 வரை).

2. இரண்டாவது பிரசங்கம் (அதிகாரம் 5 முதல் 26 வரை).

3. மூன்றாவது பிரசங்கம் (அதிகாரம் 27 முதல் 30 வரை).

இவையெல்லாம் 'நான் வாக்குவல்லவன் அல்ல' என்று முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்ற கர்த்தரிடம் சொன்ன மனிதனே பேசினார். மோசேயின் பாடல் (அதிகாரம் 32), மோசேயின் ஆசீர்வாதம் (அதிகாரம் 33) மோசேயின் மரணம் (அதிகாரம் 34) ஆகியவற்றுடன் இந்த புத்தகம் முடிவடைகிறது.

'மூன்று திசைகளில் பார்க்கவேண்டும்' என்று இன்னொரு விதமாக இந்த புத்தகத்தைப் பிரிக்கலாம்:

1. பின்னோக்கிப் பார்க்க வேண்டும். வனாந்தரத்திலே இருந்த 40 ஆண்டுகளும் தேவன் எவ்வளவு உண்மையுள்ளவராக இருந்தார் என்பதைத் திரும்பிப் பின்னோக்கிப் பார்க்கிற இரண்டு செய்திகள் (அதிகாரம் 1 முதல் 11 வரை).

2. மேல்நோக்கிப் பார்க்க வேண்டும். தேவனுடைய நியாயப்பிரமாணங்களின் மூலமாகத் தேவனை மேல்நோக்கி பார்க்கிற இரண்டு செய்திகள். தேவனுடைய நியாயப்பிரமாணங்களின் மூலமாக மனிதன் தன்னுடைய தேவையைப் பார்க்கிறான் (அதிகாரம் 12 முதல் 31 வரை).

3. முன்னோக்கிப் பார்க்க வேண்டும். வருங்காலத்தில் தேவன் செய்யவிருக்கும் அற்புதமான காரியங்களை எதிர்நோக்கி முன்னோக்கிப் பார்க்கிற இரண்டு செய்திகள் (அதிகாரம் 32 முதல் 33 வரை).

நம்முடைய வாழ்க்கையில் நம் அனைவருக்குமே இந்த மூன்று பார்வைகள் தேவைப்படுகிறது. நாம் எவ்வளவு வயதானாலும், இந்த மூன்று பார்வைகளைக் கொண்டிருப்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.

1. பின்னோக்கிப் பார்க்க வேண்டும் (உபாகமம் 1-11)

நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். கர்த்தர் என்னை எவ்வாறாக வழிநடத்தியுள்ளார் என்பதைப் பலமுறை என் வாழ்க்கையில் நான் திரும்பிப் பார்த்திருக்கிறேன் - அது என்னுடைய விசுவாசத்தைப் புதுப்பித்துள்ளது. நான் ஒரு கடினமான சூழ்நிலையைச் சந்திக்கையிலே, அதற்கு ஒரு வழியுமே இல்லை என்று தோன்றும்போது, நான் வேதாகமத்தில் உள்ள வாக்குறுதிகளை எனக்கு நினைப்பூட்டிக்கொள்கிறேன், மற்ற விசுவாசிகள் எனக்குக் கொடுக்கும் ஊக்கத்தையும் பெற்றுக்கொள்கிறேன். இவை எல்லாவற்றைக் காட்டிலும் என் விசுவாசத்தை அதிகமாகப் பலப்படுத்துகிற காரியம், பின்னோக்கிப் (திரும்பிப்) பார்க்கிறதுதான். "இதுவரை ஒரு முறையாவது நான் உன்னைக் கைவிட்டேனா?" என்று கர்த்தர் என்னிடம் கேட்கிறார். "இல்லை ஆண்டவரே ஒருமுறை கூட நீர் என்னைக் கைவிடவில்லை" என்று நான் அவரிடம் பதிலளிக்கிறேன். அப்பொழுது அவர், "நான் இப்பொழுதும் உன்னைக் கைவிடவே மாட்டேன்" என்று கூறுகிறார். இவ்வாறாக நான் திருப்பிப் பின்னோக்கிப் பார்ப்பது மற்ற அனைத்தைக் காட்டிலும் என்னை அதிகமாக ஊக்கப்படுத்துகிறது.

நீங்கள் மீண்டும் பாவத்திலே விழுந்துவிட்டீர்களா? கடந்த காலத்தில் தேவன் உங்களை எவ்வாறு மன்னித்தார் என்பதைத் திரும்பிப் பாருங்கள். அவர் உங்களை மன்னித்தபோது, நீங்கள் மீண்டும் விழுவீர்கள் என்பது அவருக்குத் தெரியாதா? நீங்கள் மீண்டும் விழுந்தபொழுது, அது அவருக்கு ஆச்சரியமாக இருந்ததா? இல்லை. அப்படியானால் அவர் உங்களை மீண்டும் மன்னிப்பார். நன்றியுள்ள இருதயத்தோடு பின்னோக்கிப் பாருங்கள். அது உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும். கர்த்தருடைய இரக்கத்திற்கு நன்றி செலுத்துங்கள். கடந்த காலத்தில் உங்களுடைய தோல்விகளைப் பார்க்கும்போது, உங்களைச் சுற்றியுள்ள மற்ற தோல்வியுற்ற விசுவாசிகளிடம் இரக்கம் காட்டக் கற்றுக்கொள்வீர்கள். ஆனால் நாம் பின்னோக்கிப் பார்க்கக் கூடாத இன்னொரு விதம் உண்டு. “பின்னானவைகளை மறந்து” என்று பவுல் கூறினார் (பிலிப்பியர் 3:13). நம் வாழ்வின் அநேக வருடங்களை வீணடித்துவிட்டோமே என்று ஒரு தவறான வழியில் பின்னோக்கிப் பார்த்தால், நாம் சோர்வடைந்து, பிரயோஜனமற்றவர்கள் என்றும் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்கள் என்றும் நம்மைக் குறித்து எண்ணிவிடுவோம்.

தங்களுடைய வாழ்க்கையை வீணடித்துவிட்டோமே என்று உணருகிறவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வார்த்தையைக் கொடுக்க விரும்புகிறேன். ஒரு நாளின் வேலை செய்யக்கூடிய 12 மணி நேரங்களில், 11 மணி நேரம் வேலை செய்யாத சில வேலையாட்களைக் குறித்த ஒரு உவமையை இயேசு சொன்னார். பதினோராம் மணிவேளையில் அவர்களை நோக்கி: நீங்கள் திராட்சத்தோட்டத்துக்குப் போய் வேலை செய்யுங்கள் என்று சொன்னார். அவர்கள் சென்று ஒரு மணி நேரம் மாத்திரமே வேலை செய்தனர். ஆனால், முதலில் அவர்களே கூலியைப் பெற்றார்கள் என்று இயேசு சொன்னார்! 12 மணி நேரம் வேலை செய்தவர்களுக்குக் கடைசியாகக் கூலி கிடைத்தது! அது உங்களை ஊக்குவிக்கிறது என்று நம்புகிறேன். நாம் மனச்சோர்வோடும் பின்னோக்கிப் பார்க்கக்கூடாது, பெருமையோடும் பின்னோக்கிப் பார்க்கக்கூடாது. நம்மை மனசோர்வடைய செய்கிற காரியங்களையும் பெருமையடையச் செய்கிற காரியங்களையும் மறக்க வேண்டும் என்பதை “பின்னானவைகளை மறந்து” என்ற வசனம் குறிக்கிறது. உங்களைச் சோர்வடையச் செய்கிற அல்லது உங்களை பெருமையடையச் செய்கிற ஏதாவது ஒரு காரியத்தை நீங்கள் யோசிக்க முடிந்தால், அதனைச் சீக்கிரமாக மறந்துவிடுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கடந்த காலங்களில் தேவன் நமக்காகச் செய்த காரியங்களுக்காக நாம் எப்பொழுதுமே நன்றியுள்ள இருதயத்தோடு திரும்பிப் பார்க்க வேண்டும். இப்படியாகப் பின்னோக்கிப் பார்ப்பதைக் குறித்தே நான் உங்களிடம் பேசுகிறேன். இப்படிப் பின்னோக்கிப் பார்க்காதவர்கள், தாங்கள் முன்செய்த பாவங்களற சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடராயிருக்கிறார்கள் என்று பேதுரு கூறுகிறார் (2பேதுரு 1:9).

2. மேல்நோக்கிப் பார்க்க வேண்டும் (உபாகமம் 12-31)

நாம் மேல்நோக்கியும் பார்க்க வேண்டும். நாம் மேல்நோக்கி பார்க்கிறதான கர்த்தருடைய மகிமையைப் பார்க்கிறதை ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது. நாம் இன்னும் காணாத இயேசுவின் மகிமை அதிகம் உண்டு. இதற்காக நாம் பசிதாகமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அந்தச் சாயலுக்குத்தான் நம்மை மறுரூபப்படுத்த விரும்புகிறார். கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்போது, அது நம்மைத் தாழ்த்தி, நம்முடைய சொந்த தேவையைக் காணச் செய்யும். நம் வாழ்வின் இறுதிவரை தாழ்மையுடன் இருப்பதற்கான இரகசியம் இதுதான்.

தேவன் அபிஷேகம்பண்ணி அதிகமாகப் பயன்படுத்திய ஒருவருக்குப் பெருமை வருவது மிகவும் எளிது. அதுபோன்ற பிரசங்கியார்கள் அநேகரை நான் பார்த்திருக்கிறேன். தேவன் அவர்களைப் பயன்படுத்துகிறதால் மிகவும் பெருமையடைந்து, ஜனங்களிடமிருந்து தங்களை அதிகமாக தொலைவுப்படுத்திக் கொள்ளுகிறார்கள். நம் வாழ்வின் இறுதிவரை நம்மை நொறுங்கினவர்களாய் மனத்தாழ்மையுடன் வைத்திருக்க உதவும் காரியம் எது? ஒரே ஒரு காரியம்தான். நம்முடைய விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கிப் பார்ப்பதே ஆகும். நாம் இயேசுவை நோக்கிப் பார்க்கும்போது பெருமை கொள்ள முடியாது. மாறாக ஒரு மனிதன் மற்றவர்களைப் பார்க்கத் தொடங்கும் போது, மற்றவர்களை விடத் தான் சிறந்தவன் என்றும் மற்றவர்களை விட அதிகமாக அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்றும், மற்றவர்களை விடத் தேவனால் அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டவன் என்றும் கற்பனை செய்து பெருமையடைகிறான். இருப்பினும், அவன் இயேசுவை மேல்நோக்கிப் பார்த்தால், தேவனுக்கு முன்பாக தூசியிலே முகங்குப்புற விழுந்து மனந்திரும்புவான் - அப்போஸ்தலனாகிய யோவான் பத்மு தீவிலே இயேசுவைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் அப்படித்தான் விழுந்துகிடந்தார். அவ்வாறாக ஒருவர் இயேசுவை நோக்கிப் பார்த்துக் கொண்டே இருந்தால், அவர் என்றென்றுமாய் தன்னுடைய முகத்தைத் தூசியில் வைத்திருப்பார். எல்லா நேரங்களிலும் நம் முகத்தைத் தூசியிலே வைக்க நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே பாதுகாப்பான இடம். எனவே, உங்களுடைய வாழ்நாட்கள் முடியும்வரை தேவன் உங்கள்மீது மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், மேல்நோக்கிப் பாருங்கள். ஒருபோதும் நாம் முதலில் உள்நோக்கிப் பார்க்கக் கூடாது, எப்போதுமே மேல்நோக்கி பார்க்க வேண்டும். நாம் இயேசுவை நோக்கிப் பார்த்து அவருடைய மகிமையைக் காணும்போது, நம்முடைய பாவத்தைக் காண்போம். நம்முடைய பாவத்தைக் காண இதுவே சிறந்த வழி; இல்லையென்றால் நாம் மனச்சோர்வடைந்திடுவோம்.

3. முன்னோக்கிப் பார்க்க வேண்டும் (உபாகமம் 32-33)

நாம் விசுவாசத்தோடு முன்னோக்கியும் பார்க்க வேண்டும். தேவன் நமக்கு அற்புதமான காரியங்களை வைத்திருக்கிறார். அவருக்காக நாம் செய்ய வேண்டிய ஒரு பெரிய வேலையையும் அவர் வைத்திருக்கிறார். நாம் எப்போது இந்த உலகத்தை விட்டுக் கடந்து செல்வோம் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கர்த்தர் வருவதற்கு முன்பாக இந்த பூமியிலே அவருக்காக ஏதாவது பிரயோஜனமுள்ள காரியத்தைச் செய்ய முன்னோக்கிப் பார்க்கிறோம். உலகில் பெரும்பாலான ஜனங்கள் எதிர்காலத்தை அச்சத்துடனும் கவலையுடனும் பார்க்கிறார்கள். ஆனால் நாம் விசுவாசத்தோடு முன்னோக்கிப் பார்க்கிறோம். இஸ்ரவேலர்கள் கானான் தேசத்தில், தாங்கள் வாழப்போகும் நாட்களை முன்னோக்கிப் பார்க்கச் சொல்லும்படி தேவன் உபாகமத்தில் மோசேயிடம் கூறினார். இஸ்ரவேலர்களின் தொலைதூர-எதிர்காலத்தைக் குறித்து அவர் உபாகமத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தார்.