1. ஒரு பரந்த இருதயத்தைப் பெற்றிருக்க வேண்டும்
'இஸ்ரவேலின் தேவன்', 'இஸ்ரவேலின் பரிசுத்தர்' என்ற இந்த இரண்டு பதங்களும் ஆமோஸ் புத்தகத்தில் ஒரு முறை கூட வருகிறதில்லை. இது ஏனென்றால், தேவனை இஸ்ரவேலின் தேவனாக மாத்திரம் காணாமல், சகல தேசத்திற்கும் தேவனாக ஆமோஸ் கண்டார். அவர் கர்த்தருடைய வார்த்தைகளை இவ்வாறாக மேற்கோள் காட்டுகிறார், “எத்தியோப்பியரின் புத்திரர்களை விட இஸ்ரவேலின் புத்திரராகிய நீங்கள் எனக்கு அதிக முக்கியமானவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டுவந்தேன். அது சரிதான். ஆனால் அதே விதமாய் மற்ற நாடுகளுக்கும் நான் செய்யவில்லையா? நான் பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்து கொண்டுவந்தேன். நான் சீரியரைக் கீரிலிருந்து கொண்டுவந்தேன். நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டுவந்தேன், உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் என்ன?” (ஆமோஸ் 9:7).
அனைத்து தேசங்களிலும் உள்ள எல்லா மக்களையும் தழுவுகிற, புதிய உடன்படிக்கை தரிசனம் கொண்ட ஒரு தீர்க்கதரிசியாக ஆமோஸ் இருந்தார். தேவன் புறஜாதியார்களையும் யூதர்களோடே கூட்டிச்சேர்த்து, அவர்கள் அனைவரையும் ஒரே சரீரமாக மாற்றுவார் என்பதை அவர் விசுவாசித்தார். இஸ்ரவேல் புத்திரரின் சிறியதும் குறுகியதுமான மனநிலைக்கு மேலாக ஆமோஸ் உயர்ந்திருந்தார். அவர் உலகம் முழுவதிலும் உள்ள ஜனங்களுக்காக ஒரு பரந்த இருதயம் கொண்டிருந்தார். "நாங்கள் மாத்திரமே தேவன் ஏற்றுக்கொண்ட ஜனங்கள்" என்று நினைத்த இஸ்ரவேல் புத்திரரைப் போல அவர் பிரத்தியேகமானவராக (exclusive) இருக்கவில்லை.
இப்பூமியில் தேவன் தம்முடைய ஜனமாக தங்களை மாத்திரமே தெரிந்துகொண்டிருக்கிறார் என்று கற்பனை செய்கிற அநேக கிறிஸ்தவ குழுக்களும் இன்றும் உண்டு. உண்மையில் கூறுவோமானால், அந்த மனப்பான்மை ஒரு மார்க்க கண்மூடித்தனத்தை அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய ஒரு அடையாளக் குறியாகும். அந்த நாட்களிலும் இஸ்ரவேல் தேசத்தில் இதுபோன்ற மக்கள் இருந்தார்கள். ஆனால் ஆமோஸ் அப்படி இருக்கவில்லை - அவருக்கு ஒரு பரந்த இருதயம் இருந்தது.
ஒரு உண்மையான தேவனுடைய ஊழியக்காரர், ஒவ்வொரு குழுவிலும் ஒவ்வொரு சபை ஸ்தாபனத்திலும் தேவனுடைய ஜனங்களை ஏற்றுக்கொள்ளுகிற ஒரு பரந்த இருதயத்தைக் கொண்டிருப்பார். பாபிலோன் ஏதோ ஒரு சபை ஸ்தாபனத்தில் காணப்படுகின்ற ஒரு அமைப்புமுறை அல்ல. இது உங்கள் இருதயத்திற்குள்ளே காணக்கூடிய ஒரு உலக அமைப்புமுறை ஆகும். உலகிலேயே சிறந்த சபையில் ஜனங்கள் உட்கார்ந்திருந்தாலும் பாபிலோனின் ஒரு அங்கமாக இருக்க முடியும் - ஏனென்றால் பாபிலோன் அவர்களுடைய ஆவிக்கு உள்ளே இருக்க முடியும். ஒரு சபை ஸ்தாபனத்தின் முறைமையை விட்டு அவர்கள் வெளியே வருகிறபடியால், பாபிலோனிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று அவர்கள் கற்பனை செய்யலாம். ஆனால் அது உண்மை அல்ல. உதாரணமாக, நீங்கள் பணத்தை நேசித்தால், நீங்கள் உலகிலுள்ள எந்த சபையில் இருந்தாலும், நீங்கள் பாபிலோனின் ஒரு அங்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் மாம்சத்தின் இச்சைகளின்படி பிழைத்தால், நீங்கள் உலகிலுள்ள எந்த சபையில் இருந்தாலும், நீங்கள் விபச்சாரக்காரர்களே. "நாங்கள் மரியாளை வணங்குவதில்லை" என்றும் "குழந்தை ஞானஸ்நான முறையைக் கடைப்பிடிப்பதில்லை" என்றும் உங்களுடைய தூய்மையான உபதேசங்களில் நீங்கள் பெருமைப் பாராட்டலாம். அந்த தூய்மையான உபதேசங்கள் நல்லதுதான். ஆனால் நீங்கள் பணத்தை வணங்கி, உங்கள் இச்சைகளின்படி வாழ்கிற முறையைக் கடைப்பிடித்தால், மற்றவர்களைவிட மோசமாக நீங்கள் இருந்துகொண்டு இருக்கிறீர்கள். தலை அறிவிலே (உபதேசத்திலே) அவர்களுடைய பிரச்சனை இருக்கிறது. ஆனால் உங்களுடைய பிரச்சனையோ அதிக மோசமான (serious) இருதயப் (வாழ்க்கை தொடர்பான) பிரச்சனையாய் இருக்கிறது.
இன்றைய கிறிஸ்தவ வட்டாரத்தில் அதிக பிரத்தியேகத் தன்மை (exclusivism) இருக்கிறது. தேவன் தங்களுடைய சிறிய குழுவினருக்கு மட்டுமே அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்று கற்பனை செய்கிறார்கள். கிறிஸ்துவின் சரீரம் எந்தவொரு சபை ஸ்தாபனத்தைக் காட்டிலும் பரந்திருக்கிறது. தேவனுடைய மக்கள் ஏதோ ஒரு சபை ஸ்தாபனத்தில் மாத்திரம் இன்று காணப்படுகிறதில்லை. ஒவ்வொரு சபை ஸ்தாபனத்திலும் தேவன் தமக்கென்று மக்களை வைத்திருக்கிறார். வித்தியாசமான உபதேசங்களைக் கொண்டுள்ள அநேக சபைகளிலும் ‘மறுபடியும் பிறந்த’ ஜனங்கள் இருக்கிறார்கள். அநேக சபைகளின் உபதேசங்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் தேவன் அவருடைய பிள்ளைகளில் சிலரை அங்கே கொண்டிருக்கிறார் என்ற உண்மையை என்னால் மறுக்க முடியாது. அதேவிதமாக, சுவிசேஷத்தை அறிந்த சபைகளிலும் ‘மனந்திரும்பாத ஜனங்கள்’ பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களாக உட்கார்ந்திருக்கிறார்கள். மேலும் "பிரித்தெடுக்கப்பட்ட சபை (separated assemblies)" என்று சொல்லுகிற சபைகளிலும் ‘மனந்திரும்பாத ஜனங்கள்’ அப்பம் பிட்கிறார்கள். - குறிப்பாக அந்த சபைகளிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினர் அவ்வாறு இருக்கிறார்கள். ஆமோஸ் தீர்க்கதரிசியின் தரிசனத்தைப் போல ஏதாவதொன்றை இந்த நாட்களில் நாம் பார்க்க வேண்டும். தேவன் எல்லா தேசத்திலும் எல்லா சபை ஸ்தாபனத்திலும் உள்ள ஜனங்களைத் தண்டிக்கிறார். மேலும் எல்லா தேசத்திலும் எல்லா சபை ஸ்தாபனத்திலும் உள்ள ஜனங்களை தம்மிடம் சேர்த்துக்கொள்கிறார்.
2. தீர்க்கதரிசன வார்த்தையை அற்பமாக எண்ணாதிருங்கள்
கடைசி நாட்களைப் பற்றிய தீர்க்கதரிசன வார்த்தைகளை ஆமோஸ் 8:11,12-ல் வாசிக்கிறோம்: “கடைசி நாட்களில் ஒரு பஞ்சம் வரும் - ஆகாரக்குறைவினால் உண்டாகிற பஞ்சமல்ல, கர்த்தருடைய வார்த்தையின் பஞ்சம் - கர்த்தருடைய வார்த்தையைத் தேடி ஜனங்கள் இங்கேயும் அங்கேயுமாய் அலைந்து திரிவார்கள்.” இன்று அந்த பஞ்சத்தை நாம் காண்கிறோம். 'தேவனுடைய வார்த்தை' என்பது வேதாகமத்தைக் குறிக்கிறது - அதில் எந்த பற்றாக்குறையும் (பஞ்சமும்) இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான வேதாகமங்களை வேதாகம சங்கம் (The Bible Society) விநியோகிக்கிறது. உலகிலேயே அதிக விற்பனையாகிற புத்தகமாக வேதாகமம் தான் இன்னும் திகழ்கிறது. ஆனால் இங்கே இந்த வசனம் 'கர்த்தருடைய வார்த்தையைப்' பற்றிப் பேசுகிறது. அது காலத்தின் தேவைக்கேற்ப, ஒரு தீர்க்கதரிசியின் வாயின் மூலமாக நேரடியாகத் தேவனிடத்திலிருந்து வரும் தீர்க்கதரிசன வார்த்தையைக் குறிக்கிறது. கடைசி நாட்களில் "கர்த்தருடைய வார்த்தை" அரிதானதாக இருக்கும். ஒரு உண்மையான தீர்க்கதரிசியைக் கேட்க ஜனங்கள் எல்லா இடங்களிலும் அலைந்து திரிவார்கள் - ஆனால் அவர்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எனவே, கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தையைக் கேட்கும்படி உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது, கவனம் செலுத்துங்கள், ஜாக்கிரதையாய் கேளுங்கள் - அதைத் தீவிரமாக (seriously) எடுத்துக் கொள்ளுங்கள்.
3. ஒரு மகிமையான வாக்குத்தத்தம்
"இதோ, உழுகிறவன் அறுக்கிறவனைத் தொடர்ந்துபிடிக்கிறதுமான நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்று ஆமோஸ் 9:13-ல் நாம் வாசிக்கிறோம். இதனுடைய பொருள் என்னவென்றால்: கடந்த காலத்தில் நாம் அதிக தீமையை விதைத்தோம், நாம் மன்னிக்கப்பட்டிருந்தாலும், நாம் விதைத்த சிலவற்றை இன்னும் சிறிதளவு அறுவடை செய்கிறோம். ஆனால் உங்கள் வாழ்க்கையில் (முழு இருதயங்கொண்ட சீஷனாக மாறியபிறகு) நீங்கள் விதைக்கிற புதிய காரியங்கள், (உங்களுடைய கடந்த கால வாழ்க்கையினால்) நீங்கள் அறுவடை செய்துகொண்டிருக்கிற காரியங்களை அழிக்கும் நாட்கள் விரைவில் வரும். உதாரணமாக: கடந்த காலத்தில் ஆபாசமான காரியங்களை நீங்கள் பார்த்ததினாலும் படித்ததினாலும் உங்களுடைய மனதைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிற அசுத்த எண்ணங்களும் கனவுகளும், இப்பொழுது ஆவிக்குரிய காரியங்களின் எண்ணங்களினாலும் கனவுகளினாலும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்படும், ஏனென்றால் உங்களுடைய மனதை இப்பொழுது நீங்கள் தேவனுடைய வார்த்தையினால் நிரப்பிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கை தேவனுக்குப் பயனுள்ளதாய் (கனி கொடுக்கிறதாய்) இருக்கும். அது எவ்வளவு மகிமையான வாக்குத்தத்தம்! அல்லேலூயா!