மோசே சீனாய் மலையிலிருந்து இரண்டு கற்பலகைகளைக் தன்னுடைய கையில் எடுத்துக் கொண்டு இறங்கிவந்தார். ஒரு கற்பலகையில், தேவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைக் குறித்த முதல் நான்கு கட்டளைகள் எழுதப்பட்டுள்ளன. மற்றொன்றில், மனிதன் தன் சக மனிதர்களுடனான உறவைக் கையாளும் விதத்தைப் பற்றிய ஆறு கட்டளைகளும் எழுதப்பட்டுள்ளன.
இந்த இரண்டு கற்பலகைகளிலுமுள்ள பத்து கற்பனைகளையும் இரண்டு கற்பனைகளாகத் தொகையிடலாம் என ஆண்டவராகிய இயேசு கூறினார். முதலாம் கற்பனை யாதெனில், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக" என்பதுதான். இரண்டாம் கற்பனை யாதெனில், “உன்னிடத்தில் நீ அன்புகூர்வது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” என்பதே ஆகும் (மத்தேயு 22:37-39).
இயேசு தாம் கற்பித்த ஜெபத்திலும் இந்த இரண்டு கற்பனைகளையும் வலியுறுத்தினார். இதில், முதல் மூன்று விண்ணப்பங்கள் முதலாம் கற்பனையுடன் தொடர்புடையவை. அடுத்த மூன்று விண்ணப்பங்கள் இரண்டாம் கற்பனையுடன் தொடர்புடையவை, இந்த இரண்டாவது கற்பனையைத்தான் இயேசு புதிதான கட்டளை எனக் குறிப்பிட்டு, “நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என சீஷர்களிடம் அக்கட்டளையை வழங்கினார் (யோவான் 13:34).
ஓர் உண்மையான இயேசுவின் சீஷன், தான் அறிந்த ஜீவிய பகுதிகளிலும் தான் அறியாத பகுதிகளிலும் தேவனையே மையமாகக் கொண்டு வாழ்ந்திட வாஞ்சிப்பான். தன் வாழ்வில் தேவன் கொண்டிருக்கும் சித்தத்திற்குப் புறம்பாகத் தனக்கென எவ்வித இலட்சியமோ அல்லது விருப்பமோ ஒருபோதும் கொண்டிடமாட்டான். இவ்விதம் தேவனை மையமாகக் கொண்டு ஜீவிக்கும் இந்த சீஷன், இயேசு தன்னை நேசித்தது போலவே தன் சகோதரர்களையும் பூரணமாக நேசிப்பான்!
இருப்பினும், இந்த இரண்டு திசைகளிலும் இருக்க வேண்டிய அளவுக்கு அவனது மனப்பான்மை பூரணமானதாக இல்லை என்பதை அவன் எப்பொழுதும் அறிந்திருக்கிறான். ஆனாலும், அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து பிரயாசப்படுகிறான், அந்த இலக்கை எட்ட, எந்த விலைக்கிரயத்தையும் கொடுக்க எப்போதும் தயாராக இருக்கிறான்.
நம் சகோதர்களிடம் நாம் கரிசனை கொள்வதே அவர்களிடத்தில் அன்புகூர்வதாகும். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொருவருக்காகவும் நாம் கரிசனை கொண்டிட முடியாது! அந்த அளவிற்கான திராணி தேவனுக்கு மாத்திரமே உண்டு. ஆனால் நம்முடைய திராணிக்கேற்ப நம்முடைய சக விசுவாசிகளிடம் நாம் நிச்சயமாய் கரிசனை காட்டிட வேண்டும். இவ்விதமாய் கரிசனை காட்டும் நம் திராணியின் அளவு தொடர்ந்து பெருகிக் கொண்டேயும் வரவேண்டும்.
நாம் முதலில் இவ்விதமாய் துவங்குவதில்லை. இருப்பினும், முதல் படியாக இயேசு நம்மை நேசிப்பது போலவே நம் வீட்டிலுள்ள குடும்ப அங்கத்தினர்களை அன்புகூர வேண்டும். பின்பு, இதோடு நாம் நின்று விடாமல் தேவனுடைய குடும்பத்திலிருக்கும் சகோதர சகோதரிகளையும், இயேசு நம்மை நேசிப்பது போல நேசிக்கும்படி வளர்ச்சியடைய வேண்டும்!
பூரணம் என்பது, அதை நோக்கி நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டிய ஓர் இலக்காயிருக்கிறது! ஆனால், அதை அடையும்படி நாம் தீர்மானமாயிருக்க வேண்டும். பவுல் இவ்விதத் தீர்மானத்தோடுதான் முன்னேறிச் சென்று, “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்கிறேன்” எனக் கூறினார் (பிலிப்பியர் 3:13,14). எல்லாவற்றிற்கும் மேலாக தேவனையே நேசித்தும், இயேசு நம்மை நேசிப்பது போல நம் சகவிசுவாசிகளையும், நம்மை நாம் நேசிப்பது போலப் பிறரையும் நேசித்தும், இவ்விதமாய் பரிபூரணமாக தேவனையே மையமாகக் கொண்டவர்களாய் மாறுவதே தேவன் நமக்கு முன் வைத்திருக்கும் பரம அழைப்பாகும்!