WFTW Body: 

இயேசுவுக்கு நேரிட்ட சோதனைகளைக் குறித்து மத்தேயு 4:4-11 வரையுள்ள வசனங்களில் நாம் வாசிக்கிறோம். இயேசுவானவர், "நம்மைப் போலவே எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும், பாவம் செய்யவில்லை" என்று வேதம் எபிரேயர் 4:15-ல் விளம்புகிறது. சில 'புத்திசாலி' கிறிஸ்தவர்கள், இதைப் பற்றி அலசி ஆராய வேண்டும் என்னும் நோக்கில், இப்படியாய் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள்: "இயேசுவால் பாவம் செய்திருக்க முடியுமா அல்லது அவருக்குப் பாவம் செய்யும் சாத்தியம் இல்லாமல் இருந்ததா?" என்பதுதான் அவர்களது கேள்வி. ஒரு சிலர், "அவர் பாவம் செய்யக் கூடாதவராய் இருந்தார்" என்று சொல்லும் அதே வேளையில், வேறு சிலரோ, "அவருக்குப் பாவம் செய்யாமலிருக்கும் சாத்தியம் இருந்தது" என்று சொல்லுகின்றனர். ஆனால் நாமோ இந்த விவாதத்திலெல்லாம் ஒரு போதும் கலந்து கொள்ளப் போவதில்லை. சாதாரண மனுஷரின் மனோதத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளுவதே நமக்குக் கடினமாக உள்ளது. அப்படி இருக்கும்போது இயேசுவின் மனோதத்துவத்தைப் பற்றி நம்மால் எப்படி அறிந்து கொள்ள முடியும்? அவர் நம்மைப் போலவே எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவம் செய்யாதவராய் இருக்கிறார் என்று அறிந்து கொள்ளுவதே நமக்குப் போதுமானதாகும். மேலும் இந்த விஷயத்திலே அவர் நமக்கு ஓர் முன்மாதிரியாக விளங்குகிறார். அவர் தேவனாயிருந்தார் என்பதையும், அவர் இப்பூவுலகிற்கு மனுஷனாய் வந்த போது, அவர் தேவனுக்குரிய வல்லமைகளில் எதையும் பயன்படுத்தவில்லை என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். தேவன் சோதிக்கப்படுகிறவரல்லர். ஆனால் இயேசு சோதிக்கப்பட்டார். அவர் நம்மைப் போலவே எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவம் செய்யவில்லை என்று வேதம் கூறுவதை நான் அப்படியே விசுவாசிக்கிறேன். இதுதான் அவர் ஜெயித்தது போலவே நானும் ஜெயிக்க முடியும் என்னும் விசுவாசத்தை எனக்கு அளிக்கின்றது (வெளி 3:21).

இயேசு பிசாசினால் 40 நாட்கள் சோதிக்கப்பட்டார் (லூக் 4:2). அந்த 40 நாட்களும் அவர் பிசாசுக்கு எதிர்த்து நின்றார். நாம் இங்கு கடைசி மூன்று சோதனைகளைப் பற்றி மாத்திரந்தான் வாசிக்கிறோம். "என்று எழுதியிருக்கிறது" என்னும் ஆவியின் பட்டயத்தைக் கொண்டுதான் இயேசு ஒவ்வொரு சோதனையையும் வென்றார். இயேசு வசனத்தை மேற்கோள் காட்டுகிறார் என்று பிசாசானவன் அறிந்தவுடன், அவனும் வேத வசனத்தைச் சுட்டிக் காண்பித்து, " நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக் குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்து கட்டளையிடுவார் என்பதாய் எழுதியிருக்கிறது" என்று சொன்னான் (மத் 4:6). அதற்கு இயேசு, "உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே" (மத் 4:7) என பதிலளித்தார். சத்தியமானது ஒரேயொரு வசனத்தில் அடங்கியிராமல், முழு வேத வாக்கியங்களிலும் அடங்கியுள்ளது. ஒரு வசனம் இன்னொரு வசனத்தைச் சமநிலைப்படுத்துகிறது. சாத்தான், இயேசுவையே வழிதப்பிச் செல்லும்படிக்கு அவரிடத்தில் வேத வாக்கியத்தை மேற்கோள் காட்டுவானானால், அவன் உங்களிடத்திலும் வேத வசனத்தை மேற்கோள் காட்டி, வழிதவறச் செய்ய வைக்க முயலுவான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இயேசு சந்தித்த சோதனைகளில் மறைந்து கிடக்கும் காரியங்களை நாம் அறிந்து கொள்ளுவது நல்லது. ஏனெனில் சாத்தான் நம்மையும் இது போலவேதான் சோதிக்கின்றான்.

1. சுயநலம் (மத் 4:1-4): உம்முடைய பசியை ஆற்றுவதற்காக இந்தக் கற்களை அப்பமாக மாற்றும்.

அ) உம்முடைய ஆவிக்குரிய தேவைகளுக்கு மேலாக உம்முடைய சரீரத் தேவைகளை வையும். மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று இயேசு விடையளித்தார்.

ஆ) தேவன் கொடுத்த வல்லமையை உம்முடைய சொந்த ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும். இயேசு அப்படிச் செய்ய மறுத்துவிட்டார். அவர் பின்னாளில் 5000 பேரைப் போஷிப்பதற்குப் பயன்படுத்திய அந்த வல்லமையை தனக்கென்று ஒருபோதும் பயன்படுத்தவில்லை. அநேகப் பிரசங்கிகள் தேவன் தங்களுக்குத் தந்த வல்லமையையும், வரத்தையும் தங்களுக்கென்று பணம் சம்பாதிப்பதற்காகப் பயன்படுத்தியதால், இந்தச் சோதனைக்கு அவர்கள் உணவாகிவிட்டார்கள்.

2. அனுமானம் (மத் 4:5-7): தேவாலயத்தின் கூரையிலிருந்து குதித்து, தேவனுடைய பாதுகாப்பைக் கேளும்.

அ) தேவன் சொல்லாத ஒன்றைச் செய்யத் துணிந்துவிட்டு, அதற்காக தேவனுடைய வாக்குத்தத்தங்களைச் சுதந்தரிக்கும் உரிமையைக் கேளும். ஆபத்தான காரியங்களைச் செய்யத் துணிந்து, தேவனைப் பரீட்சிக்கக் கூடாது என்று இயேசு பதிலளித்தார். சில மதியீனமான கிறிஸ்தவர்கள் வியாதிப்படும்போது, அதற்காக மருந்து எதுவும் உட்கொள்ளாமல், தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட சுகத்தைத் தரட்டும் என்று சொல்லுகிறார்கள். அது விசுவாசம் அல்ல வெறும் அனுமானம் ஆகும். அது தற்கொலைக்குச் சமம்! மருந்துகள் அனைத்தும் தேவனுடைய படைப்பு. எனவே நாம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். தேவாலயத்தின் கூரையிலிருந்து கீழிறங்கிவர படிக்கட்டுகள் இருக்குமானால், நாம் அவற்றைப் பயன்படுத்தி இறங்கிவர வேண்டுமேயொழிய, மேலிருந்து கீழே குதிக்கக்கூடாது. நாம் குதித்தால், தேவன் பாதுகாக்க மாட்டார். ஆனால் நாம் மருந்துகள் எதுவும் கிடைக்காத நடுக்காட்டிற்குள் சிக்கிக் கொண்டு, நம்முடைய வியாதிக்காக ஜெபித்தால், தேவன் சுகப்படுத்துவார். ஆனால் எல்லா மருந்துகளும் கிடைக்கும் இடத்தில் அவர் அவ்வாறு செய்வதில்லை.

ஆ) நீர் தேவ மனிதன் என்று பிறருக்குக் காட்டும்படிக்கு ஏதாவது ஒரு பிரமிப்பூட்டும் காரியத்தைச் செய்யும். இது மனுஷரின் மகிமையைத் தேடும்படிக்கான சோதனை. இயேசு மனுஷரின் கனத்தைத் தேடுவதற்காக பிரமிப்பூட்டும் காரியங்களையும், அற்புதங்களையும் செய்ய மறுத்துவிட்டார்.

3. சமரசம் (மத் 4:8-10): சாத்தானுக்கு முன்பாக மண்டியிட்டு, உலகத்தின் ராஜ்ஜியங்களையும், அவற்றின் மகிமைகளையும் பெற்றுக்கொள்ளும்.

அ) சரியான காரியத்தைத் தவறான, அதாவது ஒரு குறுக்கு வழியிலே, பெற்றுக் கொள். ஓர் அநீதியான செயலைச் செய்வதென்பது சாத்தானுக்கு முன்பாக மண்டியிடுவதற்குச் சமமாகும். இயேசு ஒரு நெடிய, கடினமான சிலுவைப் பாதையைத் தெரிந்து கொண்டு, மற்ற எல்லாவித குறுக்கு வழிகளையும் தவிர்த்துவிட்டார்.

ஆ) இவ்வுலகம் தரும் பணம், கனம், பதவி, வல்லமை (அது உலகத்திலோ அல்லது சபையிலோ) போன்ற மகிமையை நாடிப் பின்தொடர். நாம் தேவனை மட்டுமே பணிந்து கொள்ள வேண்டுமே அன்றி சாத்தானையோ அல்லது அவன் கொடுக்கும் பணம் மற்றும் வேறு காரியங்களையோ பணிந்து கொள்ளக் கூடாது என்று இயேசு சொன்னார். அநேகப் பிரசங்கிகள் தங்களுக்கு ஒரு பரந்த ஊழியம் வேண்டுமென்பதற்காக, தேவன் அவர்களிடம் பிரசங்கிக்கச் சொல்லும் எல்லாக் காரியங்களையும் பிரசங்கிப்பதில்லை. அதன்மூலம் அவர்கள் பிறரைப் பிரியப்படுத்திவிடுகின்றனர். இப்படியாக அவர்கள் ஒரு பரந்துவிரிந்த ஊழியத்தைப் பெற்றுக் கொண்டாலும், அது சாத்தானுக்கு முன்பாக மண்டியிடுவதற்கு ஒப்பானது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாத்தான் இயேசுவிடத்தில் வந்தது போலவே, நம்மிடத்திலும் இந்த வழிகளிலெல்லாம் வருகிறான். இயேசு தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவனை விரட்டியடித்தார். நாமும் அது போலவே தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவனை விரட்ட முடியும்.