“உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.” என்று மத்தேயு 5:42-இல் நாம் வாசிக்கிறோம். சில நேரங்களில் வசனத்தை வசனத்தோடு ஒப்பிடும்போது விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்ளமுடியும். ஆகவே இந்த வசனத்தை சரியாகப் புரிந்துகொள்ள, அதற்கு இணையானதொரு வசனத்தைப் பார்க்கவேண்டும். லூக்கா 6:35-இல் இயேசு கூறுகிறார்: "நீங்கள் கைம்மாறு கருதாமல் (திரும்பக் கிடைக்குமென்று நம்பாமல்) கடன் கொடுங்கள்."
ஒருமுறை, ஒரு சகோதரன் என்னிடத்தில் வந்து, வேறொரு சகோதரனுக்கு தான் மூவாயிரம் ரூபாய் கடன் கொடுத்ததாகவும், அவர் திரும்பக் கொடுப்பதாக சொன்னதாகவும், நீண்ட நாட்கள் கடந்தும் திரும்பக் கொடுக்கவில்லை என்றும் கூறினார். வேதாகமத்தை மீறியது கடன்கொடுத்த அவர் தான் என்று அந்த சகோதரனிடம் கூறினேன். ஏனென்றால் வேதாகமம் "திரும்பக் கிடைக்குமென்று எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்" என்று கூறுகிறது. திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கடன் கொடுத்தால், அதனால் உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும் பாவிகளுக்கு அதே அளவு திரும்பக் கிடைக்கும்படி கடன் கொடுக்கிறார்கள் (லூக்கா 6:34). ஆனால் ஒரு விசுவாசியாக நீங்கள் கடன் கொடுக்கும்போது வேறுபட்டவர்களாக இருக்கவேண்டும். ஆம், திரும்பக் கிடைக்கும் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமால் கொடுக்கவேண்டும்.
இயேசு கூறியதன் கருத்து என்னவென்றால், நீங்கள் ஒரு நன்கொடையாகக் கொடுக்கக்கூடிய அளவு மட்டுமே கடன் கொடுக்கவேண்டும் என்பதேயாகும். ஆகவே அந்த சகோதரன் அவ்வளவு தொகையாகிய அந்த மூவாயிரம் ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கக் கூடாது என்றுகூறினேன். “மன்னிக்கவும், மூவாயிரம் ரூபாய் உங்களுக்குத் தர என்னால் இயலாது, ஆனால் 500 ரூபாய் தரமுடியும்” என்று சொல்லியிருக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், திரும்பக் கிடைக்குமா கிடைக்காதா என்று கவலைப்படாமல் இருக்கக்கூடிய அளவு மட்டுமே கடன் கொடுங்கள். அதை ஒரு நன்கொடையாகக் கருதுங்கள். திரும்பக் கொடுக்கவில்லையென்றால் அதை விட்டுவிட வேண்டியது தான். இப்படிச் செய்யாமல் போனால், நீங்கள் வேதவசனத்தை மீறியவர்களாகிவிட்டீர்கள். இந்த விஷயங்களில் உள்ள ஆவியை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
"உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே." என்று இயேசு கூறியதன் அர்த்தம் என்ன? நான் ஓர் இளம் கிறிஸ்தவனாயிருந்தபோது, கப்பற்படை அதிகாரியாக, என் தேவைக்கு மிகவும் அதிகமாக நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்தேன். என்னிடம் மிகுதியான பணம் இருந்தது. சபையில் ஓர் ஏழை சகோதரன் அதை அறிந்து என்னிடம் வந்து கடன் கேட்பார். எவ்வளவு வேண்டும் என்று கேட்டேன், ஒரு மாதத்தில் திரும்பக் கொடுப்பதாகக் கூறினார். நானும் அவர் கேட்டதைக் கொடுத்தேன். அடுத்த மாதம் வந்தபோது, இன்னும் திரும்பக் கொடுக்க முடியவில்லை என்று சொல்லி மேலும் கேட்டார், அப்போதும் நான் கொடுத்தேன். "உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே" என்ற வசனத்தை மனதில் வைத்துக்கொண்டு மாதக்கணக்கில் பணம் கொடுத்துக்கொண்டே இருந்தேன். நான் வேதவார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன் என்று நினைத்து அமைதியாக இருந்தேன். புதிதாக ஞானஸ்நானம் பெற்ற இளம் கிறிஸ்தவனாக, எனக்குத் தெரிந்தவரையில் வேதம் கூறியதைச் செய்தேன். ஆனால் சிறிது காலம் கழித்து, அந்தப் பணத்தை வாங்கியவர் வழிதவறி, குடிப்பழக்கம் மற்றும் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானார். அதை நான் கேள்விப்பட்டபோது, “அந்தப் பணத்தை மது வாங்கவும் பிசாசின் ராஜ்யத்தை வளர்க்கவும் உபயோகித்தால், அந்த பணம் தேவனுடைய ராஜ்யத்திற்காக உபயோகிக்கப்படவேண்டியது என்பதால், அதை திரும்பக் கொடுப்பது நல்லது” என்று அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர் மிகவும் கோபமடைந்து செத்த ஸ்தாபன சபைகள் கூட நான் கேட்பதுபோல் கேட்பதில்லை என்று கூறினார்.
நான் அதை மறந்துவிடும்படி கர்த்தர் சொன்னார். நான் அதற்குப்பிறகு அவருக்குக் கடிதம் ஏதும் எழுதவில்லை, பணமும் எனக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. "கர்த்தாவே, நான் என்ன தவறு செய்தேன்? 'கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே' என்று கூறும் உம்முடைய வேதவாக்கியத்திற்குத் தானே கீழ்ப்படிந்தேன்?" என்று நினைத்தேன். இப்போது ஏறக்குறைய 50 வருஷங்களாக என்னுக்கு உதவியாயிருக்கும் ஒரு காரியத்தை கர்த்தர் அப்போது எனக்குக் கற்றுக்கொடுத்தார். அதாவது, வசனத்தை வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். கேட்கிறவனுக்கு கடன் கொடுக்கவேண்டும் என்று ஒரு வேதவாக்கியம் கூறுகிறது, ஆனால் என்னிடம் இருக்கும் எதுவும் என்னுடையதல்ல என்று வேறொரு வேதவாக்கியம் கூறுகிறது. பூமியிலுள்ள எல்லாமே கர்த்தருடையது. "பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது" (1கொரிந்தியர் 10:26). ஆகவே, மாதாமாதம் சம்பளம் வாங்கும்போது அது என்னுடையது என்று நினைக்கிறேன் — ஆனால் அது என்னுடையதல்ல என்று பார்க்கவேண்டும்; அதை விட்டுவிட வேண்டும். கர்த்தருக்குக் கொடுத்துவிட வேண்டும். மாதத்தின் முதல் தேதி சம்பளம் வாங்கி என் வங்கிக் கணக்கில் இருந்தாலும், ‘அது என்னுடைய பணம் அல்ல, தேவனுடைய பணம்’ என்று சொல்லவேண்டும்.
அந்த நேரத்தில் என் மனதில் வந்த ஒரு உதாரணம் இது: யாரோ என்னிடம் 5000 ரூபாய் வைத்திருந்து பிறகு திரும்பக் கொடுக்கும்படி சொல்லியிருந்தால், அந்த நேரத்தில் வேறொருவர் என்னிடம் 5000 ரூபாய் இருப்பதாக கேள்விப்பட்டதாகச் சொல்லி 3000 ரூபாய் கடன் கேட்டால், நான் என்ன சொல்வேன்? "மன்னிக்கவும் சகோதரனே, அது என்னுடைய பணமல்ல, வேறொருவருடையது. அவர் என்னிடம் வைத்திருக்கும்படி கூறியிருக்கிறார். அவரிடம் கேட்டுப்பார்க்கிறேன், அவர் சம்மதித்தால் தருகிறேன்" என்று சொல்வேன். அது என்னுடைய பணமல்ல என்பதால், இந்த சூழ்நிலையைக் கையாள்வதற்கு இதுவே நீதியான வழி அல்லவா? என்னுடைய சம்பளத்தை கர்த்தருடைய பணமாகக் கருதியிருந்தால், அவ்வளவு எளிதாக நான் கொடுத்திருக்கமாட்டேன். அந்த சகோதரன் என்னிடத்தில் கடன் கேட்க வந்தபோது, "சரி, தேவையுள்ளவனுக்குக் கடன் கொடுப்பது சரிதான், ஆனால் இந்தப் பணத்துக்குச் சொந்தக்காரராகிய காத்தரிடத்தில் போய்க் கேட்கிறேன்” என்று சொல்லியிருப்பேன். கர்த்தரிடம் சென்று, "கர்த்தாவே, இந்த நபருக்கு நீர் பணம் தர விரும்புகிறீரா?" என்று கேட்டிருப்பேன். கர்த்தர் ஆம் அல்லது இல்லை என்று சொல்லியிருப்பார்.
தேவன் பேசுகிறார்; அவர் ஜீவனுள்ள தேவன். முதல் முறை ஆம் என்று சொல்லியிருப்பார், இரண்டாவது முறை இல்லை என்று சொல்லியிருப்பார் — ஆனால் நான் காத்திருந்து கேட்கவில்லை. நியாயப்பிரமாணத்தின் எழுத்தின்படி நடந்து அடிமைத்தனத்தில் சிக்கிக்கொண்டேன். ஆனால் என் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே வேதாகமத்திற்குக் கீழ்ப்படிவது எப்படி என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டதில் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். "இப்படி எழுதியிருக்கிறதே" என்றும் "இப்படியும் என்று எழுதியிருக்கிறதே" என்று நான் பார்க்கவேண்டும் என்பதே அந்தப் பாடம். வேதாகமத்தைப் புரிந்துகொள்வதற்கு வேதவசனத்தை வேதவசனத்தோடு சமன்படுத்தவேண்டும். இங்கே சொல்லப்பட்டிருப்பதுபோல், இன்று என்னிடம் கேட்கிற எல்லாருக்கும் கடன் கொடுக்க நான் தயாராயிருக்கிறேன். ஆனால் என்னிடம் இருப்பதெல்லாம் கர்த்தருடையது என்பதையும் உணர விரும்புகிறேன் — கர்த்தரிடம் கேட்காமல் கொடுக்கமுடியாது. அதன்படியே பிறகு ஜனங்கள் என்னிடத்தில் பணம் கேட்கும்போது நடந்துகொண்டேன். இப்போது, "கர்த்தரிடம் தேடுகிறேன்; என் ஆவியில் சுதந்திரம் கிடைத்தால் தருகிறேன்" என்று சொல்கிறேன். சில நேரங்களில் கொடுத்திருக்கிறேன், திரும்பக் கிடைக்கவில்லை — சில நேரங்களில் கர்த்தர் சுதந்திரம் தராததால் கொடுக்கவில்லை, ஆனால் என் இருதயம் கொடுக்கத் தயாராயிருந்தது.
இயேசு இவை எல்லாவற்றையும் எந்த ஆவியில் சொன்னார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது ஓர் உதாரணம். ஜனங்கள் நம்மை ஒரு மிதியடியைப்போல் நடத்துவதை நாம் அனுமதிக்கிறோம் என்று அர்த்தமல்ல. கோட்பாடு என்னவென்றால், நாம் யாரிடமும் பழிவாங்கக் கூடாது, நம்மை காயப்படுத்தியவர்களை தண்டிக்கவேண்டும் என்ற ஆசை கொள்ளக்கூடாது என்பதே.