சீஷத்துவத்தின் மூன்றாவது நிபந்தனை லூக்கா 14:33 -இல் குறிப்பிடப்பட்டுள்ளது: “அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்து விடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.”
நடைமுறை காரியத்தில் நாம் அதை எப்படிப் புரிந்து கொள்வது? ஆம், அதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் அனைத்து உடமைகளையும் / சொத்துக்களையும் விட்டுவிட்டு துறவிகளாகவோ அல்லது சன்யாசிகளாகவோ மாறி, காட்டுக்குள் சென்று அங்கே வாழ வேண்டும் என்று அர்த்தமா? இல்லை. எது என்னை அதிகமாய்ப் பிடித்து வைத்துக் கொள்ளுகிறதோ அல்லது ஆட்கொள்கிறதோ அது தான் என்னுடைய உடமைகள் / சொத்துக்கள். என் வீடு என்னுடைய உடமை என்றால் அதை நான் பற்றிக் கொள்கிறேன். ஏனென்றால் அது என்னுடையது என்று சொல்லுகிறேன். நான் அதைப் பிடித்துக் கொள்கிறேன், அது என்னைப் பிடித்துக் கொள்கிறது. அது உங்களுடைய விலையுயர்ந்த ஒரு வாகனமாய் இருக்க முடியும் அல்லது மிகவும் விலைமதிப்பு மிக்க பங்குகளாகவோ அல்லது பொருளாகவோ இருக்க முடியும். அதை நீங்கள் பிடித்து வைத்துக் கொள்கிறீர்கள். அது உங்களைப் பிடித்து வைத்துக் கொள்ளுகிறது. உங்கள் மனது அவ்வளவாய் அந்தப் பொருளின் மீது ஈர்க்கப்படுகிறது. வீட்டிலே இருக்கிற விலைமதிப்பற்ற பொருட்களின்மீது உங்கள் மனது ஈர்க்கப்படுவதில்லை. விலையுயர்ந்த உடமைகளின்மீது தான் உங்கள் மனது இருக்கிறது.
ஆகவே, நாம் அவருடைய சீஷர்களாக இருப்பதற்கு நம்முடைய உடமைகளை வெறுக்க வேண்டும் என்றால் அதன் அர்த்தம் என்ன? என்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்க வேண்டுமா? மாற்கு 10 -இல், ஒரு வாலிபன் இயேசுவிடம் வந்ததைக் குறித்து வாசிக்கிறோம். இயேசு அவனிடம், “உனக்கு உண்டானவைகளையெல்லாம் நீ விற்றுவிட வேண்டும்” என்று கூறினார். ஆனால், இயேசு அந்தக் கட்டளையை எல்லோருக்கும் கொடுக்கவில்லை. உதாரணமாக, லூக்கா 19 -இல், சகேயு இயேசுவிடம், தன் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பதாகவும், தான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், அதை நாலத்தனையாகத் திருப்பித் தருவதாகவும் கூறினான். இயேசு அது நல்லது என்று கூறினார். “இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது” எனவும் கூறினார். இயேசு ஐசுவரியவானான வாலிபனிடம் கூறியதுபோல “உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்க வேண்டும்” என்று அவர் சகேயுவிடம் கூறவில்லை. மரியாள், மார்த்தாள் மற்றும் லாசரு என்பவர்களின் வீட்டில் இயேசு அவர்கள் எதையாகிலும் விட்டுவிட வேண்டும் என்று அவர்களிடம் கூறவில்லை. எல்லாரிடத்திலும் போய், எல்லாவற்றையும் விற்க வேண்டும் என்று அவர் கூறவில்லை.
பண ஆசை புற்றுநோயைப் போன்றது. சில சமயங்களில், புற்றுநோய் உடலில் மிகவும் அதிகமாகப் பரவிவிடுகிறது; பாதிக்கப்பட்ட முழு உறுப்பையும் அகற்றுவதன் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் கூறுவார். அது உங்கள் உடலின் உள் உறுப்புகளாகக் கூட இருக்கலாம். “வேறு வழியில்லை, நீங்கள் முழு உறுப்பையும் நீக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் மரித்து விடுவீர்கள்” என மருத்துவர் கூறுவார். ஆனால் ஒரு சில நபருக்கு புற்றுநோய் அவ்வளவாகப் பரவியிருக்காது, ஆகவே கொஞ்சம் வெட்டி எடுத்தால் போதும். பண ஆசையும் புற்றுநோய்க்கு ஒப்பாயிருக்கிறது. அந்த ஐசுவரியவானான வாலிபனுடைய வாழ்க்கையில் பண ஆசையாகிய புற்றுநோய் மிக அதிகமாகப் பரவியிருந்தது. ஆகவே அவன் தனக்குண்டான யாவற்றையும் விற்று, தரித்திரருக்குக் கொடுக்கும்படி ஆண்டவர் கூறினார். ஆனால், சகேயுவைப் போன்ற மற்றவர்களுடைய வாழ்க்கையில் அது கொஞ்சமாய் இருந்தது. மரியாள், மார்த்தாளுடைய வாழ்க்கையில் அது மிக மிகக் கொஞ்சமாய் இருந்தது. எனவே, அந்தக் கட்டளையை அவர் எல்லாருக்கும் கொடுக்கவில்லை. பண ஆசை உங்களை எவ்வளவாய் பற்றிப் பிடித்திருக்கிறது, புற்றுநோய் எவ்வளவாய்ப் பரவியிருக்கிறது என்பதைப் பொருத்தே ஆண்டவர் நீங்கள் எவ்வளவு விட வேண்டும், எவ்வளவு விற்க வேண்டும் என்று கூறுவார்.
ஆனால் நமக்குண்டானவற்றை விட்டுவிடுகிற மனப்பான்மையை, ஆபிரகாம்-ஈசாக்கு சம்பவத்தை எண்ணிப்பார்த்தால் நன்றாகப் புரிந்துகொள்ளலாம். ஆபிரகாம் ஈசாக்கை அதிகமாய் நேசித்து, அவனைத் தன் சொந்த உடமையாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தான். தன் இருதயத்தினுடைய நேசனாய் ஈசாக்கு இருந்தான். தன் மனைவியைக் காட்டிலும் கூட அதிகமாய் ஈசாக்கின் மீது கரிசனை கொண்டு நேசித்தான். ஆபிரகாமின் இருதயத்தில் ஈசாக்கு ஒரு சிறிய விக்கிரகமாக மாறுவதை தேவன் கண்டார். ஈசாக்கு இப்போது ஆபிரகாமின் தேவனாக இருந்தான். அவன் ஈசாக்கை மிதமிஞ்சி அன்புகூர்ந்தான். ஆண்டவர், இந்த விக்கிரக ஆராதனையிலிருந்து ஆபிரகாமை விடுதலையாக்க வேண்டும் என்று விரும்பினார். ஆகவே, அவர் ஆபிரகாமிடம் ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று அங்கு அவனைத் தமக்கு பலியாகச் செலுத்தும் படி கூறினார், ஆபிரகாமும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். ஆபிரகாம் மோரியா மலையைச் சென்றடைய மூன்று நாட்கள் நடந்து சென்றான். அந்தக் காரியத்தைப் பற்றி சிந்திக்க தேவன் ஆபிரகாமுக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்தார். பின்னர் ஆபிரகாம், “ஆண்டவரே, நான் உம்மை ஆராதிக்கிறேன். நான் ஈசாக்கைப் பலியாக உமக்கு செலுத்துகிறேன்” என்று கூறினான். ஆபிரகாம் ஈசாக்கை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்த போது, தேவன் அதை நிறுத்தச் சொல்லி, ஈசாக்கை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். அந்த நாளில் இருந்து, ஆபிரகாம் ஈசாக்கை தனது உடைமையாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. ஈசாக்கு இன்னும் ஆபிரகாமின் வீட்டிலே தான் இருந்தான். இன்னும் அவனுடைய குமாரனாகவே தான் இருந்தான். ஆபிரகாம் மீண்டுமாய் ஈசாக்கை ஒருபோதும் பற்றிப் பிடித்து வைத்திருக்கவில்லை. நமது சொந்த உடைமைகளை விட்டுவிடுவது என்றால் என்ன என்பதற்கு இது ஒரு மிக அருமையான உதாரணமாயிருக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்கதாய் உள்ள காரியங்களை (பூமிக்குரிய விஷயங்கள், பொருள்கள்) பற்றி எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு மிக மிக முக்கியமானவையாக நீங்கள் நினைக்கும் காரியங்கள் எவை? நீங்கள் முக்கியமானவையாக நினைக்கும் காரியங்களைப் பட்டியலிடுங்கள். அவற்றில் உள்ளவைகள் எல்லாம் உங்களுடைய சொத்துக்களும் / உடைமைகளுமாய் உங்களைப் பிடித்து வைத்திருக்கின்றன. நீங்கள் உண்மையில் ஒரு சீஷனாக இருக்க விரும்பினால் நீங்கள் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். உங்கள் உடைமைகளாயிருப்பவை எவை என்பதைக் குறித்து நீங்கள் நேர்மையுள்ளவராயிருந்து, ஒரு காரியத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். “இவைகளைப் பிடித்து வைத்திருக்கிற மனப்பான்மையை நான் நிறுத்தப் போகிறேனா?” என்று தீர்மானிக்க வேண்டும்.
ஒரு காரியத்தை நீங்கள் இறுக்கமாய்ப் பிடித்து வைத்திருப்பீர்களானால் அது தான் உடைமை என்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம். உதாரணமாக, நான் ஒரு பேனாவை என் கையில் இறுக்கமாகப் பிடித்து வைத்தால், நான் அதை என்னுடைய உடமையாக கருதுகிறேன். அது போல நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் உங்களுடைய வீடாக இருக்கலாம், உங்களுடைய வங்கிக் கணக்காக இருக்கலாம், உங்களுடைய பொருட்கள் மற்றும் பங்குகளாக இருக்கலாம், உங்களுடைய வாகனமாக இருக்கலாம், உங்களுடைய சொத்து அல்லது நிலங்கள் போன்ற மதிப்புமிக்க எதுவாகவும் இருக்கலாம். ‘வைத்திருப்பது’ என்பது கரங்களை விரித்து வைத்திருப்பதாகும். அது இன்னமும் என்னிடத்தில் தான் இருக்கிறது -- வேறு யாரிடத்திலும் கொடுக்கவில்லை - ஆனால், “ஆண்டவரே இது என்னுடையது அல்ல என்பதை அறிந்திருக்கிறேன். இது உம்முடையது. நீர் தான் என்னிடத்தில் இதைக் கொடுத்திருக்கிறீர். நான் ஓர் உக்கிராணக்காரன் மாத்திரமே. நான் இதை உண்மையாய்ப் பயன்படுத்தப் போகிறேன். இது என்னைப் பிடிக்க அனுமதிக்கப் போவதில்லை. நான் இதை வைத்திருக்கிறேன். நான் இதை வைத்திருக்க அனுமதித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று நான் ஆண்டவரிடம் கூறவேண்டும்.
பற்றிப் பிடித்திருப்பதற்கும், வைத்திருப்பதற்கும் இதுதான் வித்தியாசம். என் உடைமைகள் எல்லாவற்றையும் நான் வெறுக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். அநேக காரியங்களை நான் வைத்திருக்க முடியும். ஆண்டவர் எனக்குத் கொடுத்த காரியங்களை நான் பயன்படுத்தவும் முடியும், ஆனால் நான் அவைகளைப் பற்றிப் பிடித்து வைத்துக் கொள்வதில்லை.
இதுவே சீஷத்துவத்தின் மூன்றாவது நிபந்தனை: நான் பூமிக்குரிய எல்லாவற்றையும் விட இயேசுவை அதிகமாக நேசிக்க வேண்டும்.