“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத்தேயு 5:6) என்று இயேசு கூறினார். ஆகவே ஒருவர், “ஓ! சகோதரர்களே, பாவத்தின்மேல் வெற்றிபெற நான் வெகுவாக பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கின்றேன், ஆனாலும் நான் வெற்றிபெற முடியவில்லை” என்று கூறுவாரானால், இந்த வசனத்தின் அடிப்படையில், அவர் ஒரு பரிசுத்தமான வாழ்க்கைக்காக உண்மையிலேயே பசியும் தாகமும் கொள்ளாதவரென்றே நான் சொல்லமுடியும். அவர் உண்மையாகவே பாவத்தை ஜெயிக்க தீராத வாஞ்சையுடையவராக இல்லை.
இயேசு பாவத்தை ஜெயிக்க எப்படி ஜெபித்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகத்தில் இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் நம்மைப் போலவே எல்லா சூழ்நிலைகளிலும் சோதிக்கப்பட்டும் ஒருபோதும் பாவம் செய்யாதவராய் வாழ்ந்தார் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் அப்படிப்பட்ட பாவமில்லாத வாழ்க்கை அவருக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. இயேசு எப்படி சோதனைகளை எதிர்கொண்டார் என்பதை எபிரெயர் 5-ஆம் அதிகாரம் நமக்குக் கூறுகிறது. எபிரெயர் 4:15 “அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார்” என்று கூறுகிறது. தொடர்ந்து, “இவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் நம்முடைய பிரதான ஆசாரியராயிருக்கிறார்” என்று எபிரெயர் 5:6 கூறுகிறது. மேலும் எபிரெயர் 5:7 “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்” என்று கூறுகிறது. இது கெத்செமனேயில் பூமிக்குரிய அவருடைய கடைசி நாளில் அவர் ஏறெடுத்த ஜெபத்தைக் குறிக்கவில்லை. ஆனால் அவர் பூமியில் 33½ ஆண்டுகள் வாழ்ந்த பூலோக வாழ்க்கை முழுமையையும் குறிக்கிறது. அத்தனை நாட்களிலும் அவர் விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் ஏறெடுத்தார்.
“வேண்டுதல்” என்றால் பிதாவினிடத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக வேண்டிக்கொள்வதாகும். அது “என்னை ஆசீர்வதியும்” என்று ஏறெடுக்கும் ஒரு பொதுவான ஜெபம் அல்ல; அது மிகவும் குறிப்பிட்டதொரு வேண்டுகோள். மேலும் அவர் அந்த ஜெபங்களை பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் செய்தார். ஏன் அவர் இவ்வளவு சத்தமாக அழுதும், கண்ணீர் சிந்தியும் ஜெபிக்கவேண்டியிருந்தது? இயேசு அப்படி ஜெபிப்பாரா? நம்மில் எத்தனை பேருக்கு கண்ணீரோடு ஜெபித்த அனுபவம் உண்டு? ஒருவேளை உங்கள் குழந்தை வியாதிப்பட்டபோதோ, அல்லது நீங்கள் மிகவும் விரும்பிய ஏதோ ஒன்றை இழந்துவிட்டபோதோ, நீங்கள் தேவனிடத்தில் அழுது ஜெபித்திருப்பீர்கள். ஆனால் இயேசுவோ அப்படிப்பட்ட காரணங்களுக்காக ஜெபிக்கவில்லை. யாராவது மரித்துவிட்டதாலோ அல்லது ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாலோ நீங்கள் சத்தமாக அழுதிருக்கலாம், ஆனால் இயேசு அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஜெபிக்கவில்லை. அவர் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை (பிதாவை) நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் (தேவ பயத்தினிமித்தம்) கேட்கப்பட்டார்.
நீதியின்மேல் பசியும் தாகமும் கொண்டிருப்பது என்றால் என்ன என்பதைக் குறித்து இந்த வசனம் பல காரியங்களை நமக்கு கற்றுத்தருகிறது. ஒரு தட்டில் வைத்துக் கொடுக்கப்படுவதுபோல நீதியானது இயேசுவுக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. நமக்கு முன்மாதிரியாய் இருக்கும்படிக்கு நம்மைப்போலவே அவர் மனிதனாய் வந்தபடியினால், நம்மைப் போலவே நீதியை அடைவதற்கு அவர் போராடிப் பிரயாசப்படவும் பசிதாகம் கொள்ளவும் வேண்டியிருந்தது. நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையையும், சோதனையையும் ஜெயிப்பதற்கு நாம் எப்படி அவற்றை எதிர்கொள்ளவேண்டுமோ அவ்விதமாகவே அவரும் எதிர்கொண்டார். அது தான் மரணத்தினின்று தம்மை இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி ஜெபிப்பதன் அர்த்தமாகும்.
இங்கு வேதாகமம் எந்த மரணத்தைப் பற்றிப் பேசுகிறது? இயேசு கல்வாரிக்குச் செல்ல பயப்படவே இல்லை. அவர் நம்மை அவ்வளவாய் நேசிக்கிறபடியினால், நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிக்க ஓராயிரம் கல்வாரிகளையும் அவர் ஏற்கத் தயாராயிருப்பார். சரீர மரணத்திற்கு அவர் பயப்படவேயில்லை. பாடல்கள் பாடிக்கொண்டு மரணத்தை சந்தித்த கிறிஸ்தவ இரத்தசாட்சிகள் உண்டு. அப்படியிருக்க அவர் எப்படி மரணத்தைப் பார்த்து பயந்திருக்க முடியும்? மேலும், அவரது இந்த ஜெபம் “கேட்கப்பட்டது” என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் சரீர மரணத்திலிருந்து காக்கப்படவில்லையே. ஆகவே, அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது எப்படி? அவர் வேறு ஒரு மரணத்திலிருந்து காக்கப்படும்படிக்கே ஜெபித்திருக்க வேண்டும்.
வேதாகமம், சரீர மரணம் ஆவிக்குரிய மரணம் ஆகிய இரண்டையுமே பற்றிப் பேசுகிறது. “பாவம் பூரணமாகும்போது அது மரணத்தைப் பிறப்பிக்கிறது” என்று யாக்கோபு 1:15 கூறுகிறது. நீங்கள் சோதிக்கப்படும்போது அதற்கு இடங்கொடுத்தால், அது பாவமாகிறது, பின்பு அது மரணத்தை உண்டுபண்ணுகிறது. சோதனையின்போது அந்த மரணத்திலிருந்து தான் தாம் காக்கப்படவேண்டும் என்று இயேசு ஜெபித்தார். சிந்தனையிலோ, மனப்பான்மையிலோ, மனநோக்கத்திலோ, சொல்லிலோ, செயலிலோ சோதனைக்கு இடங்கொடுத்து எவ்விதத்திலும் ஆவிக்குரிய மரணத்தின் வாசனை கூட வந்துவிடக் கூடாது என்று ஜெபித்தார். முழுமையும் பரிசுத்தமாக இருக்கவேண்டும் என்றும் பிதாவுக்குப் பிரியமாயிருக்க வேண்டும் என்றும் அவர் தீவிரமாய் வாஞ்சித்தபடியினால், அவர் பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபிக்க வேண்டியிருந்தது.
நாசரேத்தில் 30 ஆண்டுகளும், ஊழியத்தின் 3½ ஆண்டுகளும் (அதாவது அவர் மாம்சத்திலிருந்த சகல நாட்களிலும்), அவர் “பிதாவே, நான் ஒருபோதும் பாவம் செய்ய விரும்பவில்லை; என் சொந்த சித்தத்தின்படி நடக்க விரும்பவில்லை (சுயசித்தம் செய்வதே எல்லாப் பாவத்துக்கும் வேராயிருக்கிறது)” என்று ஜெபித்தார். கெத்செமனே தோட்டத்திலும் அதற்காகவே அவர் போராடி இரத்தத்தின் பெருந்துளிகளாய் வியர்வைசிந்தி ஜெபித்தார். ஏனெனில் அவர் தம்முடைய சித்தத்தை செய்ய விரும்பாதிருந்தார். அவரது தேவ பயத்தின் காரணமாக அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது.
இந்த வசனத்தின் அடிப்படையில், தேவ பயத்தின் அடையாளம் என்ன? ஒரு அடையாளம் என்னவென்றால், ‘எவ்விதத்திலும் தேவனுக்குப் பிரியமில்லாமல் நடந்திடக்கூடாது’ என்று தீவிரமான கதறலைக் கொண்டிருப்பது. இயேசு தம்முடைய ஜெபம் கேட்கப்பட்டு, காக்கப்பட்டு, ஒருபோதும் பாவம் செய்யாது வாழ்ந்தார். பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட வேண்டுமென்ற தீவிரமான ஆவல் நம்மிடத்தில் இல்லாததினாலேயே நாம் பாவம் செய்கிறோம். “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்று வேதம் கூறுகிறது. தேவபக்தியான ஒரு வாழ்க்கைக்கான இரகசியம் இங்கே தான் இருக்கிறது. அதன் முதல் படியானது, “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்பதாய் இருக்கிறது. அப்படி நீதியின்மேல் பசிதாகம் கொள்வீர்களானால், “நீங்கள் திருப்தியடைவீர்கள்” என்கிற வாக்குத்தத்தமும் உங்களுக்கு உண்டு. சந்தேகமேயில்லை.