ரூத்தின் திருமணம் பற்றிய கதையானது மிகவும் ஆர்வமூட்டும் ஒன்றாகும். ஒரு சமயம் இஸ்ரவேலில் பஞ்சமுண்டானது. அப்போது அங்கிருந்த எலிமெலேக்கு என்பவன் தன் மனைவி நகோமி மற்றும் இரு மகன்களுடன் மோவாப் தேசத்திற்குச் சென்றான். அவ்விரு மகன்களும் வளர்ந்த பிறகு, அவர்கள் தேவனுடைய பிரமாணங்களை மீறி மோவாபிய பெண்களை மணந்து கொண்டனர். பின்பு எலிமெலேக்கும், அவனது இரு மகன்களும் அந்த நாட்டிலேயே மரித்து விட்டனர். தயையுள்ள நகோமி, தனது மருமகள்களான ரூத், ஒர்பாள் ஆகிய இருவரையும் அவர்களின் சொந்த தேசத்திற்கேத் திரும்பிச் சென்று, அங்கே வேறு புருஷர்களை மணந்து கொள்ளும்படி கூறினாள் (ரூத் 1:8). இதைக் கேட்ட மாத்திரத்தில் ரூத்தும், ஒர்பாளும் கதறி அழுதனர் (ரூத் 1:14). பின்னர் ஒர்பாள் தன்னுடைய மாமியாரை முத்தமிட்டு, “சென்று வருகிறேன், நான் திரும்பிச் சென்று, வேறொரு கணவனைக் கண்டுபிடிக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கையை நானேதான் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டாள். ஆனால் ரூத்தோ நகோமியை பற்றிக் கொண்டாள். அவள் நகோமி மூலமாக மெய்யான தேவனைக் குறித்து ஏதோ ஒன்றை அறிந்து வைத்திருந்தாள். எனவே தனக்கு ஒரு கணவன் வேண்டுமென அவள் விரும்பியதைவிட, இந்த தேவனைத் தொழுது, சேவிப்பதை அதிகமாக விரும்பினாள். எது எவ்வாறாயினும், ஒர்பாளுக்கு ஒரு கணவன் தேவைப்பட்டான். அங்கு ஒரு நால்வழிச் சந்திப்பு இருந்தது. அதில் ஒர்பாள் தவறான சாலையைத் தேர்ந்தெடுத்துவிட்டாள். ஆனால் ரூத்தோ சரியான சாலையில் திரும்பினாள். அதுவே நித்திய காலத்திற்குமான வித்தியாசத்தை உண்டாக்குவதாக அமைந்துவிட்டது. அதன்பிறகு ஒர்பாளைப் பற்றி நாம் கேள்விப்படுவதில்லை. அவள் இப்போது எங்கிருந்தாலும், அவள் தன்னுடைய தெரிவைக் குறித்து வருந்துகிறவளாகத்தான் இருப்பாள்.
நகோமிக்கு நெருக்கமான உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரன் ஒருவன் இருந்தான் (ரூத் 2:1). திருமணமான ஒருவன் இறந்துவிட்டால், அவனுடைய நெருங்கிய உறவினர்களில் ஒருவன் அந்த விதவையை மணந்து கொண்டு, இறந்தவனின் பெயரில் பிள்ளைகளை எழுப்ப வேண்டும் என்னும் பிரமாணம் இஸ்ரவேலிலே இருந்துவந்தது (உபா 25:5-9). ஆதலால், “போவாஸ் எனது நெருங்கிய உறவினனாக இருக்கிறான். அவன் இன்னும் தனித்தவனாக இருக்கிறான். ஒருவேளை அவன் ரூத்தைத் திருமணம் செய்து கொள்ள முன்வருவான்” என நகோமி எண்ணினாள். ஆனால் ரூத் (ஒரு மோவாபிய பெண்ணாக இருந்தபடியால்) இந்தப் பிரமாணத்தைக் குறித்து எதையும் அறிந்திருக்கவில்லை. இந்த விவரத்தை ரூத் அறிய நேர்ந்தால், அவளுடைய நம்பிக்கைகள் அதிகரித்துவிடும் என்பதற்காக நகோமியும் இதைக் குறித்து அவளிடத்தில் எதுவும் சொல்லவில்லை. ரூத்திற்கும் தான் மறுபடியும் மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கவில்லை. அவள் ஒரு கணவனைத் தேடி இஸ்ரவேலுக்கு வரவில்லை. அவள் மெய்யான தேவனைத் தேடும் முகாந்திரமாகவே வந்தாள். ஒர்பாள்தான் ஒரு கணவனைத் தேடிக் கொண்டு மோவாபிற்குச் சென்றாள். ஆனால் ரூத்தோ தேவனையே முதலாவதாகத் தேடினாள். அதினிமித்தமாக அவள் நல்லதொரு கணவனைக் கண்டடைந்ததுடன், எதிர்காலத்திற்குரிய நல்லதொரு பாரம்பரியம் மிக்க சொத்தையும் கண்டடைந்தாள். தேவன் தம்மைக் கனப்படுத்துகிறவர்களைத் தாமும் கனப்படுத்துகிறார். தேவனுடைய ராஜ்யத்தை முதலாவதாகத் தேடுகிறவர்கள், இப்பூமியில் தங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான காரியங்கள் அனைத்தையும் தேவன் தங்களுக்குக் கூட்டி வழங்குவதைக் காண்பார்கள். அவையனைத்தையும் அவர்கள் ஒருபோதும் தேடாமலேயே, தானாகவே அவர்களை வந்து சேரும். அவையாவும் அவர்கள் மடியில் வந்து விழும்.
நகோமியும் ரூத்தும் ஏழ்மையில் இருந்தனர். ரூத் அன்றாட ஆகாரத்திற்காக எவ்விதமான கீழான வேலையையும் வெட்கமின்றி செய்யுமளவிற்கு கடினமாய் உழைக்கும் ஒரு பெண்ணாய் இருந்தாள். எனவே அவள் ஒரு நாள் பணக்காரர்களின் வயல்களுக்குச் சென்று, அங்கு கீழே விழும் கதிர்களைப் பொறுக்கி வரப் போவதாக தன் மாமியாரிடத்தில் கூறினாள். இஸ்ரவேலிலே, ஒருவன் பயிரை அறுக்கும்போது, வயலின் ஓரத்திலிருக்கிற கதிர்களைத் தீர அறுக்காமலும், சிந்திக் கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும் அவற்றை ஏழைகளுக்காக விட்டுவிட வேண்டுமென்ற பிரமாணத்தை தேவன் ஏற்படுத்தி இருந்தார் (லேவி 19:9,10). இப்படி விடுபட்ட கதிர்களைப் பொறுக்குவதற்காக ரூத் சென்றாள். ஏழ்மைக் கோலத்திலிருந்த ரூத், தனக்கும் தன்னுடைய மாமியாருக்கும் பிழைப்புண்டாகும்படிக்குத் தன்னால் இயன்றதைச் செய்ய முயன்றாள்.
தேவனுடைய இறையாண்மையானது அவளை வியத்தகு விதத்தில் போவாஸின் வயலுக்கு நடத்தியது. இவர்கள் இருவரையும் கணவனும் மனைவியுமாக இணைக்க வேண்டுமென நித்திய யுக காலமாய்த் திட்டம் தீட்டியிருந்த தேவன், தம்முடைய இறையாண்மையில் இவர்கள் இருவரையும் ஓரிடத்தில் கூட்டிச் சேர்த்த விதமானது மிகவும் அற்புதமான காட்சியாகவே உள்ளது. கதிர்களைப் பொறுக்கிக் கொண்டிருந்த இப்பெண் யாரென போவாஸ் தன்னுடைய வேலையாட்களிடம் கேட்டான். அவள் நகோமியுடன் திரும்பி வந்திருந்த ஒரு மோவாபிய பெண் என அவர்கள் பதிலளித்தனர். போவாஸ் தயவும் தேவபக்தியும் உள்ள ஒரு மனிதனாயிருந்தான். ரூத் வேறு வயல்களுக்குக் கதிர்களைப் பொறுக்கச் சென்றால், அங்குள்ள மனிதர்களால் அவள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் அபாயம் உண்டென்று எண்ணி, போவாஸ் அவளை வேறு வயல்களுக்குச் செல்ல வேண்டாமென சொன்னான். தன்னுடைய வேலைக்காரரையும் அவளுக்குத் தீமை எதுவும் செய்யக்கூடாது எனவும் கட்டளையிட்டான். இவற்றையெல்லாம் கண்டு புல்லரித்துப் போன ரூத், முகங்குப்புற விழுந்து வணங்கி, இகழ்ச்சியுற்ற மோவாபிய பெண்ணான தன்னிடத்தில் அவன் ஏன் இவ்வளவு தயை காட்ட வேண்டுமென கேட்டாள். அதற்கு போவாஸ், அவள் தன்னுடைய மாமியாருக்கு எவ்விதமாய் தயவு காட்டினாள் என்பதையும், பழைய மோவாபிய விக்கிரகங்களையெல்லாம் விட்டு, கர்த்தரைப் பின்பற்றும்படி அவள் வந்ததையும் தான் கேள்விப்பட்டதாக அவளுக்குப் பதிலளித்தான். அதன்பின்பு அவன் தன்னுடைய வேலையாட்களிடம், அவள் பொறுக்கிக் கொள்ளும்படிக்குக் கதிர்களை விட்டுச் செல்லும்படி கூறினான்.
தேவன் ஏன் இத்தகைய ஸ்திரீயை போவாஸின் மனைவியாகவும், கர்த்தரின் வம்சவரலாற்றில் இடம் பெறத்தக்க தாவீதின் ஓர் மூதாதையராகவும் பொறுக்கி எடுத்தார்? முதன்முதலாக, அவள் ஒரு தாழ்மையான பெண்ணாகவும், தன்னைக் குறித்து மேன்மையாக எண்ணாதவளாகவும் இருந்தாள் என்ற காரணமாகும். அவள் கடின உழைப்பாளியாகவும், தயையுள்ளவளாகவும் இருந்தாள். கர்த்தரைப் பின்பற்றுவதற்காகத் தன்னுடைய வீட்டாரையும், உற்றார் உறவினரையும் விட்டு வருமளவிற்கு உறுதியான விசுவாசம் உடையவளாய் இருந்தாள். அவள் தன்னுடைய மாமியாரை மரியாதையுடனும், தயவுடனும், அன்புடனும் நடத்துகிறவளாய் இருந்தாள். இன்றும்கூட தேவன் வாலிபப் பெண்களிடத்தில் இத்தகையப் பண்புகளையே எதிர்பார்க்கின்றார்.
ரூத் வீடு திரும்பியவுடன் அவளுடைய மாமி அவள் அன்று எவ்விடத்தில் கதிர்பொறுக்கினாள் என்று கேட்க, அவள் நடந்த எல்லாவற்றையும் அவளிடத்தில் சொன்னாள். நகோமி அதைக் கேட்டவுடன், அவளுக்கென்று ஒரு பாதுகாப்பைத் தேடும்படிக்கும், போவாஸ் அவளுடைய நெருங்கிய உறவினன் என்பதையும் அவளிடத்தில் சொன்னாள். திருமணமான ஒருவன் இறந்துவிட்டால், அவனுடைய நெருங்கிய உறவினர்களில் ஒருவன் அந்த விதவையின் சொத்துக்களை மீட்டுக் கொண்டு, அவளை மணந்து கொள்ள வேண்டும் என்று தேவனுடைய பிரமாணம் இருப்பதை அவள் ரூத்திடத்தில் விளக்கிச் சொல்லியிருந்திருப்பாள். ஆதலால் அவள் போவாஸைச் சந்தித்த போது, அவன் அவளது நெருங்கிய உறவினானபடியால், தன்னை மீட்டுக் கொண்டு, திருமணம் செய்து கொள்ளும்படி அவனிடத்தில் வேண்டினாள் (ரூத் 3:9). அவள் அங்கிருந்த அழகும், வாலிபமும் நிறைந்த பிற ஆண்களைத் தெரிந்து கொள்ளாமல் இருந்ததைக் கண்டு போவாஸ் மகிழ்ந்தான். போவாஸ் வயது முதிர்ந்தவனாய் இருந்தான். பொதுவாக இளம் பெண்கள் வயது முதிர்ந்த ஆண்களால் கவர்ச்சிக்கப்படுவதில்லை. போவாஸ் தன்னைவிட அவளுக்கு மிக நெருங்கிய உறவினன் ஒருவன் இருப்பதாக அவளிடத்தில் தெரிவித்தான். நீதிமானாய் இருந்த போவாஸ், அந்த நெருங்கிய உறவினன் அவளை மீட்டுக் கொண்டு, மணந்து கொள்ளுகிறானா என அவனிடத்தில் கேட்க வேண்டுமென கூறினான் (ரூத் 3:12,13).
உடனடியாக மறுநாளே போவாஸ் பட்டண வாசலுக்குச் சென்று, அங்கே அந்த நெருங்கிய உறவினனிடம் நகோமியின் சொத்தை வாங்க விருப்பமா என வினவினான் (ரூத் 4:3). அவனும் உடனடியாக, “அதை வாங்கிக்கொள்கிறேன்” என்றான். ஆனால் அவன் அந்த வயல்நிலத்தை வாங்கும்போது, மரித்துப் போனவனின் மனைவியாகிய ரூத்தை மணந்து கொண்டு, மரித்தவனின் பேரை நிலைநிற்கப் பண்ணும்படிக்கு, பிள்ளைகளை எழுப்ப வேண்டும் என்பதையும் போவாஸ் அவனுக்கு நினைவூட்டினான். அவன் அதைக் கேட்ட போது, பிற்காலத்தில் அவளுடைய மகன்கள் தன்னுடைய மகன்களின் சுதந்தரத்தில் உரிமை கோருவார்களாதலால், அதுமாதிரியான சிக்கல்களிலெல்லாம் தான் மாட்டிக் கொள்ளத் தயாராக இல்லை என்றும், தான் உதவ முன்வந்ததைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், சொன்னபடி செய்ய இயலாது என்றும் மறுத்து விட்டான். இப்படியாக போவாஸ் ரூத்தையும், அவளுடைய சொத்தையும் மீட்கக் கூடிய முதல் உறவினனாக மாறினான். அவன் அதைச் செய்வதற்கு ஆயத்தமாய் இருந்தான். போவாஸைப் போன்ற ஒரு முக்கியப் பிரமுகர், அத்தகையதான மோவாபிய ஸ்திரீயை மணப்பதென்பது ஒரு துணிச்சலான செயல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவன் அவளிடத்தில் சில சிறப்பான பண்புகளைக் கண்டிருந்தான். ஒரு புறஜாதிக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்ததற்காக அவன் அவளை மதித்தான். கிறிஸ்தவப் பையன்கள், கிறிஸ்தவக் குடும்பங்களாய் இல்லாத வீடுகளிருந்து இரட்சிக்கப்படுகிற பெண்பிள்ளைகளைத் திருமணம் செய்துகொள்ள முன்வருவதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில், அவ்வாறாக இரட்சிக்கப்படுகிற பெண்கள், விசுவாசிகளின் குடும்பங்களில் பிறந்தவர்களைக் காட்டிலும் திடமான கிறிஸ்தவர்களாகவும், அதிக பக்தி உள்ளவர்களாகவும் இருப்பதுண்டு.
போவாஸ் ரூத்தை மணந்து கொண்ட பின், அவர்களுக்கு ஓபேத் என்பவன் பிறந்தான். அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயிக்குத் தகப்பனானான் (ரூத் 4:17). இவ்வாறாக ஒரு முறையற்ற, புறஜாதியாரின் பின்னணியைக் கொண்ட ஸ்திரீயை தேவன் கனப்படுத்தினார். ஏனெனில் அவள் தேவனைக் கனப்படுத்தினாள். ரூத் புத்தகத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளத்தக்க சத்தியம் என்னவென்றால்,1சாமுவேல் 2:30 -ல் உள்ள, “என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்” என்பதாகும். தேவனிடத்தில் பாரபட்சம் இல்லை. இந்தக் கதையானது, தேவன் பிறரால் தள்ளப்பட்ட தம்முடைய பிள்ளைகளை எவ்வாறாகப் பராமரித்து, அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை அவர்கள் கண்டடையும்படி செய்கிறார் என்பதை எடுத்துரைக்கின்றது. எனவே நாம் இப்படிப்பட்ட பூமிக்குரிய காரியங்களுக்காகவும் ஆண்டவரை நம்ப முடியும். தேவன் நம்மை விசாரிக்கிறவராகவும், நம்முடைய எல்லாவிதமான பூமிக்குரிய தேவைகளையும் - அவை எத்தகைய தேவைகளாக இருந்தாலும் சரி - சந்திக்க விருப்பமுள்ளவராகவும் இருக்கின்றார்.