WFTW Body: 

இயேசு கிறிஸ்துவைப்பற்றிய தீர்க்கதரிசனமாகிய ஏசாயா 50:4-ஆம் வசனத்தில் நாம், “காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்” என்று வாசிக்கிறோம். அதுவே அவருடைய பழக்கமாயிருந்தது. அவர் அதிகாலை துவங்கி நாள் முழுதுமாய் தம் பிதாவுக்குச் செவிசாய்த்து அவர் தமக்குக் கட்டளையிட்டபடியே எல்லாவற்றையும் செய்தார். அவர் மனிதனோடு "கமிட்டி கூடி” பேச்சுவார்த்தை நடத்தி தமது காரியங்களை முடிவெடுக்காமல் 'தம் பிதாவோடு கூடி' ஜெபித்த ஜெபத்தில் அத்தனைக்கும் முடிவெடுத்தார்! ஆத்தும கிறிஸ்தவர்கள், இந்த வியாபார உலகத்தில் நடக்கிறது போல கமிட்டி கூடித்தான் தீர்மானிக்கிறார்கள். ஆவிக்குரியவர்களோ தேவனிடத்திலிருந்து கேட்கும்படி காத்திருப்பார்கள்!

இயேசு தம்முடைய வாழ்க்கையில் ஜெபத்திற்கு உயர்ந்த முக்கியத்துவம் கொடுத்தார். அவர் அடிக்கடி வனாந்திரத்திற்குப் போய் ஜெபம் பண்ணுகிறவராய் இருந்தார் (லூக்கா 5:16). ஒருசமயம் இரவு முழுவதும் அவர் ஜெபித்து தம்முடைய பன்னிரண்டு சீஷர்களைத் தெரிந்தெடுப்பதில் பிதாவின் சித்தத்தைக் கண்டுபிடித்தார் (லூக்கா 6:12,13). ஓர் ஆத்தும கிறிஸ்தவனுக்கு தேவ சமூகத்தில் காத்திருப்பது என்பது வீணடிக்கிற நேரமாய் இருக்கும். அவன் ஜெபித்தால், தன் குற்றமுள்ள மனச்சாட்சியை சமாதனப்படுத்தும் முயற்சியாகவே இருக்கும். அவன், தன்னில் தானே நம்பிக்கை உடையவனாய் இருக்கிறபடியினால், தன் வாழ்க்கையில் ஜெபம் அவனுக்கு ஒரு நிர்ப்பந்தமான அவசியமாய் இருப்பதில்லை. ஆனால் ஆவிக்குரிய மனிதனோ, ஒவ்வொன்றிற்கும் தொடர்ச்சியாய் தேவனை சார்ந்திருப்பான். ஜெபம் அவனுக்கு அதிக நிர்ப்பந்தமான அவசியமாய் இருப்பதால், ஜெபிப்பதற்கே எப்பொழுதும் உந்தித்தள்ளப்படுவான்!

இயேசுகிறிஸ்து தம் பிதாவினால் பிழைத்து வாழ்ந்தார்! (யோவான் 6:57). அவருக்கு ஆகாரத்தைவிட தேவனுடைய வார்த்தைதான் அத்தியாவசியமானதாய் இருந்தது (மத்தேயு 4:4). அதை அவர் பிதாவினிடத்திலிருந்து எப்படியாகிலும், அனுதினமும் பலதடவைகள் பெற்றுக்கொள்ள வேண்டிய பசிகொண்ட நிர்ப்பந்தத்தில் இருந்தார்! அவ்விதமாய் பெற்று, அவைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார். தம் பிதாவின் சித்தத்திற்குக் கீழ்படிவது, தம் அனுதின ஆகாரத்தைவிட அவருக்கு அதிமுக்கிய அவசியமாய் இருந்தது (யோவான் 4:34). இயேசு தம் பிதாவையே சார்ந்து வாழ்ந்தார். நாள் முழுதும் அவரது மனோபாவம், “பேசும், பிதாவே, நான் கேட்கிறேன்” என்பதாய் இருந்தது.

அவர் காசுக்காரர்களை தேவாலயத்திலிருந்து விரட்டின காரியத்தை எடுத்துக்கொள்வோம். அநேகமுறை அவர்களை ஆலயத்தில் பார்த்திருந்தும், அவர்களை விரட்டாதிருந்து விட்டு, தம் பிதாவினால் நடத்தப்பட்ட பொழுது மாத்திரமே அவர்களை விரட்டினார். ஆத்துமகிறிஸ்தவர்களோ, சதா விரட்டியடித்துக் கொண்டே இருப்பார்கள் அல்லது விரட்டாமலே இருப்பார்கள்!! ஆனால், தேவனால் நடத்தப்படுகிற ஆவிக்குரியவர்களோ, எப்பொழுது. எப்படி! எங்கே! எதைச் செய்ய வேண்டும்! என்று அறிந்திருப்பார்கள்.

நலமாய்த் தோன்றுகிற அநேக காரியங்களை இயேசு கிறிஸ்து செய்திருக்கமுடியும்! ஆனால், அப்படி அவர் செய்யவில்லை!! ஏனெனில், அந்த நல்லவைகள் பிதாவின் சித்தத்திற்குப் புறம்பானதாய் அவருக்கு இருந்தன! அவர் எப்பொழுதுமே மிக உன்னத கிரியைகளை செய்வதிலேயே ஓய்வின்றி பிரயாசப்பட்டார். அதுவே அவருக்குப் போதும்! அவர் பூமிக்கு வந்தது அநேக நற்கிரியைகளைச் செய்வதற்காக அல்ல, மாறாக பிதாவின் சித்தம் செய்ய வந்தார்!

தம்முடைய பன்னிரண்டாவது வயதில் “நான் என் பிதாவுக்கடுத்த காரியங்களில் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?” என்று யோசேப்பினிடமும், மரியாளினிடமும் கேட்டார். ஆம், "பிதாவுக்கடுத்தவைகளையே” அவர் செய்துமுடிக்க விருப்பங் கொண்டிருந்தார். தம்முடைய 33½ வருட உலக வாழ்க்கையின் இறுதியில் ‘நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்' (யோவான் 17:4) என்று பூரண திருப்தியுடன் அவரால் சொல்ல முடிந்தது.

அப்பொழுது அவர் உலகத்தைச் சுற்றி பிரயாணம் செய்திருக்கவில்லை. ஒரு புத்தகமும் வெளியிடவில்லை. அவரைப் பின்பற்றினவர்களும் சிலரே! சந்திக்கப்படாத தேவைகள் உலகமெங்கும் நிறைந்து காணப்பட்டன. அப்படி இருந்தும், பிதா தமக்குக் கொடுத்த கிரியையை மாத்திரமே செய்து முடித்தார்! இறுதியாக, அதுவே, அது மாத்திரமே காரியம்.

இயேசு, கர்த்தராகிய யெகோவாவுக்கு ஓர் ஊழியக்காரராய் இருந்தார். மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவன்! அதாவது, எஜமான் சொல்லுகிறதை செய்கிறவன் - என்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம் (1கொரிந்தியர் 4:2). எனவேதான், பிதா என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்பதிலேயே தம் வாழ்நாளை அவர் செலவழித்து, அதனிமித்தம் களைத்து ஓய்ந்துபோகவோ அல்லது அலுத்துப் போகவோ இல்லாமல் பிதாவின் சித்தம் முழுவதையும் செய்து முடித்தார்! தம்முடைய மனுஷீக விருப்பங்களையோ, அவர் தொடர்ந்து மரணத்தில் ஊற்றியவண்ணம் இருந்தார்!! அவர் ஆத்துமத்தின்படி நடவாமல் ஆவிக்குரியவராய் நடந்தார்!!