WFTW Body: 

"அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கேதுவாக, தேவக் காரியங்களைக் குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியனாயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியிருந்தது" (எபி 2:17). நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கிற சோதனையின் அழுத்தம் எதுவாக இருந்தாலும், அதே போன்ற சோதனையின் வழியாக இயேசுவும் கடந்து போயிருக்கிறார். இதுதான் நாம் சோதிக்கப்படுகிற வேளையிலெல்லாம், நாமும் இந்தச் சோதனையை ஜெயித்துவிடலாம் என்ற துணிவை நமக்குத் தந்து, நம்மை உற்சாகப்படுத்துகின்றது. கிறிஸ்து மாம்சத்திலே வந்து நம்மைப் போலவே எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார் என்னும் இந்த மகிமையான சத்தியத்தைத்தான் சாத்தான் நம்மிடமிருந்து மறைத்து, நம்முடைய நம்பிக்கையை முற்றிலும் நம்மிடமிருந்து திருடிவிட வேண்டுமென்று முயற்சிக்கிறான்.

நம்முடைய நாட்களிலே பலவிதமான தொழில்களையும், வேலைகளையும் செய்வதிலே நாம் எதிர்கொள்ளுகிற அதே சோதனைகளை, நாசரேத்திலே ஒரு தச்சனாக வாழ்ந்த இயேசுவும் ஏதோ ஒரு விதத்தில் எதிர்கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ பொருட்களை விற்பதிலே ஒருவரையும் ஏமாற்றவில்லை. அவர் விற்ற எந்தப் பொருளுக்கும் அதிக விலை வைத்திருந்திருக்க மாட்டார். எவ்வளவுதான் கிரயம் செலுத்துவதாய் இருந்தாலும் அல்லது நஷ்டம் ஏற்படுவதாய் இருந்தாலும், நீதியை நிறைவேற்றும் விஷயத்திலே அவர் ஒரு போதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் தரவில்லை. அவர் நாசரேத்திலிருந்த மற்ற தச்சர்களுடன் போட்டி போடவில்லை. இப்படியாய் வாங்குவதிலும், விற்பதிலும் பணத்தைப் புழங்கின இயேசு, நாமும் இன்று பணம் என்னும் விஷயத்தில் சோதிக்கப்படுவது போலவே எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவரோ அவை எல்லாவற்றிலும் ஜெயம் சிறந்தார்.

அவர் பூரணமற்ற தம்முடைய வளர்ப்புப் பெற்றோருக்குப் பல ஆண்டுகளாய் அடங்கி வாழ்ந்தார். இச்சமயங்களிலெல்லாம் அவர் தம்முடைய உள்ளான மனோபாவங்களைப் பயன்படுத்துவதிலே சோதிக்கப்பட்டிருந்திருப்பார். என்றாலும் அவரோ பாவம் செய்யவில்லை. யோசேப்பும், மரியாளும் பழைய உடன்படிக்கையின்கீழ் வாழ்ந்தபடியால், நிச்சயமாகவே அவர்கள் பாவத்தை மேற்கொண்டு வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. வெற்றியில்லாத எல்லாத் தம்பதிகளைப் போலவே, அவர்களும் உச்ச தொனியில் வாக்குவாதம் செய்திருந்திருப்பார்கள். அப்படிப்பட்டச் சூழலில், இயேசுவோ ஜெயத்துடன் வாழ்ந்திருந்திருப்பார். என்றாலும் அவர் ஒருவரையும் அசட்டை செய்யவில்லை. அப்படி யாரையாவது அவர் அலட்சியப்படுத்தியிருந்தால், பாவம் செய்திருப்பார். ஆனால் அவர்கள் எட்டமுடியாத அளவு சுத்தமுள்ளவராய் இருந்த போதிலும், அவர் அவர்களை மதித்தார். அவருடைய அழகுமிகு தாழ்மையை நாம் அங்கே காண்கிறோம். இப்படியாக, இயேசு நாசரேத்தில் முப்பது ஆண்டுகளாய் எந்த ஒரு அசம்பாவிதத்தையுமே சந்திக்காதவராய் வாழாமல், எல்லா நேரமும் சோதனைக்கு எதிரான யுத்தக் களத்திலேயே இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் செல்லச்செல்ல அவருடைய போராட்டமானது தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. ஏனெனில் நம்முடைய இரட்சிப்பின் அதிபதியை நம்முடைய இரட்சகராகவும், பிரதான ஆசாரியராகவும் ஆக்குவதற்கு முன்பாக, பிதாவானவர், அவரை மனுக்குலத்திற்கு ஏற்படக்கூடிய எல்லாவிதச் சோதனைகளின் ஊடாகவும் கடந்து போகப்பண்ண வேண்டியிருந்தது.

"ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையிலே கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது" (எபி 2:10). அவருடைய கடைசி மூன்றரை ஆண்டுகளில் மட்டுந்தான் தேசமெங்கிலுமிருந்து உண்டாகும் புகழினால் சோதிக்கப்படுவது போன்ற சில சோதனைகள் இயேசுவுக்கு ஏற்பட்டன. ஆனால் முதல் முப்பது ஆண்டுகளில், நாம் அனைவரும் வீட்டிலும், பணியாற்றும் இடங்களிலும் சந்திக்கின்ற பொதுவான சோதனைகளையே இயேசுவும் எதிர்கொண்டு ஜெயித்தார். அதனால் பிதாவும், இயேசுவுக்கு அவருடைய ஞானஸ்நானத்தன்று அங்கீகாரச் சான்றிதழை வழங்கினார்.

தேவன் எந்த அடிப்படையில் தமது அங்கீகாரச் சான்றை வழங்குகிறார் என்பதைக் காணும்படிக்கு நம்முடைய கண்கள் திறக்கப்படுமானால், நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய புரட்சி உண்டாகிவிடும். அப்பொழுது நாம் உலகப்புகழ் வாய்ந்த ஊழியத்தை எல்லாம் இச்சிக்காமல், அன்றாட வாழ்க்கையில் வரும் சோதனைகளில் உண்மையாய் இருப்பதையே இச்சிப்போம். நாம் சரீரப்பிரகாரமான அற்புதங்களைப் பாராட்டுவதை நிறுத்திவிட்டு, மறுரூப வாழ்க்கையைப் பாராட்ட ஆரம்பித்துவிடுவோம். இப்படியாக எந்தெந்த காரியங்களுக்கு எப்படிப்பட்ட முன்னுரிமையைக் கொடுக்கவேண்டும் என்பதில் நம்முடைய மனமானது மறுரூபம் அடைந்துவிடும்.

தேவனுடைய மிகப்பெரும் வெகுமதிகளும், உயர்ந்த பாராட்டுகளும், இயேசுவின் மனப்பான்மையுடன் சோதனையை எதிர்கொள்ளுகிறவர்களுக்காகவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை நாம் கண்டுகொள்ளுவோமானால், அது நமக்கு எவ்வளவு பிரம்மாண்டமான ஆறுதலாக அமைய முடியும்! "எந்த ஒரு பகுதியிலாவது பாவம் செய்வதையோ அல்லது என்னுடைய பிதாவுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதையோ விட சாவதையே நான் தெரிந்து கொள்ளுவேன்" என்பதே இயேசுவின் மனப்பான்மையாய் இருந்தது. "மரண பரியந்தம் கீழ்ப்படிந்தவராக இருந்த… கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" என்று பிலிப்பியர் 2:5-8 ஆம் வசனங்களில் சொல்லப்பட்டுள்ள புத்திமதியின் அர்த்தம் இதுதான். இப்படியாக நாம் என்ன வரத்தை அல்லது ஊழியத்தைப் பெற்றிருந்தாலும், பெற்றிராவிட்டாலும், அல்லது நாம் ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் அல்லது என்ன வயதினராயிருந்தாலும், நாம் எல்லாருமே ஜெயங்கொள்ளுகிறவர்களாக இருப்பதற்கும் மற்றும் அழைக்கப்பட்டவர்களும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களுமாய் இருப்பதற்கும் நம் எல்லாருக்குமே சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.