“சகலமும் அவராலே இருக்கிறது” (ரோமர் 11:36). பரலோக ராஜ்யம் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கே சொந்தம் என்று இயேசு கூறினார் (மத்தேயு 5:3). மேலும், பிதாவின் சித்தம் செய்கிறவர்களே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் எனவும் கூறினார் (மத்தேயு 7:21). ஆம், பரலோக இராஜ்யம் நித்தியமானது! தேவனுடைய சித்தத்தின்படி செய்யப்பட்டது எதுவோ, அதுவே அங்கு நிலைநிற்கும். தங்கள் மனுஷீக பெலஹீனத்தை உணர்ந்து, அதினிமித்தம் தேவனுடைய சித்தத்திற்குத் தங்களை முற்றிலும் ஒப்புக் கொடுப்பவர்களே ஆவியில் எளிமையுள்ளவர்கள்! இயேசுவினிடத்தில் காரியம் இப்படித்தான் நடந்தேறியது. மேற்கூறியபடி, இயேசு தொடர்ச்சியாய் தம்முடைய ஆவியில் எளிமை கொண்டவராகவே இருந்தார்.
மனுஷன் எப்படி வாழவேண்டும் என்று தேவன் விரும்பினாரோ அப்படியே இயேசு வாழ்ந்தார். எப்பொழுதும் தேவனைச் சார்ந்து கொண்டு, தேவனிடத்திலிருந்து வந்தாலொழிய தம் மனதின் வல்லமையின்படி எதையும் செய்யாமல் இருந்தார். கீழ்க்காணும் அவருடைய வார்த்தைகளை சற்று கவனியுங்கள்: “குமாரன் ... வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்” (யோவான் 5:19); “நான் சுயமாய் ஒன்றுஞ்செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்” (யோவான் 8:28); “நான் சுயமாய் வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்” (யோவான் 8:42); “நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்" (யோவான் 12:49).
நிறைவேற்ற வேண்டிய தேவை ஏராளம் உண்டு என்ற அடிப்படையில் இயேசு ஒன்றையும் செய்யவில்லை. அவர் தேவையைப் பார்த்தார், அதைக்குறித்து கரிசனைகொண்டார், ஆனால் பிதா சொன்ன பொழுதுதான் எதையும் செய்தார்! இந்த உலகத்திற்கு ஓர் இரட்சகர் வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலை இருந்தபொழுது, சுமார் நாலாயிரம் வருஷம் பரலோகத்தில் காத்திருந்து, “பிதா தம்மை அனுப்பினபோதே” இயேசு இந்த உலகிற்கு வந்தார்! (யோவான் 8:42). “தேவன் தீர்மானித்திருந்த சரியான நேரம் வந்தபோத, குமாரனை தேவன் அனுப்பினார்” (கலாத்தியர் 4:5 - லிவிங்). ஆம், தேவன் எல்லாவற்றுக்கும் ஒரு காலத்தைக் குறித்திருக்கிறார் (பிரசாங்கி 3:1). தேவன் ஒருவருக்கே அந்த காலம் தெரியும்! எனவே, இயேசுவைப்போலவே ஒவ்வொன்றிற்கும் பிதாவின் சித்தத்தை நாம் தேடினால், நாம் ஒரு தவறும் செய்திட மாட்டோம். இயேசுகிறிஸ்து பூமிக்கு வந்தபோது, நன்மை என்று தாம் உணர்ந்த எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கவில்லை. அவருடைய மனம் தெளிந்த சுத்தமாயிருந்தபோதிலும், அவர் தம் மனதில் உதித்த எந்த சிந்தனையின்படியேயும் நடக்கவில்லை! ஒருபோதும் இல்லை! தம் மனதை பரிசுத்த ஆவியானவருக்கு ஓர் அடிமையாக ஒப்புக்கொடுத்தார்.
தம்முடைய பன்னிரண்டாவது வயதிலேயே வேதத்தை அவர் பூரணமாய் அறிந்திருந்த போதிலும், தமது அடுத்த பதினெட்டு வருடங்களை வீட்டில் தம் தாயாருடன் இருந்துகொண்டு மேஜை நாற்காலி செய்கிற ஒரு தச்சனாக செலவழித்தார். தம்மைச் சுற்றியுள்ள மரித்துக்கொண்டிருக்கும் மனுஷருக்குத் தேவையான செய்தியே அவரிடத்தில் இருந்தும் அவர் பிரசங்க ஊழியத்திற்கென்று செல்லவில்லை. ஏன்? ஏனென்றால் பிதாவின் வேளை இன்னும் வரவில்லை!
இவ்வாறாக, காத்திருப்பதற்கு இயேசு பயப்பட்டதே இல்லை. “விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசாயா 28:16). அவருடைய பிதாவின் வேளை வந்தபோதோ, அவர் தம் தச்சுக்கூடத்தை விட்டுப் புறப்பட்டு, பிரசங்கிக்கத் தொடங்கினார். அதன்பிறகும்கூட ஜனங்கள் அவரை சில காரியங்கள் செய்யச் சொன்ன போதெல்லாம் “என் வேளை இன்னும் வரவில்லை” (யோவான் 2:4, யோவான் 7:6) என்று அடிக்கடி சொல்லுவார். இயேசுவின் வாழ்க்கையில் எல்லாக் காரியங்ளும் பிதாவின் வேளையில் அவருடைய சித்தத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது! மனுஷரின் தேவை மட்டுமே ஒருபோதும் அவருடைய செய்கைக்கு ஆதாரமாய் இருந்ததில்லை. அப்படியிருந்திருந்தால் அவர் சுயமாய் தம் ஆத்துமாவிலிருந்து செயல்பட வேண்டியதாயிருந்திருக்கும்! மனுஷருடைய தேவையை கணக்கில் கொள்ளவேண்டும். ஆனால் பிதாவின் சித்தத்தையே செய்திட வேண்டும். இதை இயேசு யோவான் 4:34,35-இல் மிகவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்: “இதோ வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்” - இது தேவையை தெளிவாக்குகிறது (வசனம் 35). ஆனால், அந்தத் தேவையை நிறைவேற்ற எதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பது “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது" (வசனம்.34) என்பதிலேயே அடங்கியிருக்கிறது. தம்முடைய நண்பர்கள் கூறிய எத்தனையோ காரியங்களை இயேசு செய்யாமல் தவிர்த்துவிட்டார். ஏனென்றால், மனுஷருக்குச் செவிகொடுத்து நன்மையாய்த் தோன்றுகிறவைகளை அவர் செய்திருந்தால், தம் பிதா தமக்கென்று வைத்திருந்த மிகச் சிறந்த வேறொன்றைத் தவறவிட்டு விடுவார் என்று அவர் அறிந்திருந்தார்.
ஒரு சமயம் ஜனங்கள் அவரை ஓர் இடத்தில் தங்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோது அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை! காரணம், வேறொரு இடத்திற்குப் போகும்படி சொன்ன பிதாவின் சத்தத்தை அன்று அவர் கேட்டிருந்தார்!! மனுஷீகமாய்ப் பார்ப்போமானால், அவர் அந்த இடத்தில் இன்னும் கொஞ்சநாட்கள் தங்கியிருந்திருக்கலாம்; ஏனென்றால் அச்சமயம் ஜனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக வாஞ்சையுடையவர்களாயிருந்தார்கள். ஆனால், தேவனுடைய நினைவுகள் மனுஷருடைய நினைவுகள் அல்ல; அவருடைய வழிகள் மனுஷருடைய வழிகளும் அல்லவே (ஏசாயா 55:8). பேதுருவும் மற்றவர்களும் அவரிடத்தில் வேண்டிக்கொள்வதற்கு முன்பே, அன்று அதிகாலையில்தான் இயேசு தனித்துச் சென்று ஜெபம் பண்ணி தம் பிதாவின் சத்தத்தைக் கேட்டிருந்தார் (மாற்கு 1:35-39). இயேசு தம் மனுஷீக நியாயத்தை ஒருபோதும் சார்ந்திருக்கவில்லை. அதற்குப் பதிலாய், “உன் சுய புத்தியின்மேல் சாராமல்... உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதிமொழிகள் 3:5,6) என்கிற வேத வார்த்தைக்கே அவர் கீழ்ப்படிந்தவராய் இருந்தார். ஒவ்வொரு விஷயத்திலும் வழிநடத்துதலுக்காய் அவர் தம் பிதாவையே சார்ந்திருந்தார். இயேசு கிறிஸ்துவைப்பற்றிய தீர்க்கதரிசனமாய், “காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என்செவியை கவனிக்கச் செய்கிறார்” என்ற ஏசாயா 50:4-ஆம் வசனம் மெய்யாகவே அவரில் நிறைவேறியது! அதுவே அவரது பழக்கமாய் இருந்தது. காலை முதல் நாள் முழுவதும் அவர் தம் பிதாவின் சத்தத்தைக் கேட்டு, பிதா தம்மிடத்தில் என்ன செய்யும்படி கூறினாரோ அதை அப்படியே செய்து முடித்தார். அவர் மனுஷரோடு பேச்சுவார்த்தை நடத்தி தம் காரியங்களை முடிவெடுக்காமல் 'தம் பிதாவோடு கூடி' ஜெபித்த ஜெபக்கூட்டங்களில் அத்தனைக்கும் முடிவெடுத்தார்! ஆத்தும கிறிஸ்தவர்கள், மனுஷரோடு கூடி ஆலோசித்துத் தீர்மானிக்கிறார்கள். ஆவிக்குரிய கிறிஸ்தவர்களோ தேவனிடத்திலிருந்து கேட்கும்படி ஜெபத்தில் காத்திருப்பார்கள்! ஆவிக்குரிய கிறிஸ்தவர்களோ தேவன் கூறுவதைக் கேட்கக் காத்திருப்பார்கள்.
இயேசு தம் பிதாவினால் பிழைத்து வந்தார்! (யோவான் 6:57). ஆகாரத்தைவிட தேவனுடைய வார்த்தைதான் அவருக்கு அத்தியாவசியமானதாய் இருந்தது (மத்தேயு 4:4). அதை அவர் பிதாவினிடத்திலிருந்து நேரடியாக, அனுதினமும் பலதடவைகள் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது! அவ்விதமாய்ப் பெற்று, அவைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார். தம் பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிவது, தம் அனுதின ஆகாரத்தைவிட அவருக்கு அதிமுக்கிய அவசியமாய் இருந்தது (யோவான் 4:34). இயேசு தம் பிதாவைச் சார்ந்தே வாழ்ந்தார். நாள்முழுதும் அவரது மனப்பான்மை, “பேசும் பிதாவே, நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்பதாகவே இருந்தது. அவர் காசுக்காரர்களை தேவாலயத்திலிருந்து விரட்டின காரியத்தை எடுத்துக்கொள்வோம். அநேகமுறை அவர்களை ஆலயத்தில் பார்த்திருந்தும், அவர்களை விரட்டாதிருந்து விட்டு, தம் பிதாவினால் நடத்தப்பட்டபொழுது மாத்திரமே விரட்டினார். ஆத்துமகிறிஸ்தவர்களோ, அவர்களை சதா விரட்டியடித்துக் கொண்டே இருப்பார்கள் அல்லது விரட்டாமலே இருப்பார்கள்! ஆனால்,. தேவனால் நடத்தப்படுகிற ஆவிக்குரியவர்களோ, எதை, எப்பொழுது, எங்கே, எப்படிச் செய்ய வேண்டும் என்று அறிந்திருப்பார்கள். நலமாய்த் தோன்றுகிற அநேக காரியங்களை இயேசு கிறிஸ்து செய்திருக்கமுடியும்! ஆனால், அப்படி அவர் செய்யவில்லை! ஏனெனில், அந்த நல்லவைகள் பிதாவின் சித்தத்திற்குப் புறம்பானதாய் அவருக்கு இருந்தன! அவர் எப்பொழுதுமே மிக உன்னதக் கிரியைகளைச் செய்வதிலேயே பிரயாசப்பட்டார். அதுவே அவருக்குப் போதும்! அவர் பூமிக்கு வந்தது அநேக நற்கிரியைகளைச் செய்வதற்காக அல்ல, மாறாக பிதாவின் சித்தம் செய்யவே வந்தார்!
இயேசு தம்முடைய பன்னிரண்டாவது வயதில், “நான் என் பிதாவுக்கடுத்த காரியங்களில் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?” என்று யோசேப்பினிடத்திலும், மரியாளினிடத்திலும் கேட்டார். ஆம், பிதாவுக்கடுத்தவைகளையே அவர் செய்துமுடிக்க விருப்பம் கொண்டிருந்தார். தம்முடைய 33 1/2 வருட உலக வாழ்க்கையின் இறுதியில் “பிதாவே, நான் செய்யும்படி நீர் எனக்குக் கூறின எல்லாவற்றையும் செய்து முடித்தேன்” (யோவான் 17:4) என்று பூரண திருப்தியுடன் அவரால் சொல்ல முடிந்தது. அவர் உலகத்தைச் சுற்றி பிரயாணம் செய்யவில்லை. ஒரு புத்தகமும் எழுதவில்லை. அவரைப் பின்பற்றினவர்களும் சிலரே! சந்திக்கப்படாத தேவைகள் உலகமெங்கும் நிறைந்து காணப்பட்டது. அப்படி இருந்தும், பிதா தமக்கு நியமித்த கிரியையை மாத்திரமே செய்து முடித்தார்! முடிவில், அது தான் காரியம்.
(தொடரும்)