WFTW Body: 

தேவன் நம்மில் வெளிப்படுத்தக்கூடிய அவரது வல்லமையின் மகத்துவத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? இந்தப் பிரபஞ்சத்தில், தேவன் வெளிப்படுத்திய மகா சத்துவத்தின் வல்லமை ‘சிருஷ்டிப்பில் அல்ல!’ இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் மாத்திரமே வெளிப்பட்டது (எபேசியர் 1:20).

நம்மைச் சுற்றிலும் நாம் காணும் அனைத்தும் ‘முதல் சிருஷ்டிப்பாய்’ இருக்கிறது! இயேசுவின் உயிர்த்தெழுதலில், இரண்டாவது சிருஷ்டிப்பானது தொடங்கி, அதுவே புதிய சிருஷ்டிப்பாய் நிலை நிற்கிறது! ‘இந்தப் புது சிருஷ்டிப்பு’ பழைய சிருஷ்டிப்பைக் காட்டிலும் மகா வல்லமை மிக்கது. ஆகவே, யோவான் 20-இல் கூறப்பட்ட வல்லமையே, நாம் ஆதியாகமம் 1-ஆம் அதிகாரத்தில் வாசிக்கும் சிருஷ்டிப்பின் வல்லமையைக் காட்டிலும் மகா உயர்ந்தது! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே இந்த அண்டசராசரத்தில் வெளிப்படுத்தப்பட்ட எந்த வல்லமையிலும் மாபெரும் வல்லமையாய் இருக்கிறது. தார்மீக வல்லமை சரீரப்பிரகாரமான வல்லமையைக் காட்டிலும் மேலானது.

“இந்த வல்லமையை நாம் அனைவரும் பெற்று அனுபவிக்க வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார்” என்ற இந்த சத்தியத்தின் வெளிப்பாட்டை நாம் அனைவரும் பெறவேண்டும் என்று பவுல் ஜெபித்தார். முதலாவதாக, நம்முடைய உள்ளான ஜீவியத்தில் இந்த வல்லமையானது நம் அனுபவமாக வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்! பின்பு, கிறிஸ்துவின் இந்த உயிர்த்தெழுதலின் வல்லமையை ‘ஒருநாளில் நம் சரீரத்திலும் அனுபவமாய் கண்டடைவோம்!’ இன்றோ, இந்த உயிர்த்தெழுதலின் வல்லமையை ‘நம் ஆவியில்’ அனுபவமாய் நாம் ருசித்திட தேவன் விரும்புகிறார். நம்முடைய ஆவிக்குரிய மரணத்திலிருந்து நம்மை உயிர்ப்பித்து எழச்செய்யும் வல்லமையே இந்த உயிர்த்தெழுதலின் வல்லமையாகும். பாவப்பிரமாணம் நம்மை ஆவிக்குரிய மரணத்திற்கு நேராகக் கீழே இழுக்கிறது. உயிர்த்தெழுதலின் வல்லமையோ, அந்த ஆவிக்குரிய மரணத்தை எதிர்த்து நம்மை உயர்த்துகிறது.

உயிர்த்தெழுதலின் வல்லமை நம்மைப் பாவப்பிரமாணத்திலிருந்து தூக்கி எடுப்பது, ஒரு புத்தகத்தை புவிஈர்ப்பின் பிரமாணம் கீழே இழுக்கச் செய்வதற்கு எதிராக அந்தப் புத்தகத்தை மேலே உயர்த்தி நிறுத்துவதற்கு ஒப்பாகும். உயிர்த்தெழுதலின் வல்லமை நம்மை உன்னதங்களுக்கு உயர்த்துகிறது! நாம் பாவங்களுக்கு மரித்திருந்த நிலையில், இந்த வல்லமையே நம்மை உயர்த்தி கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களில் அமரும்படிச் செய்தது என எபேசியர் 2:1-6 வசனங்களில் வாசிக்கிறோம். சிலர் இவ்வாறு கூறப்பட்டிருப்பது நம்மை பரவசப்படுத்துவதற்காகக் கூறப்பட்ட ஓர் அடையாளமாகவே இருக்கிறது எனக் கூறுகிறார்கள். அப்படியல்லவே அல்ல..... இது முற்றிலும் உண்மையாயிருக்கிறது. இதை உண்மை என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால், உயிர்த்தெழுதலின் வல்லமைக்குரிய நன்மைகள் யாதொன்றையும் நீங்கள் ஒருபோதும் பெற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில், நம்முடைய விசுவாசத்தின் அளவின்படி தான் நாம் பெற்றுக் கொள்கிறோம். இங்குதான், ‘எந்த மனுஷனும் பொய்யன்! தேவனே உண்மையுள்ளவர்!’ என்பதை நாம் விளங்கச்செய்யவேண்டும். நம்முடைய உணர்ச்சிப் பூர்வமான உணர்வுகளும் வஞ்சனையுள்ளது. நம்முடைய பார்வைகூட நம்மை வஞ்சிக்க முடியும்!

சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு சிறிய பையன்களைக் குறித்து ஒரு கதை உண்டு. 12 வயது நிறைந்த மூத்த பையன் “இங்கே பார், சூரியன் மறைந்து விட்டது. காலையில் கிழக்கில் தோன்றிய இந்த சூரியன் இப்போது மேற்கு சென்று விட்டது என கூறினான்.” இளைய பையனோ 6 வயது கொண்டவன். அவன் கூறினான் “இல்லை நம் அப்பா சொல்லிக் கொடுத்தது ஞாபகமிருக்கிறதல்லவா! சூரியன் சுற்றுவதில்லை. பூமி மாத்திரமே, அதனுடைய அச்சில் சுற்றுகிறது!” என்றான். அதற்கு அந்த மூத்த பையன் “நான் காண்கிறது எதுவோ, நான் உணர்வது எதுவோ அதை மாத்திரமே நம்புகிறேன். கிழக்கில் நான் சூரியனைப் பார்த்தேன் ....... இப்போது மேற்கில் சூரியனைப் பார்க்கிறேன். நீ சொல்லுகிறபடி, 'இந்த பூமி சுற்றுவதை' என் கால்களுக்குக் கீழாக நான் உணரவில்லை. இந்த பூமி, அது நின்ற இடத்தில்தான் அசையாமல் நிற்கிறது.” என்று பதிலளித்தான் அதற்கு அந்த இளைய மகன் “நானோ, அப்பா சொன்னதையே நம்புகிறேன்!” என கூறினான்.

அவர்களில் யார் சரி? தன் அப்பா கூறியதை விசுவாசித்தவனா? நான் எதைக் கண்டு உணருகிறேனோ அதையே விசுவாசிப்பேன் என கூறியவனா? அநேக கிறிஸ்தவர்கள், தாங்கள் கண்டு உணர்ந்ததை வைத்தே ஜீவிக்கிறார்கள். ஆகவே நான் அதைக் கண்டு அதை உணராவிட்டாலும், அவர் சொன்னது மாத்திரமே சரியானது என, என் பரலோகப் பிதாவை விசுவாசிக்கிறேன்!

ஆகவேதான் தேவன் கூறும் “நான் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களில் வைக்கப்பட்டிருக்கிறேன்” எனக் கூறும் வார்த்தைகளை அப்படியே விசுவாசிக்கிறேன்! என்னுடைய உணர்வுகள் என்ன கூறுகிறது என்பதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. என்னுடைய பார்வையில் வஞ்சகம் இருப்பதைப் போலவே, என்னுடைய உணர்வுகளிலும் வஞ்சனை இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். இவ்வாறு நான் பரமபிதாவை விசுவாசிக்கிறபடியால், அவர் கூறிய ‘சகலமும் என் வாழ்க்கையில் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது’ என்ற வசனம் என் ஜீவியத்தில் நிறைவேறி வருவதைக் காண்கிறேன். நம்முடைய பரமபிதாவை நாம் விசுவாசிக்காத பட்சத்தில், அநேக பிரச்சனைகள் ஏற்படும். இந்த ஆச்சரியமான ‘உயிர்த்தெழுதலின் வல்லமை’ எல்லா ஜனங்களுக்கும் அல்ல, விசுவாசிப்பவர்களுக்கு மாத்திரமே அருளப்பட்டிருக்கிறது என கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதை நீங்கள் விசுவாசிக்காவிட்டால் இந்த வல்லமையை நீங்கள் அனுபவித்திட இயலாது. இயேசு தோமாவினிடத்தில், “காணாமல் விசுவாசிப்பவர்களே பாக்கியவான்கள்” என்றார் (யோவான் 20:29). அந்த பாக்கியவான்களில் நானும் ஒருவன்!