WFTW Body: 

"பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்" என்பதைப் போலப் பாடுகளின் நோக்கமானது உங்களுடைய விசுவாசத்தின் உண்மையான தன்மையை நிரூபிப்பதற்கே ஆகும். பூமியின் ஆழத்திலிருந்து தோண்டி எடுக்கப்படும் பொன் சுத்தமானதாக இருப்பதில்லை. அதைச் சுத்திகரிப்பதற்கான ஒரே வழி அக்கினியில் போடுவதுதான். சோப்பையும் தண்ணீரையும் கொண்டு அழுத்தித் தேய்ப்பதின் மூலம் பொன்னைச் சுத்திகரித்துவிட முடியாது. அது அழுக்கை மட்டுமே அகற்றும். ஆனால் அதில் கலந்திருக்கும் உலோகங்களை அகற்ற வேண்டுமானால், அதை அக்கினியில் போடவேண்டும். அப்போதுதான் அதிலிருக்கும் உலோகக் கலவைகள் எல்லாம் உருகி சுத்தமான பொன் வெளிவரும். நீங்கள் கடந்து செல்லும் பாடுகள் மிகவும் உக்கிரமாக இருக்கக் கூடும். அது உங்களைக் காயப்படுத்துகிறது – நீங்கள் அக்கினியில் இருப்பதைப் போல உணருகிறீர்கள். அதனுடைய ஒரே நோக்கமெல்லாம் உங்களுடைய வாழ்க்கையில் காணப்படும் அசுத்தமான எல்லாவற்றையும் அகற்ற வேண்டும் என்பதுதான். உதாரணமாக, சில தேசங்களில் கிறிஸ்தவர்கள் உபத்திரவப்படுத்தப்பட்டு, அவர்களுடைய ஆஸ்திகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன் விளைவு என்ன ஆயிற்று? அவர்கள் மேன்மையான மோட்சப் பயணிகளாக மாறி விட்டனர். இப்போது அவர்களிடத்தில் எதுவும் இல்லாததினால், ஆஸ்திகளின் மேல் அவர்களுக்கு இருந்த பற்று குறைந்துவிட்டது. ஆனால் உபத்திரவம் இல்லாத இடத்தில், மிகச் சிறந்த விசுவாசிகள் கூட தங்கள் ஆஸ்திகள் மீதும், தங்கள் உடைமைகள் மீதும் மிகுந்த பற்றுடன் இருக்கிறார்கள். அதிலெல்லாம் நமக்குப் பற்று இல்லை என்று நாம் கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால் நம்மை நாமே வஞ்சித்துக் கொள்ளுகிறோம். இதனால் தேவன் ஒருநாள் நம் தேசத்தில் உபத்திரவம் வருவதற்கு அனுமதிக்கலாம். அப்போது நாம் சுத்திகரிக்கப்படுவோம்.

கம்யூனிசக்காரர்களால் ரஷ்யா ஆட்சி செய்யப்பட்ட போது, கிறிஸ்துவர்களால் கல்லூரிப் படிப்பையோ, நல்ல வேலையையோ பெற முடியவில்லை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தெருக்களை சுத்தம் செய்வது போன்ற கீழ்த்தரமான வேலைகளையே அவர்களால் பெற முடிந்தது. அத்தகைய சூழ்நிலைகளில், உயர்ந்த பதவிகளினாலும், பெரிய வேலைகளினாலும் வரும் கனத்திலிருந்தும் முக்கியமானவனாக எண்ணும் உணர்விலிருந்தும் நம்மால் எளிதில் விடுபட முடியும். பொன்னிலுள்ள எல்லா அசுத்தங்களும் சுட்டெரிக்கப்பட்டு, உண்மையாகவே நாம் சுத்தமுள்ளவர்களாக மாறுகிறோம். ஆகவேதான் இன்று உபத்திரவம் இருக்கிற இடங்களிலெல்லாம் உலகின் மிகச் சிறந்த கிறிஸ்தவர்கள் உள்ளனர். இதினிமித்தமே கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம் வேண்டாம் என்று நான் ஒருபோதும் ஜெபித்ததே இல்லை. ஏனென்றால், இப்படி ஜெபித்தால் நான் சபை சுத்திகரிக்கப்படுவதற்கு விரோதமாக ஜெபிக்கிறவனாக இருப்பேன். உபத்திரவம் வேண்டும் என்றும் ஜெபிக்க மாட்டேன், வேண்டாமென்றும் ஜெபிக்க மாட்டேன். எந்த காலத்தில் நமக்கு எது சிறந்தது என்பதை கர்த்தர் அறிவார். ஆகவே அவரே அதைத் தீர்மானிக்கும்படி விட்டுவிடுகிறேன். எதுவாயிருந்தாலும் எனக்குச் சரிதான். தேவனுடைய மெய்யான கிருபையை நாம் பெறும் போது இதுவே நம்முடைய மனப்பான்மையாக இருக்கும்.

மேலும் இவை யாவும் கிறிஸ்து திரும்ப வரும்போது, உங்களுக்குப் புகழ்ச்சியையும் கனத்தையும் மகிமையையும் உண்டாக்கும் என்று பேதுரு தொடர்ந்து கூறுகிறார். இந்தப் பாடுகளின் மத்தியில், நாம் இயேசுவைக் காணாமலிருந்தாலும், நாம் அவரிடத்தில் அன்புகூர்ந்து, அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாத சந்தோஷமுள்ளவர்களாய் களிகூருகிறோம். பேதுரு சரீரப் பிரகாரமாக இயேசுவைக் கண்டிருந்தார். ஆனால் "காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்" ( யோவான் 20:29) என்று இயேசு கூறினார். பேதுருவைப் போலவே சரீரப் பிரகாரமாக இயேசுவைப் பார்த்தவர்களைக் காட்டிலும், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களாகிய நாம் அதிக பாக்கியவான்கள் என்னும் இந்த வசனத்தை உங்களில் எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இயேசு அப்படிச் சொல்லியிருப்பதால், இதை நான் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். பாடுகளின் வழியாய் உண்மையாய்க் கடந்து போகையில், நாம் விசுவாசத்தின் பலனாகிய 'ஆத்துமரட்சிப்பை அடைகிறோம்' என்று பேதுரு தொடர்ந்து கூறுகிறார் (1 பேதுரு 1:9). நரகத்திலிருந்து இரட்சிக்கப்படுவதைப் பார்க்கிலும், நமது ஆத்தும இரட்சிப்பைக் குறித்தே அப்போஸ்தலர்கள் அதிகமாய்ப் பேசினர்.

நம்முடைய ஆத்துமா, ஆதாமிடமிருந்து சுயநலத்தையும், பெருமையையும் பலவிதத் தீமைகளையும் சுதந்தரித்துள்ளது. ஆதாமிடமிருந்து நாம் சுதந்தரித்த எல்லா தீமைகளிலிருந்தும் – அதாவது உலகப் பொருட்களின் மீதுள்ள பற்று, கனத்தை நேசிப்பது, சுயத்தை மையமாகக் கொண்டு வாழ்வது போன்ற எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் – நாம் இரட்சிக்கப்பட வேண்டும். உக்கிரமான பாடுகளும், உபத்திரவங்களும், அநேக தீமைகளிலிருந்து நம்மை விடுவிக்கப் பெரிதும் உதவுகின்றன.

மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளையைப் பெற்றவர்களுக்கு இருக்கிற பாடுகளைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். அது ஒரு பெரிய துரதிர்ஷ்டம் என்று சிலர் நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற வேண்டும் என்று நம்மில் ஒருவரும் ஜெபிக்கமாட்டோம். ஆனால் தேவன் தம்மை நேசிக்கிற ஒரு குடும்பத்திற்கு, அத்தகைய பிள்ளையைப் பெறுவதற்கு அனுமதிப்பாரானால், அதையும் தேவன் அவர்களுடைய நன்மைக்காக மாற்றுவார் என்பதை நாம் நிச்சயப்படுத்தி கொள்ளலாம். அப்படிப்பட்ட பிள்ளைகளுடன் பிறந்த மற்ற பிள்ளைகளிடத்தில், பிற குடும்பங்களில் இல்லாத கனிவும், தியாகமுள்ள ஆவியுடன் கூடிய சேவையும் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். புத்திசாலித்தனமும், திறமையும் கொண்ட பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு தங்களை அறியாமலே தங்களுடைய இருதயங்களுக்குள் பெருமை வந்துவிடுகிறது. பெருமை பரத்திற்கு உரியதல்ல; அது நரகத்திற்கு உரியதாகும். ஆனால், துரதிருஷ்டவசமாக, அநேக விசுவாசிகளின் குடும்பங்களிலே பெருமை காணப்படுகின்றது.

தேவன் தம்முடைய பிள்ளைகள் எல்லாருமே பாடுகளைச் சந்திக்கும்படி அனுமதிக்கிறார். அவருடைய அனந்த ஞானத்தினாலே, அவற்றை எப்போது அனுப்பலாம் என்பதையும் அவர் துல்லியமாக அறிந்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் அவர் அனுமதித்த எந்தவொரு பாடுகளிலும் அவர் ஒரு தவறு கூடச் செய்யவில்லை என்பதை கர்த்தருக்கு முன்பாக நாம் நிற்கும்போது அறிந்து கொள்வோம். அவர் நம்முடைய வாழ்க்கையில் அனுமதித்த ஒவ்வொரு பாடும், நாம் பொன்னைப் போலச் சுத்திகரிக்கப்படுவதற்காகவே என்பதை அந்நாளிலே நாம் கண்டுகொள்வோம். நீங்கள் அதை விசுவாசித்தால், எல்லா நேரத்திலும் கர்த்தரைத் துதிப்பீர்கள்.