உயர்ந்த தரமுள்ள சபைகளைக் கட்டுவதற்கு, உயர்ந்த தரமுடைய பிரசங்கிகள் நமக்குத் தேவை.
“என்னைப் பின்பற்றுங்கள்” என இயேசு சொன்னார் (லூக்கா 9:23).
“நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என பவுல் கூறினார் (1கொரிந்தியர் 11:1; பிலிப்பியர் 3:17).
பவுலின் இந்த வார்த்தைகளில், தேவபக்தியுள்ள ஒவ்வொரு பிரசங்கியும் தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களிடத்தில், சொல்லக் கூடிய காரியம் எதுவாக இருக்க வேண்டுமென பரிசுத்த ஆவியானவர் எதிர்பார்க்கிறார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
அநேகப் பிரசங்கிகள், “நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டாம், கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்” என்று கூறுகின்றார்கள். இது கேட்பதற்குத் தாழ்மை போல ஒலிக்கின்றது. ஆனால் அவர்கள் தங்களுடைய தோற்கடிக்கப்பட்ட வாழ்க்கையை மூடி மறைப்பதற்காக கையாளும் ஒரு யுக்தியாகத்தான் இது உள்ளது. ஆனால் இது பரிசுத்த ஆவியானவரின் உபதேசத்திற்கு நேர்மாறான ஒன்றாகும்.
“நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்று சொல்லத்தக்க பிரசங்கிகளை மாத்திரமே நான் மதித்துப் பின்பற்றுகின்றேன். ஆனால் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், நம்முடைய நாட்களில் அத்தகைய பிரசங்கிகளைக் காண்பது அரிதாக உள்ளது.
பவுல் மனந்திரும்புவதற்கு முன்னர், முற்றிலும் தோல்வியைத்தான் தழுவி நின்றார். இருப்பினும் தேவன் அவரை முற்றிலும் மாற்றி மற்றவர்கள் அவரைப் பின்பற்றத்தக்க, அவர் இன்னும் பூரணத்தை எட்டாத நிலையில் இருந்த போதிலும், ஒரு முன்மாதிரியாக உருவாக்கினார் (பார்க்க: பிலிப்பியர் 3:12-14). (இவ்வுலகிலுள்ள மிகச் சிறந்த கிறிஸ்தவனும் பூரணத்தை அடைந்தவனாக இருக்க முடியாது; அவன் பூரணத்தை நோக்கிக் கடந்து போகிறவனாகத்தான் இருப்பான்.)
ஆகவே, நீங்கள் உங்களுடைய கடந்த காலத்தில் முற்றிலும் தோல்வியடைந்த நபராக இருந்தாலும், தேவனால் உங்களை மற்றவர்கள் பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரியாக வனைந்திட முடியும்.
நான் ஒரு பிரசங்கியை மதித்து, அவரை ஒரு முன்மாதிரியாக வைத்து, அவரைப் பின்பற்றுவதற்கு முன்பாக, அவரிடத்தில் ஏழு தலையாய குணாதிசயங்களைக் காண விழைகின்றேன்:
-
அவர் தாழ்மையானவராகவும், எளிதில்அணுகத்தக்க மனிதனாகவும் இருத்தல் வேண்டும். இயேசு தாழ்மையானவராகவும், அணுகத்தக்கவராகவும் இருந்தார் (மத்தேயு 11:29). ஜனங்கள் அவரிடத்தில் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சுலபமாக அணுகினர். நிக்கோதேமுவால் நள்ளிரவிலே அவரை அணுக முடிந்தது; பொது இடங்களிலே யார் வேண்டுமானாலும் எந்நேரத்திலும் இயேசுவிடம் சென்று பேச முடிந்தது. (லூக்கா 4:18 -ல் நாம் வாசிப்பது போல) இயேசுவின் தாழ்மையானது, அவரைத் தரித்தரருக்குப் பிரசங்கிக்கும்படி தூண்டியது. பவுல் தன்னுடைய தவறுகளை உடனடியாக ஒத்துக் கொண்டு, அவற்றிற்காக மன்னிப்புக் கேட்கக் கூடிய ஒரு தாழ்மையான மனிதனாக இருந்தார் (அப்போஸ்தலர் 23:1-5). ஏழை, பணக்காரன் என்ற பேதங்களில்லாதவர்களாகவும், தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணமில்லாதவர்களாகவும், தங்களுடைய தவறுகளுக்காக உடனே மன்னிப்புக் கேட்கிறவர்களாகவும், எப்பொழுதுமே சாதாரண சகோதரர்களாகவும் இருக்கின்ற பிரசங்கிகளையே நான் பின்பற்றுவேன்.
-
அவர் யாரிடத்திலும் – தனக்கானாலும் சரி தனது ஊழியத்திற்கானாலும் சரி - பணம் கேட்காதவராகவும், எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறவராகவும் இருத்தல் வேண்டும். அவர் யாரிடத்திலாவது இலவசமான அன்பளிப்பைப் பெறுவாரானால், (பவுல் எப்போதாவது செய்ததைப் போல - பிலிப்பியர் 4:16-18) அவரைவிட அதிக செல்வந்தர்களாய் இருப்பவர்களிடமிருந்து மட்டுமே பெறுவார். அவரைக் காட்டிலும் வறியவரிடமிருந்து ஒரு போதும் அன்பளிப்பைப் பெற மாட்டார். இயேசு தமக்காகவோ, தம்முடைய ஊழியத்திற்காகவோ எவரிடமிருந்தும் பணம் பெறவில்லை. அவர் தம்மைவிட அதிக செல்வந்தர்களிடமிருந்து மட்டுமே அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டார் (லூக்கா 8:3). இயேசுவும் பவுலும் ஓர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். பணத்தையும் மற்ற உலகப் பொருளையும் குறித்து இயேசுவும் பவுலும் பெற்றிருந்த மனப்பான்மையுடைய பிரசங்கிகளையே நான் பின்பற்ற விரும்புகிறேன்.
-
அவர் தான் தேவபக்தியுள்ள மனிதன் என்னும் சாட்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். அவர் பக்தியுள்ளவர் என அறியப்பட்டவராகவும், பரிசுத்தத்தின்மீது தீராத வாஞ்சைகொண்ட நேர்மையான மனிதராகவும், எந்தக் காரியத்திலும் தனக்கானதைத் தேடாதவராகவும், தன் நாவை அடக்குகிறவராகவும் (யாக்கோபு 1:26; எபேசியர் 4:26-31), தோல்வியிலுள்ளவர்களிடம் இரக்கமுள்ளவராகவும், தன்னுடைய ஜெபத்தையும், உபவாசத்தையும், கொடுத்தலையும் குறித்து ஒருபோதும் மேன்மைபாராட்டாதவராகவும் (மத்தேயு 6:1-6), மற்றும் தன்னுடைய சத்துருக்களை நேசிக்கவராகவும் (மத்தேயு 5:44) இருக்க வேண்டும். ஸ்திரீகளின் விஷயத்தில், அவர்கள் வாலிப ஸ்திரீகளானாலும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளானாலும், அவர்களிடத்தில் அவருடைய சாட்சியானது முழுமையுமாக சுத்தமானதாக இருக்க வேண்டும் (1தீமோத்தேயு 5:2). தங்களுடைய வாழ்க்கையில் தேவபக்தியின் நறுமணங்கமழும் இந்த விதமான பிரசங்கிகளையே நான் பின்பற்ற விரும்புகிறேன்.
-
அவர் தன்னுடைய பிள்ளைகளை ஆண்டவரை நேசிப்பவர்களாக வளர்த்திருத்தல் வேண்டும். வீட்டிலே அவரது பிள்ளைகள் ஒரு தகப்பனாக அவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். ஆண்டவரை நேசியாதவர்களாகவோ அல்லது கீழ்ப்படியாதவர்களாகவோ இருக்கும் பிள்ளைகளை உடையவர்கள், ஒரு சபையின் தலைவராக இருக்கக் கூடாது என பரிசுத்த ஆவியானவர் உரைக்கின்றார் (1தீமோத்தேயு 3:4,5; தீத்து 1:6). மற்றவர்களைப் பார்க்கிலும் நம்முடைய பிள்ளைகள் நம்மை நன்கறிவர். ஏனெனில் அவர்கள் நம்மை வீட்டில் எப்பொழுதுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் வீட்டிலே தேவ பக்தியின் வழியில் வாழ்வதை காண்கையில், அவர்களும் முழு இருதயமாய்க் கர்த்தரைப் பின்பற்றுவார்கள். தங்களுடைய பிள்ளைகளை, தாழ்மையுள்ளவர்களாகவும், கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும், எல்லா மக்களுக்கும் மரியாதை கொடுக்கிறவர்களாகவும் வளர்த்த பிரசங்கிகளையே நான் பின்பற்றுவேன்.
-
அவர் தேவனுடைய முழு ஆலோசனையையும் பயமின்றிப் பிரசங்கிக்கிறவராக இருத்தல் வேண்டும். அவர் புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் - ஒவ்வொரு கட்டளையையும் ஒவ்வொரு வாக்குத்தத்தையும் - எந்த மனிதனையும் பிரியப்படுத்தாமல், அறிவிக்க வேண்டும் (அப்போஸ்தலர் 20:27; கலாத்தியர் 1:10). அவர் மெய்யாகவே பரிசுத்த ஆவியினால் தொடர்ச்சியாய் அபிஷேகிக்கப்படுபவராய் இருந்தால், அவர் எப்பொழுதுமே, இயேசுவையும், பவுலையும் போல அறைகூவல்விடுக்கும், உற்சாகமூட்டும் செய்திகளை உடையவராக இருப்பார். இவ்விதமான பிரசங்கிமார்களையும், அவர்கள் பேசும்போது தேவனுடைய அபிஷேகம் இருப்பதை என்னால் உணரக்கூடிய பிரசங்கிகளையே, நான் பின்பற்றுவேன்.
-
அவர் கிறிஸ்துவின் சரீரத்தை வெளிப்படுத்தும் ஸ்தல சபைகளை கட்டுகிறதில் தீரா வாஞ்சை உடையவராய் இருத்தல் வேண்டும். இயேசுவானவர் ஜனங்களை எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் இரட்சிப்பதற்காக மட்டுமே இப்பூமிக்கு வரவில்லை. ஒரு சரீரமாய் தம்முடைய ஜீவனை வெளிப்படுத்தும் தம்முடைய சபையைக் கட்டுவதற்காகவும் வந்தார் (மத்தேயு 16:18). கிறிஸ்துவின் சரீரமாக இயங்கும் இத்தகைய சபைகளை எல்லா இடங்களிலும் ஸ்தாபிப்பதே பவுலின் வாஞ்சையாக இருந்தது (எபேசியர் 4:15,16). இதை ஈடேற்றுவதற்காக அவர் கடினமாகப் பிரயாசப்பட்டார் (கொலோசெயர் 1:28,29). கிறிஸ்துவின் சரீரத்தின் வெளிப்பாடுகளாக இயங்கும் ஸ்தல சபைகளைக் கட்ட முனைப்புடன் தங்களுக்கு அளிக்கப்பட்ட வரங்களை பயன்படுத்தி செயல்படும் இவ்விதமான பிரசங்கிகளையே (அவர்கள் சுவிசேஷகர்களோ அல்லது போதகர்களோ அல்லது தீர்க்கதரிசிகளோ, யாராக இருந்தாலும்) நான் பின்பற்ற விரும்புகிறேன்.
-
அவர் தனது தரிசனத்தையும், தனது ஆவியையும் பெற்ற, குறைந்தபட்சம் ஒருசில உடன் ஊழியக்காரர்களையாவது எழுப்பியிருத்தல் வேண்டும். ஒரு பக்தியுள்ள பிரசங்கியானவன், அடுத்த தலைமுறையிலும் கர்த்தருக்கென்று ஒரு சுத்த சாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுள்ளவனாக இருப்பான். இயேசுவானவர், அவரது ஆவியையும், அவருடைய தரங்களையும் உள்வாங்கிக்கொண்டு, அவருடைய ஊழியத்தைச் செய்யத்தக்க 11 சீஷர்களை எழுப்பினார். பவுல் தன்னுடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்யத்தக்க தன்னைப் போலவே தாழ்மையான, சுயநலமில்லாத ஆவியில் வாழ்ந்த, தீமோத்தேயுவையும், தீத்துவையும் எழுப்பினார் (பிலிப்பியர் 2:19-21; 2கொரிந்தியர் 7:13-15). இந்தவிதமாக, மேலே பட்டியலிடப்பட்ட தகுதிகளையுடைய ஒருசில உடன் ஊழியர்களையாவது எழுப்பின பிரசங்கிகளையே நான் பின்பற்றுவேன்.
நீங்கள் ஒரு பிரசங்கியாய் இருக்கும்படி தேவனால் அழைக்கப்பட்டவராய் இருந்தால், மேற்சொன்ன தகுதிகளுடன், மற்றவர்கள் உங்களைப் பின்பற்றக் கூடியவர்களாய் நீங்கள் விளங்கும்படிக்கு, அவர் உங்களைத் தொடர்ச்சியாய் தம்முடைய ஆவியினால் அபிஷேகிக்கும்படிக்கு ஜெபிக்க வேண்டும்.
கிறிஸ்தவ வட்டாரத்தில், ஒத்த வேஷமும், உலகப்பற்றும் மிகுந்து காணப்படும் இந்நாட்களில், நாம் சபையிலே வாழ்க்கைத்தரத்தையும், ஊழியத்தையும் உயர்த்திப் பிடிக்கும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.