“பகை” என்னும் தவறான மனப்பான்மையைக் குறித்து இயேசு பேசினார். "உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்” (மத்தேயு 5:43). பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்கள் கானானியரைப் பகைத்தார்கள்; பெலிஸ்தரையும், எமோரியரையும், மோவாபியரையும் வெறுத்தார்கள். அவர்களை அழிக்கவும் கூட திட்டமிட்டார்கள். ஆனால் இப்பொழுதோ இயேசு, “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” என்று கூறுகிறார். வருடங்கள் செல்ல செல்ல தேவன் மாறிவிட்டாரா? இல்லை. இயேசு கிறிஸ்துவைப் போல வாழ மனிதனுக்கு இப்போது அதிக சாத்தியம் இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் இயேசுவைப் போல அவர்களால் வாழ முடியவில்லை. பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், தேவன் நேசிக்க விரும்புகிற விதமாய், மெய்யாகவே நம் சத்துருக்களை நேசிப்பது என்பது கூடாத காரியம். நீங்கள் ஒரு மிகவும் அன்புள்ள நபர் என்ற கனத்தைப் பெறும்படிக்கு ஒருவேளை உங்கள் சத்துருக்களை சிநேகிக்கலாம். ஆனால் தேவனுடைய மகிமைக்காக உங்கள் சத்துருக்களை சிநேகிக்கிறீர்களா? பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு நபர் மட்டுமே அதைச் செய்ய முடியும். “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” என்றார் இயேசு.
உலகெங்கிலுமுள்ள இயேசுவின் சீஷராயிருக்கும் ஒவ்வொரு விசுவாசிக்கும் நாம் கற்பிக்க வேண்டிய கட்டளைகள் இவைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் ஒரு சபையைக் கட்ட வேண்டுமானால், அந்த சபையில் உள்ள ஒவ்வொரு நபரும் தனது சத்துருக்களை நேசிக்கிறவராயிருக்கும் ஒரு சபையை நான் கட்ட வேண்டும். அவருக்கு பத்து சத்துருக்கள் இருந்தால், அவர்களில் ஒன்பது பேரை அவர் சிநேகிக்கிறார் என்றால், அவர் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. இயேசு, “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நான் முதலாவதாக அவைகளை என் வாழ்வில் கைக்கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு தேவ ஊழியரும் தங்களுடைய வாழ்க்கையில் சத்துருக்களை எதிர்கொள்ளும்படி தேவனால் அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்விதமாய் அவர்கள் தங்கள் சத்துருக்களை நேசிக்கக் கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் மற்றவர்களுக்கு அவர்களுடைய சத்துருக்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கவும் முடியும்.
அதனால்தான் தேவனுடைய ஒவ்வொரு உண்மையான ஊழியரும் உபத்திரவத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் தங்களைத் துன்புறுத்துபவர்களுக்காக எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும், பின்னர் துன்புறுத்துபவர்களுக்காக எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை மற்றவர்களுக்கும் கற்பிக்க முடியும். அதனால்தான் இயேசு, “இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்” என்று கூறுகிறார். “தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறவராகிய” பரலோகத்திலிருக்கிற நம் பிதாவைப் பார்க்கும்படியாகவும் அவர் நமக்கு அறிவுறுத்துகிறார் (மத்தேயு 5:45).
இரண்டு விவசாயிகளை நினைத்துப் பாருங்கள், ஒருவர் நாத்திகர், மற்றவர் தேவபக்தியுள்ள ஒரு விவசாயி. அவர்களது நிலங்கள் ஒன்றுக்கொன்று அருகில் இருக்கின்றன. ஒருவர் தவறாமல் ஜெபிக்கிறார், மற்றவர் தேவன் இல்லை என்றும் தேவனைப்பற்றிய கருத்துக்களெல்லாம் குப்பை என்றும் நினைக்கிறார். ஆயினும் தேவன் அவர்கள் இருவரின் மீதும் அவர்களுடைய நிலங்கள் மீதும் சூரியனை உதிக்கச் செய்கிறார்! தேவன் அவர்கள் இருவரின் வயல்களிலும் சமமாக மழை பெய்ய வைக்கிறார், இதனால் அவர்கள் தங்கள் நிலங்களில் நல்ல பயிர்களையும், தங்கள் மரங்களில் நல்ல பழங்களையும் பெறுவார்கள். தேவன் எவ்வளவு நல்லவர் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? அவர் நாத்திகர் மீதும் தேவபக்தியுள்ள விவசாயியின் மீதும் சமமாக மழையைப் பெய்யப்பண்ணுகிறார். நாமும் அப்படியே இருக்கும்படி அவர் விரும்புகிறார். பிதாவைப் போலவே இருங்கள் - நல்லவர்களுக்கும், உங்கள் சத்துருக்களுக்கும் சமமாகவே நன்மை செய்யுங்கள். பரிசுத்த ஆவியின் பெலன் இல்லாமல் இவை அனைத்தும் சாத்தியமற்றவை. அதனால்தான் பழைய ஏற்பாட்டில் இதுபோன்ற கட்டளைகளை நாம் படிப்பதில்லை.
“உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன?” என்று இயேசு கூறுகிறார். ஏனென்றால் வரி வசூலிப்பவர்கள், கொலைபாதகர் போன்ற கொடிய பாவிகளும் தவறான மதத்தவர்களும் பிற குழுக்களில் உள்ளவர்களும் கூட அவ்வாறு செய்கிறார்கள். எனவே நீங்கள் உங்கள் சிநேகிதர்களை அல்லது உங்கள் சகோதரரை மாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? நீங்கள் புறஜாதிகளை விட சிறந்தவர்கள் அல்ல (மத்தேயு 5:47).
உங்களை வாழ்த்த விரும்பாத ஒருவரை வாழ்த்த நீங்கள் எப்போதாவது முயற்சித்திருக்கிறீர்களா? நான் அதைப் பலமுறை செய்திருக்கிறேன். கர்த்தருடைய ஊழியக்காரனாக, நான் பிரசங்கிக்கிற வேத வசனத்தின் சத்தியத்தினாலே அநேக ஜனங்கள் என்னிடத்தில் மனத்தாங்கல் அடைந்திருக்கிறார்கள். இந்த இருபது நூற்றாண்டுகளில் இயேசு, பவுல் மற்றும் தேவனுடைய பல ஊழியர்கள் மீது மக்கள் மனத்தாங்கல் அடைந்ததைப் போலவே, என்மீதும் மனத்தாங்கல் அடைந்திருக்கிறார்கள். சாலையில் செல்லும் போது பார்த்தால், எனக்கு வாழ்த்துதல் சொல்ல மாட்டார்கள். சில நேரங்களில் நான் சாலையைக் கடந்து மறுபுறம் சென்று அவர்களை வாழ்த்தி இருக்கிறேன். ஏனென்றால் உங்களை வாழ்த்துவதில் ஆர்வம் இல்லாதவர்களை வாழ்த்தவும், அவர்களுக்கு எதிராக உங்களுக்கு மனதில் எதுவும் இல்லை என்பதைக் காண்பிக்கவும் வேண்டுமென்று வேதம் கூறுகிறது.
எனக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று ஒருவர் ஒரு முறை என்னிடம் கேட்டார். உலகில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேர்களும் எனக்கு நண்பர்களே என்றும், அந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்றும் நான் பதிலளித்தேன்! உலகில் ஏழு பில்லியன் மக்கள் இருந்தால், என்னைப் பொருத்தவரை, அவர்கள் அனைவருமே எனது நண்பர்களே. எனக்கு சத்துருக்கள் என்று எவரும் இல்லை, அவர்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். அவர்கள் என்னைத் தங்கள் சத்துருவாகக் கருதலாம், ஆனால் நான் அவர்களை எனது சத்துருவாகக் கருதவில்லை. என்னை நிந்திக்கிறவர்களுக்காகவும், என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும், நான் ஜெபிக்க விரும்புகிறேன். என்னை சபிக்கிறவர்வர்களை நான் ஆசிர்வதிக்க விரும்புகிறேன். “உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்” (மத்தேயு 5:44). நீங்கள் அப்படிச் செய்கிறீர்களா?
அப்படியானால் எந்த சாபமும் உங்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. நாம் தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் இருப்பதினால் அது சாத்தியமற்றது. கிறிஸ்து ஒவ்வொரு சாபத்தையும் சிலுவையில் அழித்துப்போட்டார், இப்போது நாம் தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் இருக்கிறோம். எனவே என்னை சபிக்கும் எந்தவொரு நபரும் என்னை எந்த வகையிலும் துன்புறுத்த முடியாது. ஆனால், அவருக்கு அது தெரியாது; நான் பதிலுக்கு, “ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று கூறி அவரை ஆசீர்வதிக்க முடியும். நான் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரையும் பார்த்து, “ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று சொல்ல முடியும். ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மெய்யாகவே நான் விரும்புகிறேன். தேவன் அவரை ஆசீர்வதிக்கிறாரா இல்லையா என்பது அவரவருடைய மனப்பான்மையைப் பொருத்தது. ஆனால் தேவன் அவர்களை ஆசீர்வதிக்கவே வேண்டும் என்று நான் நிச்சயமாக விரும்புகிறேன்.