WFTW Body: 

எபிரேயர் 4:12-ம் வசனத்தில் "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என வாசிக்கிறோம்.

தேவனுடைய வார்த்தை ஒரு பட்டயத்தைப்போல் நம்முடைய இருதயங்களில் ஊடுருவச் சென்று நம்முடைய நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுத்து வெளிப்படுத்துகிறது. புதிய உடன்படிக்கையில் "இருதயத்தின் யோசனைகளையும் நோக்கங்களையும் வகையறுத்துக் காட்டுவதையே” மிக முக்கியமானதாக இந்த எபிரேயர் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், பழைய உடன்படிக்கையில் பொல்லாத சிந்தைகளும், நோக்கங்களும் மிக மோசமானதாக குறிப்பிட்டு கூறவில்லை. அது ஏனென்றால், 'அவர்களுக்குள் வாசம்பண்ணும்படி' பரிசுத்தாவியை இஸ்ரவேலர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. பொல்லாத சிந்தைகளும், நோக்கங்களும் கொண்ட மனிதனை தண்டிக்கவோ அல்லது அதை வெளியரங்கத்திற்கு கொண்டு வருவதையோ 'நியாயப்பிரமாணத்தினால்' செய்யமுடியவில்லை. ஒரு மனிதன் வெளிப்பிரகாரமாய் செய்கின்ற நன்மையை வைத்தே, நியாயப்பிரமாணம் அவனை மெச்சிக்கொள்கிறது. ஆனால், இதுபோன்ற நிலை புதிய உடன்படிக்கையில் இல்லை! ஒரு மனிதன் நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கும் போது, தேவனுடைய வார்த்தை அவனுடைய வெளியரங்கத்தை மாத்திரமே சோதிக்கமுடிந்தது. ஒரு மருத்துவர் மேலோட்டமாய் ஒரு நோயாளியை பரிசோதித்து பார்ப்பதைப் போலவே ஆகும். ஆனால் புதிய உடன்படிக்கையிலோ, தேவனுடைய வார்த்தை, ஒரு ஸ்கேன், அல்லது எக்ஸ்ரேயைப் போல் இருதயத்திற்குள் ஊடுருவிச் செல்கிறது.

தேவன் இப்போதும் நம்முடைய சிந்தனைகளையும், மனப்பான்மைகளையும், நோக்கங்களையும் மற்றும் யோசனைகளையும் குறித்து அதிக அக்கறை உள்ளவராக இருக்கிறார். சில சமயங்களில் வெளிப்பிரகாரமாய் நல்லவர்களாய் தோற்றமளிப்பவர்கள் 'உள்ளே' 'பொல்லாதவைகள்' நிறைந்திருக்கமுடியும். சிலர் வெளியே ஆரோக்கியமாய் தோன்றினாலும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் உள்ளே இருக்கக்கூடும்! நீங்கள் இன்று தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது, உங்கள் ஜீவியத்தின் வெளிப்பிரகாரமான பாவங்களை மாத்திரமே உணர்த்துவிக்கப்பட்டால், தேவனுடைய வார்த்தை உங்களுக்குச் சொல்ல விரும்பிய, முழுவதையும் நீங்கள் கேட்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. ஆகவே “தேவனுடைய வார்த்தை, என்னுடைய இருதயத்திலுள்ள யோசனைகளையும் நோக்கங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறதா?" என்ற கேள்வியை நீங்கள் கேட்டு சோதித்தறிவது எப்போதும் நல்லது! இங்கு 'உங்கள் இருதயமே' முக்கியத்துவப்படுத்தப்படுகிறது என்பதையும் 'உங்களுடைய தலையிலுள்ள அறிவை அல்ல' என்பதையும் கவனித்து மனதில் கொள்ளுங்கள். அபிஷேகத்தோடு பிரசங்கிக்கப்படும் தேவனுடைய வார்த்தைகள் உங்கள் மனதை ஊடுருவச் சென்று, உங்கள் இருதயத்திற்குள் வாசம் செய்யும் அந்தரங்க சிந்தைகளையும் நோக்கங்களையும் உங்களுக்கு வெளிப்படுத்தும்!

1கொரிந்தியர் 14:25-ம் வசனத்தில் அபிஷேகிக்கப்பட்ட பிரசங்கம் கொண்டு வரும் விளைவைக் குறித்து வாசிக்கிறோம். அங்கு, ஜனங்களின் இருதயங்கள் வெளிப்படுத்தப்பட்டு, தேவன் இந்த கூட்டத்தில் மெய்யாகவே இருக்கிறார் என சிரம் தாழ்த்தி அறிக்கை செய்வார்கள்! அதுபோலவே, ஒரு தேவ மனிதனோடு நீங்கள் உரையாடும் போது, அவர் பேசிடும் அபிஷேகிக்கப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு தீர்க்கதரிசன வார்த்தைகளாய் அமைந்துவிடும்! அபிஷேகிக்கப்பட்ட வார்த்தைகள், 'தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைப் போலவே' உங்கள் யோசனைகளையும் இருதயத்தின் நோக்கங்களையும் வெளிப்படுத்தி காண்பித்து விடும்! நீங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்திட விரும்பினால், கருக்குள்ள பட்டயம் உங்கள் இருதயத்திலும் உங்கள் நாவிலும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்குப் பதிலாக, மனுஷர்கள் ஏற்று கொள்ளும் விதமாய் அவர்களைப் பிரியப்படுத்தும் ‘பாலிஷ்' வார்த்தைகளைப் பேசி உங்கள் பட்டயத்தின் கருக்கை ஒரு போதும் மழுங்கச் செய்துவிடாதீர்கள்! இவ்வாறு நீங்கள் செய்வது, எக்காலத்தும் ஜனங்களுக்கு நன்மை செய்வதாய் இருக்காது! ஏனென்றால் தேவனுடைய வார்த்தை எங்கு செல்லவேண்டுமோ அந்த இடத்தை' தேவனுடைய வார்த்தை ஊடுருவிப் போக முடியவில்லை! ஒரு மாம்ச துண்டை, மழுங்கிய கத்தியால் வெட்டுவதற்கு நீங்கள் முயற்சித்திருக்கிறீர்களா? நீங்கள் வெட்டிக்கொண்டே இருந்தாலும், அந்த மாம்ச துண்டோ வெட்டப்படாமலே இருக்கும். ஒத்தவேஷம் தரிக்கும் ஒரு பிரசங்கி தேவனுடைய வார்த்தையை மழுங்க செய்கிறபடியினால், செய்தியின் முடிவில் “ஒருவருக்கும் தேவனுடைய வார்த்தை சென்றடையவில்லை” என்பதையே காண்பீர்கள்!

தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயமாயிருக்கிறது. முதலாவதாக, அந்த பிரசங்கி, அந்த தேவ வார்த்தை அவருடைய சொந்த இருதயத்திற்குள் உருவச் சென்று, அவருடைய யோசனைகளையும், நோக்கங்களையும் வெளிப்படுத்தும்படி அனுமதித்திருக்க வேண்டும். அதற்குப்பிறகே, இரண்டாவதாக தேவனுடைய வார்த்தை, ஜனங்களின் இருதயங்களை ஊடுருவிச் சென்று திறக்கமுடியும். எனவே, தேவனுடைய வார்த்தை உங்கள் இருதயங்களில் முதலாவதாக ஊடுருவச் சென்றிருக்காவிட்டால், அந்த தேவ வார்த்தையை ஒருபோதும் பிரசங்கிக்காதீர்கள். அநேக பிரசங்கிகள், தேவனுடைய வார்த்தையைக் கொண்டு தங்களை நியாயந்தீர்த்துக் கொண்டதில்லை! அவர்களோ, பிறரை மாத்திரமே நியாயந்தீர்க்கிறார்கள். தேவனுடைய வார்த்தை நம் உள்நோக்கங்களைக்கூட ஊடுருவச் சென்று நியாயந்தீர்த்திடமுடியும். இவ்வாறு, நாம் தேவனுடைய வார்த்தையிலுள்ள ஆவியானவரின் சத்தத்திற்கு தொடர்ச்சியாக கேட்பவர்களாயிருக்க வேண்டும். அதன்முடிவாக ஒரு பூரணமான சுத்த இருதயம் நமக்கு உண்டாகும்.... அது ஏனென்றால், நம்முடைய யோசனைகளும், இருதயத்தின் நோக்கங்களும் தொடர்ச்சியாக நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, நம்மை நாமே கழுவிக் கொள்வதனாலேயே ஆகும். ஒவ்வொரு விசுவாசியும், இவ்வாறாகவே ஒவ்வொரு நாளும் ஜீவித்திட வேண்டும். அன்று இஸ்ரவேலர்கள், அனுதினமும் மன்னாவை வனாந்தரத்தில் பெற்று கொண்டதைப்போல, நாமும் தேவனுடைய அபிஷேகிக்கப்பட்ட வார்த்தைகளை, அவரிடமிருந்து ஒவ்வொரு நாளும் பெற்றுக் கொள்ள வேண்டும்.