“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று எபிரேயர் 4:12ல் வாசிக்கிறோம். தேவனுடைய வார்த்தையானது ஒரு பட்டயத்தைப் போல நம்முடைய இருதயத்திற்குள் ஊடுருவி, நம்முடைய நினைவுகளையும் நம்முடைய யோசனைகளையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. புதிய உடன்படிக்கையில் (எபிரேயர் புத்தகம் புதிய உடன்படிக்கையை வலியுறுத்துகிறது) இருதயத்தின் நினைவுகளும் யோசனைகளும் தான் அதிக முக்கியமானது. ஆனால் பழைய உடன்படிக்கையின் கீழ், பரிசுத்த ஆவியானவர் தங்களுக்குள்ளே வாசம் பண்ணுகிறவராய் இஸ்ரவேலருக்கு இல்லாத படியினால், பொல்லாத நினைவுகளும் யோசனைகளும் சீரிய முறையில் (serious) கருதப்படவில்லை. பொல்லாத யோசனைகளையும் நினைவுகளையும் உடைய மனிதனை வெளியரங்கப்படுத்தவோ தண்டிக்கவோ நியாயப்பிரமாணத்தினால் கூடாமற்போயிற்று. வெளிப்புறமாக எல்லாவற்றையும் மனிதன் நேர்த்தியாகச் செய்துகொண்டிருக்கும் மட்டும், அவனை நியாயப்பிரமாணம் மெச்சிக்கொள்ளும். ஆனால் புதிய உடன்படிக்கையில் அப்படி அல்ல. ஒரு மருத்துவர் மேலோட்டமாக ஒரு நோயாளியைப் பரிசோதிப்பதைப் போல, மனிதன் நியாயப்பிரமாணத்தின் கீழ் இருந்தபொழுது தேவனுடைய வார்த்தையானது அவனை வெளிப்பிரகாரமாக மட்டுமே சோதித்தது. ஆனால் புதிய உடன்படிக்கையில், ஒரு ஸ்கேன் (scan) அல்லது ஒரு எக்ஸ்ரே (X-ray) போலத் தேவனுடைய வார்த்தை இருதயத்திற்குள்ளே ஊடுருவிச் செல்லுகிறது. நம்முடைய யோசனைகளையும், மனப்பான்மைகளையும், நோக்கங்களையும், நினைவுகளையும் குறித்து தேவன் இப்பொழுது அதிக அக்கறைக் காட்டுகிறார். அநேக ஜனங்கள் வெளிப்புறத்தில் ஆரோக்கியமாகக் காணப்பட்டாலும், உட்புறத்தில் புற்றுநோயைப் போன்ற கொடிய வியாதியைக் கொண்டிருப்பது போலவே, வெளிப்புறத்தில் எல்லாம் நன்றாகக் காணப்பட்டாலும் சிலவேளைகளில் உட்புறத்தில் கொடிய தீமை இருக்கக்கூடும்.
எனவே, இன்று நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்பொழுது உங்கள் வாழ்க்கையிலுள்ள வெளிப்புறமானப் பாவங்களைக் குறித்து மட்டுமே உணர்வடைகிறவர்களாக இருப்பீர்களானால், தேவன் உங்களிடத்தில் சொல்ல விரும்புகிற எல்லாவற்றையும் நீங்கள் கேட்கவில்லை என்பதையே அது சுட்டிக்காட்டுகிறது. “தேவனுடைய வார்த்தையானது என் இருதயத்தின் யோசனைகளையும் நினைவுகளையும் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறதா?” என்ற இந்த கேள்வியினால் உங்களை நீங்களே எப்பொழுதும் சோதித்துப் பாருங்கள். இங்கே வலியுறுத்துதல் தலை அறிவுக்கு கொடுக்கப்படாமல் இருதயத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதை கவனியுங்கள். எல்லா அபிஷேகம் பண்ணப்பட்டப் பிரசங்கத்திலும், தேவனுடைய வார்த்தையானது உங்கள் மனதின் வழியாக இருதயத்திற்குள் நுழைந்து, உங்கள் அந்தரங்கத்திலுள்ள யோசனைகளையும் நினைவுகளையும் உங்களுக்கு வெளிப்படுத்தும்.
அபிஷேகம் பண்ணப்பட்ட பிரசங்கத்தினால் வரும் விளைவுகளை பற்றி 1 கொரிந்தியர் 14:25ல் நாம் வாசிக்கிறோம். ஜனங்களுடைய இருதயத்தின் யோசனைகள் வெளியரங்கமாகி, அவர்கள் முகங்குப்புற விழுந்து தேவன் மெய்யாய் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார் என்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். நீங்கள் தேவ பக்தியுள்ள ஒரு மனிதனோடு உரையாடும் சமயத்தில், அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தையை உங்களிடத்தில் பேசும்பொழுதும் இதே காரியம் நடக்கும். தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைப் போல இருக்கிறபடியால், அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை எப்பொழுதும் இருதயத்தின் யோசனைகளையும் நினைவுகளையும் வெளிப்படுத்தும்.
நீங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்ய விரும்பினால், பட்டயம் உங்கள் இருதயத்திலும் வாயிலும் கூர்மையாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். மனிதர்களுக்கு அதிக ஏற்புடையதாய் இருப்பதற்காக, தந்திரமாய் பளபளப்பான வார்த்தைகளினால் தேவனுடைய வார்த்தையை மிருதுவாக்கி, பட்டயத்தின் விளிம்பை ஒருபோதும் மழுங்கச் செய்யாதீர்கள். அது மனிதர்களுக்கு எந்த நன்மையையும் செய்யாது, ஏனெனில் அது ஊடுருவி எங்கே செல்ல வேண்டுமோ அங்கே செல்லாது. மழுங்கிய கத்தியால் நீங்கள் மாமிசத்தை அறுக்க முயன்றதுண்டோ? நீங்கள் அறுத்துக் கொண்டே இருந்தாலும் மாமிசம் அறுபடாது. தேவனுடைய வார்த்தையின் கூர்மையைச் சமரசம் செய்கின்ற ஒரு பிரசங்கியார், அவருடைய செய்தியின் முடிவில் ஒருவரும் தேவனுடைய சத்தத்தை கேட்கவில்லை என்பதைக் கண்டுகொள்வார். தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயம். முதலாவது தன்னுடைய இருதயம் அறுத்துத் திறக்கப்பட்டு, தன்னுடைய யோசனைகளையும் நினைவுகளையும் வெளிப்படுத்த பிரசங்கியார் அதனை அனுமதிக்க வேண்டும்! அப்பொழுது மாத்திரமே அதை மற்றவர்களுடைய இருதயத்தை அறுத்து திறக்க உபயோகப்படுத்த முடியும். தேவனுடைய வார்த்தை முதலாவதாக உங்களுடைய இருதயத்தை ஊடுருவிச் செல்லவில்லை என்றால், அதைப் பிரசங்கிக்காதீர்கள். அநேக பிரசங்கிமார்கள் தேவனுடைய வார்த்தையினால் தங்களை தாங்களே ஒருபோதும் நியாயந்தீர்க்கிறதில்லை. அவர்கள் மற்றவர்களை மாத்திரமே நியாயந்தீர்க்கிறார்கள்.
தேவனுடைய வார்த்தை ஊடுருவிச் சென்று நம்முடைய நோக்கங்களையும் நியாயந்தீர்க்கிறது. நாம் தொடர்ச்சியாகத் தேவனுடைய வார்த்தையிலுள்ள ஆவியானவரின் சத்தத்திற்கு எப்பொழுதும் நம்மைத் திறந்துகொடுப்போமானால், இறுதியாக நாம் ஒரு முற்றிலும் சுத்தமான இருதயத்தைப் பெற்றிருப்போம். ஏனெனில் இருதயத்தின் யோசனைகளும் நினைவுகளும் தொடர்ந்து நமக்கு வெளிப்படுத்தப்பட்டு நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு விசுவாசியும் அனுதினமும் இப்படி வாழ வேண்டும். வனாந்தரத்தில் அனுதினமும் மன்னாவை இஸ்ரவேலர்கள் பெற்றுக்கொண்டதுபோல நாமும் தேவனுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையை ஒவ்வொரு நாளும் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.