WFTW Body: 

சிறு குழந்தைகளைப் போல இருப்பவர்களுக்கு ஜெபம் எளிதாயிருக்கும், ஏனெனில் ஜெபம் என்பது நம்முடைய உதவியற்ற நிலைமையையும் நம்முடைய இயலாமையையும் தேவனிடம் ஒத்துக்கொள்வதாகும். புத்திசாலித்தனமான பெரியவர்கள் அதை ஒத்துக்கொள்வது கடினம். அதனால்தான் நாம் சிறு குழந்தைகளைப் போல இருக்க வேண்டும் என்று இயேசு கூறினார். நம்முடைய புத்திசாலித்தனத்தையும் அறிவையும் எவ்வளவு அதிகமாகச் சார்ந்திருக்கிறோமோ, அவ்வளவு குறைவாக நாம் ஜெபிப்போம், மேலும் நம்முடைய புத்திசாலித்தனத்தால் புரிந்துகொள்ள முடியாத வகையில் தேவன் ஏன் காரியங்களைச் செய்கிறார் என்று அவ்வளவு அதிகமாகக் கேள்வியும் எழுப்புவோம்.

தேவன், நம்மிடம் "புரிந்துகொள்ளுதலின் அடிப்படையிலான கீழ்ப்படிதலைக்" கேட்காமல் "விசுவாசத்தினால் உண்டாகும் கீழ்ப்படிதலையே" (ரோமர் 1:5) கேட்கிறார். நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை ஆதாம் ஏன் சாப்பிடக் கூடாது என்பதற்கு தேவன் ஆதாமிடம் எந்த காரணத்தையும் கூறவில்லை. தேவன் தன்னை நேசித்தார் என்பதையும், எனவே தேவனுடைய கட்டளைகள் (காரணத்தால் விளக்க முடியாதபோதும்) அவனுக்கு மிகச் சிறந்தவை என்பதையும் ஆதாம் அறிந்தால் போதும். "உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு" (நீதிமொழிகள் 3:5). எனவே ஆதாம் தோல்வியுற்றபோது, ​​அது பிரதானமாக தேவனுடைய அன்பு மற்றும் அவருடைய ஞானத்தின் மீதான விசுவாசத்தின் தோல்வியாகும். இங்குதான் நாமும் தோல்வி அடைகிறோம்.

தேவன் நம்மை அதிகமாய் நேசிக்கிறார் என்றும், நமக்கு எது சிறந்தது என்று நாம் அறியக்கூடியதைவிட அவர் அதிகமாய் அறிந்திருக்கிறார் என்றும், பூமியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தும் அளவுக்கு அவர் வல்லவர் என்றும் நாம் விசுவாசித்தால், நாம் மகிழ்ச்சியுடன் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம், இனிமேல் நம் வாழ்வில் அவருடைய சித்தத்தை மட்டும் செய்யுமாறு எல்லாவற்றையும் அவரிடம் ஒப்புக்கொடுப்போம், உடனடி பதில்கள் எதுவும் கிடைக்காதபோதும் ஜெபிப்போம், எந்தக் கேள்வியும் இன்றி, அவர் நமக்குக் கட்டளையிடும் அனைத்திற்கும் கீழ்ப்படிவோம். தேவனுடைய ஞானத்தின்மீதும், அன்பின்மீதும் வல்லமையின்மீதும் நமக்கு விசுவாசமில்லையென்றால், இவற்றில் எதையுமே நாம் செய்யமாட்டோம்.

நாம் சிறு குழந்தைகளைப் போல் இருந்தால், நாம் எளிய விசுவாசத்துடன் தேவனிடம் வந்து அவருடைய ஆவியின் நிறைவை நம் இருதயங்களில் எளிதாகப் பெறலாம் (லூக்கா 11:13). நமக்குத் தேவையானதெல்லாம் (தேவனிடத்திலும் மனுஷரிடத்திலும் சகல பாவங்களையும் ஒத்துக்கொண்டு) ஒரு தெளிவான மனச்சாட்சியும், ஆவியின் நிறைவிற்கான பசியும் தாகமும், நம் வாழ்வில் நாம் அறிந்திருக்கும் ஒவ்வொரு பகுதியையும் அவரிடம் முழுமையாக ஒப்படைத்தலும், நம்முடைய அன்பான தகப்பன் நாம் கேட்பதை நிச்சயமாய்க் கொடுப்பார் என்ற நம்பிக்கையுமே. அப்பொழுது நாம் தேவனிடத்தில் கேட்டு, நமக்கு உடனடியான உணர்ச்சிகளோ உணர்வுகளோ இல்லாத போதும், தேவன் நாம் கேட்டதை நமக்குக் கொடுத்துவிட்டார் என்ற நம்பிக்கையோடு நாம் இருக்கலாம். வெளிப்புற வெளிப்பாடுகள் பின்னர் வரும். எனவே சிறு குழந்தையைப் போல் இருங்கள்.

இரட்சிப்பை விசுவாசத்தினால் பெற்றுக் கொள்வது போல ஜெயத்தையும் பெற்றுக் கொள்ள முடியாதா?

1யோவான் 5:4 சொல்கிறது "நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்" - "இந்த உலகம்" என்ற வார்த்தை "கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை" என்று 1யோவான் 2:16 -இல் விளக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இவையெல்லாவற்றையும் நாம் ஜெயிப்பது விசுவாசத்தினாலே தான் என்பதை அது நமக்கு போதிக்கிறது. ஆனால் விசுவாசம் என்பதற்கு என்ன அர்த்தம்? நம்முடைய ஆள்த்தன்மை முழுவதும் தேவனையே சார்ந்து, அவருடைய பூரண அன்பிலும், ஞானத்திலும், வல்லமையிலும் முழுமையான நம்பிக்கை வைப்பதுதான். யோவான் 1:12 தெளிவுப்படுத்துவதுபோல, விசுவாசிப்பதானது பெற்றுக்கொள்வதற்குச் சமமாகும். இது அறிவு சார்ந்த விசுவாசம் அல்ல. எனவே தேவனிடத்தில் நம்பிக்கை வைப்பது என்பது நமக்கான அவருடைய சித்தமே நமக்கு மிகச் சிறந்தது என ஏற்றுக்கொள்வது தான். அதாவது நம்முடைய சுய சித்தத்திற்கு மறுப்பு தெரிவிப்பதை நாம் தெரிந்துகொள்கிறோம். "மாம்சத்தை சிலுவையில் அறைவதன்" (கலாத்தியர் 5:24) பொருள் இது தான். (சுய சித்தத்திற்கு மறுப்பு தெரிவிப்பதாகிய) இதைச் செய்வதற்கு நமக்கு கிருபை தேவையாயிருக்கிறது.

சகலமும் விசுவாசத்தினால் தான் பிறக்கிறது. தேவனுடைய சித்தம்தான் மிகச்சிறந்தது என்று நாம் விசுவாசிக்காவிட்டால் நம்முடைய சுய சித்தத்தை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கக்கூட விரும்பமாட்டோம். உதாரணத்திற்கு, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த சூழ்நிலையில் இயேசு என்ன செய்வாரோ, அதாவது, உபயோகமற்ற காட்சிகள், அல்லது பாலியல் இச்சையைத் தூண்டும் நிகழ்ச்சிகளையும் மற்றும் திரைப்படங்களையும் பார்க்காமலிருப்பது, அது தான் மிகச்சிறந்தது என்று நம்புகிறீர்களா? அல்லது உங்கள் இச்சையைப் பிரியப்படுத்துவது தான் மிகச்சிறந்தது என்று நம்புகிறீர்களா? அது, நீங்கள் தேவனுடைய சித்தம் தான் உங்களுக்கு மிகச்சிறந்ததாய் இருக்கும் என்பதை நம்புகிறீர்களா என்பதைப் பொருத்தது. விசுவாசம் இல்லாமல் ஜெயமும் இல்லை.

நீங்கள் பின்பற்ற வேண்டிய இயேசுவையே எப்பொழுதும் நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மாம்சம் பெலவீனமானது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். இயேசு தொடர்ந்து பிதாவை நோக்கி உதவிக்காய்க் கதறினார். நீங்களும் அதையே செய்ய வேண்டும். இயேசுவின் நாமம், நீங்கள் எப்பொழுதெல்லாம் தாக்கப்படுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் அதற்குள் ஓடி உங்களை இளைப்பாற்றிக் காத்துக் கொள்ளக்கூடிய பலத்த துருகம் (நீதிமொழிகள் 18:10/) என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பூமியில் எந்த இடத்திலும் என்ன விதமான கஷ்டம் உங்களுக்கு நேர்ந்தாலும் இயேசுவின் நாமத்தில் உங்கள் பிதாவினிடத்தில் நீங்கள் எதுவேண்டுமானாலும் கேட்கலாம்.