WFTW Body: 

லூக்கா 5:37,38 வசனங்களில், “புதுரசமானது புது துருத்திகளில் வார்த்து வைக்கப்படவேண்டும்” என்றே இயேசு கட்டளையிட்டார்! இந்த புது ரசம் “இயேசுவின் ஜீவனை” (Life of Jesus) அல்லது அவருடைய வாழ்க்கையைக் குறிக்கிறது. புது துருத்தி, இயேசு கட்டுவதாகிய அவரது “சபையைக்” (Church) குறிக்கிறது. இயேசு வருகை தந்த கானா ஊர் கலியாணத்தில் ‘பழைய திராட்ச ரசம்' தீர்ந்துப்போனது! இந்த பழைய ரசம் “மனுஷீக முயற்சியால்” அனேக வருஷங்களாகச் செய்யப்பட்டும், தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத ஒன்றாய் இருந்ததற்கு மாதிரியாகவே இருக்கிறது. இது பழைய உடன்படிக்கையில் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்ட ஜீவியத்திற்கே உவமானமாக இருக்கிறது! ஆம், அந்த பழைய ரசம் இப்போது தீர்ந்து போய் கொண்டிருந்தது. ஆண்டவர் நமக்குப் புதுரசத்தைக் கொடுப்பதற்கு பழைய ரசம் முற்றிலும் காலியாகும் வரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது.

நம்முடைய தனி வாழ்க்கையில், திருமண ஜீவியத்தில், நம் சபை ஜீவியத்தில், பழைய ரசம் முற்றிலுமாய் தீர்ந்துவிட்டதா? அப்படி யென்றால், “இதுதான்” நாம் தேவனுடைய முகத்தைத் தேடி, நம்முடைய தேவையை அறிக்கை செய்ய வேண்டிய சரியான நேரம்! ஆம், அவர் ஒருவரே நமக்குப் புது ரசத்தைத் தரமுடியும்! கானாவூரில் கண்ட புது திராட்ச ரசமானது மனுஷீக முயற்சியால் உருவானது இல்லை. அது ‘தேவனால் உண்டான' இயற்கைக்கு அப்பாற்பட்ட கிரியையாய் இருந்தது! இதைப்போலவே நம்முடைய “ஜீவியத்திலும்” இப்போது இருக்க முடியும். “அவரே” தன்னுடைய பிரமாணங்களை, நம்முடைய இருதயத்திலும் மனதிலும் எழுதி.... அவருடைய சித்தம் விரும்பவும், அந்த அவருடைய பரிபூரண சித்தம் செய்யவும் செய்வார் (எபிரேயர் 8:10; பிலிப்பியர் 2:13), “அவரே” நம்முடைய இருதயங்களை விருத்தசேதனம் செய்து, அவரை நேசிக்கவும், அவருடைய பிரமாணங்களில் நாம் நடக்கவும் செய்திடுவார் (உபாகமம் 30:6; எசேக்கியேல் 6:27). இந்த அவருடைய கிரியையே, கானாவூரில் அவர் புது திராட்சரசம் உருவாக்கின கிரியைக்கு ஒப்பானதாகும்! “கிருபை”யின் பொருளும் இதுதான்! நம் ஜீவிய காலம் முழுவதும் நாம் முயற்சித்தாலும் நமக்குள் “கிறிஸ்துவின் ஜீவியத்தை” நாம் ஒருபோதும் அடையவே முடியாது. நாமோ, நம் சிலுவையை அனுதினமும் சுமந்து, நம்முடைய சுய அனுதாபம், சுய சித்தம், சுய உரிமைகள், சுய மதிப்பு இவைகளுக்கு மரிக்கும்படியாக நம் சரீரத்தில் எப்பொழுதும் “இயேசுவின் மரணத்தை” (Dying of Jesus) சுமப்போமென்றால்.... புது ரசமாகிய “இயேசுவின் ஜீவன்” நம்முடைய வாழ்க்கையில் விளங்கும்படி தேவன் முழு நிச்சயமாய் வாக்களிக்கிறார் (2கொரிந்தியர் 4:10).

புதுரசத்தைச் சுதந்தரிக்க, நாம் பாவத்திற்கு எதிராய் நம் ஜீவியத்தில் போராட வேண்டும்! ஆனால் புது துருத்தியை சுதந்தரிக்க, தேவ வசனத்தை விருதாவாக்கிய ‘மனுஷீக' மார்க்க பாரம்பரியங்களுக்கு எதிராய் போராட வேண்டும்! இன்று அனேகருக்குப் பாவத்திலிருந்து விடுபடுவதைவிட, மனுஷீகப் பாரம்பரியங்களிலிருந்து விடுபடுவதற்கே கஷ்டமாயிருக்கிறது! எப்படியாயினும், “பலவந்தம்” செய்பவர்கள் மாத்திரமே பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ள முடியும்! (மத்தேயு 11:12). 'பலவந்தம் செய்யாமல்' மனுஷீகமான மூட மார்க்க பாரம்பரியங்கள் அகற்றப்பட முடியவே முடியாது!

கிறிஸ்தவர்களாகிய நாம், யூத பழைய துருத்தியை அப்புறப்படுத்தி, நம் சபைகளில் புது துருத்தியையே வைத்திருக்கிறோம் என்று நாமாக எண்ணிக்கொள்ளலாம்! ஆனால் கிறிஸ்தவ சபை என்று சொல்லிக் கொள்ளும் எந்த சபையையும் “அது மெய்யாகவே கிறிஸ்தவ சபைதானா?” என நாம் கவனித்துப் பார்க்க வேண்டியது நம் பொறுப்பாகும்! அவ்வாறு நீங்கள் உண்மையான பொறுப்போடு கண்டால், ஏராளமான பழைய உடன்படிக்கையின் குணாதிசயங்களையே இன்றைய பெரும் பாலான சபைகளில் காணமுடியும்! அவ்வித பழைய துருத்தி குணாதிசயங்கள் அனேகமாயிருந்தாலும், குறிப்பாக மூன்று மட்டும் உதாரணமாக இங்கு பார்ப்போம்:

முதலாவதாக, இந்த யூதர்களுக்கு ‘லேவியர்கள்' என்ற விசேஷித்த கோத்திரம் இருந்தது. இவர்களே 'ஆசாரியர்களாக' (Priests) மார்க்க சம்பந்தமான ஊழியங்களைச் செய்தார்கள். ஆம், அன்று எல்லா யூதர்களுமே ஆசாரியர்களாய் இருக்க முடியாது! ஆனால், புதிய உடன் படிக்கையின்படியோ, விசுவாசிகள் அனைவருமே ஆசாரியர்களாய் இருந்திட முடியும் என நாம் காண்கிறோமே! (1பேதுரு 2:5; வெளி 1:6), அனேக விசுவாசிகள், எழுத்தின்பிரகாரமாக இந்த சத்தியத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும்கூட, உண்மையாகவே நடைமுறையில் இவ்வசனங்களை செயல்படுத்தவில்லை! ஆம், கிறிஸ்தவ சபை குழுக்களில், சரியாக இந்தப் பழைய லேவியர்களைப் போலவே தேவஜனங்களை ஆராதனைக்கு நடத்தும் பாதிரிமார்கள் (Priests), குருமார்கள், பாஸ்டர்கள் அல்லது தேவ ஊழியர்கள் என லேவியரைப் போன்ற “முழுநேர ஊழியர்கள்தான்” இருக்கிறார்கள்! இந்தக் குறிப்பிட்ட 'லேவியர்கள்' மாத்திரமே மனந்திரும்புகிறவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவோ, அப்பம் பிட்கவோ முடியும்! அது மாத்திரமல்ல, இந்த 'லேவியர்கள்' தேவ ஜனங்களால் தசமபாகம் (Tithes) செலுத்தியும் போஷிக்கப்படுகிறார்கள்! கூட்டங்களில், இந்த “லேவியர்கள்" மாத்திரமே தனி ஆதிக்கம் செய்து, புது துருத்தியாகிய “கிறிஸ்துவின் சரீரமான” ஊழியத்திற்கு இடம் தருவது இல்லை! இவ்விதமான, ஒரே பிரசங்கியின் நர்த்தனம் (A one preacher show) பழைய துருத்தியின் அம்சமேயாகும். இன்று, புதிய உடன்படிக்கையிலோ எல்லா விசுவாசிகளுமே புதுரசத்தைப் பானம் பண்ணி, எல்லோருமே பரிசுத்தாவியின் அபிஷேகத்தையும், வரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்! ஆம், இரண்டு அல்லது மூன்று தீர்க்கதரிசிகள் (மூப்பர்கள்) கூட்டத்தை ஆரம்பிக்க, ஒன்று அல்லது இரண்டு பேராக வியாக்கியானத்தோடு அந்நியபாஷைகள் பேச, ஒவ்வொரு விசுவாசியும் தடையின்றி தீர்க்கதரிசனம் சொல்ல... இவ்விதமாய் சபையானது பக்திவிருத்தியடைந்து ஊன்ற கட்டப்படுகிறது! இதுதான் வேதம் கற்பிக்கும் “புதிய துருத்தி” - New Wineskin (1கொரிந்தியர் 14:26-31). 1கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தில், புது ரசமாக, மெய்கிறிஸ்தவ அன்பின் ஜீவியம் விவரிக்கப்பட்டுள்ளது! 1கொரிந்தியர் 12, 14-ம் அதிகாரங்களில் கிறிஸ்துவின் சரீரமான சபையாகிய புது துருத்தியின் விளக்கம் விவரிக்கப்பட்டுள்ளது! ஆனால் இன்று எத்தனை விசுவாசிகள் இவ்வாறு தேவன் விரும்பும் வழிகளில் கிரியை செய்திட ஆயத்தமாயிருக்கிறார்கள்? அந்தோ, பரிதாபம்! வெகுசிலரே! இன்றைய திரளான விசுவாசிகள் தங்கள் பழைய துருத்திகளிலும், தங்களின் கூலியைப் பெறும் (தசம பாகம் பெறும்) “லேவியர்களிலுமே” திருப்தி அடைந்து தேங்கி விட்டார்கள்.

இரண்டாவதாக, பல்வேறு விஷயங்களில் தேவசித்தம் அறிந்து கொள்ள, யூதர்கள் தங்களுக்கென்று அந்நாட்களில் தீர்க்கதரிசிகளைப் பெற்றிருந்தார்கள். ஏனெனில் பழைய ஏற்பாட்டு நாட்களில் அந்த தீர்க்கதரிசிகள் மாத்திரமே “தேவ ஆவியைப்” பெற்றிருந்தனர். ஆனால் புதிய உடன்படிக்கையின் தீர்க்கதரிசிகளுக்கோ, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டும்படியான, முற்றிலும் வித்தியாசமான ஊழியமே கொடுக்கப்பட்டுள்ளது (எபேசியர் 4:11,12). மேலும், இப்போது எல்லா விசுவாசிகளும் பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ள முடியுமாதலால், அவர்கள் தேவசித்தம் அறிய குறிப்பிட்ட தீர்க்கதரிசிகளிடம் செல்ல வேண்டிய அவசியம் இப்போது இல்லை!! (எபிரேயர் 8:11; 1யோவான் 2:27). இருப்பினும் இன்று அனேக விசுவாசிகள், பழைய துருத்தியின் ஜீவியமாகிய “குறிப்பிட்ட தேவ மனிதர்களிடம்” சென்று தாங்கள் என்ன செய்ய வேண்டும்? யாரைத் திருமணம் புரிய வேண்டும்? போன்ற காரியங்களை அறிந்து கொள்ள அவர்களிடம் செல்லுகிறார்கள்!

மூன்றாவதாக, யூதர்கள் ஓர் விரிவான சமுதாயத்தின் ஜனங்களாய் பரந்த தேசத்தில் பரவியிருந்தபடியால், தங்களுக்கென்று தலைமையகத்தை எருசலேமிலும், தங்கள் தலைவராக ஒரு பூமிக்குரிய மகா பிரதான ஆசாரியரையும் உடையவர்களாய் இருந்தனர். ஆனால் புதிய உடன்படிக்கையிலோ, இயேசு மாத்திரமே நமது மகா பிரதான ஆசாரியர்! இன்று, நமது ஒரே தலைமையகம் தேவனுடைய சிங்காசனமே! ஓர் நடுத்தண்டிலிருந்து ஏழு கிளைகளாய் பிரியும் பொன் குத்துவிளக்கையே அன்று யூதர்கள் பெற்றிருந்தனர் (யாத்திராகமம் 25:31,32). இதுதான் பழைய துருத்தி!

ஆனால், புதிய உடன்படிக்கையிலோ, ஒவ்வொரு ஸ்தல சபையும் ஒரு தனி குத்துவிளக்கு! “ அதனுடன் சேர்ந்து கிளைகள் (Branches) இல்லை” இதை வெளி 1:12,20 வசனங்களில் தெளிவாய் பார்க்கிறோம். இதன்படி இருந்த ஆசியா மைனரில், ஏழு ஸ்தல சபைகளும், யூதர்களின் கிளைகள் உள்ள குத்துவிளக்குபோல் அல்லாமல், ஒவ்வொன்றும் “தனித்தனி” ஏழு குத்துவிளக்குகளாகவே ஒப்பிடப்பட்டிருப்பதை காண்கிறோம்! சபைகளின் தலைவரான இயேசு, இந்த ஏழு தனித்தனி குத்து விளக்குகளின் நடுவிலேயே இன்று உலாவுகிறார்! இன்று நாம் காணும்போப்போ, தலைமை சூப்பரிண்டெண்டோ அல்லது வேறு எந்த ஸ்தாபனத்தின் தலைவரோ அந்த 7- குத்து விளக்குகள் நடுவில் காணப்படவில்லை. எந்தப் பிரச்சனைகளுக்கும் இறுதி மொழியாக அந்த 7- குத்துவிளக்குகள் சார்பாக ஒரு தலைமை மூத்த சகோதரனும் காணப்படவே இல்லை! மாறாக, ஒவ்வொரு ஸ்தல சபையும், அதினதின் ஸ்தல மூப்பர்களாலேயே (Local Elders) ஆளுகை செய்யப்பட்டது. இந்த மூப்பர்களே தங்களின் தலையாகிய ஆண்டவருக்கு நேரடி பொறுப்பாளிகள்! ஆனால் இன்றோ, நம்மைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கிறிஸ்தவர்கள், பழைய யூத துருத்தியின் அம்சமாகிய ஒரு ஸ்தாபன அமைப்புகளில் (Denominational System) சிக்கியிருக்கிறார்கள். சிலர் ஸ்தாபன பெயர் உடையவர்களாய் இருக்கிறார்கள்! சிலரோ தங்களை ஒரு ஸ்தாபனம் இல்லை என்று சொல்லிக் கொள்ள பெயரில்லாமல் இருந்தும், ஒரு ஸ்தாபனத்திற்குரிய எல்லா குணாதிசயங்களையும் உடையவர்களாகவே இருக்கிறார்கள். இவையெல்லாம் என்ன? சகலமும், பழைய துருத்திகள்!

ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு ‘கறைகள்' (Corruption) பரவாமல் தடைசெய்யவே தேவன் புது துருத்தியாகிய “ஸ்தல சபையை” நியமித்திருக்கிறார். ஒருவேளை ஆசியா மைனரில் காணப்பட்ட ஏழு சபைகளும் ஒன்றிற்கொன்று கிளைகளாய் இருந்திருக்குமென்றால், கறைபடிந்த பிலேயாமுடைய போதகமும், நிக்கொலாய் மதஸ்தருடைய போதகமும் மற்றும் யேசபேல் ஸ்திரீயின் பொய் தீர்க்கதரிசனங்களும் மற்ற எல்லா ஏழு சபைகளுக்கும் பரவியிருந்திருக்கும்! ஆனால், இவைகள் தனித்தனி குத்துவிளக்குகளாய் இருந்தபடியால், சிமிர்னாவிலும், பிலதெல்பியாவிலுமிருந்த இரண்டு சபைகள் தங்களைப் பரிசுத்தமாய் காத்துக்கொள்ள முடிந்தது! (வெளி 2:8, வெளி 3:7). எனவே, நீங்கள் கூடிவரும் ஸ்தல சபை தூய்மையாய் இருக்க வேண்டுமென்றால், பழைய துருத்தியாகிய ஸ்தாபனக் கட்டுகள் களைந்து எறியப்படுவது தவிர வேறு வழி ஏதும் இல்லை! இவ்வாறு, இன்று அனேகரை அடிமைப்படுத்தியிருக்கும் மனுஷீக பாரம்பரியமாகிய ‘பழைய துருத்தியை' எதிர்த்துப் பலவந்தம் செய்யும் அனேகரை தேவன் நம் தேசத்தில் எழுப்புவாராக! (மத்தேயு 11:12). இப்படிப்பட்ட “இந்த மேன்மையான” புதிய உடன்படிக்கையின் ஆவியைப் பருகியவர்கள், தங்கள் ஸ்தலங்களில் ஒன்றுகூடி கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டுவார்களாக!