WFTW Body: 

இயேசுவின் இரத்தத்தினால் கையொப்பம் இட்டு”, தேவன் மனிதனுடன் செய்து கொண்ட ஓர் ஒப்பந்தம்தான் புதிய உடன்படிக்கை (எபிரெயர் 13:20 - லிவிங் மொழிபெயர்ப்பு). நம்முடைய சுய-ஜீவனுடைய (Self-life) இரத்தத்தைக் கொண்டு இப்போது நாம் அதில் நம்முடைய கையொப்பத்தை இட வேண்டும். இதைத் தவிர தேவனோடு இந்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேறே எந்த வழியும் இல்லை. அநேகர், கையொப்பம் இட வேண்டிய கோட்டில் தங்கள் சுய-ஜீவனுடைய இரத்தத்தைக் கொண்டு கையொப்பம் இடாததினால் அவர்களால் ஒருபோதும் ஒரு திருப்திகரமான கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் பிரவேசிக்க முடிவதில்லை.

'வாழ்க்கையில் ஒரு முறை கூட தம்முடைய சரீரத்தைக் கொண்டு தம் சொந்த சித்தத்தைச் செய்வதில்லை' என்பதே பூமியின் வாழ்நாள் முழுவதும் தம்முடைய பிதாவோடு இயேசு கொண்டிருந்த உடன்படிக்கையாயிருந்தது (எபிரெயர் 10:5). தமது சொந்த சித்தத்தை அவர் மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, உடன்படிக்கையில் தமது சொந்த சித்தத்தின் (சிலுவையில் அறையப்படுவதன் மூலம்) “இரத்தத்தினால்” அவர் கையொப்பம் இட்டார். இப்போது அதே விதமாய் நாம் அவரோடு ஐக்கியப்படும்படி அழைக்கப்படுகிறோம். இப்பாதையில் நடப்பது என்பது சிரமமானதே அல்ல. மாறாக, நீங்கள் ஒருபோதும் வாழ்ந்திராத மிக்க மகிழ்ச்சியான (சிரமமில்லாத) ஒரு வாழ்க்கைக்குள் இது உங்களை நடத்திச் செல்லும். நாம் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளும்போதும், ஒன்று சேர்ந்து அப்பம் பிட்கும்போதும் இந்த உடன்படிக்கைக்குத் தான் நாம் சாட்சிகொடுக்கிறோம்.

லூக்கா 5:35-ல் இயேசு கூறிய புதுரசமானது, புதிய உடன்படிக்கையின்கீழ் நாம் பங்கெடுக்கக் கூடிய தேவனுடைய ஜீவனைக் குறிக்கிறது. பழையரசம் என்பது நியாயப்பிரமாணத்துக்குக்கீழான, சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஒரு வாழ்க்கை. ஏதேன் தோட்டத்தில் இருந்த இரண்டு மரங்களும் இந்த இரண்டு உடன்படிக்கைகளுக்குக் கீழ்ப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கின்றன. (மார்க்கக் கண்மூடிக் [cult] குழுக்களில் காணப்படுவது போல்) பல சட்டதிட்டங்களைக் கடைபிடிப்பதன்மூலம், (தோற்றத்தில் உத்தமமாய்க் காணப்படுகிற) பாவத்திலிருந்து விலகி வாழும் ஒரு வாழ்க்கையானது, நன்மை தீமை அறியத்தக்க மரத்தைக்குறித்து தேவன் ஆதாமை எச்சரித்தது போன்ற மரணத்திற்கு நேராய் நடத்திவிடும். மெய்யான கிறிஸ்தவமானது, நாம் இயேசுவின் ஜீவனில் நம் உட்புறத்தில் பங்குபெறுவதிலிருந்து புறப்பட்டுவரும் ஒரு வாழ்க்கையாகும். அந்த ஜீவன், சில காரியங்கள் அசுத்தமானவையென்றும் வேறு சில காரியங்கள் சுத்தமானவையென்றும் நம்மை எச்சரிக்கிறது. தெரிவுசெய்யும் சுதந்திரம் (freedom of choice) நமக்கு உண்டு. ஆனால், நாம் காரியங்களைத் தவிர்ப்பதற்குக் காரணம், (“தொடாதே, ருசி பாராதே” - கொலோசெயர் 2:21 - என்பதுபோன்ற) எவ்வித சட்டத்திற்கும் நாம் கட்டுப்பட்டதினாலோ அல்லது மற்ற மனிதர்களை கவருவதற்காகவோ அல்ல.

புது துருத்தி கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கிறது. நாம் அனுதினமும் நம்முடைய சரீரத்தை ஜீவபலியாக அவருக்குப் படைத்து, இயேசுவின் பூமிக்குரிய நாட்களில் அவருடைய சரீரத்தில் ஆவியானவர் நடப்பித்த அதே கிரியை நமக்குள்ளும் நடப்பிக்க பரிசுத்த ஆவியினால் நம்மை நிரப்பும்படி அவரிடத்தில் கேட்கும்போது கிறிஸ்துவின் சரீரம் கட்டப்படுகிறது. இதே பாதையில் நடந்துகொண்டிருக்கும் மற்றவர்களோடு இது நம்மை ஒன்றாக்குகிறது. இவ்விதமாக கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக, சபையாக, நாம் கட்டப்படுகிறோம். சபையில் நாம் ஒருவரையொருவர் கட்டியெழுப்பத் தேவையான வரங்களை அவர் நமக்கு அருளிச்செய்கிறார்.

இவ்விதமாக சாத்தான் நம் கால்களின் கீழே நசுக்கிப் போடப்படுகிறான் (ரோமர் 16:20). சாத்தான் நம்மைக் குற்றப்படுத்தவோ அல்லது குற்ற உணர்வடையச் செய்யவோ அவனுக்கு நாம் இடங்கொடுக்கும்போது, அவன் நம் தலையின்மேல் உட்கார்ந்து விடுகிறான். ஆனால் அவனுக்குரிய இடமோ நம் காலின் கீழே தான்.

பாவம் என்பது தேவனுடைய மகிமையை இழப்பது என்று (ரோமர் 3:23 -ல்) வரையறுக்கப் படுகிறது. தேவனுடைய மகிமை இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் காணப்பட்டது. ஆகையால், இயேசுவுடன் ஐக்கியமாய் இருந்து நாம் செய்ய முடியாத எந்தக் காரியமும் பாவம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பழைய உடன்படிக்கையின்கீழ் (காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தத்தினால்) பாவத்தை மூட மட்டுமே முடிந்தது. ஆனால் பாவத்தை நீக்க முடியவில்லை (சங்கீதம் 32:1,2). அதைக் கழுவவோ நீக்கிப்போடவோ முடியவில்லை. வருடந்தோறும் பாவத்தைக் குறித்த நினைவுகூருதல் இருந்தது. (எபிரெயர் 10:3,4). புதிய உடன்படிக்கையின்கீழ் நம்முடைய பாவங்கள் எல்லாம் இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுவது மட்டுமல்லாமல், தேவன் அவற்றைத் தாம் இனி நினைவுகூருவதுமில்லை என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் (எபிரெயர் 8:12). இவ்விரு உடன்படிக்கைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.