WFTW Body: 

உன்னதப்பாட்டு 1:4 -ல், மணவாட்டியானவள் தனது நேசரை “என் ராஜா” என அழைப்பதைப் பார்க்கிறோம். நாம் இயேசுவை நமது மணவாளன் என அறிவதற்கு முன்பாக, அவரை ராஜா என அறிந்திருக்க வேண்டும். அநேகக் கிறிஸ்தவர்களால் ஆண்டவருடன் ஓர் அன்பின் உறவுக்குள் பிரவேசிக்க முடிவதில்லை. ஏனென்றால் அவர்களால் தங்களுடைய வாழ்க்கை முழுவதிலும் அவரை ஆண்டவராகவும், ராஜாவாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததே அதற்குக் காரணமாகும். அவர்களுடைய வாழ்க்கையில் இன்னும் சில பகுதிகள் ஒப்புக் கொடுக்கப்படாமல் உள்ளன.

உன்னதப்பாட்டு 1:5 -ல், “எருசலேமின் குமாரத்திகளே” அல்லது “எருசலேமின் ஸ்திரீகளே” என்று சொல்லப்படுவதாக வாசிக்கிறோம். இப்பதமானது, தங்களுடைய ஆண்டவரை முழு இருதயத்துடன் நேசிக்காத, அரை இருதயங்கொண்ட விசுவாசிகளைக் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றது. அவர்கள் யாரென்றால், இயேசுவுடன் தனிப்பட்ட தியானம் இல்லாதவர்களாய், பிரசங்கித்தல், போதித்தல், வேத பாடங்களை நடத்துதல் போன்ற “கிறிஸ்துவ” ஊழியத்தில் தங்களை அதிகமாய் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் ஆவர். அவர்கள் பாவத்தில் ஜீவிப்பவர்கள் அல்லர். ஆனால் அதே சமயம் அவர்கள் ஆண்டவரிடத்தில் ஊக்கமாய் அன்புகூராதவர்களாகவும் இருக்கிறார்கள். அன்பின் இருதயத்திலிருந்து ஊழியம் ஊற்றெடுக்கத் தக்கதாக, தம்மிடத்தில் அன்பின் தியானத்தினால் நிறையப் பெற்று வாழும், மணவாட்டியின் இருதயம் உடையவர்களையே, ஆண்டவர் தேடிக் கொண்டிருக்கிறார்.

அந்த மணவாட்டி, “நான் கறுப்பாயிருந்தாலும் அழகாய் இருக்கிறேன்” (உன் 1:5) என்று இந்த ஸ்திரீகளிடத்திலே சொன்னாள். அவள் எவ்விதக் கவர்ச்சியுமற்றவளாய் இருந்த போதிலும், மணவாளவன் அவளைத் தெரிந்து கொண்டதையே அவள் அப்படியாகச் சொன்னாள். தேவன் இவ்வுலகில் பலவான்களையும், பிரபுக்களையும், ஞானிகளையும் தெரிந்து கொள்ளாமல், ஏழைகளையும், பைத்தியமானவைகளையுமே பிரதானமாய் தெரிந்து கொண்டதாக வேதம் விளம்புகின்றது (1கொரி 1:26 – 29). “நான் மற்ற மக்களைப் போல திறமையுடையவன் அல்ல. நான் ஒரு புத்திசாலியும் கிடையாது. மற்றவர்களைப் போல என்னால் பேசவும் முடியாது. என்னுடைய திறமைகளெல்லாம் மிகவும் குறைவானவைகளாக உள்ளன” என்று நம்மில் சிலர் நினைக்கக் கூடும். இப்படியெல்லாம் இருப்பினும், ஆண்டவர் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார்!

எருசலேமிலே இன்னும் அழகான பெண்களெல்லாம் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் மணவாளனோ இந்தக் கறுப்பழகியைத்தான் தெரிந்து கொண்டார். இயேசு அப்படித்தான் செய்கின்றார். ஏனெனில் அவர் உள்ளத்தின் குணலட்சணங்களைத் தான் பார்க்கிறாரே தவிர, வெளிப்பிரகாரமான தோற்றத்தையோ, வரத்தையோ, திறமைகளையோ பார்ப்பதில்லை. இங்கே நாம் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய இயல்பான சுபாவங்கள், குடும்பப் பின்னணி, சாதனைகள் ஆகியனவெல்லாம் தேவனிடமிருந்து எந்த ஒரு மதிப்பையும் பெறுவதில்லை. பக்தியுள்ள இருதயமே அவர் தேடுகிற ஒன்றாய் இருக்கிறது. கர்த்தர் ஒருவனைத் தம்முடைய ஊழியக்காரனாக இருக்க விரும்பினால், இவற்றைத்தான் அவனிடத்திலே தேடுகிறார்.

அந்த மணவாட்டியானவள் தான் கறுப்பாக இருந்தாலும், மணமகனின் கண்களுக்குத் தான் அழகானவளாக இருப்பதை உணர்ந்திருந்தாள். மணமான அநேக பெண்கள், தங்களுடைய கணவர்கள் தங்களை ஏற்றுக் கொண்டு, தங்களிடத்தில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களா என்பதை உணர முடியாமல் தவிக்கிறார்கள். நான் என் மனைவியில் மகிழ்ந்திருக்கிறேன். கணவர்களாகிய நீங்களும் அவ்வாறே இருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் உங்களது மனைவியிடத்தில் மகிழ்ந்திருப்பதை அவள் அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதே வண்ணமாக அநேக விசுவாசிகளும், ஆண்டவர் தங்களிலே மகிழ்ந்திருக்கிறார் என்பதை உணரக் கூடாதவர்களாய் இருக்கிறார்கள். “உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் உன் பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்திருப்பார்” என்று செப்பனியா 3:17 கூறுகின்றது. தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளாய்ப் பெற்றிருப்பதிலே மகிழ்ச்சியாய் இருக்கிறார். இது உங்களுக்குத் தெரியுமா? நாம் மனுஷரின் கண்களுக்கு அழகற்றுத் தெரியலாம். ஆனால் தேவனுடைய கண்களில் அழகுள்ளவர்களாகவே இருக்கிறோம். நாம் இதைத் தெளிவாக புரிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

“அழகும், சௌந்தரியமுமான எருசலேமின் குமாரத்திகளே, என்னை நீங்கள் தரக்குறைவாகப் பார்க்காதீர்கள்” (உன் 1:6 – ஆங்கிலத்தின்படி). அவள் ஒரு நாகரிகமற்ற, கிராமத்துப் பெண்ணாய் இருந்தாள். எருசலேமின் பண்பட்ட பட்டணத்துப் பெண்கள் எல்லாரும் இந்தக் கிராமத்துப் பெண்ணை தரம் தாழ்த்திப் பார்த்தனர். ஆனால் மணவாளனோ, நளினமும் வனப்பும் நிறைந்த பட்டணத்துப் பெண்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, ஒரு கிராமத்து பெண்ணையே தெரிந்து கொண்டார். நம்மையும் ஆண்டவர் இப்படியாகத்தான் தெரிந்து கொண்டார். அதற்காகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மற்ற விசுவாசிகள் உங்களை இகழ்ச்சியாய்ப் பார்க்கிறார்களா? சோர்ந்து போக வேண்டாம். நீங்கள் கர்த்தருக்கு விலையேறப் பெற்றவர்கள். அழுக்கிலே அழுகிப் போய், நிராதரவாய், உதவுவாரில்லாமல், வழியருகே கிடந்த நம்மை தேவன் எப்படியாய்த் தூக்கியெடுத்தார் என்பதை எசேக்கியல் 16 – அதிகாரம் நன்றாய் வருணிக்கின்றது.

உன்னதப்பாட்டு 2:1 -ல், “நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்” என்று மணவாட்டி சொல்கின்றாள். இங்கு சொல்லப்படுகிறவைகளெல்லாம், மணவாட்டியைக் குறித்தே சொல்லப்படுகின்றன; மணவாளனைக் குறிப்பதற்காகச் சொல்லப்படவில்லை.

அநேகக் கிறிஸ்தவப் பாடல்கள், இயேசுவை, “சாரோனின் ரோஜா” என்றும், “பள்ளத்தாக்கின் லீலி” என்றும் புகழ்ந்து புனையப்பட்டுள்ளன. ஆனால் இவை யாவும் வேத ஆதாரமற்ற பதங்களாகும்.

மணவாட்டிதான், மணவாளனை நோக்கி, “நான் சாரோனிலுள்ள ஒரு சாதாரண ரோஜாவாக இருக்கிறேன். சாரோனிலே ஆயிரக்கணக்கான ரோஜாக்கள் இருக்க, அவற்றில் நானும் ஒன்றாக இருக்கிறேன். பள்ளத்தாக்கிலே ஒரு சாதாரண லீலிப் புஷ்பமாய் இருக்கிறேன்” என்று சொல்கிறாள். ஆனால் மணவாளன், “ஆம், அது உண்மையாக இருக்கலாம். ஆனால் நீ முட்களுக்கு நடுவிலுள்ள லீலியாக இருக்கிறாய்” (உன் 2:2) என்று பதிலளிக்கிறார். அந்த எருசலேம் குமாரத்திகளெல்லாரும் அழகாகவும், கவர்ச்சியாகவும் வெளித் தோற்றத்தில் சிறந்து விளங்கினாலும், அவர்கள், “பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமமாக” உள்ளனர் (நீதி 11:22) - கவர்ச்சியாய் இருந்தாலும், ஆண்டவர் மீது தியானமில்லாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் மணவாளன் அவர்களை முட்களுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். அந்த முட்களுக்கு நடுவில், அவருடைய மணவாட்டியோ, ஒரு லீலியாய் இருந்தாள்.

உன்னதப்பாட்டு 5:16 -ல், “அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் சிநேகிதர்” என்று மணவாட்டி, தன்னுடைய மணவாளனை வருணித்துச் சொல்கிறாள். நீங்களும் இயேசுவை உங்களுடைய இரட்சகர் என்று மாத்திரம் சொல்லாமல், உங்களுடைய சிநேகிதராகவும் இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? இயேசு உங்களுக்கு நெருக்கமான, பிரியமான சிநேகிதராக இருப்பாராக.