மனுஷர் ஆடுகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். எவ்விதக் கேள்வியும் கேட்காமல், ஒரு கூட்டத்தைப் பின்தொடர்ந்து செல்வதென்பது ஆடுகளுக்கே உரிய பாங்காகும். எப்படியாயினும், நாம் எல்லாவற்றையும் வேதம் என்னும் உரைகல்லில் உரசிப் பார்த்த பிறகே ஏற்றுக் கொள்ள வேண்டும் என இயேசு வந்து நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார். பரிசேயர்கள் மனுஷப் பாரம்பரியங்களை உயர்த்திக் காண்பித்தனர். இயேசுவோ தேவனுடைய வார்த்தையை உயர்த்திக் காண்பித்தார். நாம் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கிற எந்த மனுஷப் பாரம்பரியத்தையும் புறக்கணித்து, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்க வேண்டும் (மத்தேயு 4:4).
காலாகாலமாய், தேவனுடைய வார்த்தைக்கும் மனுஷப் பாரம்பரியங்களுக்கும் இடையே இருந்து வந்த போர்க்களத்தில்தான் இயேசு பரிசேயருக்கு எதிராக தொடர்ச்சியாய் நின்றார். சபையிலே நாமும் இதே யுத்தக் களத்திலேதான் நிற்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறோம். பூமியிலே நமக்கிருக்கிற ஒரே பரலோக வெளிச்சம் தேவனுடைய வார்த்தை மட்டுமே. தொடக்கத்தில் தேவன் வெளிச்சத்தை உண்டுபண்ணின போது, அதை உடனடியாக இருளிலிருந்து பிரித்துவிட்டார். இப்பொழுது இருள் என்பது பாவமும், மனுஷப் பாரம்பரியங்களும் ஆகும். சுத்தமான வேத வசனத்திலிருந்து பாவத்தையும் மனுஷப் பாரம்பரியங்களையும் பிரித்தெடுத்து, அதன் மூலமாக சபையிலே எவ்விதக் கலப்படமும் இல்லாமல் பார்த்துக் கொள்வதே நம்முடைய அழைப்பாகும்.
கிறிஸ்துமஸ்
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக பலராலும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸை சற்றே கவனியுங்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையானது அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பண்டிகையாக இருப்பதால், எம்மதத்தைச் சார்ந்த கடைக்காரர்களும் இந்நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். இது ஒரு வியாபார நோக்கு நிறைந்த விழாவேயல்லாமல், ஆவிக்குரியதல்ல. கிறிஸ்துமஸ் அட்டைக்காகவும், பரிசுப் பொருட்களுக்காகவும் இலட்சக் கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. இந்த சமயத்தில் நடைபெறும் மதுபான வியாபாரமும் அபாரமாக உள்ளது.
அப்படியானால் இது உண்மையிலேயே மனுஷ குமாரனின் பிறந்த நாளா, அல்லது ‘வேறொரு இயேசு’வுடையதா?
நாம் முதலாவதாக தேவனுடைய வார்த்தையைப் பார்க்கலாம். இயேசு பிறந்த அந்த இரவிலே, யூதேயாவிலிருந்த மேய்ப்பர்கள் வயல்களிலே ஆடுகளைக் காத்துக் கொண்டிருந்ததாக வேதம் கூறுகிறது. பாலஸ்தீன நாட்டிலே அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலும் காலநிலை மழையாகவும், குளிராகவும் இருக்குமென்பதால், அங்கு வாழ்ந்த மேய்ப்பர்கள் அந்நாட்களில் இரவு நேரங்களில் திறந்த வெளியில் ஆடுகளை வைத்திருப்பதில்லை. எனவே உண்மையான இயேசு, மார்ச் முதல் செப்டம்பர் வரையிலுள்ள ஏதாவது ஒரு நாளில்தான் பிறந்திருக்க வேண்டும். அப்படியானால், டிசம்பர் 25-ஆம் நாளானது ‘வேறொரு இயேசு’வின் பிறந்த நாளாகத்தான் இருக்க வேண்டும். சந்தேகிக்காத கிறிஸ்தவத்திற்குள் மறுபடியும் பிறவாத மனுஷர் தந்திரமாக கிறிஸ்துமஸை நுழைத்துவிட்டனர்!
மேலும், ஒருவேளை, இயேசு இன்ன தேதியில் தான் பிறந்தார் என்று அறுதியிட்டுக் கூற முடிந்தாலும், தேவன் தம் ஜனங்கள் அந்நாளைக் கொண்டாட விரும்புகிறரா என்ற கேள்வியும் எழும்புகின்றது. இயேசு எப்பொழுது பிறந்தார் என்று மரியாளுக்கு நிச்சயமாகவே மிகத் துல்லியமாகத் தெரிந்திருந்திருக்கும். பெந்தெகோஸ்தே நாளுக்குப் பிறகு வெகு ஆண்டுகளாய் மரியாள் அப்போஸ்தலருடன் இருந்தார். அப்படி இருந்தும், இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி எங்குமே எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இது நமக்குத் தெரிவிப்பது என்ன? அது இதுதான்: தம்முடைய சபையானது இயேசுவின் பிறந்த தினத்தைக் கொண்டாடக் கூடாது என்பதற்காக தேவன் வேண்டுமென்றே அதை மறைத்து விட்டார். வருடத்திற்கொருமுறை இயேசுவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு அவர் ஒன்றும் சாவுக்கினமான ஒரு சாதாரண மானிடன் அல்ல. நம்மைப் போலல்லாது, “நாட்களின் துவக்கம் இல்லாத” தேவகுமாரன் அவர் (எபிரெயர் 7:3). வருடத்திற்கு ஒருமுறை அல்ல, ஒவ்வொரு நாளும் நாம் இயேசுவின் பிறப்பையும், மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
பழைய உடன்படிக்கைக்கும் புதிய உடன்படிக்கைக்குமுள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொண்டால், இக்காலத்தில் தேவன் ஏன் தமது பிள்ளைகள் எவ்வித “பரிசுத்த நாளையும்” கொண்டாட விரும்பவில்லை என்பது விளங்கும். பழைய உடன்படிக்கையின் கீழ், ஒருசில நாட்களை பரிசுத்த நாட்களாக விசேஷித்துக்கொள்ளும்படி இஸ்ரவேலருக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஒரு நிழல் மாத்திரமேயாகும். இப்பொழுது கிறிஸ்து வந்துவிட்டபடியால், நம்முடைய வாழ்வின் “ஒவ்வொரு நாளும்” ஒரே மாதிரியாக பரிசுத்த நாளாயிருக்கவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. புதிய உடன்படிக்கையின் கீழ் வாராந்திர ஓய்வுநாளும் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆகவே தான் புதிய ஏற்பாட்டில் எங்கும் பரிசுத்த நாள் என்று எதுவுமே குறிப்பிடப்படவில்லை (கொலோசெயர் 2:16,17).
அப்படியானால் கிறிஸ்துமஸ் கிறிஸ்தவத்திற்குள் நுழைந்தது எங்ஙனம்? அதற்கான பதில் இதோ: குழந்தை ஞானஸ்நானம், தசமபாகம், பாதிரியார்த்துவம், சம்பளம் பெறும் பாஸ்டர்கள், இன்னும் இது போன்ற எண்ணற்ற மனுஷப் பாரம்பரியங்கள் எவ்வண்ணமாய் சாத்தானாலும் மறுபடியும் பிறவாத மனுஷராலும் மிக நுட்பமாக நுழைக்கப்பட்டதோ, அவ்வண்ணமேதான் இதுவும் நுழைந்தது.
4-ஆம் நூற்றாண்டில், கான்ஸ்டன்டைன் என்னும் ரோமப் பேரரசன் கிறிஸ்தவத்தை தேசிய மதமாக மாற்றிய போது, திரளான ஜனங்கள் தங்களுடைய இருதயத்தில் எவ்வித மாற்றமுமின்றி, 'பெயரளவிலே' கிறிஸ்தவத்திற்கு மாறிவிட்டனர். சூரியவணக்கத்துடன் தொடர்புடைய அவர்களது இரண்டு பெரிய பண்டிகைகளை விட்டுவிட அவர்கள் விரும்பவில்லை. அதில் ஒன்று தான் சூரியக் கடவுளின் பிறந்த தினமாக பாரம்பரியமாகக் கொண்டாடி வந்த டிசம்பர் 25-ஆம் நாள். அந்நாளில்தான் தென் அரைக் கோளத்தில் பிரகாசித்து வந்த சூரியன், அங்கிருந்து வட அரைக் கோளத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் (அதாவது அந்நிகழ்விற்குக் குளிர்கால சங்கிராந்தி என்று பெயர்). இன்னொரு பண்டிகை, மார்ச்/ஏப்ரல் மாதத்தில் வரும் வசந்தகாலப் பண்டிகை. குளிர் காலம் ஒழிந்து அவர்களது சூரியக் கடவுள் பிறப்பித்த இளவேனிற் பருவத்தின் ஆரம்பத்தை அவர்கள் கொண்டாடினர். தங்கள் சூரியக் கடவுளுக்கு ‘இயேசு’ என்று பெயரிட்டு அந்த இரண்டு பெரிய பண்டிகைகளையும் கிறிஸ்தவப் பண்டிகைகளாக்கி கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் என்ற பெயர்களில் தொடர்ந்து கொண்டாட ஆரம்பித்தனர்!!
இன்றைய கிறிஸ்துமஸ் காலங்களில் அனுசரிக்கப்படும் வழக்கங்களெல்லாம் ஐரோப்பாவில் கிறிஸ்தவக் காலத்திற்கு முன்பிருந்தே தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளன. விழாக்கால, அஞ்ஞான, மதசம்பந்தமான, தேசிய நடைமுறையாக இருந்து வந்த காரியங்கள் எல்லாம் காலப் போக்கில் சிறிது சிறிதாகச் சுருங்கி புராணக்கதைகளாகவும், பாரம்பரியங்களாகவும் உருவெடுத்து நின்றுவிட்டன. இதுதான் இயேசு பிறந்த ஆண்டும், நாளும் என்று திருப்திகரமாக முடிவு செய்யப்படவில்லை. இந்நிகழ்வைக் கொண்டாடுதற்காக ஒரு நாளை நியமிக்க வேண்டுமென சபையின் பிதாக்கள் அனைவரும் கி.பி 440-ஆம் ஆண்டில் ஒரு தீர்மானம் பண்ணின போது, அவர்கள் இந்தக் குளிர்கால சங்கிராந்தியைத் தேர்வு செய்தனர். ஏனெனில் மிக முக்கியத் திருவிழாவான இது, மக்களின் மனங்களில் பசுமையாய்ப் பதிந்திருந்தது. அஞ்ஞான தேசங்களில் கிறிஸ்தவம் பரவிய சமயத்தில், குளிர்கால சங்கிராந்தியின் நடைமுறைகளெல்லாம் கிறிஸ்தவத்துடன் இரண்டறக் கலந்துவிட்டன.
பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் (Encyclopedia Britannica) என்னும் நூலானது கிறிஸ்துமஸின் தோற்றம் குறித்துக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்:
“பண்டைய ரோமானியப் பண்டிகையான சாட்டர்னாலியா, நவீன கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையது. இந்த விழா குளிர்கால சங்கராந்தி சமயத்தில் கொண்டாடப்பட்டது; இது பயிரிடும் காலத்தின் முடிவைக் குறித்தது. அச்சமயத்தில், பல நாட்களுக்கு விளையாட்டுகள், விருந்துகள் மற்றும் பரிசுப் பரிமாற்றங்கள் நடைபெற்றன; இந்தக் கலகலப்பான விழாவைக் கொண்டாடுவதற்காக வேலைகளும் வணிகமும் நிறுத்தி வைக்கப்பட்டன. விழாவின் இறுதி நாட்களில், மெழுகுவர்த்திகள், பழங்களின் மெழுகு மாதிரிகள் மற்றும் மெழுகு சிலைகளை பரிசுகளாக வழங்குவது வழக்கமாக இருந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மீது சாட்டர்னாலியாவின் தாக்கம் நேரடியாக இருந்தது. பிற்காலத்தில் கிறிஸ்துமஸ், மற்றொரு ரோமானிய விழாவான 'வெல்லப்படாத சூரியனின்' பிறந்தநாளில் கொண்டாடப்பட்டது. அது அந்தப் பண்டிகைக் காலத்திற்கு ஒரு சூரியப் பின்னணியைக் கொடுத்ததுடன், அதை ரோமானியப் புத்தாண்டுடன் இணைத்தது. அந்தப் புத்தாண்டன்று வீடுகள் பசுமையான இலைகளாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டன, குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.”
(https://www.britannica.com/topic/Winter-Holidays)
இந்த அஞ்ஞானப் பழக்கவழக்கங்கள், நிம்ரோதால் தொடங்கப்பட்ட பாபிலோனிய மதத்திலிருந்து தோன்றின (ஆதியாகமம் 10:8-10 பார்க்கவும்). நிம்ரோத் மரித்த பிறகு, அவனது மனைவி செமிராமிஸ் ஒரு முறையற்ற குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் அக்குழந்தை தான் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்த நிம்ரோத் என்று அவள் கூறியதாகவும் பாரம்பரியமாக நம்பப்பட்டு வருகிறது. இவ்வாறு தாய் மற்றும் குழந்தையை வணங்கும் வழக்கம் தொடங்கியது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இது பெயர்க்கிறிஸ்தவர்களால் 'மரியாள்-இயேசு’ வணக்கமாக மாற்றப்பட்டது.
இந்தக் குழந்தை-கடவுளின் பிறந்தநாள் பண்டைய பாபிலோனியர்களால் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்பட்டது. செமிராமிஸ் வானராக்கினியாக இருந்தாள் (எரேமியா 44:19), பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவள் எபேசுவில் டயானா மற்றும் ஆர்டெமிஸ் என்று வணங்கப்பட்டாள் (அப்போஸ்தலர் 19:28).
ஒரு காய்ந்த மரக்கட்டையிலிருந்து ஒரே இரவில் ஒரு முழுமையான பசுமையான மரம் வளர்ந்ததாக செமிராமிஸ் கூறினாள். இது நிம்ரோத் மீண்டும் உயிர்த்தெழுந்து, மனிதகுலத்திற்கு வானத்தின் பரிசுகளைக் கொண்டு வருவதைக் குறிப்பதாக இருந்தது. இவ்வாறு ஒரு ஃபிர் மரத்தை வெட்டி, அதில் பரிசுகளைத் தொங்கவிடும் வழக்கம் தொடங்கியது. அதுவே கிறிஸ்துமஸ் மரத்தின் தோற்றம்!
தேவனுடைய வார்த்தையா, மனுஷப் பாரம்பரியமா?
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குப் பின்னணியில் கிறிஸ்தவப் பண்டிகை என்ற பெயரில் புறஜாதியாரின் பாரம்பரியங்களைக் கைக்கொள்ள வேண்டிய கொடிய கோட்பாடு ஒன்று மறைந்திருக்கிறது. இது வேத வசனத்தை ஆதாரமாகக் கொண்டதல்ல. பிற பகுதிகளிலெல்லாம் வேத வாக்கியங்களைக் கைக்கொண்டு நடக்கிற விசுவாசிகளால்கூட கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடாமல் இருக்க முடியாத அளவிற்கு இந்தப் பாரம்பரியங்களின் வலிமை பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தை எழுதியவர்களைப் போன்ற உலகப் பிரகாரமான எழுத்தாளர்கள் எல்லாம் கிறிஸ்துமஸ் என்பது அஞ்ஞான மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்று தெளிவாகப் புரிந்து கொண்ட அளவுகூட விசுவாசிகள் புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் வியப்பூட்டுகின்றது. கிறிஸ்துமஸ் ஒரு அஞ்ஞானப் பண்டிகை. அந்த அஞ்ஞானப் பண்டிகைக்கு கிறிஸ்துமஸ் என்று பெயர்மாற்றம் செய்து விட்டால், அது கிறிஸ்தவப் பண்டிகையாகி விடாது!
இயேசுவானவர் பரிசேயர்களுடன் தொடர்ச்சியாக 'மனுஷ பாரம்பரியங்களா? அல்லது தேவனுடைய வார்த்தையா?' என்னும் போர்க்களத்திலேயே நின்று கொண்டிருந்தார். அவர் பாவங்களுக்கு எதிராகப் பிரசங்கித்தமைக்காக எதிர்கொண்ட எதிர்ப்புகளைக் காட்டிலும், 'முன்னோர்களின் வெற்றுப் பாரம்பரியம்' என்னும் காரியத்திற்கு எதிராகப் பிரசங்கித்ததற்காகவே அதிக எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொண்டார். அவரைப் போலவே நாமும் உண்மையுள்ளவர்களாக இருந்தால், இதே அனுபவம் நமக்கும் கிட்டும்.
தேவனுடைய வார்த்தை மட்டுமே நமது வழிகாட்டியாகும். ஒருசில பகுதிகளில் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றாதவர்கள், தேவ பக்தியுள்ள மனிதர்களாக இருந்தாலும், அப்பகுதிகளில் அவர்கள் நமக்கு வழிகாட்டி ஆக மாட்டார்கள். “தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக” (ரோமர் 3:4). பெரோயா பட்டணத்தார் பவுலின் போதனைகளைக்கூட சரிபார்க்கும்படி வேதவசனங்களை ஆராய்ந்தார்கள், அதற்காக பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் பாராட்டினார் (அப்போஸ்தலர் 17:11). அது நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு நல்ல உதாரணமாகும்.
தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாக விளங்கினான். ஆனால், மோசே நிறுவியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை 40 ஆண்டு காலமாக இஸ்ரவேலர் வழிபடுவதற்கு அவன் அனுமதித்துவிட்டான். அது தேவனுக்கு அருவருப்பான காரியம் என்ற உணர்வற்றவனாகவே இருந்தான். அது ஒரு வெளிப்படையான விக்கிரகாராதனை என்னும் வெளிச்சம்கூட இல்லாதிருந்தான். அவனைவிடக் குறைவான ராஜாவான எசேக்கியா என்பவன் இதைப் பற்றிய வெளிச்சம் கிடைக்கப் பெற்றவனாய், அதை வெளியரங்கமாக்கி, விக்கிரகாராதனை நடைமுறையை ஒழித்துவிட்டான் (2இராஜாக்கள் 18:1-4). நாம் தேவ மனிதர்களை அவர்களுடைய பரிசுத்தத்தினிமித்தம் பின்பற்றுகிற அதே வேளையில், பாரம்பரியங்களைப் பற்றி அவர்கள் வெளிச்சம் பெறாத பகுதிகளில் அவர்களைப் பின்பற்றலாகாது. தேவனுடைய வார்த்தையுடன் நாம் எதையாவது கூட்டினாலோ, குறைத்தாலோ நம்முடைய பாதுகாப்புப் பறிபோய்விடும். ஆகவே தேவனுடைய வார்த்தையில்தான் நம்முடைய பாதுகாப்பு அடங்கியிருக்கிறது.
பிறரை நியாயந்தீர்க்காதீர்கள்
இறுதியாக: கிறிஸ்துமஸைக் கொண்டாடும் உண்மையான விசுவாசிகள் மீது நமது மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும்?
கிறிஸ்துமஸைக் கொண்டாடாமால் இருப்பதாலேயே நாம் ஆவிக்குரியவர்களாகி விடுவதில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். மேலும், இந்தப் பண்டிகையைக் கொண்டாடுபவர்களெல்லாரும் மாம்சத்திற்குரிய விசுவாசிகள் என்று எண்ணிவிடக் கூடாது. கிறிஸ்துமஸைக் கொண்டாடினாலும் சரி, கொண்டாடவிட்டாலும் சரி, அனுதினமும் சுயத்துக்கு மரித்து, அனுதினமும் பரிசுத்த ஆவியானவரின் நிறைவின் வழியில் இயேசுவைப் பின்பற்றுபவர்களே ஆவிக்குரியவர்கள் ஆவர்.
எனவே, இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் விசுவாசிகளை நாம் சந்திக்கும்போது, இந்தப் பண்டிகைக்கு இருக்கும் அஞ்ஞானத் தொடர்பைப் பற்றி அவர்கள் அறியாதவர்களாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அதைக் கொண்டாடுவதினால் எந்த வகையிலும் பாவம் செய்வதில்லை. மாறாக, நாம் சத்தியத்தை அறிந்திருக்கிறபடியால், நாம் அவர்களை நியாயந்தீர்த்தால், நாமே பாவம் செய்கிறவர்களாயிருப்போம்.
எப்படியாயினும், டிசம்பர் 25-ஆம் நாளானது ஒரு விடுமுறை தினமாக இருப்பதாலும், அதற்கு முந்தின, பிந்தின சில நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறையாக இருப்பதாலும், வருடக் கடைசியிலே குடும்பங்களாக ஒன்றிணைந்து மகிழ்வதற்காக பலர் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இன்னுமாகச் சொன்னால், சிலர் ஆண்டுக்கொரு முறைதான் சபை ஆராதனைக்கு வருவார்கள். அந்த நாள் டிசம்பர் 25 ஆகும். ஆகவே அந்த நாளில் ஆராதனையை நடத்தும் போது வருடமொரு தடவை வருவோருக்கெல்லாம் 'நம்மைப் பாவங்களிலிருந்து இரட்சிக்க' இயேசு இப்பூமிக்கு வந்தார் என்றும் ‘நமக்காக அவர் மரணத்தையும் சாத்தானையும் ஜெயித்தார்’ என்றும் சுவிசேஷமாக அவர்களுடைய செவிகளில் தொனித்திடச் செய்ய முடியும்.
கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்களில், சில கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளை அனுசரித்தார்கள். அது கிறிஸ்துமஸைப் போலவே, கிறிஸ்தவமல்லாத ஒரு யூத மதப் பண்டிகையாக இருந்தது. எனவே, மற்ற கிறிஸ்தவர்கள் அவர்களை நியாயந்தீர்த்துப் பாவம் செய்திட்டாக கூடாது என்று அவர்களை எச்சரிப்பதற்காக, பரிசுத்த ஆவியானவர் பவுலை ரோமர் 14-ஐ எழுதும்படி ஏவினார். கிறிஸ்துமஸைக் கொண்டாடுபவர்களை நியாயந்தீர்ப்பவர்களுக்கும் இதே எச்சரிக்கை பொருந்தும்.
விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள். மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான். நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். அவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான். அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து மட்டுமே தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான் (ரோமர் 12:1-12).
இதுவே இத்தலைப்பின் கடைசி வார்த்தையும், சிறந்த வார்த்தையுமாகும்.