WFTW Body: 

ஒரு சபையில் தேவன் தொடர்ந்து கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இரண்டு நிரூபணங்கள் உள்ளன. ஒன்று, முழு இருதயமுள்ள சீஷர்களை அந்த சபையில் தேவன் சேர்ப்பார்! மற்றொன்று, ஆண்டவரைப் பின்பற்ற ஆர்வமில்லாதவர்களை சபையிலிருந்து நீக்குவார்!! இதைக் குறிப்பிட்டு:

1) இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார் (அப்போஸ்தலர் 2:47) என வாசிக்கிறோம். அந்நாட்களில், சீஷத்துவ செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே இரட்சிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர்!

2) “பெருமையைக் குறித்து களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கி விடுவேன்! உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன். அதினிமித்தமாய் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருந்து... அவர் உன் பேரில் கெம்பீரமாய் களிகூருவார்” (செப்பனியா 3:11-17).

என வேதவாக்கியம் கூறுவதைப் பாருங்கள். ஆம், எங்கள் பரலோகப் பிதாவானவர் இந்த இரண்டு வழிகளிலும் ஆரம்பநாட்களிலிருந்தே எங்கள் சபையில் கிரியை நடப்பித்து வருகிறார்!

சுமார் 100 கோடிக்கும் அதிகமான ஜனங்களைக் கொண்ட நமது இந்திய தேசத்தில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு சீஷர்களாய் மாற விரும்புவோரைக் கண்டுபிடிப்பது, பல்லாயிரம் வைக்கோல்போர்களின் மத்தியில், ஒன்று அல்லது இரண்டு ஊசியைத் தேடுவதற்கு ஒப்பானதேயாகும்! ஆனால் அந்த ஊசிகளைக் கண்டுபிடிக்க வலிமை கொண்ட காந்தங்களை இந்த வைக்கோல்போர்களுக்கு வெளியில் வைத்து ஈர்த்துக் கொள்வதே மிகச்சிறந்த வழியாகும்! அப்போது, அதிகப் பிரயாசமேதுமில்லா இந்த ஊசிகள் வைக்கோல் போரிலிருந்து காந்தங்களிடம் ஈர்க்கப்பட்டுவிடும்!! முழு இருதயம் கொண்டவர்களைக் கண்டுகொள்வதற்கும் இதுவே சிறந்த வழியாகும்! நாம் ஒருவரையொருவர் நேசிப்பதை மற்றவர்கள் காணும்போது “நாம் அவருடைய சீஷர்கள்” என்பதை ஜனங்கள் கண்டுகொள்வார்கள் என்றே இயேசு கூறினார்! (யோவான் 13:33-35). ஒரு சபையாய் விளங்கும் நம்முடைய இந்த சாட்சியே, மற்றவர்களை நம்மிடம் ஈர்த்துக் கொள்வதாயிருக்க வேண்டும்!!

ஆகவே, எங்கள் சபையும், எங்கள் மூலமாய் ஆண்டவர் ஸ்தாபித்த சபைகளும் இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் பல்லாயிரமான வைக்கோல்போர்களிலிருந்து சீஷர்களை ஈர்த்துக்கொள்ளும் காந்தங்களாயிருந்திட விரும்பினோம்.

மனம் மாறுகிறவர்களாய் மாத்திரமல்லாமல், அவர்களை சீஷர்களாக்கும்படி (மத்தேயு 28:18-20) ஆண்டவர் நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறபடியால், லூக்கா 14:26-33 வசனங்களில் இயேசு சுட்டிக்காட்டியிருக்கும் சீஷத்துவத்தின் மூன்று நிபந்தனைகளை ஆரம்பத்திலிருந்தே பிரசங்கித்தோம்! அவையாதெனில் 1) யாரைக்காட்டிலும் இயேசுவையே பிரதானமாய் நேசிப்பதும் 2) ஒவ்வொரு நாளும் சுயத்திற்கு மரிப்பதும் 3) நமக்கு உண்டான உலகப் பொருட்கள் அனைத்தின் மீதும் கொண்ட பிடிப்பிலிருந்து விடுதலையாவதுமேயாகும்! சீஷத்துவத்தின் இந்த மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றிட ஆர்வம் கொண்டவர்களை மாத்திரமே எங்கள் சபையில் சேர்த்துக் கொள்வதற்கு நாங்கள் விரும்பினோம்!!

ஆகவே, யாரெல்லாம் இயேசு வரையறுத்த தரத்தின்படியான சீஷர்களாய் மாற விரும்புகிறார்களோ, அவர்களை மாத்திரமே எங்களோடு சேர்க்கும்படி ஆண்டவரிடம் நாங்கள் ஜெபித்தோம்: எங்கள் சபையில் சேர்ந்து கொள்ளும்படி இன்றுவரை நாங்கள் ஒருவரையும் அழைத்ததில்லை! தாங்களாகவே மனமுவந்து வருகிறவர்களையே நாங்கள் விரும்பினோம். ஆம், 1975-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை, ஒரு நபரைக்கூட எங்களுடைய எந்த ஒரு சபையிலும் ஓர் அங்கத்தினராய் மாறும்படி நான் அழைத்ததில்லை. முழுவதும் தாங்களாகவே மனமுவந்து வருபவர்களை மாத்திரமே நாங்கள் ஏற்றுக்கொண்டோம்! மேலும், மேய்ப்பனாயிருந்து ஊழியம் செய்திடும் அழைப்பைப் பெற்றவர்களையும் ஆண்டவர் எங்களிடம் அனுப்புவார் எனவும் நாங்கள் விசுவாசித்தோம்! ஆண்டவர் தம்முடைய சபையில், அவரே ஜனங்களைச் சேர்த்திடுவார் எனவும் விசுவாசித்தோம்.

இதை இயேசுவே குறிப்பிட்டு “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவரும் என்னிடத்தில் வருவார்கள். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை!!” (யோவான் 6:37) எனக் கூறினார்.

இந்த வசனம் பூமியில் கிறிஸ்துவின் சரீரமாய் விளங்கும் எங்களுக்கு நிஜமாய் மாறிடும் என்றே நாங்கள் விசுவாசித்தோம்!!

ஆச்சரியமான பல வழிகள் மூலமாய் உண்மையுள்ள சீஷர்களை கர்த்தர் எங்களோடு சேர்த்தார்!

எங்களுக்கு அருகில் உள்ள தேசத்தில், யுத்தம் நடந்து அதனிமித்தம் ஏராளமான ஜனங்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு, சிறிய படகுகளில் குடும்பம் குடும்பமாய் அகதிகளாய் வந்து சேர்ந்தனர். பயணத்திலே அநேகர் மூழ்கிப் போயினர். உயிர் பிழைத்தவர்கள் மாத்திரமே கரைசேர்ந்தனர்! இந்திய அரசாங்கம், இவ்வாறு வந்த அகதிகளுக்கு முகாம் அமைத்து தங்கும்படி செய்தது. எங்களுடைய இரண்டு சபைகளுக்கருகில் இந்த முகாம்கள் அமைந்தன. ஆகவே எங்கள் சபைகளில் உள்ள சில சகோதரர்கள் இந்த முகாம்களுக்குச் சென்று, அங்கிருந்த மனந்திரும்பாத “பெயரளவில் கிறிஸ்தவர்களாயிருந்த” அகதிகளைச் சந்தித்து சுவிசேஷத்தைப் பகிர்ந்தளித்தார்கள். அதன் விளைவாய், அவர்களில் அநேகர் மறுபடியும் பிறந்தார்கள்! தொடர்ந்து எங்கள் சகோதரர்கள் முகாமிற்குத் தொடர்ச்சியாய் சென்று அவர்களைச் சந்தித்து “ஒரு சபையாய்” ஸ்திரப்படுத்தினார்கள்! இவர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாய் பெங்களூர் மற்றும் ஏனைய கான்பரன்ஸ் கூட்டங்களில் பிரசங்க மேடைக்கு ஒருவர் பின் ஒருவராய் விரைந்து வந்து மிக தைரியமாய் சாட்சி பகர்ந்தார்கள்! அவர்கள் எங்கள் கான்பரன்ஸ் கூட்டங்களில் கலந்து கொண்ட காலத்தில், எங்களது மற்ற சபை சகோதர சகோதரிகள் சாட்சி பகர்வதற்கு சந்தர்ப்பம் கிடைப்பது அரிதாயிருந்தது! அவர்களுடைய வைராக்கியத்தினால் நாங்கள் அனைவரும் சவாலிடப்பட்டோம்! ஒரு கான்பரன்ஸ் கூட்டத்தில், சபை கிறிஸ்துவிற்குக் கீழ்படிவதைப்போல எவ்வாறு மனைவிமார்கள் தங்கள் சொந்த புருஷர்களுக்குக் கீழ்படிந்திருக்க வேண்டும் என வேதாகமம் கூறும் போதனைகளை நான் பிரசங்கித்தேன். அந்தப் பிரசங்கத்திற்குப் பிறகு, அவர்களோடிருந்த ஒரு புதிதாய் திருமணமான மனைவி கண்ணீர் விட்டு, “ஆண்டவரே, எங்கள் திருமண வாழ்வின் ஆரம்பம் தொடங்கி, நான் என் கணவருக்குக் கீழ்ப்படிதலுள்ள மனைவியாயிருக்க எனக்குக் கிருபை தாரும்!” என ஜெபித்தார். இப்படி ஒரு விலைமதியா இந்த ஜெபத்தைக் கண்ணீரோடும் உத்தமத்தோடும் ஜெபித்த ஒரு மனைவியின் ஜெபத்தை நான் என் ஜீவியத்தில் ஒருபோதும் கேட்டதில்லை!

இரண்டு வருடங்களுக்குப் பின்பு, இந்திய அரசாங்கம் அவர்களைத் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பிவிடத் தீர்மானித்தது. இச்சமயத்தில் இந்த விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் ஆழமாய் ஸ்திரப்பட்டிருந்தபடியால், தேசத்தை விட்டுப் போகும்போது அவர்களில் மூன்று மூப்பர்களை நியமனம் செய்திட எங்களால் முடிந்தது. இவ்வாறாக, இந்திய தேசத்தில் அவர்கள் இருக்க வேண்டிய காலங்களை தேவன் சரியாய் நியமனம் செய்து வைத்திருந்தார்! அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் சென்றவுடன் மீண்டும் யுத்தம் நடந்து அவர்களுடைய மூன்று பகுதிகளில் சிதறடிக்கப்பட்டார்கள். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த மூன்று குழுக்களிலும் நாங்கள் நியமனம் செய்த மூப்பர்கள் இருந்தார்கள்! ஆகவே, இந்த மூப்பர்களின் தலைமையில் 3 சபைகள் இயங்க ஆரம்பித்தன. இவர்களது சாட்சியுள்ள வாழ்க்கையின் மூலமாய் இந்த சபைகளில் இன்னும் அநேகர் சேர்க்கப்பட்டார்கள். எங்கள் சகோதரர்களில் ஒருவர் சில முறை அங்கு சென்று அவர்கள் மத்தியில் கூட்டங்கள் நடத்தி அவர்களை திடப்படுத்தி வந்தார்!

இன்னொரு இடத்தில், எங்கள் சகோதரர்களில் ஒருவர் ஒரு சிறு தொழிலை ஆரம்பிக்கும்படியாய் அந்த ஸ்தலத்திற்குச் சென்று தங்கினார். அங்கேயும் கிறிஸ்துவுக்குப் பின் ஒரு சபைகூட இல்லாத நிலையிருந்தது. அவர் அங்கே வந்த காலத்தில் மற்றவர்களுக்கு சாட்சி கொடுத்து, அதன்மூலம் அநேக ஜனங்களை ஆண்டவர் இரட்சித்தார். சில வருடங்களுக்குப் பின்பு... அதாவது 2000 ஆண்டுகளுக்குப் பின்பு முதன்முறையாக ஓர் அருமையான சபை அங்கு ஸ்தாபிக்கப்பட்டது!

எல்லாவற்றிற்கும் மேலான அற்புதம் என்னவெனில், கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 2000 ஆண்டுகளாக சபைகள் இல்லாதிருந்த ஸ்தலங்களில் சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன என்பதல்ல... மாறாக, அநேகம் சபைகளை நடத்தும்படி தேவபக்தி நிறைந்த மூப்பர்களை தேவன் எழுப்பியதே மாபெரும் அற்புதமாகும்! சம்பளத்திற்காகவே ஊழியம் செய்திடும், அதுவும் பெரும்பாலும் அயல்நாட்டு மூலதனத்தைக் கொண்டு ஊழியம் செய்திடும் கிறிஸ்தவ ஊழியர்கள் நிறைந்த இந்தியா போன்ற தேசத்தில், தேவனுடைய ஆடுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் மேய்த்து ஊழியம் செய்திட, “எவ்விதத்திலும்” சம்பளம் தேடாமல் மனமுவந்து ஊழியம் செய்திடும் ஆவிக்குரிய சிந்தை கொண்ட தலைவர்களைக் காணச் செய்ததே அந்த அற்புதமாகும்! இவ்வாறு தேவன் சிறந்த புருஷர்களை அனுப்பி, அவர்கள் மூப்பர்களாகவும், மேய்ப்பர்களாகவும் யாதொரு சம்பளமும் பெறாமல், இன்றுவரை பல தசாப்தங்களாக ஊழியம் செய்திட கிருபை செய்திருக்கிறார். இவ்வாறு எந்தவொரு மூப்பருக்கும் நாங்கள் சம்பளம் தராதபடியால் “வியாபாரநோக்க கிறிஸ்தவ ஊழியர்கள்” எங்களோடு சேர்ந்துவிடாதிருக்கும்படி தேவன் காத்துக்கொண்டார்! இன்றைய திரளான கிறிஸ்தவ சபைகளும் ஸ்தாபனங்களும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் “இவ்வித வியாபார-ஆதாய நோக்குடைய கிறிஸ்தவ ஊழியர்களின்” நிமித்தமாகவே உண்டாகிறது!!

தேசத்தின் பல்வேறு பகுதிகளில் சிதறியிருக்கும் எங்கள் காந்தங்கள், மிகப்பெரிய வைக்கோல் போரிலிருந்தும் உத்தமமான ஊசிகளை ஈர்த்துக்கொண்டுள்ளன! இனிவரும் நாட்களில், இன்னும் திரளானவர்களை தேவன் ஈர்த்துக் கொள்ளுவார் என்றே நாங்கள் நம்புகிறோம்!!

கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக!