அநேக ஜனங்கள் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டது மாத்திரம் போதும் என்று மகிழ்ச்சியாயிருக்கிறார்கள், அவ்வளவுதான். அத்தகைய ஜனங்கள் இயேசுவை தங்கள் இரட்சகராக அறியவில்லை; அவர்கள் அவரை மன்னிப்பவராக அறிந்திருக்கிறார்கள்.
கோபம் மற்றும் பாலிய இச்சைக்குரிய சிந்தனை என்னும் பாவங்களின் தீவிரத்தைப் பார்ப்பது மாத்திரமல்லாமல், அவற்றை எவ்வாறு நாம் ஜெயிக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ளும்படிக்கு, அப்பாவங்களை நாம் கவனமாகக் கருத வேண்டும். மலைப்பிரசங்கத்தில், ஒரு மனிதன் நரகத்திற்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் இயேசு தொடர்புபடுத்திய இரண்டு பாவங்கள் இவைதான் என்பதிலிருந்து அவற்றின் தீவிரம் காணப்படுகிறது. 99% கிறிஸ்தவர்கள் கோபம் ஒரு மிகக் கடுமையான பாவம் என்று உணரவில்லை என்பதே நான் பார்த்து அறிந்திருக்கும் கருத்தாகும். கோபம் அவர்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று அவர்கள் நிச்சயமாக உணரவில்லை. ஆகவே அவர்கள் மத்தேயு 5:22-ல் இயேசு கூறியதை உண்மையில் நம்புவதில்லை. இயேசு கிறிஸ்து கூறியதை நம்பவில்லை என்றால் அவர்கள் எப்படிப்பட்ட கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள்? கோபத்தைப் பற்றி அவர் கூறியதை நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது உளவியலாளர்களை நம்புகிறீர்களா? உளவியலாளர்கள் உங்களைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. அதேபோல், 99% கிறிஸ்தவர்களும், கண்களால் ஒரு ஸ்திரீயை இச்சிப்பது தங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் அளவுக்குத் தீவிரமானது என்று நம்புவதில்லை. பெரும்பாலான ஜனங்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இது, பிசாசு பாவத்தை எவ்வளவு இலகுவான, முக்கியமற்ற விஷயமாக ஆக்கிவிட்டான் என்பதற்கான சான்றாகும்.
எய்ட்ஸ் அல்லது புற்றுநோய் போன்ற ஒரு கொடிய நோயைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: எத்தனை பேர் எய்ட்ஸ் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்படுவதை எளிதாக எடுத்துக்கொள்வார்கள்? இத்தகைய நோய்கள் என்ன செய்ய முடியும் என்பதை முழுமையாக அறியாதவர்கள் மட்டுமே அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் ஒரு படிப்பறிவில்லாத ஏழைப் பெண்ணிடம், அவளுக்கு புற்றுநோய் இருப்பதாகச் சொன்னால், அவள் அதைக் குறித்து கவலைப்பட மாட்டாள், ஏனென்றால் அவளுக்குப் புற்றுநோய் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால், ஒரு படித்த நபரிடம், புற்றுநோய் அவனது உடலில் எங்கும் பரவியுள்ளதாக மருத்துவர் கூறினால் அவன் மிகவும் கலக்கமடைவான். அவன் ஏன் கலக்கமடைகிறான்? ஏனென்றால் அவன் புற்றுநோயின் ஆபத்தைப் பார்க்கிறான்.
அதேபோல், நீங்கள் ஆவிக்குரிய கல்வியறிவில்லாதவராக இருக்கும்போது, கோபத்தை ஒரு பெரிய பாவமாகக் கருதமாட்டீர்கள். நீங்கள் ஆவிக்குரிய கல்வியறிவில்லாதவராக இருக்கும்போது, ஸ்திரீகளை இச்சிப்பதை ஒரு பெரிய பாவமாகக் கருத மாட்டீர்கள். அந்தப் படிப்பறிவில்லாத பெண்ணுக்குப் புற்றுநோய் எவ்வளவு தீவிரமானது என்று தெரியாதது போல, இது உங்கள் ஆவிக்குரிய கல்வியறிவின்மையின் ஓர் அடையாளமாகவே இருக்கிறது. அதேபோல், ஆவிக்குரிய கல்வியறிவு பெற்ற ஒருவன் இப்பாவங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வான். அவனுக்குச் சொல்ல தேவனுடைய வார்த்தைகள் கூட தேவையில்லை, ஏனென்றால் இவை கடுமையான பாவங்கள் என்பதை அவன் உள்ளுணர்வாக அறிவான். ஏனென்றால், இவற்றில் ஒரு பாவம் மற்றவர்களைத் துன்புறுத்துகிறது, மற்றொன்று தன்னையே காயப்படுத்துகிறது. அதனால்தான் நாம் இந்தப் பாவங்களை இன்னும் கவனமாகப் பார்த்து, அவற்றை எவ்வாறு ஜெயிக்க முடியும் என்று கேட்க வேண்டும்.
மத்தேயு 1-ல், தேவதூதன் யோசேப்பிடம் வந்தபோது, அவன் புதிய ஏற்பாட்டின் முதல் வாக்குத்தத்தத்தைக் கொடுத்தான். மத்தேயு 1:21, “இயேசு தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்று கூறுகிறது. இயேசு என்ற நாமத்தின் அர்த்தம் அதுதான். இயேசுவின் நாமத்தைச் சொல்லும் பல ஜனங்களுக்கு அவருடைய நாமத்தின் அர்த்தம் கூடத் தெரியாது. மத்தேயு 1:21, “இயேசு” என்ற பெயருக்கு “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவர்” என்று பொருள் என்று நமக்குக் கூறுகிறது.
கோபம் மற்றும் பாலிய இச்சையின் சிந்தனை முறைகளைப் பொருத்தவரை, நமது பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதற்கும், நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் என்ன வித்தியாசம்?
நீங்கள் பாவமான முறையில் கோபப்பட்டு, பின்னர் அதற்காக மனந்திரும்பி, ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் உங்களை மன்னிப்பார். மறுநாள், நீங்கள் மீண்டும் பாவமான முறையில் கோபப்பட்டு, ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் உங்களை மன்னிப்பார். அடுத்த வாரம், நீங்கள் அதே காரியத்தைச் செய்து, அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் உங்களை மன்னிப்பார். அதேபோல், நீங்கள் ஒரு ஸ்திரீயை உங்கள் கண்களால் இச்சித்து, அது ஒரு பாவம் என்று உணர்ந்து, ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் உங்களை மன்னிப்பார். நாளை நீங்கள் மீண்டும் அதை செய்து, அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் உங்களை மன்னிப்பார். நீங்கள் இணையத்திற்குத் திரும்பி ஆபாசப் படங்களைப் பார்க்கிறீர்கள், ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள், அவர் உங்களை மன்னிப்பார்.
ஆனால் இந்தப் பாவங்களிலிருந்து நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? இல்லை. நீங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறீர்களா? ஆம். உங்கள் வாழ்க்கையின் முறை, ‘பாவம் செய்வது, ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்பது, மீண்டும் பாவம் செய்வது, ஆண்டவரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்பது’ என்பதாயிருக்கிறது. இது ஒரு முடிவற்ற வட்டம். நீங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறீர்களா? ஆம்! நீங்கள் ஆயிரம் முறை பாவம் செய்திருக்கலாம், உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன. ஆனால் உங்கள் பாவத்திலிருந்து நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? இல்லை, ஏனென்றால் நீங்கள் அதைச் செய்து கொண்டே இருக்கிறீர்கள்! அது, ஒரு குழியிலிருந்து வெளியே வந்து, மீண்டும் அதே குழிக்குள் விழுவது போன்றது; நீங்கள் யாரையாவது உங்களை குழியிலிருந்து வெளியே இழுக்கச் சொல்லுகிறீர்கள், அவர் உங்களை வெளியே இழுக்கிறார், பின்னர் அடுத்த நாள் நீங்கள் மீண்டும் அதே குழிக்குள் விழுகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் யாரையாவது உங்களை வெளியே இழுக்கச் சொல்லி, மீண்டும் குழிக்குள் விழுகிறீர்கள். இது எப்போது முடிவடையப்போகிறது?
இதுவரை இயேசு உங்களுக்காக என்ன செய்திருக்கிறார்? இயேசு உங்களை மன்னித்திருக்கிறார். அப்படியானால், “நான் இயேசுவை மன்னிப்பவராக அறிவேன், ஆனால் அவரை என் இரட்சகராக நான் அறியவில்லை. நான் அவரை என் பாவங்களை மன்னிப்பவராகவே அறிவேன், ஆனால் என் பாவங்களிலிருந்து என்னை இரட்சிப்பவராக அறியவில்லை” என்று நேர்மையாகக் கூறுங்கள். நாம் நேர்மையாக இருக்க வேண்டும். நாம் நம்மைக்குறித்து நேர்மையற்றவர்களாக இருந்தால், வேதம் நமக்கு வாக்குத்தத்தம் செய்ததை ஒருபோதும் முழுமையாக அடைய முடியாது. தேவன் நேர்மையானவர்களை நேசிக்கிறார். தேவனுக்கு முன்பாக நேர்மையாக இருந்து, “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை மன்னிப்பவராக மட்டுமே அறிந்திருக்கிறேன். உம்மை என் இரட்சகராக நான் அறியவில்லை” என்று நேர்மையாக அவரிடம் கூறும்படி நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.
ஒரு மரத்தில் இணைந்திராவிட்டால் கிளையானது தானாகக் கனி கொடுக்க முடியாது. ஒவ்வொரு கிளையும், 50 வருடங்கள் அந்த மரத்தில் இருந்தாலும் அது மரத்தை நோக்கி, “நீ இல்லாமல், என்னால் ஒரு கனியையும் கொடுக்க முடியாது; ஆனால் நான் உன்னில் நிலைத்திருந்தால், கனி கொடுப்பது எளிதானது” என்று தான் சொல்லும். ஒரு கிளை கனி கொடுப்பதற்குக் கஷ்டப்படுவதாக நினைக்கிறீர்களா? ஒரு மா மரத்தைப் பாருங்கள்: அதன் கிளையானது மாம்பழங்களை உற்பத்தி செய்ய கஷ்டப்படுகிறதா? இல்லை. ஆனால் அந்த மரத்தின் கிளையை நீங்கள் வெட்டிவிட்டால், அது 50 வருடங்களாக மாம்பழங்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தாலும், இப்போது அது உலர்ந்துபோய், கனி கொடுப்பதை உடனடியாக நிறுத்திவிடும். ஆனால், அது மரத்தில் இணைந்திருக்கும் வரை, மரத்தின் சாறு உள்ளே பாய்கிறது. அப்படித்தான் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுவே பாவத்தை ஜெயிப்பதற்கான கோட்பாடாகும். இதைத்தான் ஒவ்வொரு தேசத்திலும் சீஷனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் நாம் போதிக்க வேண்டியிருக்கிறது.
அன்பான நண்பர்களே, கிறிஸ்து இல்லாமல் எந்தப் பாவத்தையும் நீங்கள் ஜெயிக்க முடியாது என்பதை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். வெளிப்புற பாவங்களை நீங்கள் நிச்சயமாக ஜெயித்திட முடியும். ஆனால் அது எதை நிரூபிக்கிறது? உலகில் யாரையும் கொலை செய்யாத, உடல் ரீதியாக விபச்சாரம் செய்யாத ஏராளமான நாத்திகர்கள் இருக்கிறார்கள். கோப்பையின் வெளிப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க, உங்களுக்கு இயேசு கிறிஸ்து தேவையில்லை; நீங்கள் ஒரு நல்ல பரிசேயராக இருந்தால் போதும். ஒருபோதும் ஏமாற்றாத, நேர்மையான, துப்புரவான வெளிப்புற வாழ்க்கையைக் கொண்ட கிறிஸ்தவரல்லாதவர்களும், நாத்திகர்களும் கூட இருக்கிறார்கள். ஆனால் உள்ளான வாழ்க்கையைப் பொருத்தவரை, அவர்களுக்குள்ளே சீர்கேடு நிறைந்தவர்களாயிருக்கிறார்கள். உட்புற நேர்மை என்பது சுயக்கட்டுப்பாட்டை விட மேலானது. யோகாவின் சக்திகளால் கோபத்தை வெளிப்புறமாக வெளிப்படுத்துவதைத் தவிர்க்கலாம், ஆனால் அது விடுதலை அல்ல. அது விஷம் உள்ளே இருக்கும்படி பாட்டிலை இறுக்கமாக மூடும் செயலாகவே இருக்கிறது; அது இன்னும் உங்களை அழித்துக்கொண்டு தான் இருக்கிறது. அது கிறிஸ்து வழங்கும் விடுதலை அல்ல.
கிறிஸ்து, உள்ளத்திற்குள் இருக்கும் கோபத்திலிருந்து விடுதலையை வழங்குகிறார். நான் பாட்டிலைத் திறந்து பார்த்தால், அங்கே விஷம் இருப்பதில்லை. நீங்கள் என் இருதயத்திற்குள் பார்த்தால், அங்கே கோபம் இல்லை; அது நான் என் கோபத்தை இழக்காமல் இருக்க என் வாயை இறுக்கமாக மூடிக்கொள்வதற்கு எடுக்கும் பெரிய முயற்சியால் அல்ல. அப்படிச் செய்வது யோகாவின் விளைவே அல்லாமல் கோபத்திலிருந்து பெறும் விடுதலை அல்ல. கோபத்திலிருந்து விடுதலை என்பது நம் இருதயங்களுக்குள் இருக்கும் கோபத்திலிருந்து கிறிஸ்து நம்மை முற்றிலும் விடுவிக்கும் இடமாகும். அங்கே கோபம் முற்றிலும் போய்விட்டது. நீங்கள் அப்படிப்பட்டதோர் இருதயத்தின் உள்ளே பார்த்தால், அங்கே கோபம் இருக்காது. அந்த இருதயத்திற்குள் பார்த்தால், அங்கே ஸ்திரீகளை இச்சிப்பது இருக்காது. இயேசுவால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.