இந்த உலகத்தில் கடைசியாய் இருக்கும் அநேகர் தேவனுடைய பார்வையில் முதலாவதாய் காணப்படுகிறார்கள்.
இது ஓர் ஆச்சரியமான சத்தியம். இதைக் குறித்து இயேசு கூறிய ஏழு உவமைகளில் காண்கிறோம்:
1. மத்தேயு 20:1: பதினோராம் மணிக்கு வேலைக்கு வந்த, தங்கள் ஜீவியத்தின் 90% -த்தை (12 இல் 11 மணிநேரம்) வீணாக்கிய வேலையாட்கள் முதலாவதாக பலனைப் பெற்றார்கள்.
2. லூக்கா 15:22: இளைய குமாரன் தன் பங்காகிய தகப்பனின் 50% ஆஸ்தியை வீணாக்கி, தன் தகப்பன் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி இருந்தாலும், அவன் “உயர்ந்த வஸ்திரத்தையும்” “மோதிரத்தையும்” பெற்றான்! இந்த இரண்டையும் சுய-நீதியில் வாழ்ந்த மூத்த குமாரன் பெறவில்லை!
3. லூக்கா 7:41: அதிக பாவம் செய்தவன் (அதிகம் மன்னிக்கப்பட்டவன்) அதிக அன்புகூருகிறவனாய் (ஆண்டவருக்கு மிக நெருக்கமானவனாய்) மாறினான்!
4. மத்தேயு 21:28: முதலில் முரட்டாட்டம் செய்த மகன், தன்னுடைய சகோதரனைப்போல் அல்லாமல், முடிவில் தகப்பனுடைய சித்தத்தை நிறைவேற்றியவனாய் மாறினான்.
5. லூக்கா 15:3: காணாமல் போன ஆடு, மற்ற ஆடுகளைவிட மேய்ப்பனுக்கு மிக நெருக்கமாய், மேய்ப்பனின் தோளில் தூக்கி வரப்பட்டது.
6. லூக்கா 14:10: கல்யாண விருந்தில் தாழ்ந்த இடத்தில் உட்கார்ந்தவன் மிகவும் உயர்ந்த இடத்தில் அமரும் பாக்கியம் பெற்றான்.
7. லூக்கா 18:9: பாவியாகிய ஆயக்காரன், பரிசேயனைக் காட்டிலும் தோற்றத்தில் மோசமானவனாய் இருந்தாலும், அவனே ‘நீதிமான்' என தேவனால் அறிவிக்கப்பட்டான்.
இந்த உவமானங்கள் அனைத்தும் வழங்கிடும் ஒரே செய்தி என்னவென்றால், மோசமாய் துவங்கிய அநேகர், பந்தயப் பொருளைப் பெற்றவர்களாய் முடிவடைந்தார்கள்!
நாம் பந்தயத்தை எப்படித் துவங்குகிறோம் என்பதை விட, அதை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியமானதாகும். பவுலைப்போல், தங்கள் ஆரம்ப ஜீவியத்தில் மோசமாய் துவங்கியவர்கள் அதைரியமடையாமல் அல்லது தங்களை ஆக்கினைக்குட்படுத்தாமல் இருப்பார்களானால், ஆரம்பத்தில் நன்றாய் துவங்கின அநேகரை விட, முடிவில் முதன்மையான இடத்தை அடைவார்கள். தங்கள் ஜீவியத்தைத் தாறுமாறாக்கிக்கொண்ட அனைவருக்கும், இந்த செய்தி உற்சாகமளித்து, ஒருபோதும் மனச்சோர்வடையாமல், பந்தயத்தில் முன்னேறிச்செல்ல உதவுவது நிச்சயம்!
இயேசுவை சந்திப்பதற்கு முன்பாக, பவுல் தனது முதல் 30 ஆண்டு ஜீவியத்தைத் தாறுமாறாக்கிக்கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு, “ஒன்றையே நாடுவேன்” என அவர் தீர்மானித்தார்: தன்னுடைய கடந்தகாலத் தோல்விகளை மறந்து, இந்த பூமியில் எஞ்சியுள்ள குறைந்த காலத்தில் 'இயேசுவைப்போல் மாறவேண்டும்' என்ற அந்த ஒன்றையே முன்னால் வைத்து தொடர்ந்து ஓடினார் (பிலிப்பியர் 3:13,14). இதில், தேவன் அவரை அழைத்த ஊழியத்தின் நிறைவேறுதலும் அடங்கியிருக்கிறது. தன் ஜீவியத்தின் முடிவில் பவுல், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” என கூறினார் (2தீமோத்தேயு 4:7).
கொரிந்துவிலுள்ள மாம்சீக கிறிஸ்தவர்களிடம் பவுல், “பந்தயத்தின் முதல் பரிசை பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” என கூறினார் (1கொரிந்தியர் 9:24).
கிறிஸ்தவ ஓட்டத்தில், மனந்திரும்பி ஒரு தீர்மானமானத்துடனும் ஒழுங்குடனும் ஓடினால், அந்த மாம்சீகமான கிறிஸ்தவர்கள்கூட முதலிடத்தைப் பெற்றுவிட முடியும். தோற்றுப்போன ஒவ்வொரு கிறிஸ்தவரும், அவர்கள் மனந்திரும்பி, என்ன கிரயம் செலுத்தியாகிலும் கிறிஸ்துவைப்போல் மாறும் இலக்கை அடைந்திட ஓர் தீர்மானத்தோடு ஓடினால், அந்த இலக்கை பெற்றிட முடியும் என்ற நம்பிக்கையை மூப்பர்களாகிய நாம் அவர்களுக்குத் தந்திட வேண்டும்!