இஸ்ரவேல் தேசத்திற்கு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளில் கடைசியாக வந்தவர் யோவான் ஸ்நானன். மத்தேயு 3:2-இல் சொல்லப்பட்டிருக்கிற “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்பதே அவரது பிரதானமான செய்தியாயிருந்தது. மிக முக்கியமான ஒரு காரணத்திற்காக, அவர் இந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியுடன் வந்தார்.
மனந்திரும்புதல் என்றால் 180 டிகிரி திரும்புதல் என்பதாகும். “முழுமையாகத் திரும்புக” (About-turn) என்கிற இராணுவக் கட்டளையை இதற்குச் சிறந்த ஒப்புமையாக நான் கருதுகிறேன். ஒரு படைவீரன் நேராக முன்னோக்கி நிற்கும்போது, அணிவகுப்பு மைதானத்தில் சார்ஜென்ட் மேஜர், “முழுமையாகத் திரும்புக” என்று கூறும்போது, அந்தப் படைவீரன் உடனடியாக 180 டிகிரி திரும்பி, முன்னர் தான் முன்னோக்கின திசைக்கு முதுகைக் காட்டி, முன்னர் தான் முதுகைக் காட்டின திசையை நோக்கித் திரும்பி நிற்கிறான். இதுவே மனந்திரும்புதல் என்ற வார்த்தையின் ஒரு தெளிவான படத்தை நமக்குத் தருகிறது – முழுமையாகத் திரும்புதல். நாம் நம் மனதில் முழுமையாகத் திரும்ப வேண்டும். ஆங்கிலத்திலும் பெரும்பாலான மற்ற மொழிகளிலும், “ரிப்பென்ட்” (repent) என்ற வார்த்தை மிகத் தெளிவாக மொழிபெயர்க்கப்படவில்லை. ஆனால் தமிழ் மொழியில் அது மிகவும் தெளிவாக உள்ளது. தமிழில், “ரிப்பென்ட்(repent)” என்பதற்கு “மனம் திரும்புதல்” என்று தெளிவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, யோவான் ஸ்நானன் இஸ்ரவேல் தேசத்திற்குப் பிரசங்கித்தது “முழுமையாக மனதைத் திருப்புங்கள்” என்பதுதான்.
இஸ்ரவேல் தேசத்திற்குப் பூமிக்குரிய அநேகக் காரியங்கள் வாக்களிக்கப்பட்டன. திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டோ, பரலோகத்தில் பொக்கிஷத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டோ அல்லது பூமியிலே பரலோக வாழ்க்கையைப் பற்றியோ எந்த வாக்குத்தத்தமும் இல்லை. எல்லாமே பூமிக்குரியதாகவே இருந்தது.
பொருளாதாரச் செல்வச் செழிப்பும், உடல் ஆரோக்கியமும், ஏராளமான குழந்தைகளும், விவசாயம், வணிகம், கால்நடை வளர்ப்பு, பண்ணை ஆகியவற்றில் ஆசீர்வாதமும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை உபாகமம் 28-இல் நாம் தெளிவாகக் காண்கிறோம். அவர்கள் மிகவும் செழிப்பாக இருப்பார்கள் என்றும், அவர்கள் ஒருபோதும் கடனில் இருக்க மாட்டார்கள் என்றும், அவர்களின் பூமிக்குரிய எதிரிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் ஒரு பெரிய தேசமாக இருப்பார்கள் என்றும், கானான் (இஸ்ரேல் என்று பின்பாக அழைக்கப்பட்டது) என்கிற ஒரு தேசம் இருக்கும் என்றும் அவர்களுக்கு வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டன.
யோவான் ஸ்நானன் காலம் வரை இஸ்ரவேலருக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களும் பூமிக்குரியவைகளே. அவர்களுடைய முகம் எப்போதும் பூமிக்குரியவற்றை நோக்கியே இருந்தது. ஆனால் யோவான் ஸ்நானன் வந்து, “இப்போது மனந்திரும்புங்கள், இதிலிருந்து முழுமையாகத் திரும்புங்கள்; பூமிக்குரியவற்றை நோக்குவதை நிறுத்திவிட்டு மனந்திரும்புங்கள், ஏனென்றால் இப்போது ஒரு புதிய ராஜ்யம் வருகிறது. அதுதான் பரலோக ராஜ்யம். அங்கே, பூமிக்குரிய தேவைகள் இரண்டாம் பட்சமாகின்றன; உடல் ஆரோக்கியம் கூட இரண்டாம் பட்சமாகின்றன. தேவன் நமக்குப் பொருளாதாரத் தேவைகளை வழங்குவதால் பொருளாதார செழிப்பும் முக்கியமற்றதாகிறது. மனந்திரும்புங்கள், ஏனென்றால் இப்போது தேவன் உங்களுக்கு ஆவிக்குரிய செல்வத்தை, அதாவது பரலோக செல்வத்தைக் கொடுக்கப் போகிறார். தேவன் உங்களுக்குப் பிரதானமாக உடல் ரீதியான குழந்தைகளை அல்ல, ஆவிக்குரிய குழந்தைகளைத் தரப் போகிறார். நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளப் பிரதானமாக ஒரு பூமிக்குரிய நிலத்தை அல்ல, ஓர் ஆவிக்குரிய பரலோக நிலத்தைத் தரப் போகிறார். பரலோக ராஜ்யம் இன்னும் வரவில்லை, அது பெந்தேகொஸ்தே நாளில் வரவிருந்தது, அது சமீபத்தில் இருந்தபடியால் மனந்திரும்புங்கள்” என்று அவர் கூறினார்.
எல்லா தேசத்து ஜனங்களையும் தேவனைத் தங்களுடைய தகப்பனாக அறிந்துகொள்ளுகிற உறவுக்குள் கொண்டுவரும்படி தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு புதிய உடன்படிக்கைக்கான வழியை இயேசு திறக்கப் போகிறார். யோவான் ஸ்நானன் இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியாகவும் இருந்தார். மத்தேயு 4:12-13 வசனங்களில் யோவான் ஏரோதுவால் சிறைபிடிக்கப்பட்டதை நாம் வாசிக்கிறோம். இயேசு இதைக் கேட்டதும், அவர் கலிலேயாவை விட்டு வெளியேறி, தாம் முப்பது ஆண்டுகள் வளர்ந்து வாழ்ந்த நாசரேத்தை விட்டு வெளியேறி, கடலோரமாக இருக்கும் கப்பர்நகூமில் ஒரு வீட்டில் வந்து தங்கினார். பின்னர், அந்த நேரத்திலிருந்து, யோவான் ஸ்நானன் பிரசங்கித்த அதே செய்தியை இயேசு பிரசங்கிக்கத் தொடங்கினார். “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்” (மத்தேயு 4:17). யோவான், தொடர் ஓட்டப் பந்தயத்தின் முதல் கட்டத்தை ஓடி, இயேசுவிடம் தடியைக் (baton) கொடுத்தார்; அவர் “மனந்திரும்புங்கள்” என்ற அதே செய்தியை எடுத்துக் கொண்டார். இயேசு பரலோகத்திற்கு ஏறிச் சென்றபோது, அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுவின் கையிலிருந்து தடியை எடுத்துக்கொண்டு “மனந்திரும்புங்கள்” என்ற அதே செய்தியைப் பிரசங்கித்தார் என்று நாம் வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 2:38). “மனந்திரும்புங்கள், அப்பொழுது நமக்குள் இருக்கும் தேவனுடைய ராஜ்யமாகிய பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்று பெந்தேகொஸ்தே நாளில் அவர் ஜனங்களுக்குப் பிரசங்கித்தார், அப்பொழுது, இறுதியாக தேவனுடைய ராஜ்யம் வந்துவிட்டது.
யோவான் ஸ்நானனும் இயேசுவும் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பேசியபோது, அது வரப்போகிறது அல்லது அது சமீபித்திருக்கிறது என்று சொன்னார்கள். தமக்குள்ளே தேவனுடைய ராஜ்யம் ஏற்கனவே இருக்கிறதான உண்மையைக் குறிப்பிட்டு, தேவனுடைய ராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறது என்று இயேசு ஒருமுறை கூறினார். ஆனால் தேவனுடைய ராஜ்யம் அவரைச் சுற்றியிருந்த ஜனங்களுக்குள் இல்லை. அந்த 120 சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்திற்காகக் காத்திருந்த பெந்தேகொஸ்தே நாளிலே தான் நடந்தது. தேவனுடைய ஆவி அவர்களை நிரப்பினார்; தேவனுடைய ராஜ்யம் அவர்களுக்குள் வாசமாயிருக்க வந்தது. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் செய்கிறதான அந்த ராஜ்யத்தைத் தான், அந்தப் பரலோக ராஜ்யத்தைத் தான் (அல்லது தேவனுடைய ராஜ்யத்தைத் தான்) அவர்கள் அறிவித்தார்கள். துரதிர்ஷ்டவசமாக, இன்று அநேகக் கிறிஸ்தவ பிரசங்கியாளர்களால் பிரசங்கிக்கப்படுகிற சரீர சுகமும் பொருளாதார செழிப்பும் கொண்ட ஒரு வெளிப்புற ராஜ்யம் அல்ல. வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால், அது ஒரு வஞ்சனை, அது தேவனுடைய ராஜ்யம் அல்ல.
ஆனால் தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன? தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல என்று ரோமர் 14:17 கூறுகிறது. அது பொருளாதார செழிப்பு, சரீர சுகம் போன்ற பூமிக்குரிய ஒன்றல்ல - அது ஒரு பூமிக்குரிய ஆசீர்வாதமே அல்ல.
ரோமர் 14:17-இன் படி, தேவனுடைய ராஜ்யம் என்பது பரிசுத்த ஆவியினாலுண்டாகும் நீதியும், சமாதானமும் சந்தோஷமுமாயிருக்கிறது
இதுவே தேவனுடைய ராஜ்யம். இது உள்ளத்தில் நடக்கிற ஒரு காரியம். தேவனுடைய ராஜ்யம் நம்முடைய உள்ளத்தில் இருக்கிறது. அது பரிசுத்த ஆவியானவரின் மூலமாக கிறிஸ்துவின் ஜீவியம் நம்முடைய உள்ளத்தில் வருகிறதாகும். அது இப்பூமியின் வாழ்க்கையில் நம்முடைய உள்ளத்தில் பரலோக ஜீவனைக் கொண்டிருப்பதாகும்.
இனி வரும் நாட்களில், யோவான் ஸ்நானனின் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்போம்: “பூமிக்குரியவற்றை நோக்குவதை நிறுத்திவிட்டு, முழுமையாகத் திரும்புங்கள், ஏனென்றால் இப்போது ஒரு புதிய ராஜ்யம் வருகிறது, அங்குப் பூமிக்குரிய தேவைகள் இரண்டாம் பட்சமாகின்றன, உடல் ஆரோக்கியம் கூட இரண்டாம் பட்சமாகிறது. தேவன் நமக்குப் பொருளாதாரத் தேவைகளை வழங்குவதால் பொருளாதார செழிப்பும் முக்கியமற்றதாகிறது. முழுமையாகத் திரும்புங்கள் - இந்த உலகத்தை நோக்குவதை விட்டு மனந்திரும்புங்கள் - ஏனென்றால் இப்போது தேவன் உங்களுக்கு ஆவிக்குரிய செல்வத்தைத் தரப் போகிறார்.”
வாருங்கள், பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்போம்.