WFTW Body: 

யோபுவின் சரித்திரத்தில், அவன் தன்னுடைய சொத்துக்களையும், தன்னுடைய பிள்ளைகளையும், தன்னுடைய சுகத்தையும் இழக்கும்படி தேவன் அனுமதித்து எவ்வாறு அவனைக் குன்றின் படுகுழிக்கு கொண்டு வந்தார் என்பதைக் காண்கிறோம். ஒருவகையில் பார்த்தால், மனைவியையும் (தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டேயிருந்த மனைவி!) 3 - நல்ல நண்பர்களையும்கூட (தவறாய் புரிந்துகொண்டு யோபுவைக் குற்றம் சாட்டியவர்கள்) இழந்துவிட்டான்!! அவனுடைய நண்பர்கள் “சுயநீதி பிரசங்கிகளாய்” மாறி, “வீழ்ச்சியுற்றிருந்த யோபுவை உதைப்பதில்” பேரானந்தம் கொண்டார்கள்! யோபுவுக்கு தேவன் இறங்கி, இந்த நண்பர்களின் செயலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நாள் வரை யோபுவைத் தொடர்ந்து இவர்கள் உதைத்துக் கொண்டே தான் இருந்தார்கள்! இத்தனை நெருக்கங்களை தேவன் அனுமதித்திருந்தும், யோபுவோ திரும்பத் திரும்ப தன்னை நியாயப்படுத்திக் கொண்டேதானிருந்தான்! இறுதியில், கர்த்தர் யோபுவோடு பேசின பிறகுதான் யோபு தன்னிடமிருந்த சுய-நீதியின் கறையைக் கண்ணுற்று மனந்திரும்பினான். மெய்யாகவே, யோபு ஒரு நீதிமான்! அது நல்லதுதான்!! ஆனால் அவனோ அந்த நீதியில் பெருமை கொண்டிருந்தான்!..... ஆ, அதுதான் கொடிய தீமை!! ஆனால் தேவன் அவனோடு இடைபட்டப் பிறகோ, இந்த யோபு "ஓர் நொறுங்குண்ட மனிதனாகிவிட்டான்!” அந்த நொறுங்குண்ட நிலைக்குப் பிறகு அவன் தேவன் ஒருவருக்கே மகிமை செலுத்தத் துவங்கினான்!! இவ்வாறாகவே யோபுவின் மீது தேவன் கொண்ட நோக்கம் நிறைவேறியது.

யோபு நொறுங்குண்ட இடத்திற்கு வந்தவுடன் அவன் தேவனிடம் கூறிய வார்த்தைகளைச் சற்று கவனித்துப் பாருங்கள், “என் காதினால் உம்மைக் குறித்து (என்னைச் சூழ நிற்கும் பிரசங்கிகள் மூலமாய்) கேள்விப்பட்டேன். இப்போதோ என் கண் உம்மைக் காண்கிறது” (யோபு 42:5) என்றான். ஆ இந்த இடம்தான், “யோபுவின் பெனியேலாகும்!” யாக்கோபைப் போலவே, இவனும் தேவனுடைய முகத்தைக் கண்டு அதனிமித்தம், அவனுடைய ஜீவன் அழிவையடையாமல் பாதுகாக்கப்பட்டது. யோபுவுக்கு நிகழ்ந்த இந்நிகழ்ச்சி கொண்டு வந்த முடிவு என்ன? ஆம், இந்த யோபு தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பினான்! (யோபு 42:6). இந்த 4-பிரசங்கிகள் பல நாட்கள் தொடர்ந்து பிரசங்கித்து சாதிக்க முடியாததை தேவன் தம்முடைய தயவுள்ள அன்பை வெளிப்படுத்தி (தன் முகத்தைக் காண்பித்து) ஓர் இமைப்பொழுதில் தன் நோக்கத்தை யோபுவில் செய்து முடித்து விட்டார்!! கடைசியாக, இந்த தேவ தயவே யோபுவை உடைத்து, அவனை மனந்திரும்பும்படி நடத்திவிட்டது!!

நம்மில் அநேகர் “தேவனைப் பற்றி” கூட்டங்களில் பிரசங்கிகள் மூலமாய் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போது நமக்குத் தேவையாய் இருப்பதெல்லாம் தேவனுடைய முகத்தை நேருக்கு நேராய் சந்தித்து, அவர் நம்மீது கொண்ட தயவைக்கண்டு, அந்த தயவுள்ள அன்பினால் நொறுங்கி விடுவதேயாகும்! இதுதான் பேதுருவுக்கும் சம்பவித்தது. அவன் இயேசுவை 3 தடவை மறுதலித்த அடுத்தக் கணமே, தன் ஆண்டவரின் முகத்தைப் பார்த்து விட்டான்! இவ்வாறாகவே “பேதுருவும் தன்னுடைய பெனியேலைக்" கண்டடைந்துவிட்டான்! “அப்பொழுது கர்த்தர் திரும்பி பேதுருவை நோக்கிப் பார்த்தார்” (லூக்கா 22:61) என்ற இந்த இனிய வசனம் எத்தனை பரவசமுள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள். அவர் திரும்பிப் பார்த்தது, “இவ்வாறு என்னை மறுதலிப்பாய் என்று முன்பே நான் உன்னை எச்சரித்தேன் அல்லவா” எனக் கூறுவதாயில்லாமல், அந்த அன்பின் பார்வை, “இந்த மோசமான நிலையிலும், நீ இருக்கும் வண்ணமாகவே உன்னை நான் அன்புகூருகிறேன். நீ என்மீது கொண்ட விசுவாசத்தை மாத்திரம் இழந்துவிடாதே! அது போதும், இந்த வீழ்ச்சியிலிருந்து உன்னை நான் மீட்டுக் கொள்வேன்” எனக் கனிவுடன் கூறுவதாகவே இருந்தது!! இவ்வாறு ஆண்டவர் பேதுருவைச் சந்தித்ததால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா? “அவன் வெளியே போய், மனங்கசந்து அழுதான்!” (லூக்கா 22:62) என்ற இனிய நிகழ்ச்சியேயாகும். இயேசுவிடம் அவன் சந்தித்த கனிவான அன்பும், தயவான மன்னிப்பும் இந்த முரட்டு மீனவனின் இருதயத்தை நொறுங்கச் செய்து விட்டது! அல்லேலூயா!! பழைய உடன்படிக்கையில் தேவன் இஸ்ரவேலருக்கு சுகத்தையும், செல்வத்தையும் மற்றும் பல பொருளாதார ஆசீர்வாதங்களையும் தருவதாகவே வாக்குத்தத்தம் செய்திருந்தார். ஆனால் இந்த ஆசீர்வாதங்கள் எல்லாவற்றிற்கும் சிகரமான அதி உன்னதமான ஓர் ஆசீர்வாதத்தை எண்ணாகமம் 6:22-26 வசனங்களில் நாம் காண்கிறோம். இந்த வசனங்களில், ஜனங்களை ஆரோன் எவ்வாறு ஆசீர்வதிக்க வேண்டுமென தேவன் அவனுக்கு கட்டளை கொடுத்திருந்தார். அந்த உன்னதமான ஆசீர்வாதம் என்னவெனில், “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்கு சமாதானம் கட்டளையிடக்கடவர்” என்பதேயாகும்.

இவ்வாறு நம்முடைய முழு ஜீவியத்தையும் மறுரூபப்படுத்தும் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் சிகரமான “தேவனை முகமுகமாய் சந்திக்கும் ஆசீர்வாதத்தை” இன்றைய கிறிஸ்தவர்கள் தேடாமல் ... சாதாரண அற்ப ஆசீர்வாதங்களாகிய சரீர சுகத்தையும், செல்வத்தையும் நாடித் தேடுவது பரிதாபமல்லவா! இப்பூமியில் நாம் ஒருபோதும் ஐஸ்வர்யவான்களாய் ஆகாதிருந்தும், சுகம் கிடைக்காதிருந்தும்...... ஆண்டவருடைய முகத்தை மாத்திரம் தரிசிக்கக் கூடுமென்றால், அது ஒன்றே போதும்! நம் தேவைகள் எதுவானால் என்ன? அத்தனையையும் "அது ஒன்றே” பூர்த்தி செய்து விடும்!

யோபு தேவனைச் சந்தித்தபோது அவன் சரீரம் முழுவதும் பருக்கள் உடையவனாகவே இருந்தான்! ஆனால் என்ன ஆச்சரியம், அவனோ தேவனிடம் தனக்கு சுகத்தைக் கேட்கவேயில்லை!! அதற்கு மாறாக “என் கண்களால் அவரை நான் கண்டேன் அது ஒன்றே எனக்குப் போதும்!” என்றல்லவா கூறி விட்டான். யோபுவைச் சூழ இருந்த 3 - பிரசங்கிகள் தங்களுக்கு ஏதோ “பகுத்தறியும் வரம்” இருப்பது போலவும் “தேவனுடைய வார்த்தை தங்களுக்கு உண்டானது போலவும்” யோபுவைப் பார்த்து, அவனுடைய ஜீவியத்தில் “இரகசிய பாவங்கள்” இருக்கிறபடியால் தேவன் அவனைத் தண்டித்திருக்கிறார் என்றே கூறிவிட்டார்கள். இவ்வாறு "கர்த்தர் சொல்லுகிறார்” என தங்களுக்குத் தாங்களே தீர்க்கதரிசிகளாய் நியமித்துக் கொண்ட அநேகர் பொய்யான செய்திகளைக்கூறி, தேவனுடைய ஜனத்தை மிகுந்த ஆக்கினையின் கட்டுக்குள்ளாக வைத்து விடுகிறார்களே! ஆனால் தேவனோ இந்த 3 - பிரசங்கிகளைப் போல் யோபுவிடம் சிறிதேனும்கூட பயமுறுத்தும் வார்த்தைகளைக் கூறவேயில்லை!!

மேலும் தேவன் யோபுவிடம் அவனுடைய தோல்விகளைக் குறித்தோ அல்லது தன்னுடைய நெருக்கத்தின் மத்தியில் தேவனிடத்தில் முறுமுறுத்து குறைகூறிய அவனுடைய வார்த்தைகளையோ அவனுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தவேயில்லை! மாறாக தன்னுடைய அன்பையும் மனதுருக்கத்தையுமே யோபுவுக்கு அவர் வெளிப்படுத்தினார். ஆம், மனுஷனுடைய மகிழ்ச்சிக்காகவே அவர் சிருஷ்டித்த அழகான அண்டசராசரத்தில் தன்னுடைய கனிவான அன்பை தேவன் வெளிப்படுத்தியிருக்கிறாரே! மனுஷனுக்குக் கீழாக அடங்கியிருக்கும்படி சிருஷ்டித்த பிராணிகளில் அவருடைய அன்பைக் காண்கிறோமே!! இவ்வாறு தேவனுடைய அன்பைக் குறித்து யோபு கண்ட வெளிப்பாடே அவனை மனந்திரும்புதலுக்கு நேராய் நடத்தியது. இன்று அநேகர் தேவனுடைய கனிவான அன்பை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு துர்பிரயோகம் செய்வதையே நாம் எங்கும் காண்கிறோம். ஆனால் அதே தேவ அன்பு, யோபுவை மனந்திரும்புதலுக்கே நடத்தியது. இதைக் கண்ணுற்ற ஆண்டவர், ஆரம்பத்தில் அவன் பெற்றிருந்தயாவற்றிலும் 2-மடங்காய் கூட்டி வழங்கி அவனை ஆசீர்வதித்துவிட்டார்!

யாக்கோபு 5:11-ல் வாசிக்கிறபடி, “நம்மைத் தேவன் நொறுக்குவதற்கு சித்தங்கொண்ட அவரது முடிவான நோக்கம், நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதுதான்!!” அவனுடைய சுயநீதியையும், அவனுடைய பெருமையையும் சிதறச் செய்வதின் மூலம் அவனை ஓர் நொறுங்குண்ட மனிதனாகச் செய்து..... அதன் மூலமாய் தன்னுடைய முகத்தை அவன் காணும்படி கடாட்சித்து அவனை சம்பூரணமாய் ஆசீர்வதிக்க வேண்டுமென்பதே, தேவன் யோபுவைக் குறித்து தன் மனதில் கொண்டிருந்த இலக்காய் இருந்தது! தேவன் நமக்குத் தந்தருளின பொருளாதார மற்றும் சரீரப்பிரகாரமான ஆசீர்வாதங்களின் பின்னணியில் “அவருடைய முகத்தை” நாம் காணத் தவறினால், இந்த ஆசீர்வாதங்களே நம்மைத் தேவனிடமிருந்து விலகச் செய்து முற்றிலுமாய் அழித்துப்போடும். இவ்வாறு பொருளாதார ஆசீர்வாதத்தின் மூலமாய் தேவனிடமிருந்து தூர விலகிப்போன விசுவாசிகள் இன்று நம்மைச் சுற்றிலும் ஏராளம் ஏராளமாய் இருக்கிறார்கள்!

ஆண்டவர் முகத்தின் ஒரே ஒரு தரிசனம், இந்த உலகம் வாரி வழங்கும் எண்ணற்ற ஏக்கங்களிலிருந்து நம்மை பூரணமாய் விடுதலை செய்து விடுமே!