WFTW Body: 

"திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவும் தக்கதாக ஒரு மனுஷனைத்(One Man) தேடினேன், ஒருவனையும்(Not Even One Man) காணேன்" (எசேக்கியேல் 22:30) என தேவனுடைய அங்கலாய்ப்பை வாசிக்கிறோம். இவ்வுலக சரித்திரத்தில், இஸ்ரவேலரின் சரித்திரத்தில், சபையின் சரித்திரத்தில், அனேக சமயங்களில் தேவன் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக "ஒரு மனிதனை" சார்ந்து கொண்டார் என காண்கிறோம். ஒரே ஒருவன் தானா? என நாம் கேட்கலாம். ஆனால், அந்த ஒரு மனிதன் தேவனோடு சேர்ந்து நிற்கும் பொழுது, பெரும்பான்மை (majority) ஆகி விடுகிறான்! ஆ, இது ஆச்சரியம்!

நோவா: நேவாவின் காலத்தில், உலகம் முழுவதும் தேவனுக்கு விரோதமான பொல்லாங்கினால் நிறைந்திருந்த வேளையில், தேவனுக்குப் பயந்து வாழ்ந்த 8 பேர் இருந்தார்கள்! இருப்பினும், தேவன் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு ஒரே நபராகிய நோவாவின் உத்தம ஜீவியத்தையே முழுமையாக சார்ந்து கொண்டார்!! அந்நாட்களில் நோவா மாத்திரமே கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்ற ஒரே மனிதனாய் இருந்தான் (ஆதியாகமம் 6:8). இந்த ஒரே ஒரு மனிதனும் தேவனுக்கு உண்மையற்றவனாய் இருந்திருந்தால் முழு மனுவர்க்கமுமே அழிக்கப்பட்டிருக்கும்! இன்று நம்மில் ஒருவர் கூட உயிரோடு இருந்திருக்கமாட்டோம்!! ஆகவே தன் உத்தமத்தில் நிலைத்திருந்த இந்த ஒரு மனிதன் நோவாவிற்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்லக்கடவோம்.

மோசே: இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமையாய் இருந்தபோது, தன்னுடைய ஸ்தானத்தில் நிற்கத் தரமுடைய ஒரு மனிதன் கிடைக்கும் வரை அவர்களை அவர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவனால் முடியவில்லை. அந்த ஒரு மனிதன் உருவாகும்வரை தேவன் பொறுமையுடன் காத்திருக்க ஆயத்தமாய் இருந்தார்! ஒரு சமயம் மோசே இஸ்ரவேலர்களை விட்டு 40 நாட்கள் மாத்திரமே வெளியிடத்திற்கு (சீனாய் மலைக்கு சென்று விட்டபடியால், சுமார் 20 லட்சம் ஜனங்கள் வழிவிலகி சோரம் போய்விட்டார்கள் (யாத்திராகமம் 32). ஒரு தேவமனிதன் அச்சமயம் அவர்களோடு வெறும் 40 நாட்கள் இல்லாதபடியால் முழுதேசமும் மெய் தேவனை புறக்கணித்து சோரம் போய் விக்கிரகங்களை வணங்கிடும் பரிதாப நிலைக்கு சென்றுவிட்டது!

யோசுவா: "யோசுவாவின் சகல நாட்களிலும் யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் இஸ்ரவேலர்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்" (நியாயாதிபதிகள் 2:7) என வேதம் யோசுவாவின் சீரிய தலைமையை எடுத்துச் கூறுகிறது. யோசுவாவின் நிலைப்பாட்டின் தாக்கம் மிகவும் வல்லமையாய் இஸ்ரவேலர்கள் மேல் இருந்ததினால், யோசுவாவின் வாழ்நாளிலும், சக மூப்பர்களின் வாழ்நாளிலும் விக்கிரகங்களை வணங்க இஸ்ரவேலர்கள் துணியவில்லை. ஆனால் யோசுவா மரித்த பின்பு இஸ்ரவேலர்கள் மிக மோசமாய் வழிவிலகிப் போனார்கள். இவையாவும், ஒரே ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையே நமக்குக் காட்டுகிறது.

எலியா: ஒரே ஒரு “நீதிமான் எலியா செய்த ஊக்கமான ஜெபமே கேட்கப்பட்டது! அதுவே மிகுந்த பெலனுள்ளதாய் இருந்தது!!" என வேதம் கெம்பீரிக்கின்றது (யாக்கோபு 5:17,16). உண்மைதான், தனி மனிதனாய் நின்ற ஒரே ஒரு எலியா ஒரு முழு தேசத்தையும் தேவனிடத்திற்குத் திருப்பினான்! பொல்லாங்கு நிறைந்த சத்துவங்களை அழித்துப்போட்டான்!! ஒருவர் பாக்கியில்லாமல் எல்லா பாகால் தீர்க்கதரிசிகளையும் கொன்று குவித்தான்!!!

எலிசா: எலியாவின் நாட்களில் 50- "தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள்" (வேதாகம கல்லூரி மாணவர்கள்) இருந்தார்கள். இவர்கள் அனைவருமே தாங்கள் ஒரு நாள் இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாய் மாறுவோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். ஆனால், கர்தருடைய ஆவியானவரோ அவர்கள் அனைவரையும் கடந்து சென்று "தீர்க்கதரிசியின் புத்திரன் அல்லாத" எலிசாவின் மீதே வந்து இறங்கினார் (2இராஜாக்கள் 2:7,15). யார் இந்த எலிசா? இந்த எலிசா "எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த" இஸ்ரவேலின் ஒரு சாதாரண வேலைக்காரனேயாவான் (2இராஜாக்கள் 3:11).

தானியேல்: யூதர்களை பாபிலோனிலிருந்து எருசலேமுக்குள் நடத்திச்செல்ல தேவன் விரும்பிய போதும் அவருக்கு ஒரு மனிதன் தேவைப்பட்டான்.... தானியேலை கண்டுபிடித்தார்!! தன் வாலிப நாட்களிலிருந்தே தானியேல் உண்மையுள்ளவனாய் இருந்து எல்லா சோதனைகளின் ஊடாக கடந்து சென்று ஜெயத்தின் “மின்மினுங்கும் ஜொலிப்போடு" பிரகாசித்தான். இதற்கெல்லாம் காரணம், ஒரு வாலிபனாய் பாபிலோனில் தானியேல் இருந்தபோது கர்த்தருக்காக எடுத்து கொண்ட ஒரு உறுதியான தீர்மானமே ஆகும். “தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான்" (தானியேல் 1:8). இந்த அருமையான வசனத்தை வாலிபர்கள் அனைவரும் தங்களுக்கென சவாலாய் எடுத்துக் கொள்ளகடவர்கள்! அந்நாட்களில் இருந்த யூத வாலிபர் அனைவரும் ராஜாவின் போஜனத்தை (லேவியராகமத்தில் தேவன் தடை செய்த போஜனத்தை) இராஜாவுக்கு பயந்து ' அனைவரும் புசித்தார்கள். அந்த ராஜ போஜனத்தை புசிப்பதற்கு தானியேல் ஒருவன் மாத்திரமே மறுத்து நின்றான்! இவ்வாறு போஜன பந்தியில் தானியேல் எடுத்த உறுதியான தீர்மானத்தைக் கண்ணுற்ற மூன்று வாலிபர்கள் தாங்களும் தானியேலோடு சேர்ந்து கொண்டார்கள். இதன் பின்பு, தானியேலும் இந்த மூன்று வாலிபர்களும் பாபிலோனில் தேவனுக்கு வலிமையான சத்துவங்களாய் மாறினார்கள்.

பவுல்: எந்த சபையைக் காட்டிலும் எபேசுவில்தான் பவுல் அதிகமாய் பிரயாசப்பட்டார். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக “ஒவ்வொரு நாளும் " "தேவனுடைய முழு ஆலோசனைகளையும் " பவுல் கருத்தாய்ப் பிரசங்கித்தார் (அப்போஸ்தலர் 20:31). அனைத்து சபைகளை காட்டிலும் இச்சபை மிகவும் பாக்கியம்பெற்றவை. அவர்களுக்கு பவுல் எழுதிய நிருபத்தில் உள்ள மேலான சாத்தியத்தின் போதனைகளை பார்க்கும்போது, இச்சபை ஆவிக்குரிய சிந்தனையுள்ள சபையாக இருந்தது என்பதைக் உணர்த்துகிறது. இதனிமித்தமாய், சபையிலுள்ள ஏராளமான விசுவாசிகள் “புதிய உடன்படிக்கையின் ஜீவியத்திற்குள்” பிரவேசித்திருப்பார்கள் என நாம் எண்ணக்கூடும். ஆனால், அந்தோ.. அங்கிருந்த "மூத்த சகோதரர்கள் இந்த உன்னத வாழ்விற்குள் பிரவேசிக்காமலேதான் இருந்தார்கள்! தனக்குப் பின்பு எபேசு சபையில் என்ன நடக்கும் என பவுல் அப்போஸ்தலர் 20:29,30-ல் நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன் என்று கூறினார். அவர் கூறியவைகள் உண்மையிலேயே தீர்க்கதரிசனமாய் அமைந்துவிட்டது. பவுல் எபேசு சபையில் இருந்த நாட்களில், எந்த ஒரு “ஓநாயும்" சபைக்குள் பிரவேசிக்க முடியவில்லை. அவ்வளவாய் பவுல் தன் மந்தைக்கு விழிப்புள்ள மேய்ப்பனாயும், கர்த்தருடைய வீட்டிற்குக் கண்டிப்பான காவலனாயும் இருந்தார்.

ஒவ்வொரு சந்ததியிலும் கர்த்தருடைய நாமத்திற்கு தூய்மையுள்ள சாட்சி எழும்ப தேவனுக்கு அவசியமாயிருக்கிறதே! இன்று நம் சந்ததியிலும் அவர் தனக்கு தூய்மையான சாட்சியை உருவாக்கும்வரை ஓயவேமாட்டார்! இந்த சந்ததியில், உங்களை நீங்கள் தேவனுக்கு முழுமையாகத் தந்து விலைக்கிரயம் செலுத்த ஆயத்தம்தானா?!