பழைய ஏற்பாட்டின் ஆசரிப்புக் கூடாரத்திலே வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்று மூன்று பிரிவுகள் இருந்தன. அவை மூன்றும் பூரண சுவிசேஷத்தின் மூன்று பகுதிகளைக் குறிக்கின்றன.
வெளிப்பிரகாரத்திலே, பலிபீடமும், தண்ணீர் (கழுவதற்காக) தொட்டியும் இருந்தன. பலிபீடம் என்பது 'கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டார்' என்னும் செய்தியைக் கூறுகின்றது. தண்ணீர் தொட்டியானது நம்முடைய ஜீவியத்தின் வெளிப்பிரகாரமான சுத்திகரிப்பையும் (எபி 10:22), தண்ணீர் ஞானஸ் நானத்தின் போது மறுஜென்ம முழுக்கைப் (தீத்து3:5) பற்றி நாம் சாட்சி பகருவதையும் (அப் 22:16) குறிப்பிடுகின்றது. இதுவே கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல் நிலையாகும். இந்த நிலையில் ஒருவன் தன்னுடைய பாவங்களுக்கான ஆக்கினைத் தீர்ப்பைச் சுமந்து கொண்ட இயேசுவைத் தன் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, தண்ணீரில் ஞானஸ்நானம் பெறுகின்றான்.
வெளிப்பிரகாரமானது, இஸ்ரவேலர் அனைவருக்கும் திறந்து விடப் பட்டிருந்தாலும் ( புற ஜாதிகளுக்கு அல்ல), பரிசுத்த ஸ்தலமானது, கர்த்தருடைய ஊழியத்தைச் செய்து வந்த ஆசாரியர்களுக்கு மட்டுமே திறந்திருந்தது. பழைய ஏற்பாட்டைப் பொறுத்த வரை, ஒரு தீர்க்கதரிசியாகவோ, ஆசாரியனாகவோ, ராஜாவாகவோ கர்த்தருக்கென்று ஊழியம் செய்வதற்கு 'பரிசுத்த ஆவியின் அபிஷேகம்' என்பது மிக இன்றியமையாதத் தேவையாக இருந்தது. இந்த அபிஷேகத்திற்கு நிகராக எந்த ஒரு மனுஷீகத் தகுதியும் மாற்றாக இருக்க முடியவில்லை. இயேசுவாலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமல் வெளியரங்கமான ஊழியத்துக்குள் காலடி எடுத்து வைக்க முடியவில்லை. ஆண்டவரும் தம்முடைய பிள்ளைகளை இந்த 'வெளிப் பிரகாரத்திலிருந்து' முன்னேற்றமடையச் செய்து, அவருக்கு ஊழியம் செய்வதற்காக நம்மை ஆவியின் அபிஷேகத்தையும், ஆவியின் வரங்களையும் பெற்றுக் கொள்ளும் எல்லைக்குள் நடத்த விரும்புகிறார். பரிசுத்த ஸ்தலத்துக்குள் மூன்று தட்டுமுட்டு சாமான்கள் இருந்தன. அவையாவன: 1.குத்து விளக்கு - இது கிறிஸ்துவுக்காக சாட்சிகளாக இருப்பதற்குத் தேவையான வல்லமையை அருளும் அபிஷேகத்தைக் குறிக்கின்றது (அப் 1:8). 2. தேவ சமூகத்து அப்பங்களின் மேஜை - இது வார்த்தையின் வெளிப்பாட்டைத் தரும் அபிஷேகத்தைக் குறிக்கின்றது (2 கொரி 3:18). 3. தூப பீடம்- இது ஜெபிப்பதற்கு உண்டான வல்லமையை அருளும் ஆவியின் அபிஷேகத்தைக் குறிக்கின்றது (ரோம 8:26,27). நாம் இக்கட்டத்தை எட்டிவிட்டால், நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் இரண்டாம் நிலையை அடைந்து விட்டதாகக் கொள்ளலாம். இது பாவ மன்னிப்பையும், தண்ணீர் ஞானஸ்நானத்தையும் பெற்று விட்டதைக் கடந்து, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்ட நிலையாகும்.
மகாப் பரிசுத்த ஸ்தலமானது, ஆசரிப்புக் கூடாரத்தில் தேவ மகிமை வாசம் செய்யும் பகுதியாகும். புதிய எருசலேமைப் போலவே (இது சபையைக் குறிக்கின்றது), இதுவும் ஒரு கனச்சதுர வடிவம் கொண்டது. அதாவது, "நீளம், அகலம், உயரம் அனைத்தும் சமம்" (வெளி 21:16). ஒருவனும் - ஆசாரியன் கூட - மகாப் பரிசுத்த ஸ்தலத்தக்குள் நுழைய அனுமதிக்கப் படவில்லை. பிரதான ஆசாரியன் கூட ஜனங்களின் பாவ நிவிர்த்திக்காக வருடத்திற்கு ஒரு முறைதான் போக முடிந்தது. எந்த மனிதனும் தேவனுடைய சந்நிதிக்குள் பிரவேசிக்கச் செய்கிறதான வழியானது இன்னும் திறக்கப் படவில்லை என்ற உண்மையையே இது வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது (எபி 9:8). இதன் மூலமாக நாம் கற்று கொள்ளுகிறதான பாடம் என்னவெனில், பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த மிக நல்ல பரிசுத்தவான்கள் கூட தங்களது ஆவிக்குரிய அனுபவத்திலே பரிசுத்த ஸ்தலத்தைத் தாண்டிப் போக முடியவில்லை என்பதேயாகும்.
புதிய உடன்படிக்கைக்குக் கீழ், திரையினூடே கடந்து சென்று மகாப் பரிசுத்த ஸ்தலத்தை அடையும் வழியானது திறக்கப்பட்டுள்ளது. நாம் எபிரேயர் 10:19,20 ஆகிய வசனங்களில், "மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணின படியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது " என்று சொல்லப்படுகிறது. ஆசரிப்புக் கூடாரத்தின் மாதிரியின்படியே கட்டப்பட்ட எருசலேம் தேவாலயத்திலும் பரிசுத்த ஸ்தலத்தையும், மகாப் பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் திரை இருந்தது. இயேசு கல்வாரியிலே மரித்த போது, இத்திரையானது மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது (மத் 27:50,51). இந்நிகழ்வானது, இயேசுவால் அவரது மாம்சத்தில் செய்து முடிக்கப்பட்ட கிரியை முக்கியப்படுத்துகிறது. தேவபக்தியின் இரகசியமானது, 1 தீமோ 3:16 -ல் நமக்குச் சொல்லப்பட்டபடி, கிறிஸ்து மாம்சத்திலே வெளிப்பட்டு, ஆவியிலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார் என்பதை அறிவதிலேயே அடங்கியுள்ளது. இப்படியாக மகாப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும் வழியானது நமக்கு முன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மனுஷனுடைய சுய சித்தந்தான், தேவனுடைய சந்நிதிக்குள் நுழைய முடியாமல் தடை செய்கிற தடித்தத் 'திரையாகும்'. இயேசு தமது பூலோக வாழ்க்கை முழுமையும் சுய சித்தத்தை மறுத்து வாழ்ந்தார். இப்படியாக வாழ்ந்ததின் நிமித்தமே, அவரால் தன்னுடைய ஆவியை சுத்தமாகக் காத்துக்கொள்ள முடிந்தது. " நாமும் நம்முடைய மாம்சத்தை (சுய சித்தத்தை) அதன் ஆசை இச்சைகளோடே சிலுவையில் அறைந்தால்" (கலா 5:24), அவரைப் போலவே நம்மாலும் இந்த வழியிலே நடக்க முடியும். அப்போது நாமும் இயேசுவைப் போலவே எந்நேரமும் மகாப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வாசம் பண்ண முடியும்.
ஒருவன் இந்த மகாப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் என்று பிரவேசிக்கிறானோ, அன்றுதான் அவன் கிறிஸ்த ஜீவியத்தின் மிக உயர்ந்த நிலையான மூன்றாவது நிலையை அடைகிறான். இந்த மகாப் பரிசுத்த ஸ்தலத்துக்குள், தேவன் மாத்திரமே வாசம் செய்கிறார். இங்கு வாசம் பண்ணுகிறவர்கள் தேவனோடு சஞ்சரித்து ஜனங்களிடமிருந்து விடுதலையடைந்து வாழ்கிறார்கள். அவர்கள் மனுஷருடைய கனத்தையும், ஏன், ஆவிக்குரிய தலைவர்களுடைய கனத்தைக் கூட, உதறித் தள்ளிவிடுகிறார்கள். இவர்கள் மனம் புண்படுவதிலிருந்தும், குறை சொல்லுவதிலிருந்தும், முறுமுறுப்பிலிருந்தும், கசப்பிலிருந்தும், பொறாமையிலிருந்தும் விடுதலை அடைந்தவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் இயேசுவைப் போலவே யாரை வேண்டுமானாலும் நேசிப்பதற்கு விடுதலையாய்க் காணப்படுகிறார்கள். பதிலுக்கு தாங்கள் நேசிக்கப்படுகிறோமோ இல்லையா என்பது இவர்களைப் பொறுத்த மட்டில் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.
இப்பொழுது இவர்கள் செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய கனத்தை மாத்திரமே தேடுகிறார்கள். உதாரணமாக, கூட்டங்களிலே ஜெபிக்கும்போதும், பேசும்போதும் ஜனங்களைப் பற்றிய உணர்வை விடத் தேவனைப் பற்றிய உணர்வையே அதிகமாகக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தேவனுக்குப் பயப்படுவதின் விளைவாக, இவர்களுடைய உள்ளான (அந்தரங்க) வாழ்க்கையானது, வெளியரங்கமான வாழ்க்கையைப் போலவே சுத்தமுள்ளதாக இருக்கிறது.
இந்த இடத்தில் சஞ்சரிக்கும் மனிதர்கள், மனுஷருக்கு முன்பாக மேன்மையாக உள்ள அனைத்தும் தேவனுக்கு முன்பாக அருவருப்பானவை என்பதைக் கண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் கிறிஸ்துவுக்குள்ளாக தேவனுடைய சுபாவத்துக்கு ஒப்பாகும் சிலாக்கியத்தைக் கண்டு அதற்கு முன்பாக மற்ற எல்லாமே குப்பை என்று கருதுபவர்கள். இவர்கள் பாவத்தின் மீது வெற்றியுள்ள வாழ்க்கையை எட்டிப் பிடித்து, தேவ வல்லமையினால் வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கப்பட்டு, தேவனுடைய மகிமையில் அதிகதிமாக பங்கடைகிறவர்கள். இவர்கள் எப்பொழுதும், எல்லாவற்றிற்காகவும் ஸ்தோத்திரம் பண்ணி, தாங்கள் செய்கிற எல்லாவற்றையும் தேவனுடைய முகத்திற்கு முன்பாகவே செய்து வாழ்கிறவர்கள்.
மகாப் பரிசுத்த ஸ்தலத்திற்குள் சஞ்சரிக்கும் பேறு பெற்றவர்கள், ஆத்துமத்துக்குரியது (மனுஷீகமானது) எது என்றும், ஆவிக்குரியது (தெய்வீகமானது) எது என்றும் பகுத்தறிவதிலே அதிகதிகமாய்த் தேர்ச்சியடைகிறார்கள்.
மகாப் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளேதான், ஜனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, சரீரமாக உருவெடுத்து இயங்க ஆரம்பிக்கிறார்கள். இது வெறும் கூட்டமாய் கூடுகிறதற்கு எதிர்மாறானாது. மகாப் பரிசுத்த ஸ்தலத்திற்குள் தனிநபரிசம் கிடையாது. இங்கு வாழுகிற ஒருவரும் தனக்கென்று வாழுவது இல்லை. இங்கு வாழுகின்ற ஒவ்வொருவரும் தொடர்ச்சியான பலியாகவே இருப்பதால், தேவன் அப்படிப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு ஆவிக்குரிய அதிகாரத்தை ஈந்து, கிறிஸ்துவின் சரீரமாக அந்தந்தப் பகுதிகளிலே இயங்கச் செய்கிறார். இந்த வகையான வாழ்க்கையை வாழுகிற மக்களைக் குறிப்பிட்டுத்தான், 'ஒருமனப்பட்டவர்கள்' என்றும், அவர்கள்தான் பிதாவிடமிருந்து எதையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் என்றும், சாத்தானின் வல்லமையை தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்டுகிறவர்கள் என்றும் சொன்னார் (மத் 18:18-20).
ஒவ்வொரு சபைக்கூட்டத்திலுள்ள கிறிஸ்தவர்களிலும், பெரும்பான்மையானவர்கள், வெளிப் பிரகாரத்திலேயே தங்கி, சுவிசேஷ செய்திக்கு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கீழ்ப்படிந்தவர்களாய்க் காணப்படுகிறார்கள். இன்னும் சிலர் சற்று முன்னேறி, பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்படுகிற பரிசுத்த ஸ்தலத்துக்குள் சென்றடைகிறார்கள். இவர்களெல்லாரும் சுவிசேஷ செய்திக்கு மூன்றில் இரண்டு பங்கு பிரதியுத்தரம் சொன்னவர்களாவர். ஆனால் ஒரு சபையின் ஆவிக்குரிய அதிகாரமும், அதன் செயலாக்கமும் (தேவனைப் பொறுத்தவரை) எத்தனை நபர்கள் மகாப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்திருக்கிறார்கள் (பூரண சுவிசேஷத்திற்கு முற்றிலும் பிரதியுத்திரம் சொன்னவர்கள்) என்பதைப் பொறுத்துத்தான் அளக்கப்படுகிறது. திரையின் வழியாகப் பிரவேசித்தவர்களைக் கண்டுதான் சாத்தான் அஞ்சி நடுங்குகிறான். அவன் விசுவாசிகளின் கண்களை பூரண சுவிசேஷத்தைக் காண முடியாமல் குருடாக்கிப் போட்டதற்கான காரணமும் இதுதான். மகாப் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நிரந்தரமாகத் தங்கித் தாபரிக்கிறவர்களை மையக்கருவாகக் கொண்ட சபைக் கூட்டமே, ஆவிக்குரிய மரணத்தை விளைவிக்கிற சக்திகளிடமிருந்து பாதுகாக்கப்பட்டு, ஜீவனுக்குரிய வழியிலே நிலைநிற்கும்.