மத்தேயு 4:9-இல், சாத்தான் உலகத்தின் அனைத்து இராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் ஒரு நிமிடத்தில் இயேசுவுக்குக் காண்பித்து, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்துகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று கூறினான். அதைத்தான் அவன் எப்போதுமே விரும்பினான்; அந்த விருப்பமே அவனைப் பிசாசாக மாற்றியது. மனிதன் படைக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தேவனால் படைக்கப்பட்டவனாயும், அழகாகவும், ஞானம் நிறைந்தும், உலகில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவனாயும் தேவதூதர்களின் தலைவனாகவும் இருந்தவன் அவன். ஏசாயா 14 மற்றும் எசேக்கியேல் 28-இல் இந்தப் பிரதான தேவதூதனின் வரலாற்றை நாம் படிக்கிறோம். அவனுடைய பெயர் என்னவென்று நமக்குத் தெரியாது; அவன் விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறான் (ஏசாயா 14:12). இது லத்தீன் மொழியில் “லூசிபர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே அந்தப் பட்டம் அவனுக்கு நிலைத்துவிட்டது, ஆனால் அது அவனுடைய பெயர் அல்ல. அவனுடைய பெயர் நமக்குத் தெரியாது; ஆனால் தேவதூதர்களின் தலைவனாயிருந்த இவன், தேவதூதர்கள் தேவனை வணங்காமல் தன்னை வணங்க வேண்டும் என்று விரும்பினான். ஏசாயா 14-இல், “உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்று அவன் கூறுகிறான். பாவம் இப்படித்தான் தோன்றியது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: அதாவது, ஒருவன் தான் ஆராதிக்கப்பட விரும்பிய போது, தேவனுக்கு எதிராகக் கலகம் செய்ய விரும்பிய போது, இருதயம் பெருமையில் மேலோங்கி, தேவதூதர்கள் தன்னைப் போற்ற வேண்டும் என்று விரும்பிய போது தான் பாவம் தோன்றியது.
இதுதான் பாவத்தின் பிறப்பிடம். உலகில் முதல் பாவம் கொலையோ அல்லது விபச்சாரமோ அல்லாமல் மற்றவர்கள் தன்னைப் போற்றிப் புகழ வேண்டும் என்கிற ஆசையே ஆகும். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால், நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் உங்களை ஒரு கிறிஸ்தவர் அல்லது ஒரு பிரசங்கி என்று அழைத்துக்கொண்டாலும், ஜனங்கள் கிறிஸ்துவைப் போற்றாமல் உங்களைப் போற்ற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், சாத்தான் நடந்த அதே வழியில் தான் நீங்கள் நடக்கிறீர்கள். இது ஒரு ஆபத்தான இடமாகும். ஏனென்றால், அது முடிவாக நரகத்திற்கே வழிவகுக்கிறது. முன்பு சாத்தானால் மற்றவர்களுடைய ஆராதனையைப் பெற முடியவில்லை; அவனோ பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான். ஆனால் இப்போது அவன் அதை மீண்டும் பெற முயற்சிக்கிறான். “விழுந்து, என்னைப் பணிந்து கொள்” என்று சாத்தான் கூறுகிறான். ஆனால் இயேசு, “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” (மத்தேயு 4:10) என்று கூறினார். நாம் பணிந்து கொள்ள வேண்டியது ஒருவரை மட்டுமே. புகழ்பெற்ற மனிதர்களையும், தேவனுடைய மாபெரும் ஊழியர்களையும் பணிந்து கொள்ளும் தவற்றை நாம் செய்யக் கூடும். வெளி 22:8-இல், மாபெரும் அப்போஸ்தலனாகிய யோவான் கூட இந்தத் தவற்றைச் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்ட அற்புதமான விஷயங்களைக் கண்ட பிறகு, அவர் ஒரு தேவதூதனைக் கண்டார்; அந்தத் தூதனை வணங்குவதற்காகக் கீழே சாஷ்டாங்கமாக விழுந்தார். இவ்வளவு காலமாக கர்த்தரை அறிந்திருந்த, 95 வயதான அப்போஸ்தலன் யோவான், தேவனுடைய வல்லமையான தேவதூதனை வணங்கும் தவற்றைச் செய்வதைக் கற்பனை செய்து பாருங்கள். அப்படியிருக்க, நம்மில் யாராக இருந்தாலும் அந்தத் தவற்றைச் செய்யக் கூடும். தேவனுடனான நமது உறவு ஒரு வல்லமையுள்ள தேவ ஊழியர் மூலமாக மட்டுமே இருக்கும் என்ற அளவுக்கு நாம் அந்த ஊழியரைப் போற்றக்கூடாது.
ஒரு பிரசங்கியோ அல்லது போதகரோ தேவனுக்கும் மனுஷருக்கும் இடையில் இரண்டாவது மத்தியஸ்தராக இருக்க நாடும் பட்சத்தில், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் தேவனுடைய சித்தத்தை மனிதர்களுக்குத் தெரிவித்தார்கள். ஆனால், புதிய உடன்படிக்கையில், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரே ஒரு மத்தியஸ்தர் மட்டுமே இருக்கிறார்; அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. கிறிஸ்துவுக்கும் உங்களுக்கும் இடையில் இரண்டாவது மத்தியஸ்தராக இருக்க உங்களுக்கு ஒரு போதகரோ, பிரசங்கியோ அல்லது வேறு எந்த தேவ மனிதனோ அல்லது மரியாளோ அல்லது வேறு யாருமோ தேவையில்லை. நீங்கள் நேரடியாக இயேசுவிடம் சென்று அவர் மூலமாக பிதாவிடம் செல்லலாம். ஆனால் யோவான் செய்தது போல நாமும் அந்தத் தவற்றைச் செய்யக் கூடும். வெளிப்படுத்தின விசேஷம் 22-இல், இந்த வல்லமையான தேவதூதனின் உண்மைத் தன்மையையும் நாம் காண்கிறோம். அவன், “தேவனைத் தொழுதுகொள்” என்று கூறுகிறான்.
மற்ற கிறிஸ்தவர்கள் தங்களைப் பற்றிக்கொள்ள அனுமதிக்காமல், அவர்களைத் தள்ளி வைத்து, “என்னைப் பற்றிக்கொள்ளாதீர்கள்; கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ள நாடுங்கள்” என்று கூறும் பிரசங்கிகளும், போதகர்களும், கிறிஸ்தவத் தலைவர்களும் எங்கே? அப்படிப்பட்ட நபர் தான் நீங்கள் எந்த பயமும் இல்லாமல் பின்பற்றக்கூடிய உண்மையான ஒரு தேவ மனிதன் – நீங்கள் தன்னைப் பற்றிக்கொள்ள அனுமதிக்க மறுத்து, உங்களுக்காக தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிக்க மறுத்து, “தேவன் உங்கள் பிதா. அவரிடம் நேரடியாகச் செல்லுங்கள். அவர் தமது சித்தத்தை உங்களுக்குக் காண்பிப்பார்” என்று உங்களுக்குச் சொல்லும் நபர். ஏனென்றால், எபிரெயர் 8:11-இல் உள்ள தேவனுடைய புதிய உடன்படிக்கை வாக்குத்தத்தம் என்னவென்றால், “அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்க வேண்டுவதில்லை.” அதாவது, கிறிஸ்துவுக்குள் புதிதாகப் பிறந்த குழந்தை முதல் மிகப்பெரிய வல்லமை மிக்க தேவ ஊழியர் வரை, அனைவரும் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிய முடியும். எனவே தேவதூதன் கூறும் போது, “நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஓர் ஊழியக்காரன் தான்; தேவனைத் தொழுதுகொள்” என்றான்.