WFTW Body: 

கடந்த வாரம், தேவனுடைய மாபெரும் கட்டளையை முழுமையாக நிறைவேற்றுவதின் அர்த்தம் என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தோம்: சுவிசேஷம் சொல்லப்படாத பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்பது மாத்திரம் அல்லாமல் இயேசு கட்டளையிட்ட யாவையும் செய்ய கவனமாக இருக்கும் சீஷர்களை உருவாக்குவதே தேவனுடைய மாபெரும் கட்டளையை முழுமையாக நிறைவேற்றுவதாகும்.

அவரோடுகூட திரளான ஜனங்கள் வருவதை இயேசு கண்டபோது, அவர் அவர்களிடமாய்த் திரும்பி, யாரிடமும் பேசியிராத சில கடினமான வார்த்தைகளைக் கூறினார் என்று பார்த்தோம்.

அநேக போதகர்களும் பிரசங்கிமார்களும் தங்களது பிரசங்கத்தைக் கேட்க திரளான கூட்டம் வருவதைக் கண்டால், ஒருவரும் கனவில் கூட இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசமாட்டார்கள். இங்கே தான் இயேசு வித்தியாசப் படுகிறார். அவர் எண்ணிக்கையில் விருப்பமுடையவராய் இருக்கவில்லை. இந்நாட்களில் வெகு சில கிறிஸ்தவப் பிரசங்கிமார்களே எண்ணிக்கையில் விருப்பம் கொள்ளாதிருக்கிறார்கள். இங்கே லூக்கா 14 -ஆம் அதிகாரத்தின் முடிவு வரையுள்ள வசனங்களில் இயேசு தரத்தை முக்கியத்துவப் படுத்துவதைக் காண்கிறோம்.

தமக்கு சீஷர்கள் வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆகவே அவர் அவர்களிடமாய்த் திரும்பி, “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” என்று கூறினார். நீங்கள் இரண்டாம் தரமான சீஷனாக இருக்க முடியும் என்றெல்லாம் அல்ல; நீங்கள் சீஷனாகவே இருக்க முடியாது.

இங்கே சீஷத்துவத்தின் முதல் நிபந்தனையைப் பார்க்கிறோம். நாம் தகப்பனையும் தாயையும் கனம் பண்ண வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இயேசு இங்கே “வெறுக்க” வேண்டும் என்று கூறியதின் அர்த்தம் என்ன? இது ஓர் ஒப்பீட்டளவிலான வாக்கியமாகும்.

இயேசு சில சமயங்களில் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். உதாரணமாக, “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு,” “உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு.” “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது எளிதாயிருக்கும்.” “நீங்கள் என்னுடைய மாம்சத்தைப் புசியாமலும், என்னுடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்கு நித்திய ஜீவனில்லை.” இப்படி, பல கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ஆனால், அவர் பேசிய வார்த்தைகள் ஆவியும் ஜீவனுமாய் இருந்தது. நாம் கிறிஸ்துவின்மீது பாராட்டுகிற அன்புடன் ஒப்பிடும்போது, பூமிக்குரிய பெற்றோர்கள், உறவினர்கள் மீதுள்ள நமது அன்பு, இருளுக்கும் ஒளிக்கும் உண்டான வித்தியாசத்தை போல இருக்க வேண்டும்.

ஓர் உதாரண விளக்கத்தைப் பயன்படுத்த வேண்டுமானால், உங்கள் பெற்றோர், மனைவி, குழந்தைகள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் மீதான உங்கள் அன்பு நட்சத்திரங்களின் ஒளியைப் போல இருக்குமானால், இயேசு கிறிஸ்துவின் மீதான உங்கள் அன்பு சூரியனின் ஒளியைப் போல இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் போது நட்சத்திரங்கள் எல்லாம் அப்படியே இருளடைகின்றன. அவை அங்கே தான் இருந்தபோதிலும் அவற்றில் ஒளி மறைந்து போகிறது. அது தான் இதற்கு அர்த்தம். வெறுக்க வேண்டும் என்றால் என் பெற்றோர்களுடைய நேசம் காணாமல் போகிறது. அந்த நேசம் அங்கே தான் இருக்கிறது ஆனால் அது மறைந்து போகிறது. இயேசுவை நான் நேசிக்கிற நேசம் பிரகாசமான சூரிய ஒளியைப் போல இருக்கிறது; மற்றவை எல்லாம் இருளைப் போல மாறுகிறது.

நம்முடைய குடும்பத்தின் மேலுள்ள அன்பு, கிறிஸ்துவின் மேலுள்ள அன்பிற்கு ஒப்பிடுகையில் அது வெறுப்பிற்கு சமமாய் இருக்கிறது. நம்முடைய பெற்றோர்களோ, உறவினர்களோ, சகோதர சகோதரிகளோ தேவன் நம்மை என்ன செய்ய அழைக்கிறாரோ அதைச் செய்வதற்குத் தடையாயிருக்க அனுமதிக்க கூடாது, என்றும் இது பொருள்படும்.

ஆகையால், நம் பெற்றோரைக் காட்டிலும், மனைவியைக் காட்டிலும், பிள்ளைகளைக் காட்டிலும், சொந்த சகோதர சகோதரிகளைக் காட்டிலும், உறவினர்களைக் காட்டிலும், சபையிலுள்ள சகோதர சகோதரிகளைக் காட்டிலும், நம் ஜீவனைக் காட்டிலும் கிறிஸ்துவை பிரதானமாய் நேசிக்க வேண்டும் என்பதே சீஷத்துவத்தின் முதலாம் நிபந்தனையாயிருக்கிறது. சுவிசேஷ ஊழியமும், மிஷனெரி ஊழியமும் கிறிஸ்தவர்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறது என்று உங்களால் கூறமுடியுமா?

“மறுபடியும் பிறந்திருக்கிறேன்” என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் இப்படிப்பட்ட நிலைக்கு வந்து விட்டார்கள் என்று கூறமுடியுமா? நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறேன் என்று கூறுகிறீர்களே, நீங்களே இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்களா? “இந்த பூமியில் உள்ள மற்ற எல்லாவற்றையும் விட கிறிஸ்துவை மிக அதிகமாக நேசிக்கிறேன்” என்று நேர்மையாக உங்களால் கூறமுடியுமா? கடந்த அரை நூற்றாண்டில் பல நாடுகளில் உள்ள விசுவாசிகளை நான் கவனித்ததில், அது உண்மையாக இல்லை என்று அறிவேன். பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, “என் பாவங்கள் முழுவதும் மன்னிக்கப்பட்டு, நான் பரலோகத்திற்குச் செல்கிறேன்” என்று பாடுகிறார்கள், ஆனால் அவர்கள் சீஷர்களாக மாறவில்லை.

அடுத்த வாரம், சீஷத்துவத்தின் இரண்டாவது நிபந்தனையை நாம் தியானிப்போம்.