வெளிப்படுத்தின விசேஷம் 14-ஆம் அதிகாரம், முதல் 5 வசனங்களில்(வெளி 14:1-5), தங்கள் உலக வாழ்வில் கர்த்தரை முழு இருதயத்துடன் பின்பற்றின சீஷர்களின் ஒரு சிறு கூட்டத்தைப் பற்றிப் படிக்கிறோம். கடைசி நாளில் இவர்களே ஜெயங்கொண்டவர்களாய் இயேசுவுடன் நிற்கிறார்கள்! தேவன் தம்முடைய முழு நோக்கத்தையும் அவர்களில் நிறைவேற்ற முடிந்தது!!
பாவமன்னிப்பு பெற்றவர்களின் பெருந்திரளோ ஒருவரும் எண்ணக்கூடாததாய் இருந்தது. அதை நாம் வெளி 7:9,10-இல் இவ்வாறு காண்கிறோம்:
“இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.”
ஆனால் இந்த சீஷர்களின் கூட்டமோ அதைவிட பன்மடங்கு சிறிய ஒன்றேயாகும்! இதை எண்ணிவிட முடியும் - 144,000. அந்த எண்ணிக்கையானது எழுத்தின்படியான எண்ணிக்கையோ அல்லது ஒரு குறியீடு மட்டுமோ என்பது முக்கியமல்ல. கருப்பொருள் என்னவென்றால், பெரும் கூட்டத்துடன் ஒப்பிடும்போது இது மிகச் சிறிய எண்ணிக்கையாகும்.
பூமியின்மேல் தேவனுக்கு உண்மையும் உத்தமமுமாய் இருந்த மீதியானவர்கள் இவர்களே. இவர்களே சோதிக்கப்பட்டு தேவனுடைய நற்சான்றிதழைப் பெற அங்கீகாரம் பெற்றவர்கள்! இவர்களைக் குறித்து தேவனே, “தங்களை கறைப்படுத்தாதவர்கள்..... ஆட்டுக்குட்டியானவர் எங்கு சென்றாலும் பின்பற்றுகிறவர்கள்....., இவர்கள் வாயிலே கபடம் காணப்படவில்லை...... மாசில்லாதவர்கள்” என்று நற்சான்று வழங்குகிறார்!! (வெளி 14:4,5).
இவர்களே தேவனுக்கு முதற்பலனானவர்கள்! இவர்களே கிறிஸ்துவின் மணவாட்டியும் ஆவர்! ஆட்டுக்குட்டியானவரின் கலியாண நாளிலே, சிறிதும் பெரிதுமான எல்லாக் காரியத்திலும் இவர்கள் தேவனுக்கு முற்றிலும் செம்மையும் உண்மையுமாய் இருந்தது தகும் என்பது, அன்று ஒவ்வொருவருக்கும் தெளிவாகும்.
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன் (வெளி 19:7), என்பது அந்த நாளில் பரலோகத்தில் காணப்படும் ஆரவாரமாயிருக்கும்.
தங்களுக்கானதைத் தேடி உலக இலாபத்தை தேடுபவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பதையும் அந்த நாளில்தான் முழுவதும் உணருவார்கள். தங்களுடைய தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ, பிள்ளைகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ கர்த்தரைக் காட்டிலும் அதிகமாய் நேசிப்பவர்கள் அந்த நாளில் தங்கள் நித்திய இழப்பைக் கண்டுகொள்வர்!
அந்த நாளில், இயேசுவின் கட்டளைகளுக்குப் பூரணமாய்க் கீழ்ப்படிந்து, அவர் நடந்தது போலவே தாங்களும் நடக்க முழுமனதுடன் நாடினோரே பூமியின்மேல் மிகவும் ஞானமுள்ளவர்கள் என்பதும் வெளிப்படும்! கிறிஸ்தவத்தின் போலி மரியாதைகள் மெய்யாகவே குப்பைகள் தான் எனவும் அந்த நாளில் தெளிவாய் காணப்படும்!! நாம் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருப்பதற்குத் தகுதி பெற்றிருக்கிறோமா என்று பணம் மற்றும் பொருள் சார்ந்த விஷயங்களின் மூலமாக தேவன் நம்மைச் சோதிக்கிறார் என்பதை அப்போது நாம் காண்போம்.
ஓ... அந்தநாளில் நாம் காணப்போகும் நிதரிசனமான சிலவற்றை இப்போதே தெளிவாகக் காணும்படி நமது கண்கள் திறக்கப்படட்டும்!
ஒரு மனுஷன் எக்காலத்தும் அடையக்கூடிய மிகப்பெருங் கௌரவம், தேவனாலே சோதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டவனாகி, கிறிஸ்துவின் மணவாட்டியாகப் பங்கடைவதேயாகும்!
காதுள்ளவன் கேட்கக்கடவன்!! ஆமென்.