WFTW Body: 

கல்வாரி சிலுவையிலே நடந்த தெய்வீக பரிமாற்றத்தின் மூன்று காரியங்களைக் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் - அந்த மூன்று காரியங்களில், இயேசு நமக்காய் என்னவாக மாறினார் என்பதையும் அதன் விளைவாக நாம் இப்பொழுது அவருக்குள் என்னவாக மாற முடியும் என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

(1) நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, கிறிஸ்து நமக்காகப் பாவமானார் (2 கொரிந்தியர் 5:21).

இதுவே விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படுதல் என்னும் மகிமையான சத்தியம். தேவனுடைய தரங்களை எட்டும் அளவிற்கு தாங்கள் ஒருபோதும் நீதியுள்ளவர்களாக மாற முடியாது என்பதை உணருகிற தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் அருளும் இலவசமான ஈவு இது. இயேசு நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை சுமந்தது மாத்திரமன்றி, அவர் மெய்யாகவே நமக்காகப் பாவமானார். இது இயேசுவுக்கு எவ்வளவு மோசமான அனுபவமாயிருந்தது என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக, ஒரு பன்றி அசுத்தத்தோடு இருக்கப் பழகியிருப்பதைப் போல நாமும் பாவத்தோடு இருக்கப் பழகிவிட்டோம். பாவத்தின்மேல் இயேசு கொண்டிருந்த வெறுப்பைச் சிறிதளவு புரிந்துகொள்ள, ஒரு நிரம்பின மனிதக்கழிவுத் தொட்டியில் (septic tank) குதித்து, அதில் உள்ள அசுத்தத்தோடும் சாணத்தோடும் நிரந்தரமாக நாம் கலந்திருப்பதைப் போன்று நினைத்துப் பாருங்கள். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, அவர் எதை வெறுத்தாரோ அதுவாகவே அவர் மாறினார் என்பது அவரது அன்பின் ஆழத்தை நமக்குச் சிறிதளவு சித்தரிக்கிறது. பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே பூமியிலுள்ள மிகச் சிறந்த பரிசுத்தமான மனிதனுடைய நீதியை விடத் தேவனுடைய நீதி உயர்ந்திருக்கிறது. தேவனுடைய முகத்தைப் பாவமில்லாத தேவதூதர்களும் பார்க்க முடியாது (ஏசாயா 6:2,3). ஆனால் நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறபடியால், நம்மால் காண முடியும். பாவத்தின் அகோரத்தை நாம் காணும்போது, இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த பாவத்தை நாம் வெறுக்கத் தொடங்குவோம். மேலும் கிறிஸ்துவுக்குள் நாம் என்னவாக மாறியுள்ளோம் என்பதைக் காணும்போது, தேவனுக்கு முன்பாக நாம் பூரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்பதில் மகிழ்ச்சி அடைவோம்.

(2) நாம் ஐசுவரியவான்களாகும்படிக்கு கிறிஸ்து நமக்காகத் தரித்திரரானார் (2 கொரிந்தியர் 8:9).

இந்த வசனத்தின் சூழலைப் பார்க்கும்பொழுது, அது பூமிக்குரிய தரித்திரத்தையும் பூமிக்குரிய ஐசுவரியத்தையும் குறித்துப் பேசுகிறது என்பதை நமக்குக் காட்டுகிறது. "கிறிஸ்து ஐசுவரியமுள்ளவராயிருந்தும்" என்று இந்த வசனம் நமக்குச் சொல்கிறது. ஐசுவரியமுள்ளவராக இருப்பதின் அர்த்தம் என்ன? ஐசுவரியமுள்ளவராக இருப்பது என்பது அதிகமான பணத்தையும் அதிகமான சொத்துக்களையும் கொண்டிருப்பதைக் குறிக்காது, மாறாக நம்முடைய தேவைகளுக்குப் போதுமானதையும், மற்றவர்களுக்கு உதவிசெய்து அவர்களை ஆசீர்வதிக்கத் தேவையான உபரியையும் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இதனையே நாம் அனைவரும் கொண்டிருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். "ஒரு குறைவுமில்லை" (எந்தவொரு தேவையுமில்லை) என்பதையே ஐசுவரியமென்று வெளிப்படுத்தல் 3:17 விவரிக்கிறது. அப்படித்தான் தேவன் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார். தேவனிடம் வெள்ளியோ, தங்கமோ, அல்லது ஒரு வங்கிக் கணக்கோ இல்லை. அவரிடம் ஒரு பணப்பைகூட இல்லை. ஆனால் அவருக்கு ஒரு குறைவுமில்லை. இயேசு, இப்பூமியில் இருந்தபொழுதும் இவ்விதமாக ஐசுவரியமுள்ளவராக இருந்தார். ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, ஏறக்குறைய 5000 பேரைப் போஷிக்க முடிந்தது. ஒரு ஐசுவரியவான் மட்டுமே இன்று இவ்விதமாகச் செய்ய முடியும். வரிகளைச் செலுத்த அவரிடம் பணம் இருந்தது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஜனங்கள் தங்கள் வங்கிகளிலிருந்து பணத்தை எடுத்து வரிகளைச் செலுத்துவார்கள், ஆனால் அவர் ஒரு மீன் வாயிலிருந்து எடுத்துச் செலுத்தினார். தரித்திரருக்குக் கொடுக்க அவரிடம் போதுமான பணம் இருந்தது (யோவான் 13:29). அவர் இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் தரித்திரராக இருக்கவில்லை, ஏனென்றால் அவருக்கு “எந்தவொரு குறைவுமில்லை”. ஆனால் அவர் சிலுவையிலே தரித்திரரானார். நாம் கண்டிருக்கிற மிகவும் ஏழ்மையான பிச்சைக்காரன் கூட குறைந்தது அவனுடைய சரீரத்திற்கு ஒரு கந்தை துணியையாவது கொண்டிருப்பான். இயேசு சிலுவையிலே அறையப்பட்டபோது கந்தை கூட அவரிடம் இல்லை. அவர் மரித்தபொழுது மெய்யாகவே தரித்திரரானார். ஏன் அவர் சிலுவையிலே தரித்திரரானார்? நாம் ஐசுவரியவான்களாகும்படிக்கு, அதாவது நம்முடைய வாழ்வின் எந்த நேரத்திலும் “எந்தவொரு குறைவுமில்லாமல் இருக்கும்படிக்கு”, கிறிஸ்து நமக்காகத் தரித்திரரானார். நாம் விரும்புகிற எல்லாவற்றையும் தருவேன் என்று தேவன் நமக்கு வாக்குத்தத்தம் கொடுக்கவில்லை. ஞானமுள்ள பெற்றோர்களும் கூட தங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் அனைத்தையும் கொடுப்பதில்லை. ஆனால் நம்முடைய குறைவையெல்லாம் நிறைவாக்குவேன் (தேவைகளையெல்லாம் சந்திப்பேன்) என்றுதான் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் (பிலிப்பியர் 4:19). முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடினால், இப்பூமியில் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் எப்பொழுதுமே பெற்றிருப்போம். (மத்தேயு 6:33)

(3) ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதத்தை (பரிசுத்த ஆவியைக் குறித்த வாக்குத்தத்தத்தை) நாம் பெறும்படியாக கிறிஸ்து நமக்காகச் சாபமானார் (கலாத்தியர் 3:13,14).

நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியாமற்போனால் வருகிற சாபங்களைக் குறித்து உபாகமம் 28:15-68 விவரிக்கிறது - சஞ்சலம் (குழப்பம்), நீங்காத கொடிய ரோகங்கள் (குணப்படுத்த முடியாத நோய்கள்), நீங்காத பெரிய வாதைகள், தொடர்ச்சியான தோல்விகள், குருட்டாட்டம், புத்திமயக்கம் (பைத்தியம்), மற்றவர்களால் சுரண்டப்படுவது, சத்துருவிடம் (சாத்தானிடம்) பிள்ளைகளை இழப்பது, கடுமையான தரித்திரம் போன்ற சாபங்கள். இவைகள் எதுவுமே நமக்கு இல்லை, ஏனென்றால் இயேசு நமக்காகச் சாபமானார். இருப்பினும், இந்த சாபத்திற்குப் பதிலாக நமக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதம், உபாகமம் 28:1-14ல் விவரிக்கப்பட்டுள்ள "அதிகமான பணமும் அநேக பிள்ளைகளையும்" கொண்ட நியாயப்பிரமாணத்தின் ஆசீர்வாதம் அல்ல, மாறாக ஆதியாகமம் 12:2,3ல் விவரிக்கப்பட்டுள்ள "கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து, நாம் சந்திக்கிற ஒவ்வொரு நபருக்கும் நம்மை ஆசீர்வாதமாக மாற்றுகிறார்" என்கிறதான ஆபிரகாமின் ஆசீர்வாதமே ஆகும். பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருப்பதின் மூலமாக இந்த ஆசீர்வாதம் நமக்கு வருகிறது - ஒரு கிணற்றுத் தண்ணீரைப்போல நமக்குள்ளே ஊறுகிற நீரூற்றாயிருந்து நம்மை ஆசீர்வதிக்கிறார் (யோவான் 4:14), அதன் பிறகு நதிகளின் தண்ணீரைப்போல நம்முடைய உள்ளத்திலிருந்து புரண்டோடி மற்றவர்களை ஆசீர்வதிக்கிறார் (யோவான் 7:37-39). மிகவும் கொடிய பாவிக்கும் கூட கர்த்தருடைய வாக்குத்தத்தம் இதுவே: "கடந்தகாலத்தில் சாபமாயிருந்ததுபோலவே, வருங்காலத்தில் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்க முடியும்" (சகரியா 8:13ல் இந்த அற்புதமான வாக்குத்தத்தத்தை மனப்பாடம் செய்யுங்கள்).

நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் உங்களை ஒரு ஆசீர்வாதமாக மாற்றுவதே தேவனுடைய சித்தம் என்று நான் விசுவாசிக்கிறேன். இருப்பினும், இது நிறைவேற நீங்கள் தேவனைக் கண்டிப்பாக விசுவாசிக்க வேண்டும். சாபத்தின் எந்தப் பகுதியும் உங்களைத் தொட முடியாது என்பதை விசுவாசியுங்கள். சாத்தான் சிலுவையிலே தோற்கடிக்கப்பட்டுவிட்டான். எனவே உங்களுடைய வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த சத்தியங்களை உங்களுடைய வாயால் அறிக்கைசெய்து, எல்லா நாட்களிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் (மேற்கொள்ளுகிறவர்களாய்) இருங்கள். தேவனுடைய ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நாம் மெய்யாகவே விசுவாசித்து உரிமையோடு கேட்கும்போது தான் அது நம்முடையதாக முடியும். தேவனுடைய வார்த்தை உண்மை என்பதை நாம் வாயால் அறிக்கை செய்யவும் வேண்டும். இருதயத்திலே விசுவாசித்து, இரட்சிப்பும் விடுதலையும் உண்டாக வாயினாலே அறிக்கை செய்கிறோம் (ரோமர் 10:10). அவ்விதமாக ("நம்முடைய சாட்சியின் வசனத்தினால்"), நம்மீதுள்ள சாத்தானின் குற்றச்சாட்டுகளையும் கூட நாம் மேற்கொள்ளுகிறோம் (வெளிப்படுத்தல் 12: 11).