WFTW Body: 

புதிய உடன்படிக்கை ஊழியனைப் பற்றி பவுல் 2 கொரிந்தியர் 3-ஆம் அதிகாரத்தில் பேசுகிறார். பழைய உடன்படிக்கை ஊழியர்களுக்கும், புதிய உடன்படிக்கை ஊழியர்களுக்கும் இடையே மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது. பழைய உடன்படிக்கையில் ஓசியா, ஏசாயா, எசேக்கியல் போன்ற ஒரு சில தீர்க்கதரிசிகள்தான் கர்த்தருடைய வழிகளைக் கற்றுக் கொள்ளுவதற்கும், அவருடைய செய்தியைப் பெறுவதற்கும் பாடுகளைக் கடந்து செல்ல வேண்டியவர்களாயிருந்தனர். ஆனால் பொதுவாகப் பார்க்கும்போது, பழைய உடன்படிக்கை ஆசாரியர்களைப் பொறுத்தவரை, தேவனுடைய ஆசாரியர்கள் என்னும் ஊழியத்தைப் பெறுவதற்கென்று எந்தவிதமான பாடுகளையும் கடந்து போக வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தேவனுடைய பிரமாணங்களைப் படித்து, அவற்றை ஜனங்களுக்கு விளக்கிச் சொல்லுவதுதான் அவர்கள் செய்து வந்த காரியமாயிருந்தது. அவர்கள் படித்ததைப் பிரசங்கித்தார்கள். உங்களுடைய பிரசங்கமும் நீங்கள் படித்தவற்றிலிருந்து உருவெடுக்குமானால், நீங்களும் ஒரு பழைய உடன்படிக்கை ஊழியன்தான். ஒரு புதிய உடன்படிக்கை ஊழியன், வெறுமனே படிப்பதின் மூலமாக ஓர் ஊழியத்தைப் பெற்றுக் கொள்வதில்லை. அவன் செய்தியை அனுபவமாக மாற்றி, பின்பு அந்த அனுபவத்திலிருந்து பேசுகிறான். அவன் "வந்து கேளுங்கள்" என்று சொல்லாமல், "வந்து பாருங்கள்" என்றே சொல்லுவான்.

"இந்த ஊழியத்தைச் செய்வதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள்" என்று பவுல் 2 கொரிந்தியர் 3:5-ல் கூறுகிறார். அதாவது இந்த அற்புதமான புதிய உடன்படிக்கை ஊழியத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எங்களிடத்தில் திராணி இல்லை என்று பவுல் சொல்கிறார். ஆனால் எங்களுடைய தகுதியெல்லாம் தேவனிடத்திலிருந்து வருகின்றது என்கிறார். புது உடன்படிக்கை ஊழியன் தேவனுக்கு ஊழியம் செய்ய தன்னிடத்தில் உள்ள எதையும் நம்பி இல்லை. அவர் தன்னுடைய திறமை முழுவதையும் தேவனிடமிருந்தே பெற்றுக் கொள்ளுகிறார். தேவன் அவருக்குக் கொடுக்கிறார்; அவர் அதை கானா ஊர் வேலைக்காரர் ரசத்தைப் பரிமாறினது போலவே பிறருக்குப் பகிர்ந்தளிக்கிறார். அவ்வேலைக்காரர் தண்ணீரை இயேசுவிடம் கொண்டு சென்றனர். அவர் அதை ரசமாக மாற்றினார். பின்பு அவர்கள் அதைப் பகிர்ந்தளித்தனர். நாமும்கூட நம்மிடமுள்ள குறைவான வழிமுறைகளை ஆண்டவரிடம் கொண்டு செல்லுகிறோம். அவர் அவற்றை அபிஷேகித்து, ஆசீர்வதித்து, பெருக்குகிறார்; நாம் அவற்றை மற்றவர்களுக்குக் கடத்துகிறோம். இப்படித்தான் நாம் ஊழியம் செய்ய வேண்டும். நாம் பகிர்ந்தளிக்கும் பணியைத்தான் செய்ய வேண்டுமே தவிர, தயாரிப்புப் பணியைச் செய்துவிடக் கூடாது. பிரசங்க உற்பத்தி செய்திடலும் கூடாது. நாம் பேசும்போது ஜீவனைத்தான் ஊழியம் செய்ய வேண்டும்; அறிவை அல்ல.

அநேகக் கிறிஸ்தவ ஊழியர்கள் தேவனுக்கென்று ஒரு சில ஆண்டுகள் பணி செய்தவுடனேயே, சோர்வுற்றவர்களாயும், இருளடைந்தவர்களாயும், மனஅழுத்தத்திற்கு உட்பட்டவர்களாயும் மாறிவிடுகிறார்கள்; இன்னும் சிலர் நரம்புத் தளர்ச்சி அடைந்துவிடுவதுமுண்டு. அவர்களெல்லாரும் தங்களது சுயதகுதியின் அடிப்படையில் ஊழியம் செய்ததே இதற்கெல்லாம் காரணமாகும். நாம் அவரது பணிக்கென சித்தப்படுத்தப்படும்படிக்கு தேவனையே சார்ந்து கொள்ள வேண்டும். நாம் தேவனுக்கென்று ஊழியம் செய்ய வேண்டுமானால், நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்குக் கூட அவரையே நம்பிச் சார்ந்து கொள்ள வேண்டும். "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புதுப்பெலனைப் புதுப்பித்துக் கொள்ளுவார்கள். வாலிபரும் சோர்ந்து போவார்கள், ஆனால் நீங்களோ கழுகுகளைப் போலச் செட்டை அடித்து எழும்புவீர்கள்" (ஏசா 40:31) என்பதே தேவனுடைய வாக்குத்தத்தமாகும். நம்முடைய தகுதியெல்லாம் தேவனிடமிருந்தே வருகின்றது. நீங்கள் பணநெருக்கடியில் உள்ள போதும் கூட, "எங்கள் தகுதியெல்லாம் தேவனால் உண்டாயிருக்கிறது" என்று சொல்லுங்கள். நமது தேவை எதுவாயிருந்தாலும், அவற்றையெல்லாம் நமக்குத் தர தேவன் போதுமானவராய் இருக்கிறார்.

அவர் நம்மை புதிய உடன்படிக்கையின் ஊழியர்களாய் மாற்றி இருக்கிறார். புதிய உடன்படிக்கையிலே, நாம் எழுத்தின்படியான ஊழியர்களாய் இராமல், ஆவியின்படியான ஊழியர்களாய் இருக்கிறோம் (2 கொரிந்தியர் 3:2). ஊழியம் என்பது, ஆக்கினைத் தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம், நீதியைக் கொடுக்கும் ஊழியம் என 2 கொரிந்தியர் 3:9-ல் இருவகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்கினைத் தீர்ப்புக் கொடுக்கும் ஊழியமானது, ஜனங்களை ஒரு செய்தியைக் கேட்டவுடனேயே குற்றவாளியின் கூண்டில் நிறுத்திவிடுகின்றது. உங்களுடைய பிரசங்கத்தைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் குற்ற உணர்வடைந்து, ஆக்கினைத் தீர்ப்பின் உணர்வைப் பெற்றுவிட்டார்கள் என எண்ணி உங்களது பிரசங்கத்தை நீங்கள் மெச்சிக் கொள்ளலாம். ஆனால் அது ஒரு பழைய உடன்படிக்கையின் ஊழியமாகும். பிரமாணம் ஜனங்களை ஆக்கினைக்குட்படுத்தி, "நீ சரியாய் இல்லை; இதற்கு முன்னரும் நீ சரியாய் இருந்ததில்லை" என்று தொடர்ச்சியாய்ச் சொல்லுகின்றது. எழுப்புதல் கூட்டங்கள் என்றழைக்கப்படும் கூட்டங்களில் செய்யப்படும் பெருவாரியான பிரசங்கங்கள், ஜனங்களைப் பார்த்து, "நீங்கள் சரியில்லை. நீங்கள் மிக மோசம், மிக மோசம், மிக மோசம்" என்றுதான் சொல்லுகின்றன. ஜனங்களும் குற்ற உணர்வினால் தாக்கப்படுகிறார்கள். இது கிறிஸ்தவ பிரசங்கமே அல்ல. கிறிஸ்தவ பிரசங்கமானது ஜனங்களை நீதிக்கு நேராகவும், மகிமையான வாழ்க்கைக்கு நேராகவும் நடத்தும்; அது ஜனங்களிடத்தில் குற்ற உணர்வை உண்டாக்குவதோடு நின்றுவிடாமல், அவர்களைத் தூக்கிவிட்டு, குணமாக்கி, செய்தியின் முடிவிலே அவர்களுக்கு விடுதலையை அளிக்கும். இப்படியாக அவர்கள் நம்பிக்கையோடே கலைந்து செல்லுவார்கள். உங்களுடைய பிரசங்கமானது, ஜனங்களுக்கு அடிமைத்தளையை ஏற்படுத்துமானால், நீங்கள் ஒரு பழைய உடன்படிக்கை ஊழியன்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய பிரசங்கமானது ஜனங்களை ஆக்கினைக்குட்படுத்து மானால், அது ஒரு பழைய உடன்படிக்கைப் பிரசங்கமாகும். நீங்கள் ஜனங்களை மேலே தூக்கிவிடாமல், கீழே தள்ளுவீர்களானால், உங்களுடைய பிரசங்கம் ஒரு பழைய உடன்படிக்கையின் பிரசங்கமாகும். புதிய உடன்படிக்கைப் பிரசங்கம் ஜனங்களைத் தூக்கிவிட்டு அவர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றது.