WFTW Body: 

பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்” (மத்தேயு 7:6). இதன் அர்த்தம் என்ன? இதே போன்றதொரு வார்த்தையை இயேசு சீரோபேனிக்கியா பகுதியிலுள்ள தீருவுக்குச் சென்றபோது கூறினார் (மத்தேயு 15:21-28). இயேசு தீருவுக்கு வந்தபோது, ஒரு ஸ்திரீ பிசாசுபிடித்திருந்த தன் மகளுக்காக உதவி கேட்டு வந்தாள். இயேசு அவளை நோக்கி, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” (மத்தேயு 15:26) என்று சொன்னார். இந்த வார்த்தைகளைக் குறித்து சிலர் ஆட்சேபணை எழுப்பியிருக்கிறார்கள்

இயேசு அவளை நாய் என்று அழைத்தாரா? 150 கிலோமீட்டர் தூரம் நடந்து, ஒரே ஒருவருக்கு உதவி செய்ய நீங்கள் போவீர்களா? அதுவும் நீங்கள் உதாசீனப்படுத்தும் ஒருவருக்காக? 150 கிலோமீட்டர் நடந்து போக எவ்வளவு நேரம் ஆகும்? குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும். அதிலேயே கிறிஸ்துவின் அன்பின் ஆழம் தெரிகிறது. அவர் அவளை எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பதை அறிந்துகொண்டால், ஆண்டவர் அவளை சோதித்துப் பார்த்தார் என்பது விளங்கும். தேவனிடத்திலிருந்து எதையும் பெற்றுக்கொள்ள தான் தகுதியற்றவள் என்று அங்கீகரித்துக்கொண்டு, மிகவும் தாழ்மையான நிலையை ஏற்றுக்கொள்ள அவள் தயாராயிருக்கிறாளா என்று பார்த்தார். அவள், “மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே” (மத்தேயு 15:27) என்று சொன்னபோது, இயேசு, “ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது!” (மத்தேயு 15:28) என்றார். இயேசு அப்படிச் சொன்னது வெறும் இரண்டு முறை மட்டுமே. இரண்டுமே யூதரல்லாதவர்களிடம்தான் அவர் கூறினார். ஒருவர் ரோம நூற்றுக்கு அதிபதி, மற்றவள் இந்தச் சீரோபேனிக்கிய ஸ்திரீ. அவர் அவளை எவ்வளவு பாராட்டினார் என்று பாருங்கள்!

வேதாகமத்தில் இயேசு நாய்கள் மற்றும் பன்றிகளைப் பற்றி பேசும்போது, அவர் மனுஷரை இகழவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் சொல்வதன் மூலம், தேவனிடத்திலிருந்து எதையாகிலும் பெற்றுக்கொள்ள நமக்குத் தகுதியில்லை என்ற உண்மையை அவர் அங்கீகரிக்கிறார். “தேவன் என் விஷயத்தில் ஏதாவது செய்ய நான் தகுதியானவன்” என்று நினைக்கிற எவரும், தேவனுக்கு முன்பாக மனுஷனின் நிலையை இன்னும் உணரவில்லை என்பதே உண்மை. நீங்களும் நானும் உண்மையிலேயே பெறத் தகுதியானது நரகம் மட்டுமே. நாம் தேவனிடம் சென்று, “ஆண்டவரே, நாங்கள் பெறத் தகுதியானதை எங்களுக்குக் கொடும்” என்று கேட்டால், அவர் நமக்கு நரகத்தைத் தான் கொடுக்க வேண்டும். அதைவிட சிறிதும் மேன்மையானது எதுவும் நமக்குக் கிடைத்தால் அது தேவனுடைய கிருபையே. அதை நாம் உணர்ந்துகொண்டால், தகுதியில்லாமலே தேவனிடத்திலிருந்து நாம் மிகவும் அதிகமாகப் பெறுகிறோம் என்பதைக் காண்போம். ஆனால் பெரும்பாலானோர் அந்த நிலையை உணர்வதில்லை.

ஆகவே, இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நாம் காணும்போது, யாரையாவது நாய்களைப் போலவோ, பன்றிகளைப் போலவோ நடத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. நாம் எல்லாரும் பாவிகள். ஒவ்வொரு மனுஷனும் பாவியே. நாம் எல்லாரும் பாவிகளே. நம்மில் சிலர் தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டு, நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன; சிலர் இன்னும் தங்கள் பாவங்களிலேயே இருக்கிறார்கள். ஆனால் ஆதாமிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட சுபாவத்தினாலே, அடிப்படையில் நாம் எல்லாரும் பாவிகளாகவே தொடங்குகிறோம். ஆகவே, ஒருவர் மற்றவரைவிட தான் உயர்ந்தவர் என்று நினைக்கவோ, அல்லது மற்றவரை நாயைப் போலவோ பன்றியைப் போலவோ இகழ்ந்து பார்க்கவோ எந்தக் காரணமும் இல்லை.

இயேசு, “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்” என்று கூறியதற்கு, “மதிப்பு தெரியாதவர்களுக்கு மதிப்புமிக்கவற்றை கொடுக்காதீர்கள்” என்றே அர்த்தம். நாய்க்கு வேண்டியதெல்லாம் ஒரு எலும்பு மட்டுமே; பரிசுத்தம் அல்ல. ஒரு மனுஷன் தேவனைவிட இந்த உலகின் ஐசுவரிய விஷயங்களில் அதிக ஆர்வமுள்ளவனாயிருக்கும்போது, அவன் ஒரு மிருகத்தைவிட எவ்விதத்திலும் மேலானவனல்ல. நீங்கள் எதற்காக வாழுகிறீர்கள்? பிள்ளைகளை வளர்க்கவும், சரீர உறவு கொள்ளவும், தூங்கவும், நல்ல சாப்பாடு சாப்பிடவும் மட்டுமா வாழுகிறீர்கள்? இவைகளைத் தானே மிருகங்களும் விரும்புகின்றன?! மிருகங்கள் எப்போதும் இந்த பூமியின் காரியங்களிலேயே நாட்டம் கொண்டிருக்கும். நாய்கள் எப்போதும் தரையை நோக்கியே பார்க்கும். பன்றிகளும் அப்படித் தான். ஒரு நாயோ பன்றியோ வானத்தை நோக்கி ஒருக்காலும் பார்ப்பதில்லை. மிருகங்கள் எப்போதும் பூமியின் காரியங்களையே நோக்கிப் பார்க்கும். ஆகவே, இங்கே 'நாய்கள்' என்ற வார்த்தைக்கு “பூமியின் காரியங்களில் மனதை வைத்திருக்கிற மனுஷர்கள்" என்றே அர்த்தமாகும்.

ஒரு மெய்யான கிறிஸ்தவன் தன் தலையை நிமிர்த்தி வைத்திருக்கிறான். அவன் மேலானவைகளை நோக்கிப் பார்க்கிறான். மேலான (பரத்துக்குரிய) காரியங்களில் ஆர்வமில்லாதவர்களுக்கு பரிசுத்தமானதைக் கொடுப்பது வீண். அது பன்றிகளுக்கு முன்பாக முத்துகளை எறிவதற்கு சமம். பன்றிக்கு வேண்டியது குப்பையும் அழுக்குமான உணவே. அதைத்தான் அது விரும்பிச் சாப்பிடும்; ஆகவே அதற்கு பரிசுத்தமானதை கொடுப்பது வீண். இயேசுவின் மலைப்பிரசங்க போதனை அவிசுவாசிகளுக்கானதல்ல. ‘மறுபடியும் பிறவாதவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுக்காதீர்கள்’ என்பதே மத்தேயு 7:6-இன் கருத்து. ஏனென்றால் அவர்களால் அதன் மதிப்பை அறிய முடியாது. எந்த சத்தியத்தை எந்த நபருக்குக் கொடுக்கலாம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதைத்தான் கிறிஸ்து இவ்வசனத்தில் கூறுகிறார்.

மறுபடியும் பிறவாதவர்கள் கேட்க வேண்டியது மனந்திரும்புதலின் செய்தியே. தான் ஒரு பாவி என்று அவர்கள் அறிய வேண்டும். நரகம்தான் தங்களுக்குத் தகுதியான இடம் என்பதை உணர வேண்டும். தேவனை விட்டு அகன்று, வழிதப்பி, நித்திய அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்ற நிலையை உணர வேண்டும். இந்த செய்தி யாருக்கு தேவை? கிறிஸ்துவை ஏற்காதவர்களுக்கு மட்டுமல்ல; கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், கிறிஸ்துவோடு உண்மையான ஜீவனுள்ள உறவு இல்லாமல் இருக்கிறவர்களுக்கும் இதே செய்திதான் தேவை.

ஒரு மனுஷன் தன் வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுக்காவிட்டால், அவன் உண்மையில் ஒரு மிருகத்தைப் போலவே இருக்கிறான். மிருகத்திற்கு தேவன்மீதோ, ஜெபத்தின்மீதோ, தேவன் சொல்வதைக் கேட்பதிலோ ஆர்வமிராது. இந்த பூமியில் ஒரு மனுஷன் ஜெபத்தின்மீதும் தேவன்மீதும் தேவன் சொல்வதிலும் எந்த ஆர்வமும் இல்லாமல் வாழும்போது, அவன் ஒரு மிருகத்தைவிட எவ்விதத்திலும் மேலானவனல்ல. மிருகங்களுக்கு சரீர உறவில் ஆர்வமுண்டு. மனிதன் முக்கியமாக சரீர உறவிலேயே ஆர்வம் வைக்கும்போது, அவன் மிருகத்தைப் போலவே இருக்கிறான். உணவும், சரீர உறவும், தூக்கமும், பிள்ளைகளைப் பெறுவதும் மட்டுமே மிருகங்களின் வாழ்க்கையாயிருக்கிறது. மனுஷர்களும் இவற்றில் மட்டும் மனதை வைக்கும்போது, அவர்களும் மிருகங்களைப் போலவே இருக்கிறார்கள். பன்றிகளையும் நாய்களையும் எல்லா மிருகங்களையும் படைக்கப் பயன்படுத்திய அதே மண்ணிலிருந்துதான் ஆதாமையும் படைத்தார்.

நாய்கள் மற்றும் பன்றிகளின் உள் உறுப்புகளைப் பார்த்தால், அவைகளுக்கு மனுஷனின் உள் உறுப்புகளோடு நிறைய ஒற்றுமை இருக்கிறது. இதன்மூலம், “சரீரப் பிரகாரமாக நீங்களும் அந்த மிருகங்களும் ஒரே மூலப்பொருளிலிருந்து வந்தவர்கள்” என்று ஆண்டவர் கூறுகிறார். அதனால்தான் தேவன் மிருகங்களையும் மனுஷனையும் ஆறாம் நாளில் படைத்தார். ஆறாம் நாளின் முதல் பகுதியில் மிருகங்களைப் படைத்தார், இரண்டாம் பகுதியில் மனுஷனைப் படைத்தார். ஆனால் மிருகங்களிலிருந்து ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது: தேவன் அவற்றின் மேல் தம் சுவாசத்தை ஊதவில்லை. மண்ணிலிருந்து படைக்கப்பட்டவுடனே அவற்றுக்கு சுவாசம் வந்தது. ஆனால் மனுஷன் படைக்கப்பட்டதும் தேவன் அவன் மீது தம் சுவாசத்தை ஊதினார். அப்போது அவன் ஜீவாத்துமாவானான் (ஆதியாகமம் 2:7). தேவனுடைய சுவாசம் என்ற அந்த ஒரே ஒரு காரியம்தான் மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்தியது.

தேவன் ஆதாமின்மீது தம் சுவாசத்தை ஊதியிருக்காவிட்டால், அவனுக்கு மனித உருவம் இருந்திருக்கும், ஆனால் உள்ளே ஒரு மிருகத்தைப் போலவே இருந்திருப்பான். ஆனால் தேவன் ஊதிய அந்த நிமிடம் எல்லாமே மாறிவிட்டது; அவன் ஜீவாத்துமாவானான். மிருகம் மரித்தால் மண்ணோடு மண்ணாகிவிடும், அவ்வளவுதான். ஆனால் மனிதன் நித்தியமானவன். தேவன் ஊதிய அந்தத் தருணத்திலிருந்தே அவன் நித்தியமான ஜீவனாக, தேவனுக்கு கணக்கொப்புவிக்க வேண்டியவனாக மாறிவிட்டான். நித்தியஜீவன் என்றால் ஆரம்பமே இல்லாத ஜீவன்; அது தேவனுக்கு மட்டுமே உரியது. ஆனால் நாம் பாவத்தை விட்டு மனந்திரும்பி, கிறிஸ்துவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும்போது அந்த நித்தியஜீவனை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் நாம் நித்திய நித்தியமாக தேவனை விட்டுப் பிரிந்து நரகத்தில் என்றென்றும் தங்கிவிடுவோம்.

ஆண்டவர் சொல்வது என்னவென்றால், இந்த பூமியில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் மிருகங்களைப் போல, அதாவது, நாய்களைப் போலவும் பன்றிகளைப் போலவும் வாழுகிறார்கள். வேறு சிலர் தாங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்க வேண்டியவர்கள் என்பதை உணர்கிறார்கள். தேவன் தங்களை அவருக்கு கணக்கொப்புவிக்க வேண்டிய நித்தியமான ஜீவிகளாகப் படைத்திருக்கிறார் என்பதையும் உணர்கிறார்கள். தேவன் மனுஷனின்மீது தம் சுவாசத்தை ஊதியபோது, அவன் மண்ணினால் ஆனவனாக இருந்தும் அவனுக்கு ஒரு மனச்சாட்சியும் கொடுக்கப்பட்டது. தன் செயல்களுக்கும் வார்த்தைகளுக்கும் தேவனுக்கு கணக்கொப்புவிக்க வேண்டியவன் என்ற உணர்வு அவனுக்கு இருந்தது. மிருகங்களுக்கு மனச்சாட்சி இல்லை. தவறு செய்தாலும் அவற்றுக்கு எந்த குற்ற உணர்வும் வராது. ஆனால் மனுஷன் கல்வியறிவற்ற காட்டுவாசியாக இருந்தாலும் சரி, அவனுக்கு மனச்சாட்சி இருப்பதினால் அவனுக்கு குற்ற உணர்வு வரும்.

காட்டுவாசிகளும் கூட வணங்கி ஆராதனை செய்கிறார்கள். ஒரு கல்லையோ, ஒரு பாறையையோ, சூரியனையோ ஆராதிக்கிறார்கள். ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார், தாங்கள் பதில் சொல்லவேண்டிய நித்தியமான தேவன் ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு அவர்களுக்கும் இருக்கிறது. ஆனால் எங்காவது ஆவிக்குரிய சிந்தையுள்ள ஒரு நாயைப் பார்த்திருக்கிறீர்களா? ஆவிக்குரிய சிந்தையுள்ள குரங்கையோ, பன்றியையோ பார்த்திருக்கிறீர்களா? காட்டுவாசிகளுக்கும் கூட தாங்கள் பதில் சொல்ல வேண்டிய ஒரு நித்தியமான தேவன் இருக்கிறார் என்ற உணர்வு ஏன் இருக்கிறது? ஏனென்றால் அவர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறது. ஒவ்வொரு மனுஷனுக்கும் மனச்சாட்சி இருக்கிறது, அதுவே மனுஷனை பன்றிகளிலிருந்தும் நாய்களிலிருந்தும் மற்ற மிருகங்களிலிருந்தும் வேறுபடுத்துகிறது.