WFTW Body: 

ஆகாய் 1:7,8-ல், ஆலயத்தைக் கட்டி முடியுங்கள் என்று ஆகாய் ஜனங்களை ஏவுகிறதைப் பார்க்கிறோம். பல வருடங்களுக்கு முன்னரே அதற்கான அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. ஆனால் அத்துடன் அதை அவர்கள் நிறுத்திவிட்டிருந்தனர்.

கட்டடத்தைக் கட்ட அஸ்திபாரமிட்டபின், அதைக் கட்டி முடிக்கத் திராணியில்லாத மனுஷனைப் பற்றி இயேசு ஓர் உவமையில் குறிப்பிட்டார் (லூக் 14:28-30). அந்த உவமையானது, சீஷனாயிருப்பதைப் பற்றிய உரையின் நடுவிலே வெகு நேர்த்தியாய் புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இயேசு, சீஷனாய் மாற்றம் செய்யாத சுவிசேஷ ஊழியத்தை, அஸ்திபாரமிடபட்டபின், கட்டிமுடிக்கப்படாத கட்டடத்திற்கு ஒப்பானது என மறைமுகமாக குறிப்பிடுகிறார். அஸ்திபாரம் அவசியம்தானா? ஆம் என்பதே திட்டவட்டமான பதிலாகும். ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்கான முதல் பணியே அதுதான். சுவிசேஷ ஊழியம் அவசியம்தானா? நிச்சயம் அவசியம். அத்துடன், அதுதான் முதலாவதாகச் செய்யவேண்டிய பணியாகும். நீங்கள் சுவிசேஷப் பணியை மட்டும் செய்துவிட்டு, சீஷராய் மாற்றுவதை விட்டுவிட்டால், உங்களது கடின உழைப்பானது வீணாய்ப் போய்விடும். அது கட்டடம் எழுப்பப்படாத ஒரு பயனற்ற அஸ்திபாரத்தைப் போன்றே காட்சியளிக்கும்.

எபிரேயர் 6:1-3-ம் வசனங்கள் இம்மாதிரியான மதியீனத்தைப் பற்றி எச்சரிக்கிறது: " மனந்திரும்புதல், விசுவாசம், தண்ணீர் ஞானஸ்நானம், ஆவியின் ஞானஸ்நானம், உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்புகளுக்கடுத்த உபதேசம் என்பவைகளாகிய அஸ்திபாரத்தைப் நாம் போடக்கூடாது ." இவை யாவும் வெறும் அஸ்திபாரமே. இந்நிருபத்தை ஆக்கியோன் மேற்கொண்டு நம்மைப் பூரணத்தை நோக்கிப் போகுமாறு கூறுகிறார். பூரணம் என்பது வீட்டைக் கட்டுவதையேக் குறிக்கிறது. சுவிசேஷ ஊழியத்தின் மூலமாக மனந்திரும்பிய புது விசுவாசிகளை, இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களாய் உருவெடுக்கச் செய்து, அவர்களைப் பூரணராகும்படி கடந்து போகப் பண்ண வேண்டும்.

எனவே ஆகாயின் செய்தியானது அஸ்திபாரத்தைப் பற்றியதன்று. அது பூரணத்தைப் (கட்டடமாகிய கிறிஸ்துவின் சரீரம் முழுமையடைவதைப்) பற்றியதாகும். ஒரு சபைக் கூட்டத்திற்கும், தேவனுடைய வீட்டிற்குமுள்ள வித்தியாசம் என்ன? நீங்கள் கற்கள் வெட்டப்படுமிடத்திலிருந்து, கட்டடம் கட்டுமிடத்திற்கு 50000 கற்களைக் கொண்டு வந்து சேர்ப்பீர்களானால், அதுவே சுவிசேஷ ஊழியமாகும். இக்கற்கள் எல்லாவற்றையும் மறுபடியும் பிறந்த விசுவாசிகளுக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் அவர்கள் இன்னும் கட்டடமாக மாறிவிடவில்லை. அவர்களை ஒரு கற்குவியலென்றுதான் அழைக்க முடியும். இன்று சுவிசேஷ ஊழியத்தைச் செய்யும் கூட்டத்தாரில் அநேகர் இதைப் போன்றுதான் உள்ளனர். இக்கற்களெல்லாம் கிறிஸ்துவின் சரீரத்தைப் பிரதிபலிக்கவேண்டுமாயின், அவை யாவும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு கட்டப்பட வேண்டும். அவர்களைத் தேவனுடைய வீடாகக் கட்டுவதுதான் மிகவும் கடினமான பணியாகும்.

இன்றுள்ள அநேக சபைகள் வெறும் கூட்டம் கூடுகிற இடமாகத்தான் உள்ளன. அங்குள்ள "கற்களை" ஒருவனும் திருடிச் சென்று விடாதபடிக்கு பாஸ்டர் என்னும் ஒரு மனிதன் காவலாளியைப் போன்று காவல் காக்கிறார். என்றாவது ஒரு நாள் அவரது "கற்களிலொன்று" அதிக ஆவிக்குரிய உதவி கிடைக்கும் சபையை நாடிச் சென்று விட்டால், அந்த பாஸ்டர், தன்னுடைய "கற்களைப்" பிறர் திருடிச் சென்றுவிட்டனர் என்று கொந்தளித்துப் போகிறார்! ஆனால் அவர் அந்தக் கல்லை கட்டடத்தில் வைத்துக் கட்டியிருந்தால், அக்கல் திருடப்படுவதென்பது சாத்தியமற்ற செயலாயிருந்திருக்கும். நீங்கள் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுகிறவர்களாயிருந்தால், உங்களது அங்கத்தினரை வேறு யாராவது திருடிப் போய் விடுவார்களோவென்று ஒரு துளியும் உங்களுக்குக் கவலையிருக்காது. கற்களின் மேலும், கீழும், வலப்பக்கமும், இடப்பக்கமும் வேறு கற்கள் அடுக்கப்பட்டு சாந்து பூசப்பட்டு விட்டால், அதன் பிறகு யாரால் திருட முடியும்?

நான் 1975- லிருந்து பெங்களூரில் ஒரு சபையை வழிநடத்தியிருக்கிறேன்; இதுவரை என்னுடைய அங்கத்தினர் ஒருவரையாவது இன்னொருவர் திருடிச் சென்றுவிட்டார் என்று குறை சொன்னது கிடையாது. சபையாய் இணைத்துக் கட்டப்பட்டுள்ள எங்கள் மத்தியிலிருந்து ஒருவரைக்கூட யாராலும் திருடிவிட முடியாது. ஆதலால் நாம் தேவனுடைய வீட்டைக் கட்ட வேண்டுமேதவிர, வெறும் அஸ்திபாரத்தை மட்டும் போட்டுவிட்டு கற்குவியலைச் சேகரிக்கிறவர்களாய் இருக்கக்கூடாது.

ஆகாய் 1:9-11 -ல் கர்த்தருடைய கடுமையான கடிந்துகொள்ளுதலைக் கவனியுங்கள். அன்புடன் கடிந்து கொள்ளக்கூடிய பிரசங்கிமார்களே இன்று நம்முடைய சபைகளில் மிகவும் தேவைப்படுகிறார்கள். பிரசங்கங்கள் மலிந்து காணப்படுகிற இந்நாட்களிலே, கடிந்துகொள்ளுதலும், சீர்திருத்தலுமே மிகவும் குறைந்து காணப்படுகிறது. தேவன் உங்கள் வாழ்க்கையில் தோல்வியையும், தொடர்ச்சியான வீழ்ச்சியையும் அனுமதித்தால், நீங்கள் நின்று அவர் உங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்று கவனிப்பது மிக அவசியமாகும். "ஆவிக்குரிய கனி என்னுடைய வாழ்க்கையில் ஏன் காணப்படாமல் போய் விட்டது? ஏன் என்னுடைய குடும்ப வாழ்க்கைத் தாறுமாறாகப் போய்விட்டது? ஏன் பரலோக மழை நின்று விட்டது? ஏன் என்னுடைய வாழ்க்கையில் இப்படிப்பட்டதான வறட்சி ஏற்பட்டுள்ளது?" (1:9-11) என்று உங்களை நீங்களே கேட்க வேண்டும். அநேகமாக நீங்கள் கர்த்தரோடு நடப்பதைக் காட்டிலும், இந்த பூமிக்குரியவற்றிலும், உங்கள் வங்கிக்கணக்கிலும் அதிக ஈடுபாடு கொண்டுவிட்டீர்கள் என்றே சொல்லலாம்!

செருபாபேலும், பிரதான ஆசாரியனான யோசுவாவும் இந்த தீர்க்கதரிசனத்தைக் கேட்டபொழுது, ஆகாயின் செய்திக்கு மறுமொழி பகர்ந்து, "நாங்கள் இப்பொழுதே தேவனுடைய வீட்டைக் கட்ட ஆரம்பிக்கிறோம்." அல்லது வேறுவிதத்தில், "நாங்கள் இப்பொழுதிலிருந்து வெறும் சுவிசேஷப் பணியை மட்டும் செய்யாமல், சீஷர்களாக மாற்றுவோம். தனியாளின் கீழ் அடங்கிப் போகிற சபையைக் கட்டாமல், கிறிஸ்துவின் சரீரமான சபையைக் கட்டுவோம்" என்று சொன்னார்கள். சபையானது நன்றாய் இயங்கக் கூடிய ஒரு சரீரத்தைப் போன்றதாகும். அது ஆராய்ச்சிக்கூடத்திலே குவித்து வைக்கப்பட்டிருக்கும் கை, கால், கண், காது போன்ற சரீர பாகங்களைப் போல இருப்பதில்லை. இவையாவும் ஜீவனைக் கொண்டு ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டவையல்ல. ஆகவே அவையாவும் ஒன்றாய் இசைந்து இயங்கவே முடியாது. இன்றும் அநேக சபைகள் இதைப் போலவேதான் உள்ளன.