“உங்களில் ஒருவனுக்கு ஒரு சிநேகிதன் இருக்கிறான்; அவன் பாதிராத்திரியிலே உங்கள் வீட்டிற்கு வருகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனிடத்தில் உள்ள அன்பினாலும் மரியாதையினாலும், ‘நீ சாப்பிட்டாயா?’ என்று நீங்கள் அவனைக் கேட்கிறீர்கள். ‘இல்லை’ என்று அவன் சொல்லுகிறான். நீங்கள் உங்கள் பிரிட்ஜைத் திறந்து பார்க்கும்போது, அதிலும் வீட்டில் வேறெங்கும் ஆகாரம் ஒன்றுமில்லை என்று காண்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் அயலகத்தானிடத்தில் போவீர்கள்.” (லூக்கா 11:5)
இப்படிப்பட்ட காரியம் மிகவும் அரிதானது. தன் சிநேகிதனுக்காக ஆகாரம் கேட்கும்படி பாதிராத்திரியிலே தன் அயலகத்தானிடத்தில் போய் அவனை எழுப்புகிறவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்; ஆனால் இந்த மனுஷன் அப்படிச் செய்கிறான். அவன் போய், தன் அயலகத்தானுடைய வீட்டுக் கதவைத் தட்டி, “நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும்; நாளைக்கு நான் திரும்பக் கொடுத்துவிடுவேன், ஆனால் இப்பொழுது எனக்குக் கடனாகத் தா. என் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்திருக்கிறான்; அவன் எனக்கு மிகவும் நல்ல சிநேகிதன்; அவனுக்கு வைக்கிறதற்கு என்னிடத்தில் ஆகாரம் ஒன்றுமில்லை” என்று சொல்லுகிறான். அப்பொழுது வீட்டுக்குள் இருக்கிறவன், தன்னையும் தன் பிள்ளைகளையும் தொந்தரவு செய்யவேண்டாம் என்று அவனுக்குச் சொல்லுகிறான்; ஏனெனில் அவர்கள் எல்லாரும் படுக்கையிலிருக்கிறார்கள்: “பாதிராத்திரியிலே நீ எங்களைத் தொந்தரவு செய்து, எங்களெல்லாரையும் எழுப்பி, கதவை இடைவிடாமல் தட்டிக்கொண்டேயிருக்கிறாய்” என்று சொல்லுகிறான்.ஆனாலும் இந்த மனுஷன் தனக்கு வேண்டியதைப் பெறுமளவும் தட்டிக்கொண்டேயிருப்பான்; தன் அயலகத்தானைத் தூங்கவிடமாட்டான்.
கர்த்தர் சொல்லுகிறார்: “நீ அவனுடைய சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் அந்த அயலகத்தான் உனக்கு ஒன்றும் கொடாவிட்டாலும், நீ விடாமல் நாணமில்லாமல் தட்டிக் கேட்கிறதினிமித்தமாவது அவன் எழுந்திருந்து, உனக்குத் தேவையானதைக் கொடுப்பான்.” “உனக்குத் தேவையானதை!” — இது எத்தனை அருமையான வார்த்தை!
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காக நான் நாடின நாட்களை நினைவுகூருகிறேன். தேவவசனத்தைப் பயனுள்ள விதமாய் உபதேசிக்கிறவனாயிருக்கும்படியும், பேசுவதற்கு வார்த்தைகளைப் பெறும்படியும், பரிசுத்த ஆவியின் வல்லமைக்காகவே நான் நாடினேன். நான் கிறிஸ்தவனாகி தேவவசனத்தைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினபோது, மிகவும் கூச்சசுபாவமுள்ள மனுஷனாயிருந்தேன். பரிசுத்த ஆவியின் வல்லமை எனக்குத் தேவை என்பதை நான் அறிந்திருந்தேன்; பரிசுத்த ஆவியின் வல்லமையை நான் பெற்றுக்கொண்டால், வேறொரு மனுஷனாக மாற்றப்படுவேன் என்றும் அறிந்திருந்தேன். அப்படியே எனக்கும் நடந்தது. உங்களுக்காக அல்லாமல், மற்றவர்களுக்காகவே பரிசுத்த ஆவியின் வல்லமையான, இயற்கைக்கு மேலான அபிஷேகத்திற்காக நீங்கள் தேவனை நாடி, “கர்த்தாவே, இந்த ஜனங்களுக்கு சாப்பிடக் கொடுக்கும்படி எனக்கு அப்பம் தாரும்” (இந்தச் சொற்றொடரை லூக்கா 11:8-ல் நாம் பார்த்தோம்) என்று சொல்லி இடைவிடாமல் தட்டிக்கொண்டேயிருந்தால், உங்களுக்குத் தேவையானதை தேவன் உங்களுக்குத் கொடுப்பார் (லூக்கா 11:13). இங்கே நான் பரிசுத்த ஆவியைக் குறித்தே சொல்லுகிறேன். நாம் தேவனிடத்தில் எதைக் கேட்கவேண்டும் என்பதை இயேசு தெளிவாக்கினார்: “ஆண்டவரே, என் தேவைகள் இப்போது சந்திக்கப்பட்டுவிட்டன; லூக்கா 18-ஐ நான் கடந்து வந்து விட்டேன். இப்பொழுது மற்றவர்களுடைய தேவைகளைக் குறித்தே நான் சிந்திக்கிறேன். ஆகவே, மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்யும்படி பரிசுத்த ஆவியின் வல்லமையை எனக்குத் தாரும்.” என்று கேட்பவனே உண்மையான கிறிஸ்தவன்.
பெரும்பாலும் ஜனங்கள், ஒரு சிலிர்ப்பையோ, ஏதோ ஒரு மின்சார அதிர்ச்சி போன்ற உணர்வையோ, அந்நியபாஷைகளில் பேசுதலையோ, தங்கள் சொந்த நன்மைக்கான ஏதோ ஒன்றையோ பெறும்படியே பரிசுத்த ஆவியின் வல்லமையை நாடுகிறார்கள். மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கக் கூடியவர்களாயிருக்கும்படி பரிசுத்த ஆவியின் வரங்களை நாம் நாடவேண்டும். பரிசுத்த ஆவியின் வரங்களுக்காக நான் தேவனை நாடினதை நினைவுகூருகிறேன். அது மற்ற ஜனங்களுக்கு ஊழியஞ்செய்யும்படியாகவேயிருந்தது. அந்நியபாஷை வரத்தைத் தேவன் எனக்குக் கொடுத்தபோதிலும், அது என்னைப் புத்துணர்வுள்ளவனாய்க் காத்துக்கொள்ளச் செய்தது; ஏனெனில், “அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்” என்று வேதவசனம் சொல்லுகிறது. மற்ற ஜனங்களுக்கு ஊழியஞ்செய்யும்போது நான் எப்பொழுதும் புத்துணர்வுள்ளவனாயிருக்கும்படியே எனக்குப் பக்திவிருத்தி உண்டாக விரும்பினேன். ஆகையால், என்னைப் புத்துணர்வுள்ளவனாய்க் காத்து என்னைக் கட்டியெழுப்பிய அந்நியபாஷை வரமும், மற்றவர்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்படியே இருந்தது. ஆவியின் எந்த வரமும் என் சொந்தப் பக்திவிருத்திக்காக மாத்திரம் இருக்கவில்லை; மாறாக, மற்ற ஜனங்களுடைய ஆசீர்வாதத்திற்கு வழிநடத்தும்படிக்கு என்னுடைய பக்திவிருத்திக்காக இருந்தது.
பரிசுத்த ஆவியின் வரங்கள் யாவும் மற்றவர்களுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆவியின் கனி எனக்குப் பிரயோஜனமாயிருக்கிறது. எனக்குச் சந்தோஷமோ சமாதானமோ இருந்தால், அது எனக்கே பிரயோஜனமாயிருக்கிறது, உங்களுக்கு அல்ல. ஆனால் பரிசுத்த ஆவியின் வரங்கள் எனக்கிருந்தால், அந்த வரங்கள் மற்றவர்களுக்கே பிரயோஜனமாயிருக்கிறது. அது தீர்க்கதரிசனமோ, சுகமாக்கும் வரமோ, வேறெந்த வரமோ எதுவாயிருந்தாலும் சரி. இவ்விரண்டும் நமக்குத் தேவை. நீங்கள் தேவனிடத்தில் கேட்கவேண்டும்; உங்களுக்கு விசுவாசமும் தேவை.
“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நல்லதை (விசேஷமாய்ப் பரிசுத்த ஆவியையும் அவருடைய நல்ல ஈவுகள் யாவையும்) கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (லூக்கா 11:13) நாம் நமது பிதாவினிடத்தில் வருகிறோம் என்கிற விசுவாசம் நமக்கிருக்கவேண்டும். ஒரு செக்ரட்டரி மூலமாய் நெருங்கவேண்டிய அளவுக்கு வெகு தூரமாயிருக்கிற ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரியினிடத்தில் நாம் வருகிறதில்லை. நமது பரமதகப்பனிடத்திலேயே நாம் வருகிறோம்; அவர் நமக்கு எதை மறுப்பார்? நல்லது எதையும் அவர் நமக்கு ஒருபோதும் மறுக்கமாட்டார். ஏதொன்றையும் நமக்குக் கொடுப்பது தகுதி என்று தேவன் காணாவிட்டால், அது நமக்கு நல்லதல்ல என்று நாம் முழு நிச்சயமாயிருக்கலாம்.
அப்போஸ்தலனாகிய பவுலுக்கு ஒருகாலத்தில் தன் சரீரத்தில் ஒரு வியாதி இருந்தது; அதை அவர் “மாம்சத்திலே ஒரு முள்” என்று அழைத்தார். அது நீக்கப்படும்படி அவர் மூன்றுதரம் ஜெபித்தார் (2கொரிந்தியர் 12). தேவன் அதை நீக்கவில்லை; அது தன் நன்மைக்கென்றேயிருந்தது என்பதை அவர் உணர்ந்துகொண்டார்; ஏனெனில் அது அவரைத் தாழ்மையுள்ளவராகவும் நொறுங்குண்ட இருதயமுள்ளவராகவும் காத்துக்கொண்டது. தேவன் எப்பொழுதும் நல்லதையே நமக்குக் கொடுக்கிறார்; அப்படி தேவன் நமக்கு நல்லவராய், மிகவும் அதிகமாய் நல்லவராயிருக்கும்போது, நாம் என்ன செய்யவேண்டும்? நாம் மற்ற ஜனங்களுக்கு நல்லவர்களாயிருக்கவேண்டும்.
“கர்த்தாவே, நான் ஊழியஞ்செய்யவேண்டிய இந்த ஜனங்களுடைய தேவையைச் சந்திக்க எனக்கு உதவிசெய்யும் அதையே நீர் எனக்குத் தரவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று ஜெபிக்க வேண்டும். உங்கள் சபையிலுள்ள ஜனங்களைத் தேவபக்தியுள்ள ஜீவியத்திற்கு நடத்தும்படியாகவும், இயேசு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்யும்படி நடத்தும்படியாகவும், மலைப்பிரசங்கத்தின் தராதரங்களுக்கேற்ப அவர்கள் ஜீவிக்கும்படி நடத்தும்படியாகவும் உங்களுக்கு ஒரு பாரம் இருக்கும்போது, பரிசுத்த ஆவியின் வல்லமைக்காக நீங்கள் கேட்பீர்கள்; அந்த ஜனங்களுடைய தேவையைச் சந்தித்து, பிசாசின் பிடியிலிருந்து அவர்களை விடுவித்து, தேவபக்தியுள்ள ஜீவியத்திற்கு அவர்களைக் கொண்டுவரும் ஒரு தீர்க்கதரிசன வார்த்தையை பரலோகத்திலிருந்து நீங்கள் கேட்பீர்கள். மேலும், நீங்கள் அவர்களை போதுமான அளவு நேசித்தால், விடாமுயற்சி கொண்டிருப்பீர்கள்.
பாதிராத்திரியிலே தன் அயலகத்தானுடைய வீட்டிற்குப் போன இந்த மனுஷன், தன் விருந்தாளியை நேசித்தான் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா? அந்த ராத்திரியிலேயே அவனுக்கு ஆகாரம் பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்திருக்கும் அளவுக்கு அவன் அவனை மிகவும் நேசித்திருக்கவேண்டும். விருந்தாளி வந்த அந்த ராத்திரியில் நம்மில் அநேகருக்கு ஆகாரம் இல்லாதிருந்தால், “மன்னியுங்கள், எங்களிடத்தில் ஆகாரம் ஒன்றுமில்லை; ஆகையால் இப்பொழுது படுக்கைக்குப் போவோம்; காலையில் உங்களுக்கு ஏதாகிலும் வாங்கித் தருகிறேன்” என்று நாம் அவனுக்குச் சொல்லிவிடுவோம். ஆனால் இந்த மனுஷன் பசியாயிருந்த தன் விருந்தாளியை மிகவும் நேசித்தபடியால், “என் அயலகத்தானுக்கு முன்பாக நான் நாணமில்லாதவனாய் இருக்கவேண்டியிருந்தாலும், இன்று ராத்திரியே உனக்கு ஏதாகிலும் வாங்கித் தருவேன்” என்று சொன்னான். “கர்த்தாவே, இந்த ஜனங்களுக்கு ஊழியஞ்செய்யும்படி பரிசுத்த ஆவியின் வரங்களை எனக்குத் தாரும்” என்று சொல்லி, விடாமுயற்சியோடே தேவனிடத்தில் போகிறதற்கு இது ஒரு அற்புதமான சித்திரமாயிருக்கிறது.