எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   தலைவர் ஆடவர்
WFTW Body: 

நாம் தேவனுடைய பணியிலும், நம்முடைய சொந்த ஜீவியத்திலும் தேவனுக்கு உதவி செய்வதாக எண்ணிக் கொண்டு நம்முடைய மனுஷீக அறிவையோ, சொந்தப் புரிந்து கொள்ளுதலையோ பயன்படுத்தினால், அதனிமித்தம் வீணான குழப்பங்கள்தான் உண்டாகும்.

"அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார்……. உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்…… ஆபிராமின் மனைவியாகிய சாராயிக்குப் பிள்ளை இல்லாததிருந்தது…… சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்…… ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றாள்……. இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்…… அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்…… அவனிடத்தில் என் நித்திய உடன்படிக்கையை ஸ்தாபிப்பேன்" (ஆதி 15:5; 16:1,3,16: 17:18,19).

ஆபிரகாமிடம் அவனுடைய சந்ததி எண்ணற்ற நட்சத்திரங்களைப் போல இருக்கும் என்று தேவன் அவனுக்கு வாக்குப் பண்ணினார். அந்த சமயத்தில் சாராளோ மலடியாயிருந்தாள். தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறாமல் போனால், அவருடைய நாமம் கனவீனம் அடையுமே என்று ஆபிரகாமும், சாராளும் பயந்திருக்கக் கூடும். ஆகவே சாராளின் யோசனையின்பேரில், ஆபிரகாம் இன்னொருவளை மனைவியாக்கிக் கொண்டு, அவள் மூலமாய் ஒரு மகனைப் பெற்றான். இப்படியாக அவன் தேவனை ஓர் இறுக்கமான சூழலில் இருந்து காப்பாற்றுவது போல எண்ணிக் கொண்டு அவருக்கு உதவிட முனைந்தான்.

தேவனுக்கு இப்படிப்பட்ட உதவியெல்லாம் தேவையில்லை என்பதை ஆபிரகாம் முற்றிலும் உணராமல் போனான். அவன் தேவனுக்கு உதவி செய்வதற்காக இஸ்மவேலைப் பிறக்கச் செய்ததன் விளைவாக, அவனுடைய மனைவிக்கு மட்டுமின்றி, ஈசாக்குக்கும் அவனுடைய சந்ததி முழுவதற்கும் அது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.

அது போலவே நாமும்கூட அடிக்கடி தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் நம்முடைய உதவியின்றி நிறைவேறாது என்று எண்ணிவிடுகிறோம். அதனால்தான் தேவன் நம்மிடத்தில் எந்த உதவியையும் கேட்காமல் போனாலும், நாமாகவே வலிய முன்வந்து செயல்படுகிறோம். தேவன் மீது போதுமான விசுவாசத்தை வைத்து, அவரே நம்மை வழிநடத்தட்டும் என்று அவரையே நம்பி இருப்பதற்குப் பதிலாக, மனுஷ தயாரிப்புகளான பலவிதமான திட்டங்களையும், முயற்சிகளையும் சார்ந்து கொள்ளுகிறோம்.

இயேசு தமது வாழ்வில், பிதாவின் சித்தத்தையும், வழிநடத்துதலையும் தேடாமல், ஒருபோதும் தாமாக எதையுமே செய்யவில்லை (யோவா 5:19,30). பெரும்பாலான விசுவாசிகள் தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையைவிட தங்கள்மேல் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதால், அவர்கள் தேவ சித்தத்தையும், நடத்துதலையும் இயேசுவைப் போல தேடுவதில்லை.

நாம் நம்முடைய வாழ்க்கையில் தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டங்களில் போதுமான அளவு ஜெபிப்பதில்லை. அத்துடன் நாம் நம்முடைய சுய புத்தியின் மீதோ அல்லது ஆபிரகாமைப் போல மனைவியின் புத்தியின் மீதோ சார்ந்து கொள்ளுபவர்களாக இருக்கிறோம். அதனால்தான் நம்முடைய குடும்பங்களிலும், தேவனுடைய பணியிலும் பலவித குழப்பங்கள் ஏற்படுகின்றன.

"கர்த்தர் மோசேயை நோக்கி: …. கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; ……. மோசே தன் கையை ஓங்கி கன்மலையை தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்: ….. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: ……. நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்த சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு போவதில்லை என்றார்" (எண் 20:7-13).

இந்தத் தடவை தேவன் மோசேயை கன்மலையுடன் பேசும்படிக்குத்தான் பணித்தார். ஆனால் மோசே தேவனுக்கு உதவிக்கரம் நீட்டுவதாகப் பாவித்து, கன்மலையை இரண்டு தரம் அடித்தான். மாம்சமானது மென்மையாய் ஒரு தரம் பேசுவதைவிட, இருமுறை கடினமாக அடிப்பதையே தெரிந்து கொள்ளுமென்பது எவ்வளவு உண்மையாய் இருக்கின்றது! அவர் நம்மை சாந்தமாய் இருக்க வேண்டுமென கட்டளையிட்டுள்ளார் (மத் 11:28,29). ஆனால் நாமோ சாந்தத்துடன் சிறிது மனுஷீகக் கடினத்தையும் கலந்தால், தேவனுடைய நோக்கங்களை விரைவில் சாதித்துவிடலாம் என எண்ணுகிறோம். ஆனால் தேவனைப் பொறுத்த வரை தம்முடைய தயவைக் கொண்டுதான் அவர் ஜனங்களை மனந்திரும்புதலுக்கு நேராய் நடத்துகிறார் (ரோ 2:4).

தேவன் ஏற்கனவே ஒரு முறை கன்மலையை அடிக்கச் சொன்னபடியால் (எண் 17:6), ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று ஒரு வேளை மோசே நினைத்திருக்கக்கூடும். பரிசுத்த ஆவியானவர் எங்கோ, எப்போதோ ஒரு காரியத்தை எப்படிச் செய்தாரோ, அதே போலத்தான் மற்ற எல்லாக் காரியத்திலும் செய்ய வேண்டும் என்றே அநேகர் கற்பனை செய்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் "எழுப்புதலைக்" கொண்டுவருதல், வியாதியுள்ளவரைக் "குணமாக்குதல்", ஜனங்களை "அந்நிய பாஷையில் பேச வைத்தல்" போன்ற பலவித மனரீதியிலான வித்தைகளைக் காட்டி அவருக்கு உதவி செய்ய முற்படுகின்றனர். பரிசுத்த ஆவியானவர் வித்தியாசமான கிரியைகளை வித்தியாசமான நேரங்களில் நடப்பிக்கிறவரென்பதும், அவருடைய வரங்களை வெளிப்படுத்துவதற்கு அவருக்கு எந்தவிதமான ஆத்தும உதவியும் மனுஷனிடமிருந்து தேவையில்லை என்பதும் அவர்கள் கவனிக்கத் தவறிய விஷயங்களாகும்.

"ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான். அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையிலே செத்தான்" (2 சாமு 6:6,7).

ஊசாவின் நோக்கங்கள் நலமானவைதான். அவன் தேவனுடைய சாட்சிப் பெட்டி கீழே விழாமல் காக்க விரும்பினான். ஆனால் இது ஒரு வரம்பு மீறிய செயலாகும். தேவனுக்கு இது ஒரு சீரியஸான விஷயமாக இருந்தபடியால், அவர் அவனைக் கொன்றார். எனவே நாம் தேவனுடைய பிரமாணங்களை அற்பமாய் கையாள முடியாது.

சபையிலும் தேவன் வெவ்வேறான பொறுப்புகளை வெவ்வேறான நபர்களுக்கு அளித்து, ஒவ்வொருவரைச் சுற்றிலும் குறிப்பிட்ட எல்லைகளை வரைந்துள்ளார். நாம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியிலே தேவை இருப்பதைக் கண்டு, தேவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பிரச்சனையைத் தீர்த்துவைக்க நினைக்கிற சமயங்களில், பரிசுத்த ஆவியானவர்தான் அதைச் செய்யும்படி நம்மை ஏவுகிறாரா, அல்லது நமது மனுஷ அறிவானது அதைச் செய்யும்படிக்கு நம்மைத் தூண்டுகிறதா என்று நம்மை நாமே கேட்க வேண்டும். நம்முடைய எல்லைகளை நமக்கு மதிக்கத் தெரியாவிட்டாலும், தேவன் நமது எல்லைகளை மதிக்கிறார். அவர் நம்மைச் சுற்றி வரைந்துள்ள எல்லையைத் தாண்டி நாம் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் விரும்புவதில்லை. நம்முடைய எல்லைகளுக்குள்ளாக இருக்கும் போதுதான் நாம் தேவனைக் கண்டுகொள்ள முடியும் (அப் 17:26,27). நம்முடைய எல்லைகளுக்கு வெளியே நம்மால் பிசாசைத்தான் காண முடியும் (பிர 10:8b).

மேற்குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து நாம் பல மடங்கு பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆதலால் இந்த விஷயத்தில் நாம் நம்முடைய வாழ்க்கைக்கும், ஊழியத்துக்கும் தேவையான வெளிச்சத்தை தேவன் நமக்குத் தரும்படி அவரிடத்தில் கேட்போமாக.