உங்களுக்கு நேரிடும் எதுவும் உங்களை சோர்ந்துபோகச் செய்ய வேண்டாம். ஏனென்றால் நீங்கள் தேவனைப் பற்றிக்கொண்டால், எப்படிப்பட்ட சூழ்நிலையாயிருந்தாலும் அதை நீங்கள் ஜெயிக்க அவர் உதவி செய்வார். ஒவ்வொரு சோதனையும் நீங்கள் இன்னும் அதிகமாய் அவரை அறிந்து கொள்வதற்காகவே தேவனால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் அவிசுவாசிகளும், உலகப்பிரகாரமான விசுவாசிகளும் தவறுகிறார்கள். தேவனிடம் திரும்பி வருவதற்கு பதிலாக தங்கள் துன்பங்கள் தோல்விகளின் நடுவிலே உலகத்தின் பக்கமாய்த் திரும்பி தாங்கள் செய்யக் கூடாத தடைசெய்யப்பட்ட காரியங்களைச் செய்து அதன்மூலம் நிம்மதியும் சமாதானமும் கிடைக்குமா என்று சோதித்துப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவைகளைச் செய்ய ஒருபோதும் முயற்சிக்காதீர்கள். ஆரம்பத்தில் பாதிப்பு இல்லாதது போல் தோன்றும் காரியங்களுக்குக் கூட மிக எளிதாக நீங்கள் அடிமைப்பட்டுவிட முடியும்.
ஒருபோதும் தோல்வியே அடையாதவர்களால் பெறப்படுவது அல்ல பரிபூரணம். ஆனால், தங்கள் தோல்விகளை நேர்மையாக ஒத்துக்கொண்டு, தாங்கள் விழுந்த மாத்திரத்தில் குதித்தெழுந்து முன்னேறிச் செல்பவர்களாலேயே பரிபூரணம் பெறப்படுகிறது.
நாம் ஒரு ‘மார்க்கவாதியாக’ (religious) மாறி, அதுவே ‘ஆவிக்குரிய தன்மை’ (spirituality) என்று நினைத்துக் கொள்ளும் அபாயத்தை எப்பொழுதும் சந்திக்கிறோம். மார்க்கவாதிகள் வெளிப்புறமான காரியங்களில் தான் நாட்டம் கொள்கிறார்கள். வெளிப்புறமாக தாங்கள் கர்த்தருக்கு செய்யும் தியாகங்கள், சபையில் ஒரு நல்ல நிலையில் இருப்பதற்காக குறைந்தபட்சம் நாம் என்ன செய்யலாம் என்று எண்ணி செய்யும் வெளிப்புறமான கிரியைகள், சபையில் அவர்களது செயல்பாடுகள், உடை உடுத்தும் முறையிலுள்ள வெளிப்புற விவரங்கள், மற்றும் நடைமுறையில் இல்லாதபடி அறிவுப்பூர்வமாக எப்படி வேதாகமத்தைக் கற்றுக்கொள்வது போன்ற காரியங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். உணர்ச்சியூட்டும் கூடுகைகளில் கலந்துகொண்டு, அதுதான் ஆவியானவருடைய வல்லமைக்கு ஆதாரம் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்கிறார்கள். இவையெல்லாம் தவறென்றோ தேவையற்றவையென்றோ நாம் கூறிவிட முடியாது. ஆனால், மார்க்கவாதிகளுக்கு இந்த செயல்பாடுகள் தான் மிகவும் பிரதானமாய் இருக்கின்றன. மேலும் அவர்கள் இவைதான் ஆவிக்குரிய அடையாளங்கள் என்றும் கற்பனை செய்து கொள்ளுகிறார்கள். இப்படித்தான் அவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
உண்மையான ஆவிக்குரிய ஜனங்களோ இன்னும் அதிகமாய் தேவனை எப்படி அறிந்து கொள்ளலாம் என்று வாஞ்சிக்கிறார்கள். கிறிஸ்துவிலும் தங்கள் சக விசுவாசிகளிலும் ஊக்கமாய் அன்புகூருவதில் தங்களைக் காத்துக்கொள்ள நாடுகிறார்கள். தேவனுக்காக என்ன செய்யலாம் என்பதைக் காட்டிலும் தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்பதையே அறிய நாடுகிறார்கள். பரிசுத்த ஆவியின் வல்லமையைத் தேடி தங்கள் சுயநலமான செயல்களிலிருந்து தங்களை சுத்திகரித்துக் கொள்ளுகிறார்கள். மார்க்கவாதிகள் ஆராதனைக் கூடுகைகளைக் (congregations) கட்டுகிறார்கள். ஆவிக்குரிய ஜனங்களோ கிறிஸ்துவின் சரீரத்தை கட்டுகிறார்கள்.
கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிற, சத்தியத்தை திரித்துப் புரட்டும் பரிசேயர்களைப் போலல்லமல், தமக்கென்று தைரியமாய் எழும்பி நிற்கும் மனிதர்களை தேவன் இந்த உலகம் முழுவதிலும் தேடிக்கொண்டிருக்கிறார். தம்முடைய வார்த்தையின் கோட்பாடுகளுக்காக நிலைத்து நிற்கக்கூடிய புருஷரை தேவன் தேடிக்கொண்டிருக்கிறார். தாங்கள் விசுவாசித்த சத்தியத்துக்காக எந்த விலைக்கிரயத்தையும் செலுத்த அஞ்சாமல் தைரியமாய் நின்ற தேவ மனிதர்களான எலியா, யோவான்ஸ்நானன், பவுல், மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி, எரிக் லிடெல் போன்ற மனிதர்களை தேவன் தேடிக்கொண்டிருக்கிறார். தேவன் கொள்கைப்பிடிப்புள்ள இப்படிப்பட்டவர்களைக் கொண்டுதான் பரலோகத்தை நிரப்பப் போகிறார். நீங்களும் அதில் ஒருவராய் இருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். நீங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவராயிருந்தால், கல்லூரியில் தேவனுக்காய் எழும்பி நிற்க உங்களுக்கு ஏராளமான வாய்ப்புக்கள் கிடைக்கும். அப்படியே ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கடந்த நூற்றாண்டுகளில் பல தேவ மனிதர்கள் வேதப்புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும், சுவிசேஷத்தின் களங்கமற்ற தூய செய்தியைப் பாதுகாக்கவும் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருந்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக, இன்று பல விசுவாசிகள் தங்கள் வீடுகளில் இருக்கும் வேதாகமத்தை - ஆழமாய் படிப்பதைக் குறித்தெல்லாம் பேசவேண்டாம் - வாசிப்பதற்கே 5 நிமிடங்கள் கூட செலவழிப்பது இல்லை. இன்று வேதாகம உபதேசங்களைக் குறித்து நமக்கு இருக்கிற தெளிவான புரிந்துகொள்ளுதல், கடந்த நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல தேவ மனிதர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களோ இன்றைய நாட்களில் நாம் காண்பதற்கு மிகவும் அரிதாயிருக்கிற கிறிஸ்துவைப் பற்றும் ஊக்கமான பக்தி வைராக்கியத்தைக் கொண்டிருந்தார்கள் - காரியத்தின் கடைத்தொகை என்னவென்றால், சரியான உபதேசத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, கிறிஸ்துவைப் பற்றும் ஊக்கமான தேவபக்தியே காரியம்.
மறதி என்பது பாவத்தைப் போல ஓர் ஆபத்தான விஷயம் இல்லை. ஆனால் இந்த விஷயத்தை மேற்கொண்டால் அநேக சிரமங்களை நாம் தவிர்க்கலாம். நாம் எல்லோருமே மறதி உள்ளவர்கள்தான். என்னுடைய மறதியை மேற்கொள்ள இப்பொழுதெல்லாம் நான் ஒன்று செய்கிறேன்: நான் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி அதை எப்பொழுதும் என்னுடன் வைத்துக்கொள்கிறேன். ஆண்டவர் என்னோடு கூட பேசும் காரியங்களையும் அப்படியே எழுதி வைக்கிறேன். இப்படி நான் எழுதி வைக்கவில்லை என்றால், தேவன் பேசியவற்றை நான் அடிக்கடி மறந்து விடுவதைக் காண்கிறேன்.