WFTW Body: 

சிலுவையின் செய்திக்கு பிரகாசமான, நேர்மறையான ஒரு பக்கமும் உண்டு! சிலுவையானது தன்னில் தானே முற்றுப்பெறும் ஒன்றல்ல என்பதே அந்தப் பக்கமாகும். அது, உயிர்த்தெழுந்த வாழ்விற்குள் நடத்தும் ஒரு பாதையாயிருக்கிறது. சிலுவையின் கிரியையை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டவர்களுக்கு "ஒரு சந்தோஷம் அவர்களுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது” (எபிரெயர் 12:2). நிலத்தில் விழுந்து மரிக்கும் கோதுமை மணி “அதே நிலையில்” அங்கு இருப்பதில்லை.... அது முளைத்து, ஒரு ஜெயமுள்ள கனி கொடுக்கும் வாழ்விற்கே மலர்கிறது!! சிலுவையின் பாதையை ஏற்றுக்கொண்ட ஒரு விசுவாசி மற்றவர்களால் எவ்வளவுதான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் முடிவில் தேவன் அவரைத் தூக்கி நிறுத்துவார்! ஆம், கனி கொடுக்கும் ஜீவியம் சுயத்திற்கு மரிப்பதிலிருந்தே வருகிறது! அந்தக் கனியின் சில பகுதிகளை இந்த பூமியில் இருக்கும்பொழுதே நாம் காணமுடியும். இருப்பினும் அதன் முழுமையையும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக உண்மையுள்ள தம்முடையவர்களுக்கு ஆண்டவர் பலனளிக்கும்போது நாம் காண முடியும்!!

சிலுவையின் பாதை ஒன்றே ஜெயத்திற்கான பாதையாகும். ஆகவேதான் இந்த வழியில் இயேசுவை செல்லவிடாதபடி பிசாசானவன் தன்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்துபார்த்தான். ஆகவேதான் இன்றும், ஜனங்கள் தங்கள் ஜீவியத்தில் சிலுவையின் வழியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க சாத்தான் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருக்கிறான். சிலுவையின் பாடுகளுக்குள் இயேசு பிரவேசிப்பதைத் தடைசெய்ய “நலம் விரும்பும் அன்பினால்" பேதுருவும் முயற்சித்தான். அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட அடுத்த கணமே “அது சாத்தானின் குரல்” என்பதை இயேசு புரிந்து கொண்டார் (மத்தேயு 16:21-23). இதேபோன்ற புத்திமதியை நம் ஜீவியப்பாதையின் கடினத்தைக் காணும் நம் நண்பர்களும், நம் அன்பு உறவினர்களும் நமக்குக் கூறிட முடியும். இவ்வாறு நம் இருதயத்தின் உள்ளிருந்தோ அல்லது மற்றவர்களிடமிருந்தோ "சிலுவையின் பாதையை தவிர்த்து விடு” என தொனிக்கும் குரல் எப்போதுமே ‘பிசாசின் குரல்' என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சத்தத்தை பிசாசின் குரலாகவே நாம் எப்போதும் அடையாளம் கண்டுகொள்கிறோமா?

வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் ஆண்டவராகிய இயேசு "அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டியாய்" காணப்பட்டார். இங்கே கல்வாரியைக் குறித்த பரலோகத்தின் கண்ணோட்டத்தை நாம் காண முடிகிறது. மனுஷருடைய பார்வையில், கல்வாரி ஒரு தோல்வியின் இடமேயாகும்! இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, ஓர் அவிசுவாசியாகிலும் அவரைக் கண்டதாக வேதப்புத்தகத்தில் எழுதப்படவில்லை. ஆகவேதான், இன்றும் மனுஷர் பார்வையில் 'கல்வாரி' தோல்வியின் சின்னமாகவே இருக்கிறது. ஆனால் பரலோகத்தின் கண்களுக்கு முன்பாக, இந்த உலகத்தில் காணும் யாதொரு ஜெயத்தைக் காட்டிலும் சிகரமான ஜெயமாகவே கல்வாரி காணப்படுகிறது! இந்த பூமியில் தேவ ஆட்டுக்குட்டியை சிலுவையில் அறைந்தார்கள்... ஆனால், பரலோகத்தில் ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளுகிறார்கள்! இயேசுவைப் பின்பற்றி, உங்கள் உரிமைகளை நீங்கள் இழக்கும்போது, இந்த பூலோக ஜனங்கள் உங்களை “முதுகெலும்பு இல்லாதவன்!” என பரிகசிக்கலாம். ஆனால் பரலோகத்திலோ, இந்த ஜெயத்தின் ஸ்தானத்தை எடுத்துக்கொண்ட தேவனுடைய பிள்ளைகளினிமித்தம் பெருமகிழ்ச்சி உண்டாயிருக்கும்!! ஆம், “(சிலுவையின்) மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராதவர்கள்... சாத்தானை ஜெயித்தார்கள்! ஆகவே பரலோகம் களிகூருகிறது!!” (வெளி 12:11,12).

ஒரு மெய்க்கிறிஸ்தவ வாழ்க்கையை “ஒரு கண்ணியிலிருந்து விடுபட்ட பறவைக்கு!” ஒப்பிட்டே சங்கீதம் 124:7 -ம் வசனம் சித்தரிக்கிறது. ஆம், ஒரு பறவை வான் உயர உயர பறந்து சுற்றுகிற சித்திரம் தான், தம்முடைய பிள்ளைகள் அனைவரும் அனுபவித்து வாழவேண்டுமென்று தேவன் விரும்பும் “மகிமையான சுதந்திரத்தை” சித்தரிக்கும் பூரணமானதொரு சித்திரமாகும். பூமியின் தரையைப் பற்றிக்கொண்டு வாழும் எந்தப் பிராணிக்கும், மலைகளும், ஆறுகளும் அவைகள் முன்னேறிச் செல்லமுடியாத தடையாய் நின்றிடமுடியும்! ஆனால் இதுபோன்றவை ஒரு பறவைக்கு தடையே அல்ல!! இந்த தடைகள் அனைத்திற்கும் மேலாக பறவை சிறகடித்து உயர உயர பறந்து செல்கிறது. இவ்வாறு இந்தப் பறவையைப்போலவே பூரண விடுதலையோடு தனக்கு கீழான ஒவ்வொன்றையும் ஆண்டுகொள்ளும்படி மனுஷனை தேவன் சிருஷ்டித்தார் (ஆதியாகமம் 1:28). ஆனால் மனுஷனுடைய கீழ்படியாமையானது அவனை “கண்ணியில் சிக்கிய பறவையைப் போல்” சிக்கவைத்து அவனை விடுதலையோடு பறக்கமுடியாமல் செய்துவிட்டது!

“சிலுவை” ஒன்று மாத்திரமே அந்தக் கண்ணியை உடைத்து நம்மை விடுதலை செய்திட முடியும்! இதைத் தவிர வேறு வழி இல்லவே இல்லை!! இந்த உலகத்திற்கும் உங்கள் சுயத்திற்கும் “மரணத்தை” மனதார தழுவி ஏற்றுக்கொள்ளுங்கள்...... அப்போது, பிசாசின் வல்லமைக்கும் நீங்கள் மரித்துவிடுவீர்கள்! இனியும் அவன் உங்களைப் பிடித்து வைத்திருக்கும் கண்ணி இப்போது தெறித்துப் போனபடியால் அந்தப் பறவையைப் போல் வானுயர நீங்கள் பறப்பதற்கு எதுவும் - எந்த தடையும் வந்து நிற்க முடியாது. அதுவே மெய்யான விடுதலை. “இந்த மெய்யான விடுதலையையே” நம் ஜீவியத்தில் பரிசுத்த ஆவியானவர் கொடுத்துவிட வாஞ்சிக்கிறார் (2கொரிந்தியர் 3:17). ஆனால் இந்த சுதந்திரமான விடுதலைக்குரிய ஒரே வழி “சிலுவையின் வழி” ஒன்று மாத்திரமே ஆகும்!

இது போன்ற கிறிஸ்தவர்களை "வேரற்றவர்கள்” என இயேசு மாற்கு 4:17 -ம் வசனத்தில் கூறினார். இவர்கள் வெறும் மேலோட்டமான கிறிஸ்தவர்கள்! அவர்களுடைய வேர் பெலன்கொள்ளும்படி தேவன் உருவாக்கித்தந்த சந்தர்ப்பங்களில் “சிலுவையை தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்ள” இவர்கள் மறுத்துவிட்டார்கள். கிறிஸ்துவுக்குள் இருக்கும் பரிபூரண ஜீவனுக்குள் மனிதனை நடத்தக்கூடிய ஒரே ஒரு பாதைதான் இருக்கிறது! நாம் விரும்புகிறபடி வேறு பாதைகளில் நாம் நடக்கலாம்... ஆனால், அப்படிப்பட்ட வேறெந்த பாதையிலும் தேவனுடைய நோக்கத்தை நாம் ஒருக்காலும் நிறைவேற்றவே முடியாது. நம் ஜீவியத்தில் "சிலுவையின் பாதையைத்” தவிர்த்துவிட்டால், நாம் பெற்ற சகல வரங்களும் தாலந்துகளும் வீணாய்ப் போய்விடும்! இந்த அற்புதமான சிலுவையின் பாதையை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் முற்றிலும் நம்முடைய கரத்தில்தான் இருக்கிறது!!

சாது சுந்தர் சிங் கூறும்போது, “நாம் பரலோகம் சென்றவுடன், இயேசுவுக்காக சிலுவை சுமப்பதற்கு இரண்டாவது வாய்ப்பு ஒரு போதும் தரப்படாது! இப்போது அந்த சிலுவையை நாம் உதறிவிடலாம், ஆனால் இயேசு நடந்து சென்ற குருதிபடிந்த அடிச்சுவடுகளை பின்பற்றும் வாய்ப்பு நித்தியத்தில் நமக்குத் தரப்படாது!" எனக்கூறினார். நம்முடைய ஸ்தோத்திரிக்கப்பட்ட கர்த்தரை அன்று நாம் சந்திக்கும் போது, அவருடைய கரங்களிலும் கால்களிலும் இன்னமும் ஆணிகடாவிய தழும்புகள் இருப்பதை நாம் காண்போம். அந்தப் பரவச நேரத்தில், நம் பூலோக ஜீவியத்தில் நம் ஒவ்வொரு அடிச்சுவட்டையும் எத்தனை கவனத்தோடு சிலுவைக்கு விலக்கி நடந்துகொண்டோம் எனத் திரும்பிப்பார்க்கும் ஞாபகம் நம்மை வாட்டி வதைத்திடுமல்லவா? அந்நாளில் அந்தக் கொடிய துயரம் ஏற்படாதபடி நம் ஒவ்வொரு பாத அடியும் சிலுவைக்கு இணங்கிட தேவன் அருள்புரிவாராக!!