கிறிஸ்தவத்தின் முதலாவது 300 ஆண்டுகள், கிட்டத்தட்ட எல்லா கிறிஸ்தவர்களுமே 'கிறிஸ்தவரல்லாத ஆட்சியின் கீழ்' வாழ்ந்து, துன்புறுத்தப்பட்டு, அவர்களில் அநேகர் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். தேவன் தம்முடைய அளவில்லாத ஞானத்தின்படி, தம்முடைய பிள்ளைகள், ஜனங்களால் துன்புறுத்தப்படும்படி அனுமதித்து, அவரை மகிமைப்படுத்தச் செய்தார்! இன்றும், தன்னுடைய மிகச்சிறந்த பிள்ளைகளை துன்புறுத்தும் அரசாங்கத்தின் கீழ்' வாழும்படி அனுமதித்துள்ளார்! உபத்திரவத்தின் கீழ்தான், சபை எப்போதும் பெருகி உள்ளது! எங்கெல்லாம் எளிதும், சொகுசும், பொருளாதார ஐசுவரியமும் சபை அனுபவித்ததோ, அங்கெல்லாம் சபை அதிகப்பட்சத்தில் உலகத்திற்குரியதாய் மாறி விட்டது. நாம் உலகத்திலிருக்கும் காலம் வரை, உபத்திரவத்தையும், துன்புறுத்தலையும், பரீட்சைகளையும் சந்திப்போம். ஆகவே, இந்த உலகத்தின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், ஒரு சொகுசான ஜீவியத்தை நம்முடைய வேலை ஸ்தலத்திலோ அல்லது நம் தனிப்பட்ட ஜீவியத்திலோ எதிர்பார்த்திட முடியாது.
மேலும், பொருளாதார கஷ்டத்தின் நாட்களும் வரும்! ஆகவே, இப்போதிருந்தே மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்திட நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆடம்பர ஜீவியத்திலிருப்பவர்கள், வரப்போகும் அந்த நாட்களில் அதிக கஷ்டப்படுவார்கள். விசுவாசிகள், எதிர்காலத்திற்கென்று கொஞ்ச பணத்தை சேமித்து வைப்பதற்கு ஞானமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். அப்போதுதான், நாம் பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகிலும் நம்முடைய நம்பிக்கையை நம் சேமிப்புகளில் வைத்திடாமல், ஆண்டவர் மீது மாத்திரமே வைத்திருக்க வேண்டும்! தேவன் வைராக்கியமுள்ள தேவனாய் இருக்கிறபடியால், சிருஷ்டிக்கப்பட்ட யாதொன்றின் மீதும் நம்முடைய நம்பிக்கையை வைத்திட அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். இந்த உலகத்தின் ‘பொருளாதார கோட்பாடுகளை' தேவன் அசைப்பார்! சிருஷ்டிக்கப்பட்டவைகளின் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்கள், அசைக்கப்பட்டு போவார்கள். இயேசு கூறியதைப் போல், சகோதரர்கள் தங்கள் சகோதரர்களை காட்டிக் கொடுப்பார்கள்! நம்முடைய வீட்டாரே நமக்கு எதிரியாய் மாறுவார்கள்! (மத்தேயு 10:21).
அந்நாட்களில், அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும், விசுவாசிகளுக்கு தீவிரமான உபத்திரவங்கள் ஏற்படும்! ஆகிலும், அவை அனைத்தும் நம்மை சுத்திகரித்து ‘சிறந்த கிறிஸ்தவர்களாய்' நம்மை மாற்றும்! 1பேதுரு 3:13 கூறுகிறபடி 'நாம் எப்போதும் நன்மை செய்ய நாடுகிறபடியால்' ஒருவரும் நமக்கு தீங்கு செய்ய இயலாது! ஆகவே தேவனுடைய கிருபையைக் கொண்டு “எல்லோருக்கும் நன்மை செய்திடவே” நாம் தீர்மானம் எடுத்துக் கொள்ளவேண்டும்! நம்மை பகைக்கிறவர்களை அன்புகூர வேண்டும்! நம்மை சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கவேண்டும்! நமக்கு தீங்கு செய்கிறவர்களை மன்னித்து ஜெபிக்கவேண்டும்! அப்படி இருந்தால், நமக்கு ஒருவரும் தீங்கு செய்திட முடியாது. சாத்தானும் அவனுடைய கைகூலிகளும் நம்மை ஏமாற்றலாம், துன்புறுத்தலாம், இடையூறு செய்யலாம், கொள்ளையாடலாம், காயப்படுத்தலாம், சிறையிடலாம், நம் சரீரத்தை கொலையும் செய்யலாம்! ஆனால் இவை யாதொன்றும் “ஆவிக்குரிய பிரகாரமாய்” நமக்கு ஒருபோதும் தீங்கு செய்திட முடியாது!
இனிவரும் நாட்களில், தங்கள் விசுவாசத்திற்காக உபத்திரவங்களை சந்திக்கும் உலகிலுள்ள எல்லா கிறிஸ்தவர்களையும் நாம் ஆயத்தம் செய்ய வேண்டியதாயிருக்கிறது! அந்த நாட்களுக்கென்று, நான்கு கட்டளைகளை ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கிறார்:
1. “சர்ப்பங்களைப்போல் வினாவுள்ளவர்களும் புறாக்களைப் போல கபடற்றவர்களுமாய் இருங்கள்” (மத்தேயு 10:16).
நாம் சாட்சி பகர்வதில் மதியீனமாயில்லாமல், வினாவுள்ளவர்களாய் அல்லது ஞானமுள்ளவர்களாயிருக்க வேண்டும். நாம் வாழும் ஸ்தலம், மற்றும் வேலை செய்யும் ஸ்தலம் ஆகிய இடத்தில், நம் சொந்த ஜீவியமே கிறிஸ்துவை பேசுவதாயிருக்கவேண்டும்! நாம் கர்த்தருக்காக சாட்சி கொடுக்கும்போது, 'இயேசு கிறிஸ்து என்ற ஒரு நபரைக் குறித்தே' பேசுகிறோம் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்! அல்லாமல் மற்ற எல்லா மதங்களிலும் கிறிஸ்தவ மதமே உயர்ந்தது' என குறிப்பிட்டு பேசக்கூடாது! நாம் இயேசுவை உயர்த்தும்போது மாத்திரமே, அவர் ஜனங்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்ளுவார்! (யோவான் 12:32). மேலும் 'கிறிஸ்தவரல்லாத வேவுகாரர்களை' நாம் பகுத்தறிய கவனம் கொண்டவர்களாயிருக்கவேண்டும். அவர்கள், கிறிஸ்தவத்தில் ஆர்வம் கொண்டவர்களைப்போல் பாசாங்கு செய்து, நம்மிடம் வருவார்கள். ஆனால், அவர்களின் உண்மையான நோக்கமோ, நாம் பேசுகின்ற சில வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, நம்மைக் குற்றஞ்சாட்டவேண்டும் என்ற நோக்கமேயாகும்! அதைக்கொண்டு நம்மை வழக்குமன்றத்திற்கு இழுத்துச் சென்று “அவர்களை மதம் மாற்றுவதற்கு நாம் கட்டாயப்படுத்துவதாக” பிராது செய்வார்கள்! ஆகவே இயேசுவைப்போல நாம் ஞானமும், அதே சமயம் அன்பும் உடையவர்களாயிருக்கவேண்டும்:
a) “இயேசு சில ஜனங்களிடம் தன்னை ஒப்புவிக்கவில்லை! ஏனெனில், அவர்களுக்குள் என்ன இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார்” (யோவான் 2:23-25). ஆகவே நாம் ஒவ்வொருவரையும் நிதானித்து அறிய வேண்டும்.
b) “யூதர்கள் இயேசுவை கொலை செய்ய வகை தேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல், கலிலேயாவிலே சஞ்சரித்து வந்தார்” (யோவான் 7:1). எனவே, நாமும் தேவையில்லாத அபாயத்தை தவிர்த்துவிட வேண்டும்.
c) “உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44). ஆகவே, நல்லவர்களாயிருங்கள், பிறர் தீமையாயிருப்பதினிமித்தம் நீங்களும் தீமையாய் மாறாதிருங்கள்.
2. “தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைத்திருங்கள்” (மத்தேயு 4:4).
நாம் துன்புறுத்தப்படும் சமயங்களில், மிக முக்கியமான தேவையாயிருப்பதெல்லாம் 'நம்முடைய இருதயங்களில் பேசும் தேவனுடைய வார்த்தையை உணர்வதேயாகும்'. ஒவ்வொரு நாள் முழுவதும், தேவனை கவனித்து கேட்கும் மனப்பான்மையே ஓர் நல்ல பழக்கமாய் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் தேவனிடம் கேட்பதை, அப்படியே விசுவாசித்து கீழ்ப்படியவும் வேண்டும்! அப்படி இல்லையென்றால், அதற்கு யாதொரு மதிப்பும் இல்லை! ஆகவே நாம் தேவனுடைய வார்த்தையை, அதிலும் குறிப்பாய் புதிய ஏற்பாட்டின் வேத வாக்கியங்களை அதிகமாய் தியானிக்க வேண்டும்! அப்போது மாத்திரமே, நாம் 'தேவனுடைய சத்தத்தை' தெளிவாய் பகுத்தறிய முடியும்! பின்பு, அதற்கு “நம்பி, கீழ்ப்படிய வேண்டும்!''
3. “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்! நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” (யோவான் 13:34,35).
நம்முடைய வீட்டிலும், நம்முடைய சபைகளிலும், எல்லாவித ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதையும், எல்லாவித ஒருவரையொருவர் புறங்கூறுதலையும், எல்லாவித ஒருவரோடொருவர் வாக்கு வாதத்தையும், எல்லாவித ஒருவரையொருவர் சந்தேக மனப்பான்மையும் நிறுத்திவிட வேண்டும். பகுத்தறிவது ஓர் திவ்விய குணாதிசயமாகும்! ஆனால், சந்தேகப்படுவது சாத்தானின் ஓர் குணாதிசயமாகும்! நம் ஜீவியத்தில் பாவத்தையும், சாத்தானையும் போரிடுவதற்கு கவனம் செலுத்திட, இதுவே காலமாகும்! நம்முடைய வாழ்க்கை துணையாயிருப்பவர்களை, நம் சக-விசுவாசிகளை, தீவிரமாய் அன்புகூருவதற்கும், இதுவே காலமாகும்!
4. “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்'' (யோவான் 16:33).
தேவன் சிங்காசனத்தில் இருக்கிறபடியால், தம்முடையவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார். 2000 வருடங்களுக்கு முன்பாகவே சாத்தான் தோற்கடிக்கப்பட்டு விட்டான். நாம் தேவனுடைய 'கண்மணியாய்' இருக்கிறபடியால், நம்மைச் சுற்றிலும் அக்கினி மதிலாய் இருப்பார்! (சகரியா 2:5,8). உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்! (ஏசாயா 54:17). ஆகவே, “நமக்கு இருப்பது போதுமென்றிருக்கக்கடவோம்! 'நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, நான் உன்னை கைவிடுவதுமில்லை' என்று தேவனே சொல்லியிருக்கிறார்! அதினாலே நாம் தைரியம் கொண்டு 'கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்! மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” (எபிரெயர் 13:5,6) என்று நாம் கூறிட முடியும்!
நாம் தொடர்ந்து ஏக்கத்துடன் ஜெபிப்பதெல்லாம் “கர்த்தராகிய இயேசுவே வாரும்!” என்பதேயாகும் (வெளி 22:20).