WFTW Body: 

கிறிஸ்து சபையை நேசித்து, அதற்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார்” (எபேசியர் 5:25). நாம் சபையைக் கட்ட வேண்டுமானால், இயேசு சபையை நேசித்தது போலவே நாமும் சபையை நேசிக்க வேண்டும். நமது பணத்தையோ அல்லது நேரத்தையோ கொடுத்தால் மட்டும் போதாது. நாம் நம்மையே, அதாவது, நமது சுய-ஜீவனையே, கொடுக்க வேண்டும்.

தேவன் தாம் மனிதனிடம் கொண்டிருக்கும் அன்பை விவரிக்க விரும்பிய போது, அவர் தமது அன்பை ஒரே ஒரு பூமிக்குரிய உதாரணத்துடன் மட்டுமே ஒப்பிட முடிந்தது; புதிதாகப் பிறந்த தனது குழந்தையிடம் ஒரு தாய் காட்டும் அன்பு தான் அது (ஏசாயா 49:15-ஐப் பார்க்கவும்). நீங்கள் ஒரு தாயைக் கவனித்தால், அவள் தன் குழந்தையின்மீது வைத்திருக்கும் அன்பு தியாகத்தின் ஆவியால் நிறைந்திருப்பதைக் காண்பீர்கள். அதிகாலை முதல் இரவு வரை, இரவு முழுவதும் கூட, ஒரு தாய் தன் குழந்தைக்காக தியாகம் செய்கிறாள். நாள்தோறும் அதிகமதிகமாய் தியாகம் செய்துகொண்டேயிருக்கிறாள்; அதனால் அவளுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. அவள் தன் குழந்தைக்காக ஆண்டுதோறும், எதையும் எதிர்பார்க்காமல், மகிழ்ச்சியுடன், வலியையும், சிரமத்தையும் தாங்கிக்கொள்கிறாள். தேவன் நம்மையும் அப்படித்தான் நேசிக்கிறார். அவர் நமக்குக் கொடுக்க விரும்பும் சுபாவமும் அதுதான். ஆனால், ‘ஒருவரிலொருவர் அதேவிதமாய் அன்புகூரும் நபர்களைக் கொண்ட ஐக்கியம் இது’ என்ற நேர்மையான சாட்சியைப் பெற்றிருக்கும் ஐக்கியத்தை உலகில் எங்குமே கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. பெரும்பாலான விசுவாசிகளுக்கு தங்களுடன் உடன்படுபவர்களையும் தங்கள் குழுவில் சேருபவர்களையும் மட்டுமே எப்படி நேசிப்பது என்பது தெரியும். அவர்களது அன்பு மனுஷீகமானதும், தாய்மார்களின் தியாக அன்பிலிருந்து வெகுவாய் வேறுபட்டதுமாய் இருக்கிறது!! ஆனாலும், தெய்வீக அன்பு தான் நாம் அடையும்படி பிரயாசப்பட வேண்டிய குறிக்கோளாகும்.

ஒரு தாய், தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்கள் தன் குழந்தைக்காக எதையும் தியாகம் செய்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவளாகவே மகிழ்ச்சியுடன் எல்லாவற்றையும் தியாகம் செய்கிறாள். அதேபோல், சபையை தன் சொந்தக் குழந்தையாகக் கண்ட ஒருவர், தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்கள் சபைக்காக எதையும் தியாகம் செய்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார். அவர் மகிழ்ச்சியுடன் தன்னைத் தியாகம் செய்வார். மேலும், வேறு யாரிடமும் அவருக்கு எவ்விதக் குறைசொல்லுதலோ அல்லது கோரிக்கையோ இருக்காது. மற்றவர்கள் சபைக்காக தியாகம் செய்யவில்லை என்று புகார் கூறுபவர்கள் தாய்மார்கள் அல்ல, மாறாக அவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலைக்காரர்கள். அத்தகைய வேலைக்காரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வேலை நேரம் உண்டு. அடுத்த 8 மணி நேர ஷிப்டுக்கான மற்ற வேலைக்காரர்கள் சரியான நேரத்தில் வராத போது இவர்கள் குறைசொல்லுவார்கள்.

ஆனால் ஒரு தாய் ஒவ்வொரு நாளும் 8 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்வதில்லை. அவள் தினமும் 24 மணி நேரம் வேலை செய்கிறாள், அப்படி வருடா வருடம் செய்கிறாள். அதற்கென்று அவளுக்கு சம்பளம் கூட கிடைப்பதில்லை. அவளுடைய குழந்தைக்கு 20 வயதாகும் போது கூட, தாயின் வேலை முடிந்துவிடுவதில்லை!! தாய்மார்களால் மட்டுமே ஒவ்வொரு நாளும் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியும். வேலைக்காரர் தாங்கள் பராமரிக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்கும்படி பாலை உற்பத்தி செய்ய முடியாது. அதேபோல், சபையில் தாய்மார்களைப் போல இருப்பவர்கள் எப்போதும் தங்கள் ஆவிக்குரிய குழந்தைகளுக்கென்று ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு வார்த்தையைக் கொண்டிருப்பார்கள். அநேக மூப்பர்களிடத்தில் சபைக்கென்று வார்த்தை இல்லை, ஏனென்றால் அவர்கள் வேலைக்காரர்களேயன்றி தாய்மார்கள் அல்ல.

ஒரு தாய் தன் குழந்தைகளிடமிருந்து எந்த ஊதியத்தையும் எதிர்பார்ப்பதில்லை. எந்தக் குழந்தையும் தன் தாய்க்கு அவளுடைய சேவைக்காக ஒருபோதும் பணம் செலுத்துவதில்லை. உண்மையில், ஒரு தாய்க்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 (வேலைக்காரருக்கு வழங்கப்படும் ஊதியம்) என்ற விகிதத்தில் செலுத்த வேண்டிய ஊதியத்தைக் கணக்கிட்டால், ஒவ்வொரு குழந்தையும் 20 வயதாகும் போது, அதன் தாய்க்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பட்டிருப்பதைக் காண்பீர்கள்!! எந்தப் பிள்ளையால் தனது தாய்க்கு இவ்வளவு பெரிய தொகையைத் திருப்பிச் செலுத்த முடியும்?

இப்போது நமக்கு எழும் கேள்வி என்னவென்றால்: கர்த்தருக்காகவும் அவருடைய சபைக்காகவும், எந்த சம்பளத்தையும் பெறாமல், தன்னையே அர்ப்பணித்து நாளுக்கு நாள், வருடா வருடம், இயேசு வரும் வரை அப்படி வேலை செய்ய யார் தயாராக இருக்கிறார்கள்? அந்த ஆவியைக் கொண்டிருக்கும் ஒரே ஒரு நபரை தேவன் கண்டுபிடிக்க முடிந்தால், தியாக ஆவி இல்லாமல் அவருக்கு சேவை செய்ய முயற்சிக்கும் 10,000 அரை மனதுள்ள விசுவாசிகளைப் பயன்படுத்துவதை விட, சபையைக் கட்ட அந்த நபரையே அவர் பயன்படுத்துவார்.

இயேசு பூமிக்குத் திரும்பி வந்து நீங்கள் அவர் முன் நிற்கும்போது, நீங்கள் வாழ்ந்த விதத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்படுமா, அல்லது தேவனுடைய ராஜ்யத்திற்காகப் பயனுள்ள விதத்தில் செலவிடப்பட்ட வாழ்க்கையாக அதை நீங்கள் திரும்பிப் பார்க்க முடியுமா? அநேகர் பூமியில் தங்கள் வாழ்க்கையை வீணடித்து, அலைந்து திரிகிறார்கள். மிகவும் தாமதமாவதற்கு முன் விழித்தெழுந்து, ஆண்டவருடைய வழி தியாகத்தின் வழியே என்பதை உங்களுக்குக் காட்டும்படி அவரிடம் கேளுங்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.