எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை
WFTW Body: 

கிறிஸ்துவில் ஒரே சரீரமாக விசுவாசிகள் இருக்கிறார்கள் என்கிற பெரிதான சத்தியத்தை மையமாகக் கொண்டுள்ளது பவுல் எபேசு கிறிஸ்தவர்களுக்கு எழுதின நிருபம். கிறிஸ்து சபையின் தலையாக இருக்கிறார், சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது (எபேசியர் 1:22,23). ஒவ்வொரு விசுவாசியும் இந்த சரீரத்தில் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். எபேசியருக்கு எழுதின நிருபத்தின் முதல் பாதி கிறிஸ்துவின் சரீரம் என்கிற உபதேசத்தைக் கையாளுகிறது. நிருபத்தின் இரண்டாம் பாதி இந்த சத்தியத்தின் நடைமுறைக்குரிய காரியங்களைக் கையாளுகிறது. இரண்டாம் பாதி இப்படித்தான் தொடங்குகிறது: ஆதலால்... நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்… (ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் அங்கமாயிருக்கிறோம்) (எபேசியர் 4:1-4). வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், சபையானது கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது என்கிற இந்த சத்தியத்தை அறிந்து உற்றுநோக்கிய ஒரு நபர், மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் சகிப்புத்தன்மையும் அன்பும் ஒருமையும் சமாதானமும் உடையவராய் சக விசுவாசிகளோடு நடக்க வாஞ்சிக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவன் இவ்வாறு நடக்காதபோது, கிறிஸ்துவின் சரீரத்தை அவன் உற்றுப்பார்க்கவில்லை என்பதை அது குறிக்கிறது.

“நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்” என்று கொரிந்து சபைக்கு பவுல் எழுதினார். கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உள்ள உலகளாவிய விசுவாசிகளை உள்ளடக்கிய கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே கொரிந்து பட்டணத்திலுள்ள முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் என்பது உண்மைதான். எனினும் கொரிந்து பட்டணத்தில் அந்த சரீரத்தின் வெளிப்பாடாக அவர்கள் இருக்கவேண்டும். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஒவ்வொரு விசுவாசிகளின் கூட்டத்திற்கும் அழைப்பு இதுதான். ஒவ்வொரு கிறிஸ்தவ ஐக்கியமும் (அது ஒரு சபையாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ ஸ்தாபனமாக இருந்தாலும் சரி, அல்லது ஊழியக்காரர்களின் கூட்டமாக இருந்தாலும் சரி) வெளிப்படையாக காணத்தக்கதான கிறிஸ்துவின் சரீரமாக இவ்வுலகிற்கு இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய எண்ணமாக இருக்கிறது.

“காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே? தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் எங்கெங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தார். அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், அது விநோதமாக இருந்திருக்கும். ஆகவே அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவே படைத்தார்” (1 கொரிந்தியர் 12:15-20).

கிறிஸ்துவின் சரீரத்தில் மற்றவர்களோடு நேர்மறையாகவோ? அல்லது எதிர்மறையாகவோ? நம்மை ஒப்பிட்டு பார்ப்பது எப்போதுமே தீங்கு விளைவிக்கும். இத்தகைய ஒப்பீடுகள் பெருமைக்கோ அல்லது மனசோர்வுற்று பொறாமைக்கோ வழிவகுக்கும். காலானது தன்னைத்தானே கையோடு ஒப்பிடத் தொடங்கும் பொழுது, அது இவ்வாறாகக் கூறலாம், “சரி, சரீரத்தில் கையைப் போல முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அவயவமாக நான் இல்லை. நான் வழக்கமாகக் காலுறைகளாலும் (socks) காலணிகளாலும் (shoes) மூடப்பட்டிருக்கிறேன், சரீரத்தின் கீழ் மட்டத்தில் இருக்கிறேன், நான் இருக்கிறதை யாருமே ஒருபோதும் கவனிக்கிறதில்லை. ஆனால் கை ஒவ்வொரு நாளும் மற்றவர்களால் கவனிக்கப்படுகிறது. அது ஏதாவதொன்றை செய்வதில் எப்போதும் மும்முரமாக இருக்கிறது, ஆனால் நானோ பெரும்பாலான நேரம் செயலற்றவனாக இருக்கிறேன்.” ஒருமுறை தன்னைத்தானே இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்தபிறகு, அடுத்த படி மனச்சோர்வும், தன்னை ஒரு கைக்கு பதிலாக ஒரு காலாக வைத்திருக்கிறார் என்று தேவனுக்கு விரோதமாகக் குறைசொல்லும் ஆவியுமே ஆகும். அநேக விசுவாசிகளை அத்தகைய ஆவி தங்களுடைய திறமையைப் புதைப்பதற்கும், கிறிஸ்துவின் சரீரத்தை பெலப்படுத்துவோ அல்லது கிறிஸ்துவின் சரீரத்திற்கு நன்மைசெய்யவோ எதையுமே செய்யாமல் இருப்பதற்கும் வழிநடத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் சபை இன்று பாதிக்கப்படுகிறது, ஏனென்றால் அநேக விசுவாசிகள் தங்களுக்குக் கண்ணைக்கவர்கிற ஏதோவொரு வரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அத்தகைய வரம் இல்லாததினால், அவர்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள்.

கிறிஸ்துவின் சரீரத்தை பார்த்தால் மட்டுமே, பொறாமைக்கு முற்றிலும் இடமே இல்லாததை காண முடியும். மனிதனுடைய சரீரத்தில், காலானது காலாக மட்டுமே இருப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அது ஒரு காலாக இருப்பதைத் தவிர வேறொன்றாக இருக்கவேண்டும் என்று ஒருபோதும் விரும்புவதில்லை. அது ஒரு கையாக மாற வேண்டும் என்று ஒருபோதும் கனவு காண்பதில்லை. அது ஒரு காலாக இருப்பதில் மிகவும் திருப்தியாக இருக்கிறது. அதை ஒரு காலாக வைத்திருப்பதில் தேவன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை அது அறிந்திருக்கிறது. அது ஒரு காலாக இருப்பதில் சந்தோஷம் அடைகிறது; கை சாதிக்கின்ற காரியங்களைப் போல எதையும் ஒருபோதும் சாதிக்க முடியாது என்பதை அது உணர்ந்திருந்தாலும், கையால் எதனைச் சாதிக்க முடியும் என்பதை அது பார்க்கும்பொழுது அதிலும் சந்தோஷம் அடைகிறது. கிறிஸ்துவின் சரீரத்தை "உற்றுநோக்கிப் பார்த்த" அனைவருக்கும் அது இப்படியாகத் தான் இருக்கும். நீங்கள் இன்னொருவர் மீது பொறாமைப் படுவீர்களானால், இன்னொரு அவயவம் தேவனால் பெரிதும் பயன்படுத்தப்படுவதைக் கண்டு நீங்கள் முழு மனதோடும் சந்தோஷம் அடையாமல் இருப்பீர்களானால், இந்த சத்தியத்தை நீங்கள் சற்றும் புரிந்து கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகிறது. தலையோடு நெருங்கிய உறவுகொண்டு வாழும் எந்தவொரு அவயவமும், இன்னொரு அவயவம் மகிமைப்பட்டால், சந்தோஷப்பட்டு களிகூரும் (1 கொரிந்தியர் 12:26).

கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு அவயவத்திற்கும் மற்றொரு அவயவத்திற்கும் இடையில் போட்டிக்கு இடமேயில்லை. போட்டி அல்ல, ஒத்துழைப்பே சரீரத்தின் பிரமாணமாய் இருக்கிறது. இன்னொருவர் ஏதேனும் ஒரு ஊழியத்தைத் திறமையாக நிறைவேற்றுவதை நீங்கள் காணும்பொழுது, நீங்களும் அவரைப் போலவே (சிறப்பாகச் செய்ய இயலாவிட்டாலும்) செய்ய முடியும் என்பதை மற்றவர்களுக்குக் காட்ட திட்டமிடுகிறீர்கள் என்றால், சுயமானது இன்னும் உங்களுடைய வாழ்க்கையின் மையத்தில் இருக்கிறது என்பது வெளிப்படையாகிறது. நீங்கள் தலைக்கு அடிபணிந்து வாழ்ந்திருந்தால், சரீரத்திலுள்ள யாருடனும் நீங்கள் ஒருபோதும் போட்டியிட மாட்டீர்கள். அதற்குப் பதிலாக நீங்கள் உங்களுடைய சொந்த ஊழியத்தை செய்யவும் அதனைச் சிறப்பாகச் செய்யவும் கவனம் செலுத்துவீர்கள். தேவனுடைய பரிபூரண ஞானத்தை நாம் விசுவாசித்தால், நம் ஒவ்வொருவருக்கும் என்ன வரம் கொடுக்க வேண்டும் என்பதைத் தேவன் நன்கு அறிந்திருக்கிறார் என்பதை நாம் அங்கீகரிப்போம். பின்னர் குறைசொல்லுதலும், மனச்சோர்வும், மற்றொருவரின் வரத்தைப் பெறவேண்டும் என்ற விருப்பமும், பொறாமையும் இருக்காது.

கிறிஸ்துவின் சரீரத்தில் தேவனால் நியமிக்கப்பட்ட பல்வேறு வகையான அவயவங்கள் உள்ளன. கிறிஸ்துவின் சீரான சாயலை உலகிற்குக் காண்பிக்க வேண்டும் என்பதற்காகத் தேவன் நம்முடைய வெவ்வேறு மனோபாவங்களையும் வரங்களையும் பயன்படுத்துகிறார். நாம் ஒவ்வொருவரும், தனி நபராய், நம்முடைய சிறந்த முறையில், கிறிஸ்துவின் சிதைந்ததும் சீரற்றதுமான சாயலை மட்டுமே காண்பிக்க முடியும். எந்தவொரு தனி-நபர் ஊழியமும், சமநிலையற்ற கிறிஸ்தவர்களை மட்டுமே உருவாக்க முடியும். வெவ்வேறு வலியுறுத்துதலுடனும் வெவ்வேறு மனோபாவங்களுடனும் சபையாகிய சரீரத்தில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!