WFTW Body: 

"என்னுடைய சரீரத்தின் ஆசைகள் ஒன்றினாலும் நான் ஆளுகை செய்யப்பட மாட்டேன்" என்று 1கொரிந்தியர் 6:12,13 -ஆம் வசனங்களின் வாயிலாக நாம் நம்முடைய சரீரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பவுல் தெளிவுபடுத்துகிறார்.

நம்முடைய சரீரத்திற்கு உணவானது அத்தியாவசியமானதுதான்; ஆனால் நீங்கள் கர்த்தருடைய ஊழியக்காரனாய் இருக்க விரும்பினால், உணவு உங்களை ஆளுகை செய்ய அனுமதிக்கக்கூடாது. உணவு உங்களுடைய எஜமானனாய் மாறும் அளவுக்கு நீங்கள் ஓர் ஆகாரப் பிரியனாய் இருப்பீர்களானால், உங்களால் ஒருக்காலும் தேவனுக்கு ஓர் உபயோகமான ஊழியனாய் இருக்க இயலாது. அந்த அடிமைத்தனத்தை உடைத்தெறிந்துவிட்டு, நீங்கள் வெளியே வர வேண்டும். இங்குதான் உபவாசமானது நமக்கு உதவிக்கரம் நீட்டுகின்றது. நம்முடைய ஆவி மட்டுமல்ல, நம்முடைய சரீரமும் "கிறிஸ்துவின் அவயமாய்தான்" (1கொரி 6:15) உள்ளது. எனவே அதை நாம் வேசித்தனத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது. நம்முடைய கண்கள், நம்முடைய நாவு, இன்னும் பிற உறுப்புகள் எல்லாமே கர்த்தரின் பிரத்யேகப் பயன்பாட்டுக்காகவே இருத்தல் வேண்டும்.

இதோ, நம்முடைய சரீரத்தைக் குறித்த ஓர் அற்புதமான தேவனுடைய வாக்குதத்தம். இதை நான் பல ஆண்டுகளாக எனக்குரியதாக்கி கொண்டுவருகிறேன். "சரீரம் கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்" (1கொரி 6:13). நீங்கள், "ஆண்டவரே, என்னுடைய முழு சரீரமும் உம்முடையது; உச்சந்தலை தொடங்கி, உள்ளங்கால் வரையுள்ள அவயவங்களான என் கண்கள். என் நாவு இன்னும் அனைத்துமே உம்முடையவைகள்தான்" என்று மெய்யாகவே அதன் அர்த்தத்தை உணர்ந்து சொல்வீர்களானால், கர்த்தரும் முழுவதுமாய் உங்களுடைய சரீரத்திற்கு உரியவராய் இருப்பார். நீங்கள் எத்தனை காலம் அவருக்கென்று ஊழியம் செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ, அத்தனை காலமும் உங்களுடைய சரீரத்தை அவரது ஊழியத்தைச் செய்வதற்கு அவரே ஏற்றப்படி காத்துக்கொள்வார். அதை வியாதியிலிருந்தும் காத்துக் கொள்வார். வாலிபர் சோர்வடைவர்; ஆனால் கர்த்தருக்கென்று தங்களுடைய சரீரங்களைக் கொடுத்தவர்கள் கழுகுகளைப் போலச் செட்டையடித்து எழும்புவார்கள்.

நம்முடைய சரீரமானது பரிசுத்த ஆவியின் ஆலயமாகவும் உள்ளது ( 1கொரி 6:19). ஆதலால் நாம் அதை எவ்விதத்திலும் தீட்டுப்படுத்தலாகாது. நீங்கள் சபைக் கட்டிடத்திற்குள்ளே புகைக்காமல், குடிக்காமல், விபசாரம் செய்யாமல் இருப்பவராய் இருந்தால், அவற்றை உங்களுடைய சரீரத்திலும் செய்யாமல் இருக்க வேண்டும். ஏனெனில் மெய்யான தேவனுடைய ஆலயம் என்பது எந்தச் சபைக் கட்டிடத்திற்குள்ளேயும் இருப்பதில்லை. உங்களுடைய சரீரம்தான் தேவனுடைய ஆலயமாகும். "கிரயத்திற்குக் கொள்ளப்பட்டீர்கள்; ஆகையால் சரீரத்தினால் தேவனை மகிமைப்படுத்துங்கள்" ( 1கொரி 6:19).

1கொரி 6:12 -லிருந்து 20 - வரையிலான ஒன்பது வசனங்களும் ஒன்றாக இணைந்து, தேவன் நம்முடைய சரீரத்தை எங்ஙனம் நாம் கையாள வேண்டும் என்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ததின்மூலம் ஓர் மிகவும் அருமையான வேதாகம பகுதியாக இதை விளங்க செய்திருக்கிறார். தேவனை சேவிக்க நமக்கு ஓர் ஆரோக்கியமான சரீரம் தேவை என்பதால் இதைக் குறித்து நீங்கள் அதிகமாய் தியானிக்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறேன்!.

அநேகக் கிறிஸ்தவர்கள் குணமடைதலைக் குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் நல்ல ஆரோக்கியம் என்பது குணப்படுத்துதலைவிட மேலானதாகும். வருமுன் காப்பதே சிறந்தது. பெருந்திண்டிப் பிரியனாய் இருந்து, வியாதிப்பட்டு, தேவனிடம் சுகத்திற்காகக் கெஞ்சுவதைவிட, குறைவாய்ச் சாப்பிட்டு உடல்நலத்தைப் பேணுவதே சிறந்த வழியாகும். தேவன் உங்களை குணமாக்குகிறவராய் இல்லாமல், அவரே உங்கள் ஆரோக்கியமாக இருக்கட்டும்!. உங்களுடைய சரீரத்தை முழுவதுமாக அவருக்கென்று கொடுத்து விட்டு, "ஆண்டவரே நீர்தான் என்னுடைய உடல் ஆரோக்கியம். நான் இந்த உலகிலே எத்தனை காலம் உயிரோடிருந்து, உம்முடைய பணியைச் செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ, அதற்கு நான் தயாராய் என்னை உமக்குக் கொடுக்கிறேன். நான் எனது சரீரத்தின் மூலமாக உம்மை மகிமைப் படுத்துவேன். ஏனெனில் நீர் அதைச் சிலுவையிலே உமக்கென்று விலைக்கிரயமாக்கி கொண்டிருக்கிறீர். எனது உடல் உமக்கு மாத்திரமே சொந்தம்" என்று அவரிடம் சொல்லுங்கள்.

நம்முடைய சரீரம் வேறொருவரால், விலைக்கு வாங்கப்பட்ட ஒரு வீட்டுக்கு ஒப்பாயிருக்கிறது. அந்த வேறொருவர் நம் கர்த்தரே! அவரே, அந்த வீட்டில் குடிப்பெயரக்கூடிய உரிமையாளர். வீட்டை காலிசெய்து முழுமையாய் அவரிடத்தில் ஒப்புக்கொடுக்காமலிருந்தால், அது பாவமாகும். ஆகவே, உங்கள் சரீரத்தை முழுவதும் அவருக்கே ஒப்படையுங்கள்!!