WFTW Body: 

“நீங்கள் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்ற வாக்குத்தத்தத்தை நாம் அப்போஸ்தலர் 1:5 -ல் பெற்றுள்ளோம். “நீங்கள் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என யோவான் ஸ்நானன் சொன்ன போது, அவர்களுக்கு இந்தப் பூமிக்குரிய ராஜ்யம் பற்றிய எண்ணம்தான் உடனடியாக வந்தது. பழைய உடன்படிக்கை நபரின் மனமானது, எப்போதுமே பூமிக்குரிய காரியங்களைச் சுற்றியேதான் வட்டமடித்துக் கொண்டிருக்கும். “தேவன் என்னை ஆசீர்வதித்திருக்கிறார்” என்று கிறிஸ்தவர்கள் சொல்லும்போது, அது பணம் அல்லது ஒரு நல்ல வேலை அல்லது ஒரு வீடு ஆகிய இது போன்ற ஏதாவது ஓர் உலகப் பொருளால் தங்களை ஆசீர்வதித்திருக்கிறார் என்ற அர்த்தத்தில்தான் அவர்கள் வழக்கமாக அப்படிச் சொல்கின்றனர். அது பழைய உடன்படிக்கை மக்களின் குணாதிசயமாகும். உங்களுக்குள் அத்தகைய சிந்தனை இருப்பதை நீங்கள் காண்பீர்களானால், நீங்கள் ஒரு பழைய உடன்படிக்கைக் கிறிஸ்தவன் என்பதைத்தான் அது காட்டுகின்றது. பூமிக்குரிய ஆசீர்வாதம்தான் தேவன் ஒரு நபரை ஆசீர்வதிப்பதற்கான பிரதான அடையாளம் என்று நீங்கள் கற்பனை செய்வீர்களானால், உங்களைக் காட்டிலும் அதிக ஐஸ்வரியவான்களாகத் திகழும் மில்லியன்கணக்கான நாத்திகர்களைப் பற்றிச் சற்றே எண்ணிப் பாருங்கள். அப்போது நீங்கள் சிந்திக்கிற விதத்தில் உள்ள மதியீனம் உங்களுக்குப் புலப்படும். நாம் அதிகதிகமாகக் கிறிஸ்துவைப் போல மாறிக் கொண்டே இருப்பதுதான், புதிய உடன்படிக்கையில் நாம் பெற்றுக் கொள்ளும் ஆசீர்வாதமாகும்.

அப்போஸ்தலர்கள், பெந்தெகோஸ்தே நாளுக்கு முன்பு வரையிலும், பூமிக்குரிய சிந்தையுள்ளவர்களாகத்தான் இருந்தனர். அவர்கள் விரைவிலே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்படுவார்கள் என்று இயேசுவால் அவர்களுக்குச் சொல்லப்பட்ட போது, உடனடியாகத் தங்களுக்கு இப்பூமிக்குரிய ராஜ்யம் கிடைத்துவிடும் என்றுதான் அவர்கள் மனம் நினைத்தது. ஆகவேதான் அவர்கள், “இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலருக்குத் திரும்பக் கொடுப்பீர்?” (அப் 1:6) என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர், “இல்லை. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. இந்தக் காரியத்தைக் குறித்த காலங்களையும் வேளைகளையும் அறிந்து கொள்வது உங்களுக்கு அடுத்ததல்ல. கர்த்தர் இவற்றையெல்லாம் தம்முடைய வல்லமைக்குள் வைத்துள்ளார்” (அப் 1:7) என்று பதிலளித்தார். பல்வகையான கடைசி கால நிகழ்வுகளைக் கொண்டு, காலங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் வெளிப்படுத்தின புத்தகத்தை அலசுகிற கிறிஸ்தவர்கள் ஏராளமாக உள்ளனர். இயேசு எப்பொழுது வந்து தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்பதை அறிந்து கொள்வது நமக்கடுத்த காரியமல்ல. ஆனால் பரிசுத்த ஆவியின் வல்லமையைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றதை நறுக்கென்று தெரியப்படுத்தும் அடையாளம் எது? அது வல்லமைதான் என இயேசு அப்போஸ்தலர் 1:8 -ல் பளிங்கைப் போல் பளிச்சென்று தெளிவுபடுத்திவிட்டார். பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுக் கொண்டதற்குப் பாஷைதான் ஒர் ஆதாரம் என்று இயேசுவும் ஒருகாலமும் சொல்லவுமில்லை. அவருடைய அப்போஸ்தலர்களுங் கூட ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. இப்படி போதிக்கிற ஒரு வசனம் கூட வேதத்தில் எங்குமில்லை என்று அறிந்த பின்னும் இன்று அநேக கிறிஸ்தவர்கள் “பாஷைகளில் பேசுவது தான் (கல்லாத பாஷை)” “ஆரம்ப கட்ட அடையாளம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போஸ்தலர் 19:2 -ல், பவுல் எபேசு பட்டணத்து சீஷர்கள் முன், “நீங்கள் விசுவாசிகளான போது, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்களா?” என்னும் ஒரு கேள்வியை வைக்கின்றார். பவுலின் இக்கேள்வியானது, தெளிவாய் நமக்குப் போதிப்பது என்னவெனில்:

1.ஒருவர் கிறிஸ்துவின்மீது விசுவாசத்தை வைக்கும்போதே ஆவியானவரைப் பெற்றுக் கொள்வது சாத்தியமே.

2.ஒருவர் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தபின்பும், பரிசுத்த ஆவியைப் பெறாமலிருப்பது சாத்தியமே. அப்படியானால் அவர் மறுபடியும் பிறக்கவில்லை என்பதுதான் அதன் அர்த்தமாகும்.

3.நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறோமா என்பதை நிச்சயத்துடன் அறிந்து கொள்ள முடியும்.

பரிசுத்த ஆவி உண்டு என்பதே எங்களுக்குத் தெரியாது என்பதே அவர்களது பதிலாக இருந்தது. “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானத்தைப் பெற்றீர்கள்?” என அவர் அவர்களிடம் கேட்டார். ஆகவே, அந்நாட்களில் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மட்டுமல்லாது, “பிதா, இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவி நாமத்திலும்” ஞானஸ்நானம் பெற்றார்கள் என்பதையே இது காட்டுகின்றது. எனவேதான், அவர்கள் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட போது, பரிசுத்த ஆவியைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பார்கள் என பவுல் எதிர்பார்த்தார். அவர்கள் யோவானின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்கள். அதன் பின்பு, பவுல், அவர்களுக்கு பிதா, குமாரனாகிய இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவி நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்தார். பிறகு பவுல் அவர்கள்மீது கைகளை வைத்த போது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார். அவர்கள் அறியாத பாஷைகளில் பேசி, தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.

அப்போஸ்தல புத்தகத்திலே பரிசுத்த ஆவியின் பலவிதமான செயல்களை கவனித்துப் பாருங்கள். 2-ஆம் அதிகாரத்தில், 120 பேர் ஜெபித்துக் கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்திறங்கினார். 8-ஆம் அதிகாரத்தில், பேதுருவும், யோவானும் சமாரியர்கள் மேல் தங்கள் கைகளை வைத்த போது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்திறங்கினார். 9-ஆம் அதிகாரத்தில், அனனியா பவுலின் மேல் கைகளை வைத்த போது, அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார். 10-ஆம் அதிகாரத்தில், கொர்நேலியு என்பவன் தண்ணீர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பாகவே, ஒரு செய்தியைக் கூட கேட்காமலேயே, யாரும் தன்மேல் கைகளை வைக்காமலேயே, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார். இங்கு 19-ஆம் அதிகாரத்தில், கைகளை வைத்ததினால், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். ஆதலால், கைகளை வைப்பதினாலேயோ அல்லது வைக்காமலேயோ, தண்ணீர் ஞானஸ்நானம் பெறுவததற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதையே இதிலிருந்து கற்றுக் கொள்கிறோம். எந்த வழிமுறை (Methods) என்பது பிரதான காரியமல்ல மெய்மையே (Reality) காரியம்.