“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். மாறாக, பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. இதற்குக் காரணம் என்னவென்றால், உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் (மத்தேயு 6:19-21)” என்றார் இயேசு. பணத்தை நேசிப்பது தவறு என்று பலர் நம்புவதில்லை. பணம் வைத்திருப்பது பாவம் அல்ல; பணத்தை நேசிப்பதே பாவமாகும்.
நாம் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோமா இல்லையா என்பதை அறிந்துகொள்வது மிகவும் எளிது. உங்கள் மனம் பரலோகத்திற்குரிய காரியங்களைவிட பூமிக்குரிய காரியங்களையே அதிகம் சிந்திக்குமானால் — பரலோகத்திற்குரிய காரியங்களைவிட உங்கள் பூமிக்குரிய சொத்துக்களையும் உடைமைகளையுமே நீங்கள் அதிகம் சிந்தித்துக்கொண்டிருப்பீர்களானால் — உங்கள் இருதயம் இந்த பூமியில்தான் இருக்கிறது என்பதையும், உங்கள் பொக்கிஷமும் இங்கேயேதான் இருக்கிறது என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளலாம். நாம் இந்தக் கற்பனைக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோமா என்பதை அறிந்துகொள்வதற்கான வழி, ஒரு நாளின் பகல் முழுவதும் நமது இருதயம் எதில் நிலைத்திருக்கிறது என்று நம்மையே கேட்டுக்கொள்வதாகும். நமது பணியின் நடுவிலோ (அல்லது வேறு எதிலுமோ), ஒரு சிறிய பண இழப்பினால் நாம் கடுமையாக நிலைகுலைந்துபோனாலோ அல்லது ஒரு பண ஆதாயத்தினால் மிகுந்த உற்சாகமடைந்தாலோ, நமது பொக்கிஷம் இவ்வுலகத்தில்தான் இருக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டக் கூடும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவர் எனக்கு ஒரு சிறிய தொகை பணத்தைப் பரிசாக அளித்தபோது, கர்த்தர் என்னிடம், ‘உன்னுடைய மகிழ்ச்சி இதினால் அதிகரித்திருக்கிறதா?’ என்ற ஒரு கேள்வியைக் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. திடீரென்று நான் உணர்வடைந்து, ஆம் ஆண்டவரே, இந்தச் சிறிய தொகை பணம் கிடைத்ததால் என் மகிழ்ச்சி அதிகரித்தது மெய்தான் என்று ஆண்டவரிடம் அறிக்கையிட்டேன். பணத்தில் அல்ல, கர்த்தரிடத்தில் மட்டுமே நான் களிகூர வேண்டும் என்று அந்த நாளில் நான் கற்றுக்கொண்டேன். பணத்தின் பெருக்கம் ஒருபோதும் என் மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடாது என்பதையும் நான் கற்றுக்கொண்டேன். அவ்வாறு அது என் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யுமானால், என்னுடைய சந்தோஷம் பணத்தில்தான் இருக்கிறது என்று அதற்குப் பொருள்.
கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள் என்று வேதாகமம் கூறுகிறது. கர்த்தர் எப்போதும் மாறாதவராயிருக்கிறார். எனவே, நீங்கள் பணத்தை சம்பாதித்தாலும் சரி, இழந்தாலும் சரி, கர்த்தருக்குள் நீங்கள் கொள்ளும் சந்தோஷம் கூடவோ குறையவோ கூடாது. அது ஒரே விதமாக இருக்க வேண்டும். சிறிது பணத்தை இழந்ததால் உங்கள் சந்தோஷம் குறைந்தால், உங்கள் இருதயம் அந்தப் பணத்தின் மீதுதான் இருந்தது என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். உங்களுக்குச் சிறிது பணம் கிடைத்ததால் உங்கள் சந்தோஷம் பெருகுகிறதென்றால், உங்கள் இருதயம் அங்கேதான் இருந்தது என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். நாம் தேவனை மட்டுமே நம்ப வேண்டும். நமது பூமிக்குரிய வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் அவர் நமக்குத் தந்தருளுவார்; ஆனால், இந்தப் பூமிக்குரிய பொருட்களில் நாம் நமது சந்தோஷத்தைக் கண்டடையக் கூடாது.
பணம் ஓர் அற்புதமான வேலைக்காரன்; ஆனால், அது ஒரு பயங்கரமான எஜமான் — நெருப்பைப் போலவே. நமது வீடுகளில் நெருப்பு இல்லாமல் நம்மால் வாழ முடியாது, உதாரணமாக, சமைப்பதற்கு நெருப்பு மிகவும் அவசியம். ஆனால் அந்த அடுப்பிலுள்ள நெருப்பு எஜமானனாகிவிட்டால், வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகிவிடும். அது உங்கள் முழு வீட்டையும் எரித்துச் சாம்பலாக்கும் திறன் கொண்ட ஒரு கொடிய எஜமானன். ஆனால் நீங்கள் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அடுப்பின் குமிழியைத் திருப்பும்போது, “உன்னை எப்போது இயக்குவது, எப்போது அணைப்பது என்பதை நானே கட்டுப்படுத்துவேன், அதை நான் தான் தீர்மானிப்பேன், நீ அல்ல” என்று சொல்கிறீர்கள். ஆகவே, நீங்கள் வீட்டின் எஜமானனாயிருந்தால், அது (பணம்) ஓர் அற்புதமான வேலைக்காரனாக இருக்கும். நமக்கு நெருப்பு தேவைப்படுவது போலவே, இவ்வுலகில் வாழ்வதற்குப் பணமும் தேவை; ஆனால் அது ஒரு வேலைக்காரனாகவே இருக்க வேண்டும். பணத்தைப் பார்த்து, “பணமே, நீ என்னை ஆளப்போவதில்லை; நான்தான் உன்னை ஆளப்போகிறேன் என்று நான் தீர்மானிக்கிறேன். நீ என் மனதைக் கட்டுப்படுத்தி, நான் எப்போதும் உன்னைப் பற்றியே சிந்திக்கும்படி செய்யப்போவதில்லை. நான் ஆண்டவரைப் பற்றியும், பரலோகத்திற்குரிய காரியங்களைப் பற்றியுமே சிந்திக்கப்போகிறேன்; ஆனால் உன்னை நான் பயன்படுத்திக்கொள்ளப்போகிறேன்” என்று நீங்கள் கூற வேண்டும்.
பொன் (தங்கம்) ஒரு வேலைக்காரனாகப் பயன்படுத்தப்பட்டால், அது மிகச் சிறந்த ஒன்றாகும். பரலோகத்திலும் பொன் இருப்பதாக வேதாகமம் கூறுகிறது! ஆனால் அங்கே, பொன்னினாலான வீதிகளைப் பற்றி நாம் வாசிக்கிறோம். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் அதன் மீது நடக்கிறீர்கள்; அது உங்கள் கால்களுக்கு அடியில் இருக்கிறது. இதுவே பரலோக சிந்தை கொண்ட ஒரு கிறிஸ்தவனுக்கும், பூலோக சிந்தை கொண்ட ஒரு கிறிஸ்தவனுக்கும் இடையிலான வித்தியாசமாகும். பரலோக சிந்தை கொண்ட ஒரு கிறிஸ்தவன் பொன்னைத் தன் காலடியின்கீழ் வைத்திருக்கிறான் — அது அவனை ஆளுகை செய்யாது; ஆனால் மாம்சசிந்தை கொண்ட ஒரு கிறிஸ்தவனோ பொன்னைத் தன் தலையில் அணிந்திருக்கிறான் — அது எப்போதும் அவன் சிந்தையிலேயே நிறைந்திருக்கிறது.
எனவே, பணம் பற்றிய சிந்தனையே எப்போதும் உங்கள் மனதில் நிறைந்திருந்தால், நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நீங்கள் அதை நேசிக்கிறீர்கள் என்றே அர்த்தம். இது, ஒரு பெண்ணை நேசித்து, எப்போதும் அவளையே நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பையனைப் போன்றது. எப்போதும் பணத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பவர் பணத்தின் மீது ஆசை கொண்டவர்; பணத்தின் மீதான இந்தக் ஆசையே அனைத்துத் தீமைகளுக்கும் வேராகும். பணத்தை நேசிப்பதற்கு நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் பணத்தை நேசிக்காத ஒரு பிச்சைக்காரரைக்கூட நான் இதுவரை கண்டதில்லை. ஒவ்வொரு பிச்சைக்காரரும் பணத்தை நேசிக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு 50 பைசா கொடுத்தால், அவர்கள் அதை இழிவாகக் கருதுவார்கள். அவர்கள் பணத்தை நேசிக்கிறார்கள்; மேலும் அதிகம் பெறவும் விரும்புகிறார்கள். ஆகவே, ஒரு மனிதனைப் பணத்தின் மீது ஆசைக்கொள்ளச் செய்வது செல்வம் அல்ல. பணக்காரர்களைப் போலவே, ஏழை மக்களும் பணத்தை அதே அளவு நேசிக்கிறார்கள்.
உங்களிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், நீங்கள் பண ஆசையிலிருந்து விடுபட்டு இருக்க முடியும் என்பதும் ஓர் உண்மையாகும். அது பணத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் மனப்பான்மையைப் பொருத்தது. உங்கள் வீட்டில் ஒரே ஒரு வேலைக்காரன் இருந்து, அவனே உங்கள் வீட்டைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டால், அது மிகவும் மோசமான ஒரு நிலையாக இருக்கும். உங்களிடம் சிறிதளவு பணம் இருக்கலாம் (அது அந்த ஒரு வேலைக்காரனைப் போன்றதுதான்); ஆனால், அந்தப் பணமே உங்கள் வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டு, உங்கள் சிந்தனையையும் ஆட்டிப்படைக்கிறது. ஆனால், ஆபிரகாமிடம் இருந்ததுபோலவே உங்களிடமும் 318 வேலைக்காரர்கள் இருக்கலாம்; (அவர்கள் அனைவரும் அவனுடைய வேலைக்காரர்களாக இருந்து அவனுக்கு கீழ்ப்படிந்தார்கள்). ஆபிரகாமைப் போலவே, நீங்களும் மிகுந்த செல்வத்தைப் பெற்றிருக்கலாம்; நீங்கள் அதை ஆளுகை செய்தால், அதை தேவனுடைய மகிமைக்காகப் பயன்படுத்தலாம்.
பணத்தின் மீதான ஆசையே அனைத்துத் தீமைக்கும் வேராய் இருக்கிறது (அதிகமான பணத்தை வைத்திருப்பது அல்ல). இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். பணத்தை அளவற்ற அளவில் நேசிக்கும் பல ஏழை மக்களை நான் பார்த்திருக்கிறேன்; அதே சமயம், பணத்தை நேசிக்காத பணக்காரர்களையும் நான் பார்த்திருக்கிறேன். உன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்பது கேள்வியல்ல, மாறாக நீங்கள் எதை நேசிக்கிறீர்கள் என்பதே முக்கியம் என்பதை நான் கண்டிருக்கிறேன். இதைப்பற்றித் தான் இயேசு பேசினார். உங்கள் மனம் மேலான காரியங்களிலேயே நிலைத்திருக்க வேண்டும். பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்த்து வையுங்கள். நீங்கள் எதைப்பற்றிச் சிந்திக்கிறீர்கள் என்பதையும், உங்கள் இருதயம் எங்கே இருக்கிறது என்பதையும் ஆராய்ந்து பாருங்கள்; அதன் மூலம், நீங்கள் எதன்மீது அன்பு கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம்.
பின்னர், மத்தேயு 6:22-இல், இயேசு பணத்தோடு தொடர்புடைய கண்ணைக் குறித்துப் பேசத் தொடங்குகிறார்: “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.” இதன் பொருள் என்னவென்றால், இது நீங்கள் பணத்தை எப்படிக் காண்கிறீர்கள் என்பதைச் சார்ந்த ஒரு விஷயமாகும். உங்கள் பார்வை 'தீயதாக' இருந்தால் — அதாவது, இவ்வுலகில் உங்கள் வாழ்விற்குப் பணம் மிக முக்கியமான ஒன்று என்றும், அது மிக மிக இன்றியமையாதது என்றும் நீங்கள் கருதினால் — உங்கள் சரீரம் முழுவதும் இருளால் நிறைந்திருக்கும். “உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்?” தங்கள் உபதேசங்கள் அனைத்தையும் சரியாகக் கொண்டிருப்பவர்களும், பிறரின் பார்வையில் சிறந்த கிறிஸ்தவர்களாக இருப்பவர்களும், சபை ஆராதனைகளுக்குத் தவறாமல் செல்பவர்களுமாகிய அநேகர், பணத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்டிருப்பது மிகவும் வியப்புக்குரிய ஒன்றாகும். புதிய ஏற்பாட்டு மாதிரியிலான சபைகளில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் விசுவாசிகள் தங்களைவிட, 'செத்த' ஸ்தாபனங்களைச் சேர்ந்த மக்கள் பணத்தாசையிலிருந்து அதிக விடுதலை பெற்றவர்கள் என்பதை அறியாமலேயே, அந்த ஸ்தாபனங்களை இழிவாகக்கூடப் பார்க்கக்கூடும்.
உங்களையே சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: உங்களுக்குச் சற்று கூடுதல் பணம் கிடைக்கும்போது நீங்கள் உற்சாகமடைகிறீர்களா? பணத்தை இழக்கும்போது மனச்சோர்வடைகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் பணத்தை நேசிக்கிறீர்கள். நமது சந்தோஷம் ஆண்டவரில் மட்டுமே அமைந்திருந்தால், அது எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. நமது சந்தோஷம் இவ்வுலகம் சார்ந்த பொருட்களில் அமைந்திருந்தால், நமது வருமானத்தில் ஏற்படும் மாற்றங்களால் அது பாதிக்கப்படும்.
ஒருவனாலும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. “ஒருவனை வெறுத்து, மற்றவனை நேசிப்பான்.” லூக்கா 14:26-இல் ஒரு நபர் தன்னுடைய தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் மற்றும் சகோதரிகளை வெறுப்பது குறித்துப் பேசியது போலவே, இயேசு இங்கேயும் மிகவும் தீவிரமான ஒரு கருத்தையே கூறுகிறார். இயேசு தீவிரம் மிகுந்த ஒருவராயிருக்கிறார். நீங்கள் தேவனை நேசிக்க விரும்பினால், பணத்தை வெறுக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 6:24). 'உலகப்பொருள்' என்பது பணம், நில சொத்துக்கள், பங்குசந்தை பங்குகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. நீங்கள் தேவனை நேசிக்க விரும்பினால், இவை அனைத்தையும் வெறுக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். நீங்கள் அதைப் பயன்படுத்தலாம், ஆனால் தேவன் மீதான உங்கள் அன்பு, சூரியனின் பிரகாசத்தைப் போல மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும்; பகல் வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் மறைவதைப் போல பணத்தின் மீதான உங்கள் ஆர்வம் மறைந்துவிட வேண்டும்.
“நீங்கள் ஒன்றைப் பற்றிக்கொண்டால், மற்றொன்றை அசட்டைசெய்வீர்கள்” என்று இயேசு கூறுகிறார். அந்த வார்த்தையில் “தேவ வார்த்தை” மற்றும் “உலகப்பொருள்” ஆகியவற்றைப் பொருத்திப் பார்த்தால், அந்த வசனம் இவ்வாறு அமையும்: “தேவனுக்கும், உலகப் பொருளுக்கும் (பொருள் செல்வம், பணம்) ஒருவராலும் ஊழியம் செய்ய முடியாது. ஒன்று, அவன் பணத்தை வெறுத்துக் தேவனை நேசிப்பான்; அல்லது தேவனை வெறுத்துப் பணத்தை நேசிப்பான்.” இயேசுவின் வார்த்தையின் உட்கருத்து என்னவென்றால், பணத்தை நேசிக்கிற எவரும் தேவனை வெறுக்கிறார் என்பதே ஆகும். இதை நீங்கள் இதற்கு முன் அறியாமல் இருந்திருக்கலாம்; ஆனால் இப்போது நீங்கள் அதை அறிவீர்கள். நீங்கள் பணத்தை நேசித்தால், தேவனை வெறுக்கிறீர்கள் என்றே இயேசு கூறுகிறார். நீங்கள் தேவனுக்கு பல பாடல்களைப் பாடுவதால், அவரை நேசிப்பதாக நீங்கள் நினைக்கலாம்; ஆனால் இயேசு அப்படிக் கூறவில்லை.
நீங்கள் தேவனைப் பற்றிக்கொண்டால், பணத்தை அசட்டை செய்வீர்கள் என்றும்; பணத்தைப் பற்றிக்கொண்டால், தேவனை அசட்டை செய்வீர்கள் என்றும் இயேசு கூறுகிறார். உங்களிடம் பணம் இருக்கலாம்; நீங்கள் பணத்தைச் சம்பாதிக்கவும் செய்யலாம். ஆனால், எந்த நேரத்தில் நீங்கள் பணத்தை நேசிக்கத் தொடங்குகிறீர்களோ, அந்தக் நேரத்திலிருந்தே தேவனை வெறுக்கத் தொடங்குகிறீர்கள். தேவன் உங்களுக்கு ஒரு நல்ல வேலையையோ அல்லது மிகுந்த செல்வம் நிறைந்த ஒரு வாரிசுரிமை சொத்தையோ அளித்திருக்கலாம்; அதில் தவறொன்றுமில்லை. ஆனால், நீங்கள் அதை நேசித்து, அதையே பற்றிக்கொண்டிருந்தால், நீங்கள் தேவனை அசட்டை செய்கிறீர்கள்; தேவனை வெறுக்கிறீர்கள். நாம் ஆண்டவருக்கு உண்மையுடன் ஊழியம் செய்ய விரும்பினால், இவ்விஷயத்தைப் புரிந்துகொள்வதும், ஒரு சரியான மனப்பான்மையைக் கொண்டிருப்பதும் மிக முக்கியமாகும்.