WFTW Body: 

அநேக ஜனங்கள் கேட்க விரும்பாத கர்த்தருடைய நாமத்தை எசேக்கியேல் 7:9ல் நாம் பார்க்கிறோம்: அது "அடிக்கிறவராகிய கர்த்தர்" என்பதாகும். அவர் நியாயந்தீர்த்து தண்டிக்கிற கர்த்தர். எசேக்கியேல் 8ல், ஆலயத்திற்குள் நடந்துகொண்டிருந்த விக்கிரகாராதனையைக் கர்த்தர் எசேக்கியேலுக்கு காண்பித்தார், அதனால்தான் அவர் யூதாவை கைவிட்டார். தேவனுடைய ஜனங்களுக்கு மத்தியில் நடந்துகொண்டிருந்த ரகசியமான பாவங்களைக் குறித்து தேவன் எசேக்கியேலுக்கு உள்ளுணர்வைக் கொடுத்தார். தம்முடைய ஜனங்களுக்கு மத்தியில், மற்றவர்கள் அறிந்திராத ரகசியமான பாவங்களை வெளியரங்கமாக்க ஒரு உண்மையான தீர்க்கதரிசிக்குத் தேவன் வார்த்தைகளைக் கொடுப்பார்.

1 கொரிந்தியர் 14:24,25ல் சபைக் கூட்டத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம், அங்கே ஜனங்கள் தீர்க்கதரிசனமாகப் பேசுகையில், முற்றிலும் அந்நியனாகிய ஒருவன் உள்ளே பிரவேசித்தால், அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்கள் அவனுக்கு வெளியரங்கமாகும். அவன் முகங்குப்புற விழுந்து, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான். இப்படித்தான் நம்முடைய ஒவ்வொரு சபைக் கூட்டமும் இருக்க வேண்டும். இப்படியாகத் தீர்க்கதரிசனம் சொல்ல நாம் யாவரும் விரும்பவேண்டும்.

ஜனங்கள் விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்து, ஸ்திரீகள் தம்மூசின் விக்கிரகத்திற்காக அழுதுகொண்டிருந்தார்கள் (எசேக்கியேல் 8:14). அது அநேக அசுத்தமான, ஒழுக்கக்கேடான சடங்குகளை புறஜாதியரோடுகூட சேர்ந்து ஈடுபடவேண்டியவையாக இருந்தது. இவையெல்லாம் ஆலயத்தில் வழக்கமாக நடந்துகொண்டிருந்தது. இந்த விக்கிரகாராதனையின் பெரும்பகுதி வெளியே இருப்பவர்களுக்குக் காணப்படாமல் இருந்தது. வெளியே பரிசுத்தமாகத் தோன்றுகிற அநேக ஜனங்கள், உள்ளே மிகவும் அசுத்தமாக இருக்கிறார்கள். "இது என்னுடைய ஆலயமாக இருந்திருக்க வேண்டும், ஆனால், உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறது பார்" என்று கர்த்தர் சொல்லுகிறார். இன்று அநேக கிறிஸ்தவர்கள், தங்களுடைய ஜெபங்களைச் சொல்லுவதற்குக் கிழக்கு திசையை நோக்குவதைப் போல, அவர்கள் கிழக்கு பக்கமாக நோக்கி, சூரியனுக்கு ஆராதனை செய்து கொண்டிருந்தார்கள் (எசேக்கியேல் 8:16). எசேக்கியேல் 9:3: தேவனுடைய வீட்டில், இப்படிப்பட்ட பாவத்தினால், தேவனுடைய மகிமை அங்கேயிருந்து மெதுவாக விலகியது.

தேவனுடைய மகிமை ஒரு மனிதனையோ அல்லது ஒரு சபையையோ விட்டு விலக ஆரம்பிக்கும்போது, அபிஷேகமும், புத்துணர்ச்சியும், அக்கினியும் விட்டுக் கடந்துபோக, எப்போதும் ஒரு காரணம் உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன் அபிஷேகம் பெற்றிருந்த அநேக பிரசங்கியார்கள், இப்போது அதை இழந்திருக்கிறார்கள். நமக்கு வயதாவதைப்போல் நம்முடைய ஜீவியத்தில் அபிஷேகம் பெருகவேண்டும். ஆனால், நான் சந்தித்த அநேக பிரசங்கியார்களிடத்தில், அது குறைந்திருப்பதையே நான் பார்த்திருக்கிறேன். இது அவர்கள் பணத்தைப் பின்தொடர்ந்ததின் மூலமாகவோ, அல்லது வேறு சில வழிகளில் ஒத்தவேஷம் தரித்ததின் மூலமாகவோ, ஜனங்களைப் பிரியப்படுத்த பேச ஆரம்பித்ததின் மூலமாகவோ, அவர்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டதினால் வழக்கமாக இது நடக்கிறது. தேவன் தமக்கு ஊழியம் செய்ய உங்களில் அநேகரை அழைத்திருக்கலாம். அப்படியானால், உண்மையுள்ளவர்களாக இருந்து, உங்களுடைய ஊழியத்திலிருந்து மகிமை விலக விடாதிருங்கள்.

எசேக்கியேல் 9:4: இந்த வார்த்தையை இன்று சபைக்கு இப்படியாக பொருத்திப் பார்க்கலாம்: "நீ சபைகள் எங்கும் உருவப்போய், சபைக்குள்ளே செய்யப்படுகிற பாவங்களினிமித்தம் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு." தேவன் சபையிலே இயேசுவின் நாமம் கனவீனப்படுவதினிமித்தம் அழுகிறவர்களின் நெற்றியில் அடையாளத்தைப் போடும்படி (அன்று அனுப்பியதை போல) இன்று ஒரு தூதனை அனுப்புவாரென்றால், எத்தனை பேர் அடையாளத்தைப் பெறுவார்கள்? கிறிஸ்தவர்களால் இயேசுவின் நாமம் கனவீனப்படுவதினிமித்தம் நீங்கள் எந்த அளவு விசாரப்பட்டிருக்கிறீர்கள்? அந்த பரிசுத்தமான நாமம் பெரும்பாலான சபைகளிலும் (எல்லா சபைகளின் பிரிவுகளிலும்) கனவீனப்பட்டிருக்கிறது. நாம் அதைக்குறித்து விசாரப்பட்டிருக்கிறோமா? விசாரப்படுகிற ஜனங்களைத் தேவன் அடையாளப்படுத்துகிறார். "அடையாளம் இல்லாத எல்லோரையும் கொன்றுபோடுங்கள்" என்று கர்த்தர் இங்கே சொன்னார். இன்றும்கூட, கர்த்தருடைய நாமத்திற்காக விசாரப்படாத யாவரும் ஆவிக்குரிய மரணத்தில் முற்றுப்பெறுவார்கள். "உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக," என்பதே தேவன் நாம் ஜெபிக்கும்படி கற்றுக்கொடுத்த முதல் ஜெபம். அவருடைய நாமத்தைக் குறித்து அக்கறை உங்களுக்கு இருக்குமானால், தேவன் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற உங்களைப் பயன்படுத்துவார்.

தூதன் ஜனங்களைக் கொலை செய்யத் தொடங்குகையில், எழுபது மூப்பர்கள் முதலாவதாகக் கொலை செய்யப்பட்டார்கள்! தேவனுடைய ஜனங்களின் தலைவர்களாக இருக்கவேண்டிய மூப்பர்கள், எல்லோரைக்காட்டிலும் குறைந்த அக்கறை கொண்டிருந்தார்கள். யாருக்கு அதிகம் கொடுக்கப்பட்டதோ, அவர்களிடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, நியாயத்தீர்ப்பு தொடங்கும்போது, அது எப்போதும் சபையிலுள்ள தலைவர்களிடமிருந்து தொடங்கும். தலைவர்கள் தோல்வியடைந்தபடியால், தேவனுடைய மகிமை விட்டு விலகுகிறது. அது இன்றும் அப்படித்தான் இருக்கிறது.