நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்” (மத்தேயு 7:1-5).
நாம் எப்போதும் நம்மை நாமே நியாயந்தீர்க்க வேண்டும் என்பதையும், மற்றவர்களை ஒருபோதும் நியாயந்தீர்க்கக்கூடாது என்பதையும் நாம் எல்லோரும் இடைவிடாமல் நினைவுகூர வேண்டும்.
நம் எல்லோருக்கும் பகுத்தறிதல் இருக்க வேண்டும். ஆனால் பகுத்தறிவு என்பது ஓர் ஆவிக்குரிய குணதிசயமாகும்; அது மற்றவர்களை நியாயந்தீர்ப்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பிறரை நியாயந்தீர்ப்பது என்பது ஒரு மாம்சீகக் கிரியை ஆகும்.
ரோமர் 14-ஆம் அதிகாரம் நாம் அனைவரும் அடிக்கடி தியானிக்க வேண்டிய ஓர் அதிகாரமாகும். அப்படிச் செய்வதன் மூலம் பல காரியங்களில் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கும் சுயாதீனத்தை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகூர முடியும்.
நாம் மற்றவர்களை வெளிப்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ நியாயந்தீர்க்கக்கூடிய சில உதாரணங்கள் இதோ. இதுபோன்ற காரியங்களில் மற்றவர்களைப் பற்றி நாம் கருத்துக்களைப் பகிரக்கூடாது (அல்லது நம் மனதில் கருத்துக்களைக் கூட வைத்திருக்கக்கூடாது):
- ஒருவர் கார் வைத்திருக்கலாமா இல்லையா (அல்லது இரண்டு கார்கள்!) - அல்லது அது எந்த மாடலாக இருக்க வேண்டும் என்பது.
- ஒருவருடைய வீடு எவ்வளவு பெரியதாகவோ அல்லது பிரம்மாண்டமாகவோ இருக்கக்கூடாது என்பது.
- ஒருவர் தனது வீட்டில் விலையுயர்ந்த சாதனங்களை வைத்திருக்கலாமா என்பது.
- ஒருவர் தனது பிள்ளைகளுக்கு எந்த அளவிலான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பது.
- ஒருவர் அதிக சம்பளம் பெறுவதற்காக வேறு இடத்திற்குச் செல்லலாமா, அல்லது வேறு நாட்டிற்கு குடிபெயரலாமா என்பது.
- ஒருவர் எவ்வளவு சொத்து வைத்திருக்கலாம் அல்லது அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு சேமிப்பு இருக்க வேண்டும் என்பது (குறிப்பு: நாம் நமக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கக்கூடாது (மத்தேயு 6:19); ஆனால் நம்முடைய பிள்ளைகளுக்காகச் சேர்த்து வைக்க நமக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது (2கொரிந்தியர் 12:14; 1தீமோத்தேயு 5:8)).
- ஒருவர் விலையுயர்ந்த ஹோட்டல்களில்/உணவகங்களில் தங்கலாமா (அல்லது சாப்பிடலாமா) என்பது.
- ஒரு சகோதரி நகைகளையோ, விலையுயர்ந்த புடவைகளையோ/ ஆடைகளையோ அணியலாமா ("விலையுயர்ந்தது" என்றால் எவ்வளவு என்பது யார் தீர்மானிப்பது??), அல்லது சல்வார்-கமீஸ், அல்லது பெண்களுக்கான பேன்ட் அணியலாமா என்பது. (பெண்கள் தகுதியான வஸ்திரம் அணிய வேண்டும் என்று வேதம் கட்டளையிடுகிறது. எனவே உடலை வெளிப்படுத்தும், இறுக்கமான, தூண்டுதலான ஆடைகளை அணிவதற்கு எதிராக நாம் சகோதரிகளை எச்சரிக்க வேண்டும்).
- ஆண்கள் நீண்ட தலைமுடி வைத்திருக்கலாமா என்பது. (இயற்கை "குறுகிய முடி" என்று சொல்கிறது, ஆனால் தேவன் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை 1கொரிந்தியர் 11:14. மேலும் எந்த நீளம் "நீளமானது" அல்லது "குறுகியது" என்று யார் தீர்மானிப்பது?).
- பெண்கள் குறுகிய தலைமுடி வைத்திருக்கலாமா என்பது. (நீண்ட மயிர் அவளுக்கு மகிமையாயிருக்கிறது, ஆனால் இது தேவனால் கட்டளையிடப்படவில்லை - 1கொரிந்தியர் 11:15. மேலும் எந்த நீளம் "குறுகியது" அல்லது "நீளமானது" என்று யார் தீர்மானிப்பது?).
- ஒருவர் தனது தலைமுடிக்கு வண்ணம் (dye) பூசலாமா என்பது.
- ஒரு சகோதரி எந்த வகையான மேக்கப்பும் போடலாமா என்பது.
- ஒருவர் தொலைக்காட்சியில் விளையாட்டுகளைப் பார்க்கலாமா வேண்டாமா என்பது (அளவுக்கு அதிகமாகப் பார்ப்பது கர்த்தருடனான ஒரு நபரின் நடக்கையைத் தடுக்கும், ஏனெனில் விளையாட்டு மிக எளிதாக ஒரு விக்கிரகமாகிவிடும் - இதைப் பற்றி நாம் மக்களுக்கு எச்சரிக்க வேண்டும்).
- ஒருவர் தொலைக்காட்சி வைத்திருக்கலாமா வேண்டாமா என்பது (அவர் எதைப் பார்க்கிறார் என்பதே விஷயம்).
- ஒரு திருமண வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது, சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளைக் கவனத்தில் கொள்ளலாமா என்பது. [குறிப்பு: அனைத்து பகுதிகளிலும் (ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம்) "சமமான நுகம்” இருக்க வேண்டும் என்பதால், விவேகமுள்ள விசுவாசிகள் இந்த "ஆத்துமா சார்ந்த" காரணிகளையும் கருத்தில் கொள்வார்கள்.]
- ஒருவருடைய திருமணம் மிகவும் ஆடம்பரமாகவும் பிரமாண்டமாகவும் இருந்ததா என்பது.
- இதுபோன்ற ஏனைய காரியங்கள்...
இவை சில காரியங்கள் மட்டுமே. இன்னும் பல இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இந்த முடிவுகளில் பெரும்பாலானவை ஒவ்வொரு குடும்பத்தின் வருமானத்தைப் பொருத்தது. மேலும் விசுவாசிகளிடையே வருமானம் கணிசமாக மாறுபடுகிறது. ஒரு பெரிய நகரத்தில் உள்ள ஒரு மிக எளிய கார், வீடு, கல்வி, வேலை அல்லது திருமணம் ஆகியவை ஏழை கிராமத்தில் வாழ்பவர்களின் தரத்தின்படி ஆடம்பரமானதாகக் கருதப்படும். எனவே, நாம் ஒருவரையொருவர் நியாயந்தீர்க்க முடியாது.
ஒரு திருமணத்தின் அளவு, இருவீட்டாரின் பொருளாதாரத்தையும் அவர்கள் எவ்வளவு முழுமனதாய் அதைச் செய்கிறார்கள் என்பதையும் பொருத்து தீர்மானிக்கப்படுகிறது. சமாதானத்தின் நிமித்தம், அரைகுறை மனதுள்ள ஒரு பெற்றோர், மணமகன் அல்லது மணமகளின் கருத்துக்கூட இந்த விஷயத்தில் இறுதி முடிவை நிர்ணயிக்கலாம். எனவே, ஒரு நபர் திருமணத்தை எவ்வாறு நடத்துகிறார் என்பது குறித்து நாம் யாரையும் நியாயந்தீர்க்கக்கூடாது.
நாம் எந்தக் காரியங்களில் எளிமையாக இருக்கிறோமோ அவைகளில் மட்டுமே மற்றவர்களின் ஆடம்பரத்தை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருக்கிறோம். மேலே உள்ள காரியங்களில் ஒன்றில் மற்றவர்களை நியாயந்தீர்க்கும் பலர், பெரும்பாலும் மற்றொன்றில் தாங்களே குறைவுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நியாயந்தீர்க்கும் ஆவி அவர்களைக் குருடாக்குவதால், அவர்களால் தங்கள் சொந்தக் குறைகளைப் பார்க்க முடிவதில்லை. எனவே, மற்றவர்களின் கண்ணில் உள்ள துரும்புகளை நியாயந்தீர்ப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது.
நாம் "நம்முடைய சொந்த அலுவலைப் பார்க்க" கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் இதுபோன்ற காரியங்களில் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நாம் "அடுத்தவர் காரியங்களில் தலையிடுகிறவர்களாய்" (1பேதுரு 4:15) சுயநீதியுள்ள பரிசேயர்களாகி விடுவோம். ஒவ்வொரு நபரும் அவரவர் மனச்சாட்சிக்கு ஏற்ப செயல்பட விடுவதே சிறந்தது.
சபையில், நாம் முக்கியமாக பாவம் மற்றும் பண ஆசைக்கு எதிராகப் பேச வேண்டும்; நிச்சயமாக, சபையைப் பாதிக்கக்கூடிய வெளிப்படையான பாவமுள்ள நடத்தை சார்ந்த காரியமாக இல்லாவிட்டால், யாராவது நம்மிடம் ஆலோசனை கேட்கும் போது மட்டுமே நாம் ஆலோசனை வழங்க வேண்டும்.
இருப்பினும், பண விஷயங்களில், அனைத்து விசுவாசிகளும் தங்களுடைய பொருளாதார வரம்புக்குள் இருக்குமாறு நாம் உற்சாகப்படுத்த வேண்டும். கடனில் விழுவது என்பது தேவன் நம்மைச் சுற்றி எழுப்பிய பொருளாதார சுவரை உடைப்பதற்குச் சமம். பிரசங்கி 10:8-ஐப் பாருங்கள். [அங்கு "பாம்பு கடிக்கும்" என்பதற்குப் பயன்படுத்தப்படும் எபிரேய வார்த்தை "நஷாக்" (nashak) என்பதாகும், இது "கடன்" என்பதற்கான எபிரேய வார்த்தையான "நஷா" (nasha) என்பதை மிகவும் ஒத்திருக்கிறது.] அவசியமில்லாத பட்சத்தில் (அவசரநிலைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை, அல்லது வீடு வாங்கும்போது/ கட்டும்போது அல்லது வாகனம் வாங்கும்போது போன்றவை தவிர) விசுவாசிகள் கடனை முடிந்தவரை தவிர்க்க ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் கடன் வாங்கினால், அவர்கள் தங்களது கடன்களை விரைவில் திருப்பிச் செலுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும் (ரோமர் 13:8).
இருப்பினும், இதற்காக வேதம் போதிக்கும் பின்வரும் காரியங்களை நாம் தெளிவாகப் போதிக்கக்கூடாது என்று அர்த்தமல்ல:
- சபை உபத்திரவத்தின் வழியாய் கடந்து செல்வது - [சபையும் உபத்திரவமும் என்ற பகுதியைப் பார்க்கவும்],
- பெண்கள் ஜெபம் செய்யும்போது/ தீர்க்கதரிசனம் சொல்லும்போது தலைமுக்காடு போடுவது - [பெண்களுக்கான தலைமுக்காடு மற்றும் தலைமுக்காடு - இரண்டு ஆவிக்குரிய அறிக்கைகள் ஆகிய பகுதிகளைப் பார்க்கவும்]
சில விசுவாசிகள் இந்த விஷயங்களில் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தால், நாம் அவர்களை நியாயந்தீர்க்க மாட்டோம். ஆனால் வேதம் தெளிவாகப் போதிப்பதை நாம் இன்னும் சபையில் போதிப்போம்.
மனைவிகள் முதன்மையாக "வீட்டு காரியங்களை கவனித்துக்கொள்கிறவர்களாய்" இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறும் தீத்து 2:4,5-ஐ கவனியுங்கள். அதை நாம் போதிக்க வேண்டும். ஆனால் ஒரு மனைவி வீட்டிற்கு வெளியே சென்று வேலை செய்வதை வேதம் தடை செய்யவில்லை. எனவே, நாமும் அதைத் தடை செய்யக்கூடாது. கணவன் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது வேலை கிடைக்காமலோ இருப்பதனால், மனைவி வேலைக்குச் செல்வது அவசியமாகும் பல சூழ்நிலைகள் உள்ளன. எனவே வேலைக்குச் செல்லும் ஒரு மனைவியை நாம் ஒருபோதும் நியாயந்தீர்க்கக்கூடாது.
அல்லது கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் கொண்டாட்டங்களை கருத்தில் கொள்ளுங்கள். இந்த பண்டிகைகளின் அஞ்ஞானப் பின்னணியைப் பற்றி நாமே உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால் வேறு சில விசுவாசிகள் இந்த உண்மையை அறியாதவர்களாக இருக்கலாம்.
நாம் கற்று நிச்சயத்தவைகளில் உறுதியாய் இருக்க வேண்டும். ஆனால் இந்த பண்டிகையின் நாட்களைக் கொண்டாடுபவர்களை நாம் நியாயந்தீர்க்கக்கூடாது. ரோமர் 14:4-6 அதை மிகத் தெளிவாகக் கூறுகிறது.
ரோமர் 14-இல் பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கொடுத்துள்ள சுதந்திரத்தை தன் சபை உறுப்பினர்களுக்கு வழங்காத எந்தவொரு சபையும் பிரமாணத்ததுவவாதமானது (legalistic) ஆகும்.
நியாயந்தீர்ப்பது என்பது தேவனுடைய வார்த்தையின் சத்தியங்களை அறிவிப்பதில் இருந்து வேறுபட்டது என்பதைக் குறிப்பது முக்கியம். தேவனுடைய முழு ஆலோசனையையும் நாம் நம்முடைய சபைகளில் பிரசங்கிக்க வேண்டும். நாம் "பிரமாணத்துவவாதிகள்" என்று முத்திரை குத்தப்படுவோம் என்று அஞ்சி, தேவனுடைய சத்தியத்தின் எந்தப் பகுதியிலும் நாம் மௌனமாக இருக்கக்கூடாது. ஆனால் அடிப்படை அல்லாத இந்த விஷயங்களில் நாம் போதிப்பதை சிலர் ஏற்றுக்கொள்ளாமலும் அதன்படி நடக்காமலும் இருந்தால், நாம் அவர்களை நியாயந்தீர்க்கக்கூடாது. அவர்களின் செயல்கள் சபையைப் பாதிக்காத வரையில், அவர்களின் நியாயத்தீர்ப்பை தேவனிடம் விட்டுவிட வேண்டும்.
இருப்பினும், ஒரு பெரிய ஆபத்து என்னவென்றால், இயேசுவை விடவும் அவருடைய சாயலுக்கு ஒப்புரவாவதை விடவும் மேலே குறிப்பிடப்பட்ட அடிப்படை அல்லாத சில விஷயங்களில் நாம் அதிக வாஞ்சையுள்ளவர்களாக மாறுவதாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட காரியங்கள் வெளிப்புறமான காரியங்கள். ஆனால் தேவன் இருதயத்தைப் பார்க்கிறார்; அதை நம்மால் பார்க்க முடியாது. எனவே, நாம் தேவனுக்குப் பயப்பட வேண்டும். அப்பொழுது நாம் "நம்முடைய கண்கள் காண்கிறபடி நியாயந்தீர்க்காமலும், நம்முடைய காதுகள் கேட்கிறபடி தீர்ப்புச்செய்யாமலும், எப்போதும் நீதியின்படி நியாயந்தீர்ப்போம்" (ஏசாயா 11:3,4).
நாம் ஆவலோடு "அன்பை நாடி" (1கொரிந்தியர் 14:1) நம்முடைய கர்த்தரிடமிருந்து "தாழ்மையைக் கற்றுக்கொள்ள" ஆவலோடு முயன்றால் (மத்தேயு 11:29), மற்றவர்களை நியாயந்தீர்க்கும் இந்த ஆபத்திலிருந்து நாம் தப்புவிக்கப்படுவோம்.
எப்போதும் தங்களையே நியாயந்தீர்த்து, மற்றவர்களை ஒருபோதும் நியாயந்தீர்க்காதவர்களே உலகில் மிகவும் மகிழ்ச்சியான மனிதர்கள்.